நூல் அறிமுகம்: அச்சம் தவிர்…… ஆங்கிலம் கற்றுக்கொள்…… – முனைவர். என்..மாதவன்நூல்: கொஞ்சம் சரியா ENGLISH பேசுவோம் 
ஆசிரியர்:  சசிகலா 
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கம் 88.
விலை: ரூ. 70
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/konjam-sariya-english/

வயதானவர்கள் புதியதொரு மொழியை ஆர்வத்துடல் கற்கத் தொடங்கினால் அவ்வளவு ஆச்சரியங்கள் புரியும். குழந்தைகளாய் இருக்கும்போது இவ்வளவையும் புரிந்துகொள்ளும் மனவயது நமக்கு வாய்த்திருக்காது. ஒரு குறிப்பிட்ட வேற்று மொழி பேசும் சூழலில் வாழும்போது அப்பகுதியில் பேசப்படும் மொழியை நாமும் இயல்பாக பேச தொடங்கிவிடுவோம். இதற்கு காரணம் மொழியை கற்பதில் அடிப்படையான கேட்டல், வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில் கேட்பதற்கும், பேசுவதற்கு இடையறாத தொடர்பு என்பது இருந்து கொண்டே இருக்கும் இந்த இரண்டும் வாய்க்கும் ஒருவர் இயல்பாகவே வாசிக்கவும் எழுதவும் தொடங்கிவிடுவர். தாய் மொழியைக் கற்கும் குழந்தைகளிடையே இதனைப் பார்க்க முடியும். முதன்முதலாக தட்டுத்தடுமாறி சில சில வார்த்தைகளை பேசும் குழந்தை அது வாழக்கூடிய சூழலில் அது மொழியின் பயன்பாட்டை அறிந்து கொண்டு தான் செய்யக்கூடிய பல்வேறு தவறுகளை தாமாகவே திருத்திக் கொள்ளத் தொடங்கும். இப்படி ஒரு அற்புதமான மொழி கற்க கற்றல் நிகழ்வினை குழந்தைகளோடு உரையாடும்போது நம்மால் கவனிக்க இயலும்.

தாய்மொழிக்கு இயல்பாக அமையும் இந்த ஏற்பாடு ஒரு அயல் மொழியைக் கற்பதில் அமைய வாய்ப்பில்லை ஏனென்று சொன்னால் நாம் வசிக்க கூடிய சூழலில் புழங்காத மொழியான ஆங்கிலம் கற்பிப்பது எவ்வளவு சவாலானதோ. அப்படியே ஆங்கிலம் கற்பதும் சவாலானது இயல்பாக பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் ஆங்கில மொழி வகுப்புகள் குறிப்பாக ஒரு பாடத்தை மாணவன் வாசித்து அதன் பின்னால் வரக்கூடிய வினாவிடை பகுதிகளுக்கும் விடையளிக்க தயாராகி, தேர்வில் சுமாரான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்த உடன் முடிவடைவதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஆங்கில மொழி பேசுவதைக் கேட்பதற்கான சூழலும், பேசுவதற்கான சூழலும் வாய்ப்பது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. பேசுவதும் கேட்பதும் அரிதாகி உள்ள சூழலில் அம்மொழியில் நாம் செய்யக்கூடிய தவறு என்பது இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறது. பலருக்கும் ஆங்கிலமொழியே தெரியாத சூழலில் அதில் நாம் செய்யும் தவறுகளை யார் கவனிக்கப்போகிறார்கள்.ஒரு மொழியை அதன் தன்மைக்கேற்ப புரிந்துகொண்டு பேசுவதும் எழுதுவதும் ஒரு சிறந்த கலையாகவே பார்க்கக்கூடிய சூழலில் ஆங்கில மொழியில் நாம் இயல்பாகவே செய்யும் பல தவறுகளைப் புரிந்து திருத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது இந்நிலையில் நண்பர் திருமதி சசிகலா அவர்களின் புத்தகம் இந்த குறையை ஓரளவுக்கு நீக்க முயற்சியை மேற்கொள்கிறது ஒரு நண்பருடன் அமர்ந்து தவறுகளை மனம் கோணாது சுட்டிக்காட்டி திருத்தும் மொழியாக சசிகலா அவர்களின் மொழி அமைந்துள்ளதும் மிகவும் ஆரோக்கியமானதே. ஆங்கில மொழியில் உள்ள உச்சரிப்புகள், பல்வேறு பயன்பாடுகள். பொருள், இலக்கணம்,நிறுத்தற்குறிகள் போன்றவை உள்ளிட்ட விஷயங்களை தனது வகுப்பறை அனுபவத்தோடு இணைத்து குழைத்து உருவாக்கியிருப்பது மிகவும் அற்புதமான முன்னெடுப்பு.அவ்வகையில் கொஞ்சம் சரியா இங்கிலீஷ் … என்ற புத்தகம் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்கும் தமிழ் மாணவர்களுக்கு குறிப்பாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாக விளங்கும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை இன்றைய வாட்ஸ் அப், முகநூல் யுகத்தில் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் மீம்ஸ்களையும் பயன்படுத்தியிருப்பது இளையோரைக் கவரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காட்சிப்படுத்தினால் எல்லாம் எளிதாய் புரியும் ஆனால் ஒரு விஷயத்தைக் காட்சிப்படுத்த எவ்வளவு சிரமப்படவேண்டும் என்பது காட்சி மற்றும் ஊடகத்துறையிலுள்ளோர் கூடுதலாய் அறிவர். மொழிக்கற்றலுக்கு இந்த திறன் பெரிதும் கை கொடுக்கும் என்பதை சசிகலா புரிந்து பயன்படுத்தியிருப்பது அவரது மொழிஆளுமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்நூலில் பகிரப்பட்டுள்ள பல விஷயங்களும் ஆசிரியர்களில் பலருக்கு தெரிந்ததாக இருப்பினும் அவை அனைத்தையும் கோர்வையாக்கி அளித்திருப்பது என்பது மிகச் சிறந்த முயற்சியாகும். அவ்வகையில் ஆசிரியர்களுக்கும் இந்நூல் பயன்படும் என்பதில் ஐயமில்லை. ஆங்கில மொழி அறிவுலகிற்கான உடனடி இணைப்புமொழியாக கோலோச்சிக்கொண்டிருக்கும் வரை ஆங்கிலத்தை நம்மால் தவிர்க்க இயலாது என்ற நிலையில் இந்நூல் கூடுதல் சிறப்பு பெறுகிறது.

முனைவர். என்..மாதவன்
76 மதுர் கிராமம் மற்றும் அஞ்சல்
வழி எலப்பாக்கம் 603 201 செங்கல்பட்டு மாவட்டம்
[email protected] 9443724762 63836 90074