ஃபிப் 28 , 2024ல் நமது நாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடந்ததுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அறிவியல் தின நிகழ்வாக அறிவியல் மனப்பான்மைக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது தான் அது. இது கொல்கத்தா பிரகடனம்-2024 என அழைக்கப்படுகிறது.
முன்னுரை:
இது அறிவியல் மனப்பான்மைக்கான மூன்றாவது பிரகடனம் ஆகும். ஏற்கனவே இரண்டு சாசனங்கள், ஒன்று குன்னூர் பிரகடனம்(1981), மற்றொன்று பாலம்பூர் பிரகடனம்(2011) , நிறைவேற்றுப்பட்டுள்ளன. முதல் இரண்டு பிரகடனங்களும் வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் பெற மக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதன் காரணமாக அறிவியல் மனப்பான்மைக்கான செயல்பாடுகள் மூலம் அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய கண்ணோட்டத்தை மக்களிடம் உருவாக்கியது.
ஆனால் சமீப காலங்களில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமூக, அரசியல் மாற்றங்களும் அதற்குக் கிடைத்து வரும் அரசு ஆதரவும் உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் என்பது தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளன. உண்மையை மறுக்கும் போலி உண்மைகள் உருவாக்கம், அறியாமையைப் பரப்புதல், அறிவுக்கு எதிரான சூழல், அறிவியல் மீது நம்பிக்கையைக் குலைத்தல் தற்போது அரங்கேறி வருகிறது. தற்போதைய தொழில் நுட்பத்தின் மூலம் குறிப்பாக சமூக வலைதலங்கள் மூலம் கருத்துருவாக்கம், வெறுப்பு பிரச்சாரம், போலியான வாதங்கள், அடிப்படையற்ற கருத்துக்கள் ஆகியனவற்றை சிந்தனையாக ஏற்றுக் கொள்ளும் நிலையாக மாறிவருகிறது.
இச் சூழலில் ஆதாரங்கள் கொண்ட சிந்தனை, இது நாள் வரை நாம் சேகரித்த இயற்கை, சமூக, பண்பாட்டு வழி அறிவு மற்றும் உழைக்கு மக்களின் செயல்பாட்டு வழிமுறைக்ள் ஆகியனவற்றை கருத்தில் கொண்டு அதைத் தொடர மீண்டும் ஒரு புதியதொரு அர்பணிப்புத் தேவைப்படுகிறது. அறிவியல் அடிப்படையிலான வழிமுறைகள், பல்துறையிடை ஆய்வுகள் ஆகியன கல்விப் புலம் சார் சூழலில் மட்டுமல்லாது பொது வெளியிலும் புரிந்து கொள்வது அவசியம் எனக் கருதுகிறது.
தற்போதைய பிரகடனம் சம கால சவால்களை எதிர்நோக்கும் வகையில் மிக முக்கியமாகிறது. தற்போதைய நிலையில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அறிவியல் மனப்பன்மையை வளர்த்தல், விசாரித்து அறிதல், மனித நேயம் வளர்த்தல், சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படுகிறது. காலங்காலமாக அறிவியல் மனப்பான்மை வளர்ந்து வந்துள்ள சூழலில் தற்போதைய தீவிரமான சமூக, கலாச்சார சக்திகளும், அரசின் கொள்கைகளும், நிர்வாக நடவடிக்கைகளும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக உள்ளன.
அறிவியல் வளர்ச்சி, அதன் அடிப்படையில் கண்டுபிடிப்புகள், ஆதாரங்களுடன் கூடிய பகுத்தறிவு ஆகியன தற்போது அறிவுப் புலத்திலும், சமூகம் மத்தியிலும் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. தற்போது இந்தியாவில் மூன்று படிநிலைகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு நிலையில் விமர்சனப் பூர்வமான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.
அரசமைப்புச் சட்டம் 51 ஏ (எச்) கூறுவதென்னவென்றால் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையைக் கடைப்பிடிப்பது கடமை எனக் கூறுகிறது. ஆனால் அரசின் கடமை என்ன என்பது இதில் தேவையான அளவில் குறிப்பிடப்படவில்லை. எனவே மக்களின் கடமை என்று கூறும் அரசமைப்புச் சட்டம்,அரசின் பங்கு என்ன என்று வரையறுக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறது.
