விட்டல்ராவ் (Vittal Rao) எழுதிய கூடார நாட்கள் (Koodara Natkal) - நூல் அறிமுகம் | Subbarao - https://bookday.in/

கூடார நாட்கள் (Koodara Natkal) – நூல் அறிமுகம்

கூடார நாட்கள் (Koodara Natkal) – நூல் அறிமுகம்

தமிழ் எழுத்தாளர்களில் விட்டல்ராவைப் போல் அரிய அனுபவங்களைச் சந்தித்த எழுத்தாளர் எவரும் கிடையாது. அவரைப் போன்று பல்கலை வித்தகராக உள்ள எழுத்தாளரும் கிடையாது. எனவே அவரது அனுபவப் பதிவுகள் ஒவ்வொன்றும் நமக்கு மிக மிகப் புதியவையாக, வியப்பைத் தருவதாக அமைகின்றன. விட்டல்ராவின் கூடார நாட்கள் அப்படிப்பட்ட ஒரு அனுபவங்களின் தொகுப்பு.

தமிழ்நாடு சென்னை ராஜதானியாக, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகள் புழங்கும் 26 மாவட்டங்களாக இருந்த காலகட்டத்தில் பிறந்தவர் விட்டல்ராவ் என்பதால் அவரது அனுபவங்கள் பரந்து பட்டவையாக இருக்கின்றன. நான்கு மொழித் திரைப்படங்களையும் பார்த்து ரசித்த பாக்கியவான். விட்டல்ராவின் மனம் கவர்ந்த நடிகை கண்ணாம்பா. கண்ணம்பா பற்றிய கட்டுரையோடு தான் புத்தகம் ஆரம்பிக்கிறது. கண்ணாம்பா நடித்த கண்ணகி படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.மணி விட்டல் ராவின் அப்பாவின் நண்பர். அவர் கல்யாணத்திற்கு விட்டல்ராவ் குடும்பம் பரிசலில் காவிரி தாண்டி போகிறது !

அன்று விட்டல் ராவின் பால்ய காலத்து சேலத்தின் மாடர்ன் தியேட்டா்ஸில் தான் தமிழ் சினிமாவே உருவாகிறது. இவரது அப்பா அரசு அதிகாரி. படப்பிடிப்புகளுக்கு பலவிதங்களில் அவரது தயவு தேவை என்பதால் திரையுலகில் அவருக்கு செல்வாக்கு அதிகம். விட்டல்ராவின் அக்கா மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் சிலவற்றில் நடிக்கிறார். விட்டல்ராவே மகேஸ்வரி படத்தின் புகழ் பெற்ற பாடலான அறம் காத்த தேவியே ! பாடலில் கோரஸ் பாடி ஒரு வேளை சாப்பாட்டோடு, ஐந்து ரூபாய் சம்பளமும் பெறுகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் ! ஏழாவது படிக்கும் போது, ஒரு நாள் பள்ளி விட்டு மாடர்ன் தியேட்டாஸ் வழியாக வரும்போது எம்.ஆர்.ராதாவைப் பார்த்துப் பேசுகிறார். ராதா இவருக்கு லெமன் ஜுஸ் வாங்கித் தருகிறார். பின்னாளில் ராதா உதவியுடன் படங்களில் பின்னணி பாட வாய்ப்பும் வருகிறது. இவர் அதை விட்டு விட்டுப் படிக்கப் போய் விடுகிறார். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் இறந்த போது, தமிழ் திரையுலகின் அத்தனை நட்சத்திரங்களும், இயக்குனர்களும், பாடகர்களும், இசையமைப்பாளர்களும் மௌன ஊர்வலம் செல்கிறார்கள். சேலம் நகரமே குலுங்குகிறது.

விட்டல்ராவின் அப்பாவுடைய மற்றொரு விஐபி நண்பர் நாமக்கல் கவிஞர். நாமக்கல் கவிஞர் பற்றி விட்டல்ராவ் சொல்வதெல்லாம் வியப்பூட்டும் தகவல்கள். கவிஞர் வீட்டில் ஒவ்வொரு பொங்கல் நாளிலும் பெரிய விருந்து நடக்கும். ஒரு விருந்தில் விட்டல்ராவ் ஒரு பாரதி பாட்டு பாடுகிறார். கவிஞர் மிகவும் மகிழ்ந்து இவருக்கு ஒரு ரூபாய் தருகிறார். விருந்து கவிஞரின் வீணைக் கச்சேரியுடன் முடிகிறது. நாமக்கல் கவிஞர் பெரிய ஓவியர் என்று படித்ததுண்டு. அவர் இசைக் கலைஞரும் கூட என்று இப்போதுதான் தெரிகிறது.

தொகுப்பின் தலைப்பான கூடார நாட்கள் மிக அருமையான கட்டுரை. நான் இதுநாள் வரை டூரிங் தியேட்டரும், டெண்ட் கொட்டகையும் ஒன்று என நினைத்திருந்தேன். டெண்ட் கொட்டகை டூரிங் தியேட்டர் காலத்திற்கு முந்தியது. டெண்ட் கொட்டகை கேன்வாஸ் துணியில் செய்த கூடாரம். டெண்ட் கொட்டகை என்பது கேட் கதவு, நடு சென்டர் மாதிரிதான் என்று அவர் சொன்ன பிறகுதான், அட, இத்தனை நாள் நாமும் இப்படித் தப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தோமே என்று தோன்றியது. படம் ஓடாத நேரங்களில், படம் காட்டும் வெள்ளித் திரையை – என்ன பெரிய வெள்ளித் திரை ! எட்டு முழ வேட்டி போன்ற ஒரு துணிதான் அது – பள்ளிக்கூடத்தில் மேப்பை சுருட்டி வைத்திருப்பது போல் சுருட்டி வைத்திருப்பார்களாம். சமயத்தில் காட்சி ரத்தாகி விடும். டெண்ட் வாசலில், ‘எதிர்பாராத விதமாக வெள்ளித் திரை சலவைக்குப் போயிருப்பதால், ஒரு வாரத்திற்கு சினிமா கிடையாது. அசௌகரியத்துக்கு மன்னிக்கவும் !‘ என்று அறிவிப்புப் பலகை தொங்குமாம்.

மாணிக்கவாசகர் படத்தில் சி.வி.வி.பந்துலு பாடிய இங்கே வாருங்கோ – இது என்ன பாருங்கோ என்ற பாடல் பின்னால் மதுரைவீரனில் நாடகமெல்லாம் கண்டேன் என்று உருமாறி வந்தது பற்றி, மூன்றாம் பிறை கமல் உலகத் தரத்தில் நடித்து, கடைசியில் அளவுக்கு அதிகமாக குட்டிக்கரணம் அடித்துவிட்டது பற்றி, விஜயனின் நடிப்பு பற்றி, இங்மர் பெர்க்மன் பற்றி, மொழி வாரியாக தலைசிறந்த இந்திய சினிமாக்கள் பற்றி. வைதீஸ்வரனின் கவிதை உலகம் பற்றி, நவீன ஓவியங்கள் பற்றி, ஓவியர்கள் பற்றி. இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் பற்றி என ஒரு கலைடாஸ்கோப் காட்சிகளாக வெவ்வேறு வண்ணங்களும், டிசைன்களும் காட்டும் தொகுப்பு.

நான் மேலே குறிப்பிட்டது போன்ற பல்வேறு விதமான அனுபவங்கள் வேறு பலருக்கும் கூட கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால். அவற்றை சுகமாக வாசிக்கும் வண்ணம் எழுத விட்டல்ராவ் போன்ற ஒருவரால் மட்டுமே முடியும்.

நூலின் தகவல்கள் :

நூல் : கூடார நாட்கள்
ஆசிரியர் : விட்டல்ராவ்
பதிப்பகம் : அம்ருதா பதிப்பகம்
பக்கம் :  200
விலை : ரூ160

நூல் அறிமுகம் எழுதியவர் :

ச.சுப்பாராவ் – எழுதித் தீராத பக்கங்கள்

ச.சுப்பாராவ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *