வாசிப்பு இயக்கத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட கவிதைத்தொகுப்பு கவிஞர் வெய்யில் எழுதிய கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட். நாடறிந்த நல்ல கவிஞர் ஆர்வத்தோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன் என்னளவில் ஏமாற்றமே எஞ்சியது. தொகுப்பில் மொத்தம் 42 கவிதைகள் உள்ளன. எனக்கு 10 கவிதைகள் மட்டுமே புரிந்தது.மற்ற கவிதைகள் யாவும் வேற்றுமொழிக்காரரோடு உரையாடியது போல் இருந்தது. அத்தனை மொழித் தடை பிரபல எழுத்தாளர் மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொன்னார். எத்தனை முறை வாசித்தாலும் புரிபடவேயில்லை. தமிழற்ற தமிழை படித்ததுபோல் இருந்தது. கவிஞர் வேறு முன்னட்டையில் வண்டுகளை சுற்ற விட்டிருப்பதாக கூறியிருந்தார். அது கொடுத்த குடைச்சலை தாங்கமுடியவில்லை.
ஒரு மொழி என்பது சக மனிதனுக்கு தன் உணர்வுகளை கடத்த வேண்டிய அற்புதமானதொரு ஊடகம். அதில் ஏன் இத்தனை சித்து விளையாட்டுகள். மொழிக்குள் ஒரு அடர்த்தியை வைக்கலாம். ஆனால் அது இருட்டின் பாதையாக இருக்ககூடாது. முட்டிமோதி கொண்டு சொற்கள் அழுது புலம்புகின்றன. எளியவர்கள் கூடாரத்திலிருந்து வளர்ந்து வந்தவர்கள் வலியவர்களின் முரட்டுக்கோட்டைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொள்கிறார்கள்.
கனவுகளை மொழிபெயர்த்தவர் உளவியலாளர் பிராய்டின் எழுத்துக்கள் கூட கொஞ்சம் மெனக்கெட்டால் புரிந்துகொள்ள முடிகிறது. அவரது பெயரிலான இக்கவிதை தொகுப்பு என்னளவில் மிகுந்த வாதைக்குள்ளாக்கியது என்றால் மிகையான பொருளில்லை.
ஒரு படைப்பாளி தான் கூறவந்த செய்தியை வாசகனுக்கு கடத்துவதில் எதற்காக இத்தனை புதிர்களை போடுகிறார். புதிர்களை அவிழ்த்து விடைகளை காண்பதில் மனசு ஆயாசமாய் ஆகி விடுகிறது. படித்தது போதும் போதும் என்றாகிவிடுகிறது. எளிய பின்புலத்தில் பிறந்து வளர்ந்ததாக சொல்லப்படுகிறவர்களின் எழுத்து எளியவர்களுக்கானதில்லை என்பது எத்தனை நகைமுரண். அறிவுஜீவிகளுக்கான மொழியொன்றை கையிலேந்தி எளியவர்களை துரத்தியடிப்பது ஞாயமில்லை நியாயமாரே. மொழியை சற்று நெகிழ்த்தி வையுங்கள் பாமர சனங்களும் கொஞ்சம் வாசித்துக் கடக்கட்டும் இனி எனக்கு புரிந்த கவிதைக்குள்.
முதல் கவிதையும் அறத்தடி நீர் எனும் கவிதையும் ஆற்றை சுரண்டித் தின்ற அதிகார வர்க்கத்தின் கொடூரத்தை, பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகத்தை, ஏதும் செய்ய இயலாத கையாலாகததனத்தை. கவிதை பாடி கடக்கிறார் தாய்பாலையும் நீரோடிய ஆற்றையும் ஒப்பிட்டு கண்ணீர் வடிக்கிறார்.
“கை தோண்டும்
ஆழத்திலேயே கிடைத்தது நீர்
பின் அம்மாவை நின்றபடி புதைக்கும்
ஆழத்திற்கு போனது
இப்பொழுதோ ஒட்டுமொத்த குடும்பத்தையும்
நின்றபடி புதைத்தாலும் தாகத்திற்கு
எட்டிவிடாத தொலைவிலிருக்கிறது”
நுரையீரலின் பாடலென்ற ஒரு கவிதை கண்ணுக்கு தெரியாத உழைப்புச் சுரண்டலை வார்த்தைகளுக்குள் பூட்டிவைத்து பூடகமாய் கவி பாடுகிறார். எழுத்தாளர் ஒருவரின் விளக்கவுரைக்கு பின்னர் தான் அர்த்தம் புரிந்தது. கூலித்தொழிலாளிகளுக்காக எழுதிய பாடலொன்றை நிச்சயம் அவர்கள் உணரப்போவதில்லை. எவரின் கண்ணீருக்காக இவர் அழுகின்றார் எனப் புரியவில்லை.
மஞ்சள் நிறக் கவிதையில் தாயார் மஞ்சள்காமாலை நோயில் சிக்கி ஆங்கில வைத்தியத்தில் சீரழிந்ததையும் கீழாநெல்லி எனும் தாவரம் மூலம் குணமடைந்ததையும் சொல்லி நாட்டு மருத்துவத்தை சிலாகிக்கிறார். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனுக்கு நாட்டு வைத்தியம் பரிந்துரைக்கும் மருந்துகளும் உணவுகளும் சிறப்பானவைதான். ஊறுவிளைவிக்காதவைதாம். அதே நேரத்தில் நோயுற்ற மனிதனுக்கு அறிவியல்பூர்வமான வைத்தியமுறையே நோய்மையிலிருந்து விடுதலை செய்யும். மாற்று மருத்துவம் தேடி மரணித்தோர் அநேகம் பேருண்டு. என்பதையும் கவிஞருக்கு நினைவூட்டுகிறேன்.
ஊழி கடந்துவரும் பிரெட் பாக்கெட் எனும் கவிதையில் சென்னையின் 2015ஆம் ஆண்டு பெருவெள்ளக்காட்சிகளை காட்சிப்படுத்துகிறார். மக்கள்தொகைப்பெருக்கமும் ,ஏரிகளையும், குளங்களையும், தின்று பெருக்கும் நகரங்களும். அதனால் விளையும் கேடுகளும் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் துயரங்களையும் கவிதையாக வரைந்துள்ளார். வெய்யில் போன்ற கவிஞர்களிடம் நாம் எதிர்பார்ப்பது இம்மாதிரியான கவிதைகளே
“பெரும் தகையீர்
கொஞ்சம் கை கொடுங்கள்
வீடுகளுக்கு பேப்பர் போடுகிறவன் நான்
அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்
நான் போகவேண்டும்
தத்தளித்துக்கொண்டிருக்கும்
மக்களுக்கு சொல்லவேண்டும்
இன்று செய்தித் தாள்கள் வராது என்பதை
இன்று அவர்கள்தான் செய்தி என்பதை”
பெரும்பாலான கவிதைகள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை பேசுகிறது ஓரிரு கவிதைகளில் பெண்களின் மாதவிடாய் குறித்து பேசுகிறது மற்றபடி பெரும்பாலான கவிதைகளின் பேசுபொருள் மனப்பிறழ்வு மாதிரி தெரிகிறது வெய்யிலை கூட ரசிக்கலாம் ஆனால் அதனால் உருவாகும் வெட்கையை சகிக்கமுடியாது மக்களுக்கான பாடுபொருள் அவர்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டும் அம்மாதிரியான கவிதைகளே எளிய மக்களுக்கானவை பாமரனுக்கு பயனற்ற எந்தச் சொல்லும் வீணானவையே
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் வெய்யில். உங்கள் படைப்புகள் யாருக்கானவை. ஏழைகளை துயிலெழுப்பாத உங்கள் சிவப்புக்கொண்டைச் சேவல்கள் யாவும் வீணானவை என்பதை உணருங்கள். குறைந்தபட்சம் ஒவ்வொரு பாடலின் கீழும் உரைகளாவது வரையுங்கள். வாசிக்கும் யாவர்க்கும் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திவிடாதீர்கள். ஏழை விவசாயியும், ஆலைத் தொழிலாளியும், பாடாது போனால் அவர்களுக்காக நீங்கள் எழுதுவதாக சொல்லப்படும் யாவும் பொய்யான புனைவுகளாக மாறிவிடும் அபாயங்களிருக்கின்றன. எதிர்வரும் படைப்புகளில் சுற்றித் திரியும் வண்டுகளுக்கு கொஞ்சம் பேசக் கற்றுகொடுங்கள். அது யாவர்க்குமான மொழியில் பாடித் திரியட்டும்.
நூல்: கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்
ஆசிரியர்: கவிஞர். வெய்யில்
பக்கம்: 78
விலை: 100
வெளியீடு: கொம்பு பதிப்பகம்
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
[email protected]