அரசின் பங்கு: விடுதலை பெற்ற பின்னர் இந்திய அரசு, அறிவியல் நிறுவனங்கள் மீதும் அறிவியல் அறிஞர்கள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தது. ஆராய்ச்சி நிறுவனங்கள், தலைசிறந்த கல்வி மையங்களின் ஆராய்ச்சி, ஆதாரங்கள் சார்ந்த அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தொழிற் கொள்கைத் தீர்மானம் (Industrial Policy Resolution), அறிவியல் கொள்கைத் தீர்மானம் (Scientific Policy Resolution) ஆகியன திட்டக் குழு சார்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது. இந்திய, வெளி நாட்டு அனைத்துத் துறை விஞ்ஞானிகள் ஆதரங்களுடன் கூடிய கொள்கைகளை உருவாக்க உதவினர். கடந்த காலத்தில் அறிவியல் நிறுவனம் என்பது அதிகார வர்க்கத்திற்கும் கார்ப்பொரேட்டுகளுக்கும் சேவை செய்வதாக மாறி பொது மக்களுக்கான உரிய தரவுகளைத் தந்து நம்பகத்தன்மை உருவாக்காததால் அரசு நிறுவனங்கள் மீது மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது.
அறிவியல், அறிவியல் அணுகுமுறையை குறை மதிப்பிடுதல் :
தற்கால அரசு , இதுகாறும் கொண்டிருந்த அறிவியல் வழிமுறைகள், அறிவியல் அணுகுமுறையை விட்டு விலகிச் சென்றுள்ளது. இன்று தரவுகள் அல்லாது கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. நமது வளர்ச்சியின் தரவுகள், உலகளவிலான இந்தியாவின் தரம் ஆகியன கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளன. இது போன்றே நமது நாட்டளவில் நிறுவனங்களால் அரசுக்கு தரப்படும் தரவுகள் நிராகரிக்கப்படுகின்றன அல்லது திருத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.
அறிவியல் ஆய்வு, மேம்பாட்டுக்கான நிதியை இது வரை இருந்து வந்த அளவை விட வரலாற்றிலேயே மிக மிகக் குறைந்த ஜிடிபி அளவில் ஒதுக்குகிறது. ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி, ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுதல், சுயமான ஆய்வுகளுக்கான ஆதரவு என அனைத்திற்கும் நிதியுதவி குறைக்கப்பட்டு நிலை குலைந்துள்ளன. இதன் மூலம் தற்சார்பு ஆய்வு, அறிவியல் வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
அறிவியலற்ற பண்டைய தொழில்நுட்பங்களைப் பிரபலமாக்குவதில் அரசியல் வட்டாரப் பெருமக்கள் செய்கின்ற முறை என்பது பண்டைய அறிவை பெருமைப்படுத்தி ஒரு பரபரப்பான தேசிய உணர்வை உருவாக்கி வருகின்றனர். புராணங்கள், பண்டைய புனித ஏடுகள் ஆகியன மூலம் பெரும்பான்மை மதம் வழியாக இதற்கு ஆதரவு தேடும் முயற்சி செய்யப்படுகிறது. இந்த கவர்ச்சிகரமான விளக்கங்கள் உண்மையிலேயே இந்தியாவின் பண்டைய பல்வேறு நிஜமான அறிவுசார், தொழில்நுட்பம் சார் முன்னேற்றங்களை மறைத்து விடுகிறது.
இந்தப் போக்கினை விமர்சன்ம் செய்பவர்களை தேசத் துரோகி எனவும் மேற்கத்திய சிந்தனையாளர்கள் எனவும் முத்திரை குத்துகின்றனர். அறிவு வளர்ச்சிக்குத் தேவையான மாற்றுக் கருத்துக்கள், பல்வகைக் கருத்துக்கள் கூறுவதற்கான வாய்ப்புகள் இன்று அபாயத்தில் உள்ளன.
கல்விப் புலம் மீது தாக்குதல்:
பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் செய்யப்படும் மாற்றம் என்பது பண்டைய இந்தியாவின் கேள்விக்குட்படுத்தாத அறிவு குறித்து பெருமை பேசுவதும், பிற கலாச்சார முறைகளை ஒதுக்கி விட்டும் அதன் பங்கு குறித்தும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதும் நடைபெற்று வருகிறது. தொழிற்புரட்சிக்குக் காரணமான நவீன அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளை நாம் ஒதுக்கிவிட்டு கற்பனையானவற்றை சிலாகிப்பதை தற்போதைய மத்திய , மாநில, பிற நிறுவனம் தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணப்படுகிறது. முறையான கல்வித் திட்டதின் மீது தொடரப்பட்டுள்ள தாக்குதலை நாம் எதிர்க்காவிட்டால் இந்தத் தலைமுறையே பாதிக்கபப்டும் அபாயம் உள்ளது.
