Konda Polam Telugu Movie Review By Era Ramanan. திரை விமர்சனம்: கொண்ட போலம் - இரா இரமணன்

திரை விமர்சனம்: கொண்ட போலம் – இரா இரமணன்
2021 அக்டோபர் மாதம் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம். சன்னபுரெட்டி வெங்கட ராமி ரெட்டி அவர்கள் எழுதிய நாவலை திரைப்படமாக்கியுள்ளார்களாம். பல பிரபல படங்களை இயக்கி விருதுகளையும் பெற்றுள்ள கிரிஷ் ஜகர்லமுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வைஷ்ணவ் தேஜ்,ராகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Konda Polam Telugu Movie Review By Era Ramanan. திரை விமர்சனம்: கொண்ட போலம் - இரா இரமணன்

ஆடு மேய்ப்பதே முக்கிய தொழிலாகக் கொண்ட ஒரு கிராமம். அங்கு தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருப்பதால் ஆடுகளை ‘கொண்ட போலம்’ மலைக்கு அழைத்து சென்று உயிர் பிழைக்க வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். அந்த கிராமத்தில் ரவீந்தரநாத் எனும் இளைஞன் பொறியியல் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவன். அவன் தந்தை நூறு ஆடுகளை விற்று அவனைப் படிக்க வைத்திருக்கிறார். இப்போது அவனும் தன் தந்தைக்கு துணையாக ஆடு மேய்க்க செல்கிறான். அவன் இயல்பிலேயே பயந்த சுபாவத்தினன். காட்டில் விலங்குகளைப் பார்க்கும்போதும் சரி நகரத்தில் நேர்முகத் தேர்விலும் சரி இது வெளிப்படுகிறது. அவனது உறவுக்காரப் பெண் ஓபுலம்மா காட்டைப் பற்றி நன்கு அறிந்தவள். இந்த பயணத்தில் அவள் மூலமும் மற்ற பெரியவர்கள் மூலமும் நேரடியான அனுபவத்தினாலும் ரவீந்திரநாத் பயம் தெளிந்து ஒரு புது மனிதனாகிறான். ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அவன் இந்திய வனப் பணியை தேர்வு செய்கிறான். ஓபுலம்மாவை திருமணமும் செய்துகொள்கிறான்.

காட்டில் ஆடு மேய்க்கும் தொழிலில் திருடர்கள் குறுக்கிடுகின்றனர். புலியின் தாக்குதல், சட்ட விரோதமாக செம்மரம் வெட்டுபவர்களின் மிரட்டல், பணம் பறிக்கும் போலி கும்பல் என பல இடைஞ்சல்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் வன அலுவலர்கள் மட்டும் ஒரு இடத்தில்கூட வருவதில்லை. இது கதையின் சற்று பலவீனமான அம்சம். அதிசயக் காடுகள் ( Jaadui Jungle (Magical Forest) என்கிற ஆவணப்படத்திலும் இதுபோல் வன இலாக்கா அதிகாரிகளோ, ஒப்பந்ததாரர்களோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ எந்த இடத்திலும் காட்டப்படவில்லை. ‘ஷேர்னி’ திரைப்படத்தில் மட்டும் வன அதிகாரிகளை மையமாக வைத்து கதை எழுதப்பட்டிருந்தது. இந்தத் திரைப்படத்தில் காடுகள் அழிந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.ஆனால் அதிசயக் காடுகள் ஆவணப்படத்தில் காட்டியது போல் அதற்கான காரணங்கள் குறிப்பாகக் கூட காட்டப்படவில்லை.

மற்றபடி ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை ஓரளவிற்கு எதார்த்தமாகவே காட்டப்பட்டிருக்கிறது. கிராமத்திலிருந்து குடும்பப் பெண்கள் பத்து நாட்களுக்கு சாப்பிட ரொட்டிகளை செய்து வாகனங்கள் வரக்கூடிய ஒரு இடத்திற்கு வந்து கொடுப்பதும் அதை வாங்கி செல்ல மலையிலிருந்து ஆடு மேய்ப்பவர்களில் சிலர் இறங்கி வந்து வாங்கி செல்வதும் குழந்தை பிறந்ததற்கு,மச்சினி திருமணத்திற்கு என பல முக்கிய நிகழ்விற்குக்கூட வர முடியாத ஒருவனின் மனைவி கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றுவிடுவது என அவர்களின் வாழ்க்கைப்பாடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. காட்டை அருமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்., இசை, நடிப்பு ஆகியவையும் சிறப்பாக உள்ளன.

புலியின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது தான் நாயகன் தன் பயத்தை போக்கிக் கொள்கிறான். புலிதான் தன் கண்களைப் பார்த்துப் பயந்தது என்கிறான். விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இயற்கைக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என பல தளங்களில் இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கிராமத்து இளைஞன் பொறியியல் படித்தாலும் குழு விவாதம்,நேர்முகத் தேர்வு ஆகியவை அவனுக்கு அன்னியமாக இருப்பது நேர்முகத் தேர்வில் தன் தாய்மொழியில் பதில் சொல்ல விரும்புவதாக நாயகன் சொல்வது போன்றவை கவனிக்கப்பட வேண்டியவை. அதிகமான சினிமாத்தனங்கள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இனத்தின் வாழ்க்கை முறையை சொல்லியிருக்கிறார்கள். இயக்கத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருக்கும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *