கொடுவாய் முனைவர் இரா. அருணாசலம் எழுதிய. “கொன்னியைத் தேடு” என்ற புத்தகத்தில் உள்ள மூன்று குறுங்கதைகளையும் படித்துவிட்டீர்களா? நான் படித்துவிட்டேன். அவைகள் எனக்கு ஏற்படுத்திய தாக்கங்களை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தமடைகிறேன்.
ஆம். கதைகளை எதற்குப் படிக்கிறோம்? பொழுதுபோக்குவதற்கு என்ற உங்கள் குரல் கேட்கிறது. ஒருகோணத்தில் உண்மைதான். இந்த அவசர வலைத்தள ஒரே கிராமமாகியவுலகில் இன்றும் அச்சிட்ட புத்தகங்களை நாம் தொட்டு, முகர்ந்து, கண்டு, மனதில் ஆசிரியரின் குரலைக் கேட்டு, கருத்துக்களைச் சுவைத்து ஐம்புலன் அனுபவத்தில் ஆறாம் அறிவுக்குத் தீனி போடும் சுகமே தனிச் சுகம் தான்.
இக்கதைகளைப் படிக்கும் போது ஒவ்வொன்றும் தனிமனித, பொதுத் தளங்களில் ஒருவிதமான சமுக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சார்ந்த பிரச்னைகளை கண்முன் கொண்டு வருவதை உணர்கிறேன். எனது புரிதலில் மாற்றம் ஏற்படுவதைக் காண்கிறேன். இதைவிட ஒரு படைப்புக்கு என்ன வேண்டும்?
சிறுவயதில் தொடர்பு இழந்த உயிர் நண்பனை மீண்டும் பல வருடங்கள் கழித்து பார்த்தால் வரும் பரவசம்; வாடும் வெயிலில் நிழல் தரும் மரங்கள் இல்லாமல் நினைவிழக்கும் போது வந்து வருடும் குளிர் தென்றல்; தாகத்தில் தவிக்கும் நேரம் காலத்தே நம் கரங்களில் தரப்படும் செவ்விளநீர். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் முனைவர் அருணாசலத்தின் கதையமைப்பைப் பற்றி.
கதையின் உயிரோட்டமான கதாபாத்திரமாகவரும் ஓடை ஓரம் தம்மை மறந்து நடந்து கொண்டு இதுவரை நடந்தவற்றை பேசும் இரண்டு கல்லூரி தோழர்களைப் போல கொன்னியைத் தேடியின் கதைக்களம் நம்மை ஈர்க்கிறது. சிறுவாணியும் நொய்யலாறும் இரட்டைச் சடையிட்டுத் துள்ளும் சிறுமிகளாய் நம் கற்பனை பறக்கிறது. ஆங்காங்கே திருவள்ளுவரும், நம்மாழ்வரும், மருதகாசியும், எட்மண்ட் ஸ்பென்சரும் சாலமன் பாப்பையாவும் கதாபாத்திரங்களோடு கைகோர்க்க வைக்கிறார் கொடுவாய் முனைவர் அருணாசலம்.
ஆங்கில இலக்கியத்தில் கரை கண்டிருந்தாலும் நமது ஊரின் ஆற்றங்கரைகளில் இவரது மனம் இரண்டறக் கலந்து உணர்வாகிப் பின் எழுத்தாகியுள்ளது. விவசாயத்தின் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் தன் விரல் நுனியில் வைத்துள்ளார் கதாசிரியர். இல்லையெனில் “டிராக்டர் இங்கே, சாணி எங்கே” என்ற ஜெ.சி. குமரப்பாவின் குரலைப் பதிவு செய்வாரா? இயற்கையை நேசிக்கும் எளிமையான மனிதர் விவசாயத்தைக் காதலிப்பதை இவரது ஒவ்வொரு எழுத்தும் சொல்லாமல் சொல்கிறது.
தன் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளையும் இவையெல்லாம் நடந்திருக்க வேண்டும் என்ற தனது அழகான ஆசைகளையும் லாவகமாக பின்னிப் பிணைந்து கதையை கொண்டு செல்லும் இவரது பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது. கற்பனை மெருகூட்டப்பட்டிருந்தாலும், உள்ளே உயிரோட்டமாய், நொய்யலின் நீரோட்டமாய் இருப்பது உண்மை நிகழ்வுகளே எனப் படிக்கும் உள்ளங்களைக் கதையுடன் ஒன்றிப் போக வைப்பதில் தனி முத்திரை பதிக்கிறார். படைப்பாளி என்பவன் சகலகலா வல்லவன் என்பதை மீண்டும் உறுதி செய்கிறார்.
நீங்களும் நானும் என்ற தலைப்பே கதை சொல்பவருக்கும் கதை கேட்பவருக்குமிடையேவுள்ள ஐக்கியத்தைக் காட்டுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தனிப் பிரச்சனைகள் பொது அனுபவங்களாக மாறுவதை எடுத்துரைக்கிறது.
நரசிம்மாவை போன்ற அப்பாவி ஆண்கள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள் எனவே யார் மீதும் தவறு இல்லை என்று நச்சென்று ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார் கதாசிரியர்.
அது ஒரு நிலாக்காலம் என்று கலாவுடன் உலா வந்த நரசிம்மாவுக்கு அது ஒரு கனாக்காலம் என்று தெரிந்தபோதும் பாசக்கார மனிதராய் வாழ்ந்திருக்கிறார். இக்கதை மூலம் இன்னும் பல்லாண்டு வாழ்வார்.
அடுத்து வரும் கதையின் கிராமத்து பெண்ணாக லட்சுமி வருகிறார். வருவதை எதிர்கொள்வதிலும் வேதனையை சாதனையாக மாற்றுவதிலும் சிங்கப் பெண்ணாக உருமாறுகிறார். பெண்ணின் மன உறுதி ஆண்களை விட அதிகம் என்பதை பூடகமாகச் சொல்லி எச்ஐவி பற்றிய ஒரு முழுமையான விழிப்புணர்வையும் அழகாகத் தந்து செல்கிறது இக்கதை.
எச்ஐவி, கோவிட் போன்ற தீநுண்பங்களைப் பற்றியும் தாய்ப்பால் போன்றவற்றைப் பற்றியும் விழிப்புணர்வை தனது கதைகள், கவிதைகள் மூலம் ஆசிரியர் செய்து வருகிறார் என்பது அவரது மற்ற படைப்புகளைப் படிப்போர்க்குப் புரியும். இலக்கியத்தையும் அறிவியலையும் இணைத்து வரும் அவரது எழுத்துக்கள் தனித்துவம் பெற்றுள்ளது போற்றுதற்குரியது.
அதற்கடுத்து வருகிறார் அல்லு நரேஷ். தற்கால பெற்றோர்களுக்கு தலை சிறந்த எடுத்துக்காட்டாகி பிறகு புத்திசாலியாக விரும்பும் பெற்றோருக்கு கட்டாயப் பாடமாகி விடுகிறார். ஆம், பிள்ளைகளுக்கு கனவுகளைக் கற்றுக் கொடுங்கள், ஆனால் உங்கள் கனவுகளைத் திணிக்காதீர்கள் என்று முனைவர் சொல்வது ஆயிரக்கணக்கான அபிராமிகளின் அப்பாக்களின் காதுகளுக்குக் கேட்கும். கல்வி துறையில் கொடி கட்டி பறக்கும் கதாசிரியரின் கல்வியைப் பற்றிய பரிமாணக் கண்ணோட்டம் இந்தக் கதையின் உயிரோட்டமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் பலவிதமான அனுபவங்களை எடுத்துரைக்கிறது. போராட்டம் என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் கண் முன் வருவது வன்முறை சார்ந்த நிகழ்வுகள் தான. அவ்வாறே போராட்டம் என்ற கதையும் குண்டு வெடிப்புச் சப்தத்தில் ஆரம்பமாகிறது. ஆனால் போகப் போகத்தான் தெரிகிறது போராட்டத்தின் நேர்மறை முகம், தாய் மொழியைத் தவிர ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைக் கற்க மாணவர்கள் போராட்டம், அவைகளை முறைப்படி கற்பிக்க ஆசிரியர்களின் போராட்டம் என்ற கோணங்களில்.
இலட்சக்கணக்கான நிலப்பரப்பில் கிடைக்கும் கனிம வளங்களைப் பயன்பாடுகளுக்குக் கொண்டு வரவும், அவைகளின் அபாயகரமான விளைவுகளை கருத்தில் கொண்டு எந்தவிதமான மாற்றத்தையும் எதிர்ப்பதற்கும் போராட்டம் நடக்கும் யதார்த்தமான வாழ்வியலை மோகன் என்ற கதாபாத்திரத்தில் காணும் கதையில் சமுதாய மாற்றங்களுக்கு அறிவுப் போராட்டம் தேவை என்பதை முன்னிறுத்தும் ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.
தாத்தாவுடன் கைகோர்த்து நடக்கும் பெயரன், பெயர்த்திக்குக் கதை சொல்வது போல ஒரு இயல்பான, இயற்கையான ஒரு நடைப்பாங்கு யாருக்கும் எளிதில் கிட்டிவிடாது. ஆனால் முனைவருக்கு இது இயல்பாக வருகிறது. அருண் தாத்தாவின் கைகளை இறுக்கமாக பிடிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இனி பெருகும் என்பதில் ஐயமில்லை.
ரயில் பயணங்களில் பேசிக்கொண்டே போகும் புதிய நண்பர்களின் உரையாடல்களைப் போல சுவாரசியம் கூடிக் கொண்டே போகும் இனிய கதைத் தொகுப்புகள். முனைவரின் இந்த புதிய முயற்சி படிப்போரின் இதயங்களை கவர்வதுடன் சிந்திக்கவும் தூண்டுகிறது.
இக்காதாசிரியரின் யதார்த்தமான எழுத்து நடை, கதை சொல்லும் பாணி எனக்கு மிகவும் பிடித்த பிரபலமான கதை சொல்லி பவா செல்லதுரை அவர்களை நினைவுபடுத்துகிறது. தேனுடன் கலந்து தரப்படும் கசப்பு மூலிகைப் பொடி போல் சுவாரசியத்துடன் சிந்தனை சீராகவும் நடக்கிறது.
இன்னும் பல பரிமாணங்களில், புதுக் கண்ணோட்டத்தில் முனைவர் இரா. அருணாசலம் அவர்களின் வெற்றித் தேரோட்டங்கள் நடைபெற வேண்டுமெனத் தமிழால் இணைந்த இதயங்கள் வாழ்த்துகின்றன.
வாழ்க கதைகள், வளர்க வாசகர்கள்.
புத்தகத்தின் பெயர்: “கொன்னியைத் தேடி”
ஆசிரியர்: கொடுவாய் முனைவர் அருணாசலம், இரா.
வகை: கதை
முதற்பதிப்பு : ஏப்ரல் 2023
பக்கங்கள்: 112
விலை : ரூ.150
வெளியீடு: ஆசிரியர்
தொடர்பு எண் : 9488710897 / 7667088767
கிடைக்கும் இடம் : ஸ்ரீராம் கிளினிக்,152 கே1 கேகே நகர்.மேட்டுப்பாளையம் 641301
கோவை மாவட்டம்
கோ. தென்னரசு, எம்.ஏ. (ஆங்கிலம்), பி. யெட்.,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.