திருத்தப்பட்ட பள்ளிப் பாடத் திட்டத்தில் மிக முக்கியமான வரலாற்று, சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் சார்ந்த பாடத் திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இப்படியான பாடத்திட்டம் நீக்கம், உயர்கல்விக்கும் ஆய்வுக்கும் குறைந்த பட்சத் தயாரிப்பின்றி செல்லுவதற்கு வழி வகுக்கிறது. தேச வளர்ச்சிக்கு ஏற்ற குடிமகனாக பள்ளிப் பருவத்திலேயே வளர்த்தெடுக்க முடியாத நிலையாக உள்ளது.
உயர் கல்வியில் பாரம்பரிய அறிவுப் புலம் என்பது கட்டாயமாக்கப்பட்டு அதன் மூலம் வரலாற்றுத் திரிபு கொண்ட பண்டைய அறிவு தரப்பட்டுள்ளது. இந்த பாடத் திட்டங்கள் வேத, சமஸ்கிருத பாரம்பரியத்தை மட்டும் முன்னிறுத்தி பிற பண்பாட்டு பாரம்பரிங்களை ஒதுக்கி விட்டு, மத்திய கால இந்தியாவில் உருவான அறிவுச் சொத்தை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்ததாகக் கருதி நிராகரித்து உள்ளது. இதுவரை வழங்கி வந்த ஆதாரமிக்க வரலாற்றைத் திருத்தி எழுதுவதும், திருகி எழுதப்பட்ட இந்திய பாரம்பரிய வரலாற்றை முன் வைப்பதும் நீண்ட கால அடிப்படையில் இந்திய அறிவியலுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்கும் தன்மை கொண்டது. உயர்கல்வி நிறுவனங்களில் திறந்த மனதிலான உரையாடல்கள் மறுக்கப்பட்டு விமர்சனப் பூர்வமான சிந்தனைக்கும், பன்முக சிந்தனைக்கும், கல்விப் புலம் சுதந்திரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
சமூகத்தின் மீது தாக்குதல்:
சமீப காலங்களில் இந்தியா சமூக-மத ரீதியான புனிதத்துவம், பாரம்பரியம், பின்நோக்கியம் ஆகியன பெரும்பான்மை சமூக அரசியல் சக்திகளால் முன் வைக்கப்படுகின்றன. பாரம்பரிய மதச் சடங்குகள், திருவிழாக்கள், மதச் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகள் ஆகியன அதிகரித்துள்ளன. அதிகளவில் வளமான போலிச் சாமியார்கள் (கடவுள் மனிதர்கள்) அதிகமான சீடர் கூட்டங்களுடன், அரசியல் பின்புலத்துடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த போலி மதவழிக் கூட்டங்கள் ஆன்மீகத்தைப் பரப்புவதாக கூறிக் கொண்டு மூட நம்பிக்கைகளையும், போலி அறிவியல் நம்பிக்கைகளையும், சமூக பிற்போக்கு நம்பிக்கைகளையும் வளர்த்து வருகின்றனர். பெரும்பானமை சமூகத்தில் பலவகையான மத நம்பிக்கைகள், கலாச்சாரஙகள் இருந்தும் தவறான பரப்புரைகளின் வழியே ஒற்றை கலாச்சாரத்தை அரசு ஆதரவு பெற்ற அமைப்புகள் முன் வைக்கின்றன.
கோவிட்19 பெருந்தொற்றுக் காலத்தில் மூட நம்பிக்கைகள், போலி அறிவியல் சார்ந்த மருத்துவ பிரச்சாரங்கள், பாரம்பரிய இந்திய முறைகள் என்ற போர்வையில் ஒப்புக் கொள்ள வைத்து நவீன அறிவியல் மருத்துவ முறைகளை புறந்தள்ளியது. சொல்லப்போனால் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிடல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசு சார்பாக அறிவியலற்ற, அறிவியலுக்கு எதிரான போலி அறிவியல், தவறான தகவல்கள் அனைத்தும் அறிவியல் அணுகுமுறையை துணிச்சலாக மறுத்து வருகின்றன. மக்களிடையே ஆதாரங்கள் கொண்ட அறிவியல் முறைகளிலான சிந்தனைகளைக் குழப்புகின்றனர்.
இறுதியாக அனைத்து மத நம்பிக்கைகளும் இந்தியாவில் அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிக்கு தடையாகவே உள்ளன. மதச் சுதந்திரம், தனி நபர் நம்பிக்கை ஆகினவற்றிற்கு உரிய அங்கீகாரம் அளிக்கலாம் என்றாலும் பிற மத பாகுபாட்டுச் செயல்பாடுகள், பிற மதங்களின் சுதந்திரத்தில் தலையிடுதல், பகுத்தறிவற்ற செயல்பாடுகளை எதிர்த்தாக வேண்டும். மூடத்தனம் என்பது சமூகத்தின் பலமின்மையைக் காட்டுவதால் அதை எதிர்த்து நீண்ட கால போராட்டத்தை நடத்த வேண்டுவதாகவும் உள்ளது. மேற்சொன்ன அமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்ள மிகவும் திட்டமிட்ட வழிமுறைகள் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கப் பாடுபட வேண்டும்.
பிரகடனம்:
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள அறிவியலாளர்கள், அறிஞர்கள், செயல்பாட்டாளர்களாகிய நாங்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான போராட்டம் பல வகைப்பட்டதாகவும் பல முகங்கள் கொண்டதாகவும் இருப்பதாக அறிகிறோம். தற்போதைய சூழலில் உருவாகியுள்ள பெரும் அச்சுறுத்துல்கள் தற்போதைய சவால் என்பதால் முதற்கட்டமாக இந்த அச்சுறுத்தல்களை நீக்க வேண்டியது உள்ளது.
பல வழிகளில் அறிவியல் கண்ணோட்டத்தை திட்டமிட்டுத் தகர்க்கும் இந்த அபாயங்களைத் தடுக்க வேண்டும் என நாங்கள் உணர்கிறோம். போலி அறிவியல், கண்மூடித்தனமான நம்பிக்கைகள், காரணமற்ற புரிதல் ஆகினவற்றவை வளர்ப்பது மட்டுமல்லாமல் மூடத்தனம், சமூக நிந்தனை, பாகுபாடு, பெரும்பான்மையெனக் கூறி ஒற்றைக் கருத்தைத் திணித்தல் ஆகியன மூலம் மனித நேய அணுகுமுறையயே தகர்த்தெறியும் அச்சுறுத்தல்கள் கவனத்திற்கு வருகின்றன.
கீழ்க்கண்ட கையெழுத்திட்ட நாங்கள் சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு மீண்டும் உறுதி அளிக்கிறோம். நாங்கள் கள அளவில் அறிவியல் மனப்பான்மைக்காகச் செயல்படும் மக்கள் அறிவியல் இயக்கங்கள், இது போன்ற சிந்தனை கொண்ட அமைப்புகள், சமூக ஈடுபாடு கொண்ட தனி நபர்கள் செயல்பாடுகளையும் ஆதரிக்கிறோம். நாங்கள் இது போன்ற சிந்தனை கொண்ட கல்வி, ஆய்வுப் புலங்களில் செயல்படுவோர்கள், அதிகாரவர்க்கம், அரசியல் குழுக்கள் ஆகியோர்களையும் அரசமைப்பு மாண்புகளை உயர்த்திப் பிடிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.
-என 200க்கும் மேற்பட்ட பல்துறை விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அறிவியல், சமூக செயல்பாட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
எழுதியவர்
பொ.இராஜமாணிக்கம்
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பிற்காக.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சமூக மாற்றத்திற்காகவும்,அறிவியல் முன்னேற்றத்திற்காகவும் நாம் ஒன்று கூடி முயன்றால் மாற்ற முடியாதது ஒன்றுமில்லை. மக்களிடம் அறிவியலின் மனப்பான்மையை புரியும் விதத்தில் நாம் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். நன்றி
இத்தருணத்தில் எடுக்கப்பட்ட பிரகடனம் 2024 நல்ல முயற்சி.
அறிவியல் மனப்பான்மையை பாமர மக்களிடம் புரியும் விதமாக நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக செயல்முறை கற்றல் வழி யாகவோ முறையான கருத்தரங்கங்களை நடத்தினால் உறுதியாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்டமும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னெடுக்கும் என்று உறுதி கூறுகிறோம்.
நல்ல முயற்சி குண்டடம் அறிவியல் கிளையின் சார்பில் இதனை வரவேற்கிறோம் உங்கள் பயணத்தில் பயனிக்க விரும்புகிறோம்