கோமகட்டா மாரு (Komagata Maru : Not Just a Voyage) புத்தகம் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமானதொரு பயணத்தின் வரலாறு

’கோமகட்டா மாரு (Komagata Maru)’ – நூல் அறிமுகம்

’கோமகட்டா மாரு (Komagata Maru)’ – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமானதொரு பயணத்தின் வரலாறு:

– பெ.விஜயகுமார்.

மல்விந்தர்ஜித் சிங்கும், குருதேவ் சிங் சித்தும் இணைந்து எழுதிய இந்நூல் ’கோமகட்டா மாரு (Komagata Maru)’ என்ற ஜப்பானியக் கப்பலில் கனடாவிற்குக் குடிபெயர்ந்து வாழச் சென்ற இந்தியர்கள் சிலரின் தோல்விப் பயணத்தைச் சொல்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடத்திய மிகக் கொடூரமான வன்முறை அமிர்தசரஸ் நகரில் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பதை அறிவோம். நானூறுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி ஜெனரல் டையர் என்ற வெள்ளைக்கார இராணுவ அதிகாரி நிகழ்த்திய கோரத் தாண்டவத்தை வரலாறு என்றென்றும் மறக்காது.

இதற்குச் சற்றும் குறையாத வன்முறை இப்பயணத்தின்போது நிகழ்ந்துள்ளது. ஹங்காங் நகரிலிருந்து குர்தித் சிங் தலைமையில் 376 இந்தியர்கள் கனடாவின் வான்கூவர் சென்றடைந்த ’கோமகட்டா மாரு (Komagata Maru)’ கப்பலை கனடா அரசு நங்கூரமிட அனுமதிக்கவில்லை. கனடாவின் புதிய குடியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் இப்பயணிகளை கப்பலைவிட்டுக் கீழே இறங்கவிடாமல் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியது அன்றைய பிரிட்டிஷ் காலனியான கனடா அரசு. இந்த சோக வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது,

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் வெள்ளையர்கள் கனடாவில் குடியேறினர். அதேபோல் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற ஆசியா நாட்டு மக்களும் வாழ்வைத் தேடி கனடாவை நோக்கிப் பயணித்தனர். இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நிறைய சீக்கியர்கள் புலம் பெயர்ந்தனர். இந்தியர்களின் வருகையைத் தடுக்க விரும்பிய கனடா அரசு எந்தவொரு நாட்டிலிருந்தும் நேரடியாக வரும் பயணிகள் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று குடியேற்றச் சட்டத்தைத் திருத்தியது. இந்தியாவிலிருந்து கனடாவுக்கு நேரடியாக எந்தவொரு கப்பலும் அப்போது செல்லவில்லை என்பதை அறிந்தே கனடா அரசு இத்தகு மாற்றத்தைக் கொண்டுவந்தது.

குர்தித் சிங் தலைமையில் புறப்பட்டுச் சென்ற ’கோமகட்டா மாரு (Komagata Maru)’ கப்பல் இந்தியாவிலிருந்து புறப்படாமல் ஹாங்காங் நகரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற காரணத்தால் கனடாவின் வான்கூவர் நகரில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. கப்பலில் இருந்த சீக்கியர்களைக் கண்டு கனடா அரசு அஞ்சியது. சீக்கியர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த எழுச்சியுடன் போராடிய காலமது. கடார் என்ற விடுதலை இயக்கத்தை சீக்கியர்கள் தீரத்துடன் நடத்தினர்.

கோமகட்டா மாரு (Komagata Maru : Not Just a Voyage) புத்தகம் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமானதொரு பயணத்தின் வரலாறு

குர்தித் சிங் பெரு வணிகராக இருந்ததோடு தீவிர தேச பக்தராகவும் இருந்தார். கடார் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த குர்தித் சிங்குக்கு, கனடாவில் இருந்த கடார் இயக்கத்துடன் தொடர்பும் இருந்தது. இவருடன் பயணித்த 376 பேரும் விடுதலைப் போராளிகள் அல்ல. கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வாழ விரும்பியவர்களே அதிகம். ஆங்கிலேய அரசு பஞ்சாபில் கடும் நில வரியை விதித்தது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானர். வறுமை அவர்களை வாட்டியது. வறுமையிலிருந்து தப்பிக்க இத்தகு நீண்ட பயணம் மேற்கொண்டு தொலைதூர நாட்டில் புது வாழ்வைத் தொடங்கிடத் தயாராயினர்.

கடார் இயக்கத்தினர் எவ்வளவு தீவிரத்துடன் போராடினரோ அதே அளவிலானத் தீவிரக் கண்காணிப்பில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தின் இந்திய அதிகாரிகள் இருந்தனர். இந்தியாவிலிருந்து கனடாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பியவர்கள் விடுதலை வேட்கையுடன் போராளிகளாகத் திரும்பி வந்தனர் என்பதைப் பிரிட்டிஷ் அதிகாரிகள் கவனித்துப் பதற்றமடைந்தனர். அரசு உளவாளிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் குர்தித் சிங் இருந்தார். கோமகட்டா மாரு (Komagata Maru) கப்பலை ஜப்பானிய உரிமையாளர்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்தும்போது ஹாங்காங்கிலியே போதிய ஆட்கள் சேருவார்கள் என்று குர்தித் சிங் எண்ணினார். ஆனால் புறப்படத் தயாராக இருந்தவர்களை சிலர் ’இது ஆபத்தான பயணம்’ என்று எச்சரித்து அச்சமடையச் செய்ததால் எண்ணிக்கை குறைந்தது.

கப்பல் ஷாங்காய், யோகோகஹாமா ஆகிய இடங்களில் நின்று மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு கனடாவின் வான்கூவர் நோக்கிப் புறப்பட்டது. கப்பலில் சீக்கியர் 337 பேர், இஸ்லாமியர்கள் 27 பேர், இந்துக்கள் 12 பேர் எண்று மொத்தம் 376 பேர் இருந்தனர். குர்மித் சிங்கின் பனிரெண்டு வயது மகன் பல்வான் சிங்கும் அவருடன் பயணித்தான். பயணத்தின்போது சில தலைவர்கள் இந்திய விடுதலை குறித்து கப்பலில் வீர் உரைகள் ஆற்றினர். கடார் இயக்கத்தின் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

1914 ஏப்ரல் பதினான்காம் நாள் ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட கப்பல் மே மாதம் 23ஆம் நாள் வான்கூவர் சென்றடைந்தது. கப்பலிலிருந்து இறங்கி கனாடாவில் புது வாழ்வு தொடங்கலாம் என்று மகிழ்ச்சியுடன் இருந்த பயணிகளுக்கு இடியென இறங்கியது கனடா அதிகாரிகளின் தடை உத்தரவு. பயணிகள் யாரும் கீழிறங்கக் கூடாது என்றனர். கனடா இராணுவத்தினர் கப்பலிருந்து யாரும் இறங்கிடாதிருக்க காவல் இருக்கின்றனர். இந்தியர்களை வரவேற்க கனடா வாழ் இந்தியர்கள் துறைமுகத்தில் திரள்கின்றனர். கனடாவில் இருக்கும் கடார் இயக்கத் தலைவர்கள் பகவான் சிங், பர்கத்துல்லா மற்றும் வான்கூவர் நகர் குர்துவாராவின் தலைவர் கியானி ஆகியோர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். துறைமுகத்தில் கூட்டம் அலைமோதுகிறது. செய்தி அறிந்து கனடாவிலும், பல அமெரிக்க நகரங்களிலும் இந்தியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டாங்கள் நடக்கின்றன.

கோமகட்டா மாரு (Komagata Maru : Not Just a Voyage) புத்தகம் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமானதொரு பயணத்தின் வரலாறு

கப்பலுக்கான இரண்டாவது தவணை வாடகையைச் செலுத்தவும், கப்பலில் இருக்கும் பயணிகளுக்குச் சாப்பாடு கொடுக்கவும் பணம் தேவைப்படுகிறது. வான்கூவர் நகரில் நிவாரணக்குழு அமைக்கப்பட்டு நிதி திரட்டுகிறார்கள். அமைதியை இழந்த பயணிகள் ஆத்திரத்தில் இராணுவத்துடன் மோதுகின்றனர் இராணுவத்தினர் கப்பலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றனர். உடனே வான்கூவர் நகரத்தில் கலகம் வெடிக்கிறது. ஹாப்கின்சன் என்ற கனடா அதிகாரி கொல்லப்படுகிறார். கலகக்காரர்கள் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் இருபது பேரைக் கொல்கின்றனர். வழக்குரைஞரை நியமித்து வழக்குத் தொடுக்கின்றனர்.

இறுதியில் கப்பல் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படும் என்றும், கப்பலில் இருந்த இருபது பயணிகளுக்கு மட்டும் அடைக்கலம் அளிக்கப்படும் என்றும், கப்பலில் இந்தியா திரும்பும் பயணிகளுக்கான உணவினை கனடா அரசே வழங்கிடும் என்றும் முடிவாகிறது. அடைக்கலம் அளிக்கப்பட்ட இருபது பேர் ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வந்தவர்கள். தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து தாயகம் திரும்பியவர்கள். இவர்களை மட்டும் அவர்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு கனடா அரசு அனுமதி அளித்தது. போதுமான அளவு உணவை ஏற்றிக் கொண்டு கோமகட்டா மாரு (Komagata Maru) கப்பல் இந்தியாவை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்குகிறது.

கப்பல் 1914 செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் இந்தியா திரும்புகிறது. பிரிட்டிஷ் அதிகாரிகள் கப்பலை கல்கத்தா துறைமுகத்தில் நிறுத்த மறுக்கின்றனர். கல்கத்தாவில் நிறுத்தினால் கலகம் பெரிதாகும் என்று அஞ்சுகின்றனர். கல்கத்தா நகருக்கருகில் இருக்கும் பட்ஜ் பட்ஜ் எனும் சிறு துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்படுகிறது. கப்பலுக்குள் நுழைந்து சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், இராணுவத்தினர் என்று பலரும் சோதனைகள் நடத்துகின்றனர்.

பட்ஜ் பட்ஜ் நகரிலிருந்து பயணிகள் பஞ்சாப் செல்ல ரயில் ஏற்பாடு செய்யப்படுகிறது. பயணிகள் ரயிலில் ஏற மறுக்கின்றனர். கலகம் வெடிக்கிறது, இருபது பயணிகள் கொல்லப்படுகிறார்கள். 201 பேர் கைது செய்யப்படுகின்றனர். குர்தித் சிங் உட்பட சில பயணிகள் தப்பிச் செல்கின்றனர். மற்றவர்களை ரயிலில் ஏற்றி பஞ்சாபில் விடுவிக்கின்றனர். குர்தித் சிங் எட்டாண்டு காலம் திரைமறைவில் வாழ்கிறார். அண்ணல் காந்தியைச் சந்திக்கிறார் அவரின் சொல்லுக்குப் பணிந்து சரணடைகிறார்.

கனடா இன்று ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாகவும், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற விழுமியங்களை மதிக்கின்ற நாடாகவும் திகழ்கிறது. கோமகட்டா மாரு (Komagata Maru) கப்பலில் பயணித்து கனடாவில் வாழ்வதற்காக வந்த மக்களைத் திருப்பி அனுப்பிய குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. இழைத்த அநீதிக்காக முதலில் வான்கூவர் நகரக் கவுன்சிலும், பின்னர் வான்கூவர் நகரை உள்ளடக்கிய பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலச் சட்டமன்றமும் பின்னர் கோமாகட்டா மாருவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின்போது கனடா அரசும் மன்னிப்புக் கேட்டது.

இந்நிகழ்வினைச் சித்தரித்து ’ஜீவன் சங்கராம்’ என்ற இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சேரான் போலாக் என்ற கனடா நாட்டின் நாடக இயக்குநர் இத்துயர நிகழ்வு குறித்த நாடகத்தை கனடாவின் பல நகரங்களிலும் அரங்கேற்றினார். கோமகட்டா மாரு (Komagata Maru) தியாகத்தைக் கருப்பொருளாக்கி கனடாவின் எழுத்தாளர் ஜெஸ்ஸி திண்டு 2001இல் ‘Lions of the Sea’ என்ற நாவலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 2006இல் ’Can you Hear the Night Bird Call?’ என்ற நாவலை அனிதா ராம் பதாமி எழுதியுள்ளார்.

1952இல் இந்திய அரசு கோமகட்டா மாரு தியாகிகளுக்கு பட்ஜ் பட்ஜ் துறைமுகத்தில் நினைவுச் சின்னத்தை எழுப்பியது. சீக்கியர்களின் அடையாளமான கிர்பான் வடிவில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை பண்டிட் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். கனடாவின் வான்கூவர் நகரின் குர்துவாராவிலும், துறைமுகத்திலும் கோமகட்டா மாரு தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்பட்டுள்ளது. கனடாவின் சர்ரி நகரத்தின் ஒரு தெருவுக்கு கோமகட்டா மாரு (Komagata Maru) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் விடுதலைப் போரில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் என்று அனைத்து மதத்தினரும் அளப்பறிய தியாகங்களைச் செய்துள்ளனர். போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகள் பலர் வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பெறச் செய்வோம்.

—————————-

நூலின் தகவல்கள் : 

நூல் : கோமகட்டா மாரு (Komagata Maru : Not Just a Voyage)
ஆசிரியர் : மல்விந்தர்ஜித் சிங் மற்றும் குருதேவ் சிங் சித்து (Malwinderjit Singh Waraich & Gurdev Singh Sidhu)
பதிப்பகம் : நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust), இந்தியா
விலை : ₹110/-

கட்டுரையாளர்:

பெ.விஜயகுமார் (Prof. P.Vijayakumar)
ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.
மதுரை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *