முகநூல் வெளியில் இன்றைக்குக் கோடிக்கணக்கானோர் எழுதுகிற சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் அதில் மிகக் குறைந்த சதவீதம் பேரே பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறார்கள்.
அவருள் ஒருவராக கவிஞர் நிமோஷினியும் இருக்கிறார்.
பத்தி எழுத்து என்பது உரைநடையில் ஒரு வகைமை. பத்தி எழுதுவது அத்துணை எளிதன்று. அது வெறும் புனைவெளியில் பூப்பதன்று. சக மனிதரை நேசிக்கிற கவனிக்கிற பேரன்பு வேண்டும்.சமூகத்தின்பால் உண்மையான அக்கறை வேண்டும். அதன்மீது தன்னளவில் ஒரு கருத்தை உருவாக்கும் திறன் வேண்டும். . மனத்தின் ஆழத்தில் சேகரித்து வைத்திருக்கும் நினைவுகளில் மீட்டெடுக்கும் ஆற்றல் வேண்டும். அதனைச் சுருக்கமாய் வெளிப்படுத்த மொழி வளம் வேண்டும்.
நிமோஷினி அவர்களுக்கு தமிழ் உரைநடையில் ஓர் அரிய மொழி வாய்த்திருக்கிறது.
தான் எழுதிய பத்தி எழுத்துகளைத் தொகுத்து ,”கொமாரன் குறிப்புகள்”, என்னும் களஞ்சியமாக வெளியிட்டிருக்கிறார். இருநுற்று ஐம்பத்தாறு பக்கங்கள்.
தூக்கனாங்குருவிக்கூடு நினைவுக்கு வருகிறது. கூடு பார்ப்பதற்கு அழகு. ஆனால் அதனைக் கட்டி முடிக்க ஒரு ஒரு சுள்ளியாய்த் தனது அலகில் சுமக்கும் பெரும் உழைப்பு அடங்கியிருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை பிடிக்கும்.யாவருக்கும் பிடிக்கும் அல்லது ஒவ்வொருவருக்கும் பிடிக்கும் விதமாக வாழை இலைப் பந்தியாக இந்நூல் இருக்கிறது.
“ கந்தகத் திட்டாக, காலம் இருத்திய இரவுகளில் தனிமையைத் தவிர்க்க, துய்க்க காலத்தைப் பின் நகர்த்தி சொற்களில் தஞ்சமடைந்தேன்”, என்கிறார். வாசிப்பின் போது இதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.
இவருடைய எழுத்து குறித்து பலரும் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார்கள்.
சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.
“பனித்துளியில் பனைமரம் காட்டும், சங்க இலக்கியம் போல, சிறிய பதிவுகளில் மகாசித்திரங்கள்”…
“பாற்கடலின் நடுவே வந்து தேன்குடம் சாய்த்துவிட்டுப் போவீர்கள்”…
மேற்கண்ட பார்வைகள் இவரின் எழுத்துக்கு அணி சேர்ப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இவரின் எழுத்தின் சில தன்மைகளைப் பார்க்கலாம்.
ஒருவருக்கு விருது கொடுக்கப்படுகிறது. பிறகு அவர்மீது ஓர் அபிப்ராயம் முன்வைக்கப்பட்டவுடன் அந்த விருதைத் திரும்பபெறுவது குறித்து எதிர்வினை ஆற்றும் போது, விருது ஒன்றும் டெண்டெர் நோட்டீஸ் அல்ல என்கிறார். இந்த மாதிரியான அங்கதம் இவர் எழுத்தில் பல இடங்களில் விரவிக்கிடக்கக்காணலாம்.
நட்பின் தன்மை குறித்துச் சொல்லும் போது,’’ஒரு குவளைத் தேநீரருந்தும் அளவிற்குக் கூடஒரு தோழமை வளரவில்லையென்றால் அந்த உரையாடலைக் கைவிடுதல் நலம். இது அவரின் அனுபவச்செழுமைக்குச் சான்றாகிறது.
”உன் பேச்சு ஓர் இசைக்குறிப்புப் போல இருக்கும்”, என எழுதுவதைப் படிக்கும் போது, அவர் குறிப்பிடாத, செவிமடுக்க மறுப்போரின் நினைவும் நமக்கு வருகிறது.
நம்பிக்கையையும் நம்பிக்கையின்மையையும் இத்துணை எளிதாய் இத்துணை தீர்க்கமாய் வேறெப்படிச் சொல்லிவிட முடியும்.
வாசலில் அவள்
செருப்பு இருக்கிறது
வேறு செருப்பில் வெளியில்
சென்றிருக்கலாம்.
தேடிப்போகும் போகும் ஒருவர் இருக்கிறாரா என்பதை முன்னறிய, செருப்பு இருக்கிறதா அல்லது வாகனம் இருக்கிறதா என்பதைக் கவனிப்பது இயல்பானது. செருப்பு இருக்கிறது. எனவே அவள் இருப்பாள். இந்த நம்பிக்கையை அடுத்த வரியில் குலைத்துப் போட்டு நம்பிக்கையின்மையை நிறுவதில் இருக்கும் முரண் மேலதிகச் சிந்தனையை நல்குவது.
நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான முரண் போல, விழைவுக்கும் விளைவுக்குமான முரணாக,
எனக்கென்னவோ
சிறிது சாய்ந்து கொள்ளும்
ஆசையிருந்தது
நீ நகர்ந்து விட்டாய்
என்று இவரால் பளிச்சென பதிய முடிகிறது
.
இது போன்ற நிறைய மேற்கோள்களைச் சொல்லமுடியும்.
பலவிதமான கருத்துகள். பால்யக்காலநினைவுகள். அலுவல் சார் அனுபவங்கள்.நட்பு. நட்பின் ஆழம். நட்பின் விலகல். சமகாலச்சூழல் அரசியல்.சினிமாவெனப் பலவிதமான கருத்துகள்.
ஒரு வாசகனுக்கு முழுமையான நிறைவைத்தருகிற எழுத்து. எல்லோரும் வாசிக்கத்தக்க வாசிக்க வேண்டிய நூல்,”கொமாரன் குறிப்புகள்”.
வாழ்த்துகள் நிமோஷினி.
எப்போதும் அன்புடன்
தமிழ்மணவாளன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

