நூல் அறிமுகம்: கொண்டல் (கஜா புயல் பாடத்திலிருந்து ஒரு குரல்) – கருப்பு அன்பரசன்

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய வருவாயை பெருக்கிக்கொள்ள மக்கள் வாழுமிடமாக, நீர் நிலையாக இருந்தாலும் அதற்குள் தன்னை முழுமையாக உட்புகுத்தி, தனது ரத்தம் ஒழுகும் கோரைப் பற்களை துருத்தி நிற்கும். அரசு நிர்வாகத்தின் அத்தனை துறைகளையும் தன்னுடைய மூலதனத்தின் வழியாக ஆட்கொண்டு, அவர்களையும் தன்பால் இழுத்து மென்று தின்று உழைக்கும் மக்களை எந்தக் கீழ் நிலைக்கும் இழுத்துக்கொண்டு போய் அவர்களின் பிணத்தின் மீது எகிறி குதித்து தன்னுடைய வருவாயை பெருக்கிக் கொள்ளும்.
உதாரணங்களாக பல விஷயங்களை நாம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம் அனுதினமும்.  இன்றைக்கு பழவேற்காடு நம் கண் எதிரே நிற்கும் ஒரு எடுத்துக்காட்டு. அதானியின் ராட்சச கால்களுக்குள் அங்கு இருக்கும் கிராமங்கள் அத்தனையும் இப்பொழுது.. அதானியின் ரத்தம் பிசுபிசுக்கும் கைகளுக்குள் பழவேற்காட்டில் நீர் சக்திகள் அனைத்தும்..  பழவேற்காட்டின் கடற்கரைகளும் அங்கிருக்கும் கட்டுமரங்களும் படகுகளும், காடுகளும் பழவேற்காட்டின் மக்களும்..
கார்ப்பரேட் கரங்களுக்குள் கடல் நீரின் 2000 ஏக்கர் பரப்புகள்.. அந்த 2000 ஏக்கர் கடல் நீர் பரப்பிலும் மண்ணை அள்ளிக் கொட்டி மண்பாங்கு நிறைந்த பகுதி என்று செயற்கையாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் தினமும்.. 400 ஏக்கர் பரப்பில் இருக்கும் காடுகளையும் அங்கு வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும் காட்டு உயிரிகளையும் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி வெட்டிச் சாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும்..  அதானியின் கண் அசைவில் தான் இன்று கடற்கரையோரத்தின் கிராமங்களும் கரையை நோக்கி எழுந்துவரும் பெரும் அலைகளும்.. கடற்கரையோரத்தின் அந்த கிராமங்களும் மக்களும் எதிர் கொண்டுவரும்  விளைவுகளையும், இழப்புகளையும் நம் கண்ணெதிரிலேயே நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. விரைவில் அந்த கிராமங்களும், மக்களும், படகுகளும், பாய் மரங்களும் வாழ்ந்ததற்கான எந்தவிதமான சின்ன அறிகுறியையும்  விட்டுவைக்காமல் கார்ப்பரேட் தான் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் துறைமுகத்திற்குள் முழுகடித்து மறைக்கப் போகிறார்கள்.. நாம் வாழும் காலத்தில், நமக்கு அருகிலேயே கார்ப்பரேட் கம்பெனியும் அவர்களின் அரசியல் கூலிகளும் கடற்கரையோர கிராமங்களை சூறையாடி வருவதை அமைதியாக பார்த்து வருவதென்பது நம் வாழ்வில் பெரும் சோகம் தான்.
அப்படிப்பட்ட பெரும் சோகத்தை தனக்குள் கொண்ட கிராமம்தான், காவிரிப்படுகையில் இருக்கக்கூடிய தலைக்காடு நகராட்சியின் கோட்டக கிராமம்.. இடதுசாரி சித்தாந்தங்கள் ஊறிப்போய் கிடந்தாலும் அங்கே சாதி வெறி என்பது அரசியலுக்குள் அப்பட்டமாய் தெறித்துக் காணும். ஆதிக்க சாதிவெறி என்பது ஏதோ தஞ்சை மாவட்டத்தின் தென்பரையிலோ  வெண்மணியிலோ மட்டும் கிடையாது. இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் அது தன்னுடைய வஞ்சகச் சிரிப்பைக் காட்டி உழைப்பாளி மக்களை திசை திருப்பி தன்னுடைய மூச்சுக் காற்றாய் அந்த மக்களின் சுவாசக்காற்றை தனதாக்கிக் கொண்டு ஓங்கி வளர்ந்து நிற்கிறது.. ஆதிக்க சாதிவெறி என்பது, சுயசாதி அடையாளம் என்பது கிராமங்களில் தொடங்கி நகர்ப்புறங்கள் வரை எல்லா இடத்திலேயும் அதனுடைய பற்களைக் காட்டி சிரித்தும் கடித்தும் நின்று கொண்டிருக்கிறது  தனக்கே உரிய வெவ்வேறு முகமூடிகளை பூட்டியபடியும், வஞ்சனை கொண்ட புன்சிரிப்புகளோடும், யோசனைகளோடும்.. சந்தர்ப்பங்களுக்கு காக காத்துக் கிடப்பது வேட்டைக்காரனின் குரூரம் மட்டும் கிடையாது கூடவே இருக்கும் துப்பாக்கியின் விசையும் கூட.. அப்படித்தான் சரியான நேரத்திற்கு காத்துக்கிடக்கிறார்கள் கார்ப்பரேட் நிர்வாகமும் அவர்களின் அரசியல் கைக்கூலிகளும் சாதி வெறியர்களும் உழைக்கும் எளிய மக்கள் வாழும் அந்த கோட்டகம் கிராமத்தில்.
இறால் பண்ணை/2 டன் இறால் பிடிக்கும் காட்சி/shrimp farming/prawn culture/2  ton - YouTube
உவர் நீர் மட்டுமே இறால் வளர்ப்பிற்கு பெரிதும் உதவும் என்பதால்.. இறால் பண்ணையில் பெரும் காசு பார்க்க உதவிடும் என்பதால்.. விவசாயம் செய்தால் ஒரு போகத்தில் கிடைக்கும் பணம் பார்க்க முடியும். ஆனால் இறால் பண்ணையில் இரண்டு போகத்திலும் பெரும்பணம் பார்த்திடலாம் என நினைக்கிறார்கள் ஆதிக்க சாதியினரும் அரசியல் அதிகாரமும் கார்ப்பரேட் பின்புலத்தில்.. அந்தக் கிராமத்தின் ஆற்று முகத்துவாரம் வழியாக கடல் நீர் உள்ளே புகாமல் தடுத்து நிற்கவேண்டிய அணையை கட்டுவதற்கு தொடர்ந்து தாமதித்து வருகிறார்கள் ஆட்சியில் இருப்பவர்களின் துணையோடு தங்களின் தினவெடுத்த பணவெறி லாபத்திற்காக. ஆற்று முகத்துவாரத்தில் வழியாக கடல்நீரை உட்புக வைத்தால்தான் இறால் பண்ணைகள் செழிப்பாகும் கார்ப்பரேட் கம்பெனிகள் தன் வருவாயைப் பெருக்கும். ஆற்று முகத்துவாரத்தில் வழியாக கடல் நீர் உள் புகுந்தால் மொத்த கிராமமும் நாசமாகும், நீர்வளம் முழுவதும் பாதிக்கப்படும் விவசாயம் முற்றாக அழிந்தொழியும் எனவே உடனடியாக அணை கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் செல்கிறான் சமூகப் போராளி இடதுசாரி சித்தாந்தத்தை உள்வாங்கிய காளியண்ணன். நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்த இறால் பண்ணை முதலாளிகளும் ஆதிக்க சாதி வெறியர்களும் காற்றும் பேய்மழையும் ஒருசேர வீசிய நாள் ஒன்றின்  ராத்திரியில்  வெட்டிச் சாய்க்கிறார்கள் காளியண்ணனை.
மக்கள் போராளியின் மரணமும் அவனது உயிரற்ற உடலும் கூட எப்படியெல்லாம் ஆட்சியாளர்களையும் அதிகாரத்தையும் நடுநடுங்கச் செய்யும் பயந்து ஓடி ஒழியச் செய்யும், மனிதத்தின் எல்லைகள் அனைத்தையும் மீறச் செய்யும் என்பதனை நாவலாசிரியர் “கொண்டல்” நாவலில் ஆழமாக பதிவாக்கி இருப்பார். இன்றும்கூட நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் போராளிகளின் மரணம் எப்படி ஒரே நாளில் திட்டமிட்டு மக்கள் திரள் பார்த்து விடாமலிருக்க மறைக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை.
உள்ளூர் தொழிலாளிகள் கேள்வி கேட்கத் தொடங்கிய உடனே அந்த இடத்தில் எப்படி கார்ப்ரேட் நிர்வாகம் வெளிமாநில தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் அமர்த்திக் கொள்கிறார்கள் என்பதை நாவலில் சொல்லியிருப்பார். நிஜத்தை நாம் இன்று கண்ணெதிரிலேயே பார்த்தோம் கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியா முழுவதிலும் பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களால் கொண்டுவரப்பட்டு நிர்க்கதியாக நடுவீதியில் விரட்டியடிக்கப்பட்டதை..
இறால் பண்ணை வளர்ப்பால் கிராமத்தின் இயற்கை வளங்கள் அத்தனையும் இழந்த கோட்டகம் ஒரு பெருமழையும் பேய் காற்று இணைந்து வீசி புயலாக மாறிய பொழுதொன்றில் எப்படி அந்த மக்களும் கிராமமும் சூறையாடப்பட்டு நிர்க்கதியாக நின்றார்கள் என்பதை நாவலில் வேதனையோடு பதிவாக்கி இருப்பார் ஆசிரியர். கிராம மக்கள் அரசாங்கத்திடம் இருந்து கேட்டுவந்த அந்த பாதுகாப்பு அணையை கட்டி கொடுத்திருந்தால் கோட்டகம் கிராமம் இந்த அளவிற்கு சூறையாடப்பட்டு இருக்காது கஜா புயலால் என்பதை நாவலுக்குள் பேசியிருப்பார். இயற்கை சீற்றத்தின் பல பேரிழப்புகளுக்கு காரணம் அரசாங்கத்தின் அலட்சியம் என்பதை நாவலுக்குள் சரியாக பேசியிருப்பார். அப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்ட பிறகும் கூட சாதாரண மக்களுக்கு தேவையானதை செய்ய மறுக்கும் சாதிப் படிநிலையினை நாவலுக்குள் சரியானதொரு புரிதலோடு சொல்லியிருக்கிறார். பேரிடர் காலத்திலும்கூட தங்களுடைய அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காத பொழுதினில் வெகுமக்கள் வீதிக்கு வருவது அவசியமாகிறது.
கஜா Live update: தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்கு சென்றது கஜா புயல்
வெகுண்டெழுந்து வரக்கூடிய அவர்களை அரசு எந்திரமும் ஆட்சி அதிகாரமும் எப்படியெல்லாம் காக்கிச் சட்டைகளின் துணைகொண்டு அடித்து விரட்டப் படுகிறார்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள் பொய் வழக்கிற்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை பதிவாக்கி இருக்கிறார்.  அங்கேயும் கூட தனிமனித சாதிவெறி எப்படி தலைவிரித்து ஆடுகிறது.. தன் பழியை, வஞ்சத்தை பொய் வழக்கின் வழியாக தீர்த்துக் கொள்கிறது என்பதை நாவலுக்குள் காத்திரமாக பதிவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர். பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கைகொடுத்து மேல் இழுத்து வர வேண்டிய மனிதம் எப்படி தன் கொடுக்கும் கைகளின் மேல் சாதியையும் மதத்தையும் பூசிக் கொண்டது என்பதையும் நாவலுக்குள் வேதனையோடு கொண்டு வந்திருப்பார்..
பேரழகான அந்த கோட்டகம் கிராமம் இறால் பண்ணை முதலாளிகளின், கார்ப்பரேட்டுகளின் லாப வெறியாலும், ஆற்று முகத்துவாரத்தில் பாதுகாப்பு அணையை திட்டமிட்டே மறுத்துவந்த அரசின் அலட்சியத்தாலும், ஆதிக்க சாதித் திமிராலும் கஜா புயல் பேரழிவு காலத்தில் எப்படி சிதைந்து சீர்குலைந்து போனது என்பதை வாசிப்பவரின் மனசை சமன் குலைத்துப்  போடும் விதமாக அதை அப்படியே எழுத்துக்களில் கொண்டுவந்து காட்சிகளை பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர். நாட்கள் மாதங்களாகவும் வருடங்களாகவும் உருண்டோடிக் கொண்டே இருந்தாலும் நீறுபூத்த ஒரு சிறு  நெருப்பாக இப்போது இளமாறன்.
அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எதிர் குறியாகவும் கோட்டகம் மக்களின் பாதுகாப்பு அரணாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இக்காலத்தில் நிமிர்ந்து நிற்கிறான். அரசு தற்போது கட்டியிருக்கும் பாதுகாப்பு அணை, தவறான இடத்தில் என்பதை சுட்டிக்காட்டி வழக்கு தொடுத்துக் கொண்டிருக்கிறான் இளமாறன். மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வல்லுநர் குழு ஒன்றினை அமைத்திட வேண்டும் என்றும் வாதாடிக் கொண்டு இளமாறன். எத்தனை எத்தனை தொடர் இழப்புகளை சந்தித்துக் கொண்டே வந்தாலும் உழைக்கும் மக்களின் வாழ்வதற்கான போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதை தன்னுடைய “கொண்டல்” நாவல் வழியாக புயல் பேரிடர் காலத்தில் நடைபெற்ற பல அரசியல் நிஜங்களை அப்படியே பதிவாக்கி  இருக்கிறார் சக்தி அவர்கள். நல்லதொரு முறையில் வெளியிட்டிருக்கிறார்கள் யாவரும் பதிப்பகத்தார். இருவருக்கும் அன்பும் பாராட்டுதல்களும்.

நூல்: கொண்டல் (கஜா புயல் பாடத்திலிருந்து ஒரு குரல்)

ஆசிரியர்: ஷக்தி

வெளியீடு: யாவரும் பதிப்பகம்

விலை: ₹152.00 INR

நூல் அறிமுகம்: கருப்பு அன்பரசன்