சிறுகதை:- கொன்ற சொல்
– ச.சுப்பாராவ்
எல்லாத் தொழில்களிலும் நண்பர்கள் வாடிக்கையாளர்களாக மாறுவார்கள். காலப்போக்கில் வாடிக்கையாளர்கள் நண்பர்களாகவும் மாறுவார்கள். ஆனால், என் தொழிலில் நண்பர்கள் வாடிக்கையாளர்களாக வரும் போது பெரும் சங்கடத்தோடு வருவார்கள். நானும் பெரும் சங்கடத்தோடு தான் அவர்களை வாடிக்கையாளராக ஏற்க நேரிடும். ஆனாலும், தெரிந்த சாத்தான் தெரியாத தேவதையை விட மேலானது அல்லவா? அப்படித்தான் அவர்களும் இந்த சாத்தானிடம் வருவார்கள். எனினும், நீதிமன்றம் என்ற இருட்டறையில் வழக்கறிஞர் என்னும் விளக்கு நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த விளக்காக இருந்தால் நல்லது என்று இந்த வழக்கறிஞரிடம் வந்து விடுவார்கள். மணிவேல் அப்படித் தான் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் கைபேசியில் அழைத்தான்.
“நம்பர் மாறியிருக்குமோன்னு நெனச்சேன் மாப்ள,“ என்றான்.
“நீ எப்பவாச்சும் கூப்பிட்டா என்ன செய்யறதுன்னு தா மாப்ள நம்பர மாத்தாம வெச்சுட்டு காத்திருக்கேன்,“ என்றேன்.
“நீ தாண்டா சரியான வக்கீலு… ஒரு பதில தயாரா வெச்சுருக்க பாரு,“ என்றான்.
“சரி, என்ன திடீர்னு என்னோட ஞாபகம் வந்துச்சு?“
“எல்லாம் பிரச்சன தா மாப்ள. உங்கிட்ட கொஞ்சம் பேசணும். வரவா?“
”கோர்ட்ல தா இருக்கேன். இப்ப சேம்பர் போயிருவேன். ரூம் நம்பர் எண்பத்தொண்ணு. இப்ப ஃப்ரீயா? வர்றயா?“
“இல்ல மாப்ள.. வீட்டுக்கே வந்துர்றேன்…“
“சரி.. ரெண்டு மணிக்கு வீட்டுக்குப் போயிருவேன். நீ ஒரு மூணு மணிக்கு வர்றயா?“ என்றேன்.
“ இன்னும் ஐயர் பங்களால தான இருக்க? எப்பவோ நீ பால் காச்சினப்ப வந்தது. ஏரியாவே மாறியிருக்கும். லொகேஷன போட்டு விடு மாப்ள… வந்துற்றேன்…“ என்றான் அவன். லொகேஷனைப் போட்டு விட்டேன்.
மணிவேல் சொன்னபடி மூன்று மணிக்கு வந்துவிட்டான். “பரவாயில்ல.. கரெக்ட்டா வந்துட்ட.. “ என்றேன். “அடுத்த தெருல நாமத்வார் கோவிலுக்கு அடிக்கடி வருவேன் மாப்ள. ஏரியாவே மாறிப்போச்சா, உங்க வீடு கோவிலுக்கு இவ்வளவு பக்கமா இருக்கும்னு தெரியாம போச்சு. இல்லாட்டி முன்னாடியே வந்துருப்பேன். நாமத்வாருக்கு நா நிறைய வாட்டி வந்துருக்கேன். உன்னய பாத்ததே இல்லயே? அதுக்கெல்லாம் நேரமில்லயா?“ என்றான் சிரித்தபடி.
நேரமில்லை என்பதை விட பிடிக்கவில்லை என்பதுதான் சரியான காரணம் என்று அவனிடம் சொல்ல மனமின்றி, நானும் பதிலுக்குச் சிரித்தேன். கிருஷ்ணன் கோவிலில் ஏண்டா ஆப்பரேஷன் சிந்தூருக்காக பஜனை செய்கிறீர்கள்? என்று கேட்டு, பல வருடங்கள் கழித்துப் பார்க்கும் நண்பனை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவனும் பாவம் ஏதோ பிரச்சனை என்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்!
வேலைகள் பற்றிய விசாரிப்புகள். ஹைகோர்ட்டுக்கும் போறயா மாப்ள? தெருவின் பழைய நண்பர்கள், வீடுகள் பற்றிய பேச்சுகள். மீனாட்சி ரைஸ் கிரைண்டர் வீட்ட வித்துட்டாங்கே… ஒங்காளு கண்ணம்மாவ ஒரு தரம் நெல்லை எக்ஸ்பிரஸ்ல எறங்கும் போது பாத்தேன். போத்தீஸ் கட்டைப் பையோட எறங்க முடியாம எறங்கிச்சு. முழங்கால் அவுட் போல… ஆமா.. அதுக்கும் நம்ம வயசு தானே… பண்டாபீசுல வேல பாத்தானே ராமன்… அவன் நாகனாகுளம் லேக் வாசல்ல சூப் வித்துட்டு இருக்கான்டா… எனக்கு அவன்கிட்ட பேசவே சங்கடமா இருந்துச்சு.. பாக்காத மாரி வந்துட்டேன்… கடைசியாக நான்தான், “என்னென்னமோ பேசறோம்.. வீட்ல எப்படி இருக்காங்க? கடை எல்லாம் எப்படி போகுது? தம்பி ரிடையர்ட் ஆகிட்டானா? மீனா, மாப்பிள்ள எப்படி இருக்காங்க?“ என்றேன்.
“தம்பி ரிடையர்ட் ஆகி வந்து சுவாமி சன்னதி கடைய பாத்துக்கறாப்ல. எம் பையன் பாரீஸ்ல இருக்கான். தம்பி பையன் டென்மார்க்ல. நம்ம தலைமொறையோட சந்தனக் கடைய மூட வேண்டியது தா போல…” என்றவன், சற்று தயங்கி மீண்டும் தொடர்ந்தான். “ மீனா, மாப்பிள்ள எல்லாம் நல்லா இருக்காங்க. மீனா தான் ஒரு பிரச்சனைய இழுத்து விட்டுருச்சு.. அதுக்கு தா உன்ன பாக்க வந்தேன்,“ என்றான். மீனா பற்றி பேசும் போதே குரல் சற்று கம்மி விட்டது.
“என்ன பிரச்சன மாப்ள?“
“மீனாவும், மாப்பிள்ளயும் சொத்தப் பிரிச்சு எங்க பங்க குடுங்கன்னு நோட்டீஸ் விட்டுருக்காங்க… “
காயத்ரி வந்து வாங்க என்றாள். அவளுக்கு மணிவேலை நினைவிருக்காது. மேஜையில் காப்பியை வைத்து விட்டுச் சென்றாள்.
மணிவேல் காப்பியை எடுத்து உறிஞ்சினான். “அதே பெரிய டம்ப்ளர். அதே நரசுஸ் காப்பி. அம்மா போடற டேஸ்ட். சில விஷயங்கள் மாறாம இருந்தா எவ்வளவு நல்லா இருக்கு… நரசுஸ் காப்பி கூட மாறமாட்டேங்குது. . மனுனஷங்க மாறிடறாங்க…“ என்று கசப்பாக தத்துவம் பேசிக் கொண்டே கொதிக்கும் அந்த கசப்புக் காப்பியை அவன் ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
நானும் என் காப்பியை எடுத்துக் கொண்டேன். எனக்கு மீனா சொத்து கேட்டு நோட்டீஸ் விட்டிருக்கிறாள் என்பதை ஏற்கவே முடியாமல், அதிர்ச்சியாக இருந்தது. மணிவேலின் ஒரே தங்கை மீனா. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இல்லை என்றாலும் கூட, மணிவேல் மீனாவை தன் மகள் மாதிரிதான் பார்த்துக் கொள்வான். ஏரியாவில் மணிவேலுக்குப் பட்டப்பெயரே பாசமலர் தான். தினமும் ஈஸ்ட் ஆவணி பள்ளிக்கு கொண்டு விட்டு கூட்டி வருவான். பிறகு மீனாட்சி காலேஜுக்கும். மார்கழி மாதத்தில் விசாலம் மாமி நடத்திய திருப்பாவை கிளாஸுக்கு கொண்டு விடுவது, செல்லத்தம்மன் கோவில் பக்கத்து பரமேஸ்வரன் பிள்ளைச் சந்தில் இந்திக் கிளாஸ் கொண்டு விடுவது என்று முழுநேரமும் தங்கச்சியுடன்தான். மீனா நடந்து செல்ல, அவளது தோழியான ரஜினி என்ற ராஜேஸ்வரி ஒரு கையை மீனாவின் தோளில் போட்டுக் கொண்டு, மற்றொரு கையால் ஹேண்ட்பாரைப் பிடித்துக் கொண்டு சைக்கிளில் மெதுவாக உடன் செல்வாள். சற்று இடைவெளி விட்டு மணிவேலோடு சுற்றுப் பரிவாரங்களாக நான், ரவி, பாலன், கோபால், வாசு எல்லோரும் போவோம். மீனாவின் வகுப்புகள் முடியும் வரை ஆங்காங்கே உள்ள டீக்கடைகளில் டீ சாப்பிட்டு விட்டு, அவளை வீட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவோம். அந்தக் காலத்தில் அரசியல் தலைவர்களுக்கு கறுப்புப் பூனை பாதுகாப்பு எல்லாம் இல்லை. இருந்திருந்தால், எங்களுக்கு கறுப்புப் பூனைகள் என்ற பட்டப் பெயர் கிடைத்திருக்கும் !
இப்படியான பூனைப் படையில் ஒரு பூனையாக முத்தையாவும் இருந்தான். நிஜமாகவே சாது பூனைதான். மீனாவும், அவனும் நேருக்கு நேராகப் பேசி நாங்கள் ஒரு நாளும் பார்த்ததில்லை. ஆனால், எப்படியோ மீனாவை கவர் செய்து விட்டான் . மணிவேலின் அப்பா, அம்மன் சன்னதியிலும், சாமி சன்னதியிலும் பூ, மாலை, அர்ச்சனைத் தட்டு, சந்தனம் விற்கும் பெரிய கடைகள் வைத்திருந்தார் என்பதால், அப்போது எங்களை திரைப்படங்களுக்குக் கூட்டிச் சென்று இடைவேளையில் முட்டைப் பப்ஸ் வாங்கித் தரும் வள்ளலாக மணிவேல் தான் இருந்தான். இப்படி நாங்கள் இதயகோவில், உதயகீதம், சிதம்பர ரகசியம், நான் சிகப்பு மனிதன், ஒரு மலரின் பயணம், சமயபுரத்தாளே சாட்சி, என்று வகை தொகையில்லாமல் மணிவேல் ஸ்பான்சர் செய்யும் படங்கள் எல்லாவற்றிற்கும் போய்க் கொண்டிருந்த காலத்தில், முத்தையா இதயகோவில், உதயகீதம் போன்ற படங்களுக்கு வரவில்லை என்ற மறுத்து விட்டான். சில ஆண்டுகளுக்குப் பின்தான் அவன் வர மறுத்த படங்களை எல்லாம் மீனாவுடன் பார்த்திருக்கிறான், அல்லது அவளோடு மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற ரிசர்வ் செய்து வைத்து விட்டான் என்ற பெரிய உண்மையை பாலன் துப்புத் துலக்கி என்னிடம் தனியாகச் சொன்னான். மணிவேலிடம் முத்தையாவை எப்படிக் காட்டிக் கொடுப்பது என்று நான் பாலன் வாயை அடைத்து விட்டேன்.
முத்தையா பி.எட் படித்து முடித்து அரசு வேலை உறுதி என்று உற்சாகமாக இருந்ததும், மீனாவும் பி.எட் படித்தாள். முத்தையாவும், பாலனும் தான் மீனாவிற்கு தெர்மோகோலில் தாஜ்மகால் செய்வது, சார்ட்டில் பெரிய பெரிய படங்கள் வரைவது, செம்பருத்தி, சங்கு புஷ்பம் என்று தேடி எடுத்து வருவது என்று சகல உதவிகளும் செய்து அவளை பி.எட் பட்டம் பெற வைத்தார்கள். முத்தையாவும், மீனாவும் பக்கத்துப் பக்கத்து ஊரில் ஆசிரியர்களாகவும் ஆனாார்கள்.
எந்தக் காதலும் சம்மந்தப்பட்ட பெற்றோர், உடன்பிறந்தவர்களுக்கு கடைசியாகத் தானே தெரியும் ! மீனா கல்யாணம் பற்றிய பேச்சு வரும் போதுதான் மீனா – முத்தையா விஷயம் வீட்டுக்குத் தெரிந்தது. மீனா முத்தையா தான் என்று ஒரே பிடிவாதமாக இருந்தாள். வெட்டு குத்து நடக்கப் போகிறதோ என்று நாங்கள் பயந்தோம். ஆனால், மணிவேல் ‘கண்ணெதிரே தோன்றினாள்‘ கரணுக்கு முன்னோடி. முத்தையா மாதிரி படித்த, வாத்தியார் மாப்பிள்ளை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டான்.
சின்ன வயதிலிருந்து நம் கூடவே இருந்து பழகியவன் என்றெல்லாம் அம்மா, அப்பாவிடம் பேசி சம்மதிக்க வைத்தான். தெரு முழுக்க ஒரே ஜாதிக்காரர்கள் தான் என்பதால் ஜாதிப் பிரச்சனை இல்லை என்பது எல்லோருக்குமே பெரிய ஆறுதல். மீனா .டீச்சருக்கும், முத்தையா சாருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தன்று பரிசு கொடுத்து, கை குலுக்கும் போது, பாலன் ஞாபகமாக முத்தையா, மீனா இருவரிடமும் பொதுவாக, “ உதயகீதம் நீங்க ரெண்டு பேருமாத் தானே போனீங்க?“ என்று கேட்டே விட்டான். முத்தையா வெட்கப் பட்டான். மீனா, “இருக்கலாம்ணே,.. அப்ப பல படங்கள் சேந்து போயிருக்கோம்,“ என்று ஓப்பனாகச் சொல்லி விட்டாள்.
மணிவேல் காலி டம்ப்ளரை மேஜையில் வைத்தான். “சரி, மேட்டர சொல்லு,“ என்றேன். “எதுக்கு திடீர்னு பாகம் கேக்கறா? என்ன ஆச்சு?“ என்றேன்.
நான் நினைத்தது போல் எல்லாம் பெரிய சண்டை எதுவும் இல்லை. மணிவேல் இந்த நோட்டீஸ் வந்ததிலிருந்து யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று நினைத்திருப்பான் போலும். கொட்டித் தீர்க்க ஆரம்பித்தான். அவன் பாவம், இந்த நொடி வரை பாசமலரின் டிஜிட்டல் காப்பியாகத் தான் இருக்கிறான். மீனா, முத்தையா இருவருக்கும் மாற்றி மாற்றி இடம் மாறுதல் வந்துவிடும். இவனுக்கு டிஎம்கே. ஏடிஎம்கே இரண்டிலும் செல்வாக்கு உண்டு.
ஆட்சிக்குத் தகுந்தபடி ஆட்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, தங்கைக்கும், மாப்பிள்ளைக்கும் வேண்டிய இடத்திற்கு மாறுதல் வாங்கித் தந்து விடுவான். மீனாவிற்கு கடச்சனேந்தல் பக்கம் பத்து சென்ட் இடம் வாங்கித் தந்திருக்கிறான். அவர்கள் லோன் போட்டுக் கட்டிக் கொண்டார்கள். இருவரும் பிளஸ் டூ ஆசிரியர்கள் என்பதால் விடுப்பு கிடைக்காது. இவன் தான் தினமும் கடச்சனேந்தல் போய் கட்டிடத்தைப் பார்த்துப் பார்த்து கட்டித் தந்திருக்கிறான். மீனா மகள் சடங்குக்கு தெருவில் மூன்று நாட்களுக்கு மானூத்து மந்தையில பாட்டு முப்பதாயிரம் முறை போடப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது,
அவர்களும் நல்ல பிரியமாகத் தான் இருந்தார்கள். முத்தையா இப்போது தலைமையாசிரியர் . ஸ்விஃப்ட் வாங்கி விட்டார்கள். வாராவாரம் சனிக்கிழமை காலையில் மீனா, முத்தையா, பிள்ளைகள் எல்லோருமாக மணிவேல் வீட்டுக்கு வந்து விடுவார்கள். இரண்டு நாளும், மீன், கறி என்று ஒரே ரகளை. மீனா வாரம் முழுவதும் தலைக்கு வைத்துக் கொள்ள பெரிய மல்லிகைப் பூ பந்தைக் கொடுத்து, ஏதோ தங்கை செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்காக காரில் ஏறுவது மாதிரி தான் கண்கலங்க வழி அனுப்பி வைப்பான் மணிவேல். போன மாதம் வரை இப்படித்தான் இருந்தது.
“அப்பறம் என்ன மாப்ள பிரச்சன?“
“பிரச்சன என்னோட வாய்தான். ஒரு வார்த்த வெல்லும். ஒரு வார்த்த கொல்லும்னு சும்மாவா சொல்றாங்கே மாப்ள… தமிழ் வருஷப் பெறப்ப ஒட்டி வந்த சனி, ஞாயிறு வழக்கம் போல மீனாவும், மாப்ளயும் வந்தாங்க. காலைல அப்பதா வந்தாங்க. வீட்ல இது எல்லாத்துக்கும் டீ கொடுத்துச்சு. டீ சாப்பிடும் போது நம்ம பழைய பிரண்டு ஒருத்தன் – சனியன் பிடிச்சவன் – போன் பண்ணினான். அவன்ட்ட பேசறேன். மீனா, மாப்ள எல்லாம் எப்படி இருக்காங்கன்னு கேக்கறான். நா யதார்த்தமா மீனாவும், மாப்ளயும் வந்திருக்காங்கன்னு சொல்றேன். அதோட நிப்பாட்டி இருக்கணும். என்னோட வாயில சனி. சனி, ஞாயிறு, லீவ் விட்டாச்சுன்னா, கறி திங்க இங்க ஓடி வந்துருவாங்கன்னு சிரிச்சுட்டே சொல்றேன்.. மீனா பாதி குடிச்ச டீ கிளாஸ அப்படியே வெச்சுட்டு மாப்ள கிட்ட வண்டிய எடுங்கன்னு சொல்லுது. மாப்ளக்கே ஒண்ணும் புரியல்ல.. என்ன என்னங்கறாப்ல… நம்ம வீட்டுக்கு போய் கறி எடுத்து சாப்படலாங்க… வாங்க… ன்னு பிள்ளைகள இழுத்துக்குட்டு காருக்கு போய்ட்டா. நான பின்னாடியே போறேன். நம்ம வீட்ல இவ உங்க வாய வெச்சுக்குட்டு சும்மா இருக்க மாட்டீங்களா… ன்னு என்னமோ கத்தறா.. அன்னக்கி போனவதா… அப்பறம் மாத்தி மாத்தி நானும் இவளும் போன் மேல போன் போடறோம். மீனாவும் எடுக்கல்ல. மாப்பிள்ளயும் எடுக்கல்ல. பழத்த வாங்கிக்கிட்டு நேர்ல போனோம். கதவயே திறக்கல்ல. இப்ப இந்த நோட்டீஸ் வந்திருக்கு…“
எல்லாம் தெரிந்திருந்தும் கூட, மனித மனம், நோக்கமின்றி சொல்லப்பட்ட ஒரு சிறு சொல்லால் இத்தனை காயப்படுமா? நாவினால் சுட்டது அத்தனை பெரிய காயமா? நான் மணிவேலின் தோளில் கை வைத்தேன்.
“மீனா நம்பரக் குடு. நா பேசறேன்,“ என்றேன்.
எழுதியவர்:

– ச.சுப்பாராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை…சீரான நடை, மெல்லிய நகைச்சுவை, அழுத்தமான உணர்ச்சிகளுடன் கதை சொல்லியவிதம்…..
நம் குடும்பத்தில் நடந்தது போலவே உணர முடிந்தது.
வீட்டுக்கு வீடு வாசல்படி.
கவனம் இல்லாமல் பேசும் சொல் ஆயுதமாகி விடும் என்பதை நாம் கவனமாக இருக்க உணர்த்துகிறது.