கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் (Koodiletra Mudiyatha Kutravaligal) – நூல் அறிமுகம்
“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது” என்பது அனைவரும் அறிந்த ஒளவையார் பாட்டு..
பிறப்பதில் நம் கையில் என்ன இருக்கிறது. இந்த சாதியில், இந்த மதத்தில், இந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய முடியாது. அதே போல ஆணாக, பெண்ணாக, மாற்றுப் பாலினத்தவராக பிறப்பதும் நம் கையில் இல்லை. மாற்றுத் திறனாளிகளாக பிறப்பதுவும் நாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கை அல்ல.!
பார்வை மாற்றுத் திறனாளியாக பிறந்து வாழ்க்கை முழுவதும், ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் சந்திக்கின்ற அவமானங்கள், சங்கடங்களை தொகுத்து கொடுத்துள்ளார் ஐயா பேரா.முருகேசன் அவர்கள்.
ஐயா அவர்களை நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மாநில வாசிப்பு முகாம்களில் அடிக்கடி சந்தித்துள்ளேன். முகாம்களுக்கு ஐயா அவர்களுடன் இன்னும் சில பார்வை மாற்றுத் திறனாளி நண்பர்களும் தொடர்ந்து வருவார்கள். முகாமில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். நூல்களை வாசித்து விட்டு மிகவும் உன்னிப்பாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள். ஐயா அவர்களே கொஞ்ச நாள் அந்த முகாமின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார். ஐயா கையொப்பம் இட்ட சான்றிதழ்கள் இன்றும் என்னிடம் உள்ளன. முகாம்கள் அனைத்திலும் கலந்து கொண்ட நபர் ஐயா மட்டுமே எனச் சான்றளிக்கிறார் ஈரோடு பேரா.மணி அவர்கள்.
பேரா.மணி தான் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக அணிந்துரை எழுதியுள்ளார். இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க கடமைப் பட்டவர்களாக தான் இருக்க முடியும். வேறு வழியில்லை.!
மாற்றுத் திறனாளிகளுக்கு தாங்கள் செய்வது, அவர்களிடம் நாம் பேசுவது, நடந்து கொள்வது தவறு என்ற புரிதலே இல்லாமல், அல்லது இதெல்லாம் தவறே இல்லை என்ற புரிதலோடு நடந்து கொள்ளும் நம்மைத் தான் அவர் “கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்” என்கிறார்..
பதினாறு அத்தியாயங்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இவை. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்த கட்டுரைகள். தலைப்புகள் ஒவ்வொன்றும் கவித்துவமானவை. ஆனால் பேசுபொருளாக இருப்பது ஒவ்வொன்றும் சமூகத்திற்கான சாட்டையடிகள்..
சுமார் 250 பக்கங்கள் உள்ளன. பக்கத்திற்கு மூன்று என்றாலும் சுமார் 750 சம்பவங்களை ஐயா தொகுத்துக் கூறி இருக்கிறார். ஒவ்வொரு சம்பவத்திலும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வாறு நீதி மறுக்கப்படுகிறது? உரிமை பறிக்கப்படுகிறது? வாய்ப்பு தடுக்கப்படுகிறது? அவமரியாதை ஏற்படுகிறது என்பதை வலியோடு பதிவு செய்திருக்கிறார். அதை எழுத்தில் கோபம் கொப்பளிக்க கொப்பளிக்க வெளிப்படுத்தி இருக்கிறார்.
அப்பா, அம்மா தொடங்கி அன்றாடம் சந்திக்கின்ற ஒவ்வொருவரும் ஏற்படுத்திய காயங்கள் மனதில் ஆறாமல் கிடக்கின்றன.
மாற்றுத் திறனாளி என்பதாலேயே பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்து சொல்வதை எப்படி ஏற்பது?
புதுசா வீடு கட்டி விழா வைக்கும் நாளில், எங்கேயாவது போயி விளையாடிட்டு, சாயங்காலம் வந்தால் போதும் என்று தந்தையே துரத்தினால் அவர்கள் எங்கே போவது?
உறவினர் வீடுகளுக்கு செல்லும் போதும், ஊர் சுற்றிப் பார்க்க போகும் போதும் ஆசையாய் கிளம்பி, ஓடி வரும் குழந்தையை பார்வை மாற்றுத் திறனாளி என்பதாலேயே விட்டு விட்டு போனால் அந்த வேதனையை எப்படி தாங்க முடியும்?
பேசத் தடை, பழகத் தடை, நடக்கத் தடை, விளையாடத் தடை, வெளியில் செல்லத் தடை, படிக்கத் தடை, பேருந்தில் பயணம் செய்யத் தடை, இலவச பாஸ் வழங்கத் தடை, டிக்கெட் எடுக்கத் தடை, கல்லூரி சேரத் தடை, வேலையில் சேரத் தடை, விரும்பிய பணி செய்யத் தடை, ஆசிரியராக விரும்பிய பாடம் எடுக்கத் தடை, விரும்பிய வகுப்பு எடுக்கத் தடை, வினாத்தாள் எடுக்கத் தடை, விடைத் தாள் திருத்தத் தடை, நிகழ்வுகள் நடத்தத் தடை, நிகழ்வை ஒருங்கிணைக்க தடை, காதலிக்க தடை, திருமணம் செய்யத் தடை, குழந்தை பெற்றுக் கொள்ள தடை, வளர்க்கத் தடை, சம்பந்தம் செய்யத் தடை, வீட்டில் சொத்துரிமை கேட்க தடை, பணியிடத்தில் உரிமை கோர தடை, போராட தடை, இரயிலில் பயணிக்க தடை, வங்கியில் கணக்கு வைக்க தடை, ஏ.டி.எம். அட்டைக்குத் தடை, வங்கிக் கடன் வாங்க தடை..
காப்பீட்டு சட்டத்திலேயே இல்லை என்றாலும் காப்பீட்டு நிறுவனங்கள் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விபத்து காப்பீட்டில் விலக்களிக்கும் கொடுமை.. அஞ்சலக்தில் ஒரு சேமிப்பு பத்திரம் வாங்க கூட நேர்கிறது சிக்கல்..!
தெருவில் நடந்தாலே கைகளில் பணத்தை திணித்து விட்டு போகிறார்களே.. நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்டோமா? கேட்பவர்களுக்கு கொடுங்கள். பார்வை அற்றவர்கள் என்றாலே பிச்சைக்காரர்கள் என்று அர்த்தமா?? இது நியாயமா? என்று கொந்தளிக்கிறார்.
சாதரணமாக நடக்க வேண்டிய காரியங்களுக்கு கூட பார்வை மாற்றுத் திறனாளிகள் பல ஆண்டுகள் நடந்து நடந்து தான் சாதிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் பேரா.முருகேசன்.
எங்களுக்கு உதவி செய்தால் புண்ணியமாம். பணம் கொடுத்தால் புண்ணியமாம்.. நாங்கள் பணம் கொடுத்து அவர்கள் வாங்கினால் அது பாவமாம்! என்னய்யா உங்க பார்வை என்கிறார்.
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பார்வை மட்டும் தான் இல்லை. அவர்களுக்கு காது கேட்கும். சிந்திக்க தெரியும். வாய் பேச முடியும். சூழலை உணர முடியும். ஆனால் கண் தெரியாதவர்கள் என்றார்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பது என்ன நியாயம்?? படித்தவர், படிக்காதவர், சாதாரணமானவர்கள் தொடங்கி அமைச்சர் வரைக்கும் இப்படி இருக்கிறீர்களே. உங்களை என்ன தான் செய்வது என்று கேட்கிறார் ஐயா.
நான் மிக முக்கியமான பகுதியாக சொல்ல வேண்டும் என்று நினைப்பது, “உள்ளடங்கிய கல்வி” பற்றிய பகுதியைத் தான். பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கிற சிறப்புப் பள்ளிகளின் முக்கியத்துவம் பற்றியும் பொதுவான பள்ளிகளில் பொதுவான குழந்தைகளுடன் பயின்று வெளிவரும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் இயல்புகள் குறித்தும் ஐயா அவர்கள் சொல்லி இருக்கும் கருத்துகளை அரசும் அதிகாரிகளும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அங்கே எங்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் உள்ளது, விளையாட்டுகள் உள்ளன. அதற்கென்று பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். அங்கு நாங்கள் கற்றுக் கொள்ள முடியும். திறன்கள் வளர்த்துக் கொள்ள முடியும். சுயமாக இயங்க நாங்கள் தன்னம்பிக்கை பெற முடியும் என்று அவர் கூறுவது மிக முக்கியமான பகுதி. எங்கள் மாவட்டத்தில் உள்ள தோழர் தேனி சீருடையான் அவர்கள் தனது “நிறங்களின் உலகம்” நாவலில் பார்வைத் திறன் அற்ற குழந்தைகளின் உலகை மிக அழகாக பதிவு செய்திருப்பார். அவர்களுக்கென்று தனி உலகம் இருக்கிறது. உணர்ந்து கொள்ள நிறங்கள் இருக்கிறது. வாசம் இருக்கிறது. பார்வை இல்லை என்பதால் அவர்களுக்கென்று உலகமே இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களது இருப்பையே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் இந்த உலகம் அப்படித்தான் நடந்து கொள்கிறது.
மாற்றுத் திறனாளிகளின் மீது அக்கறை கொண்டு செயல்படுகிறோம் என்ற பெயரில் அவர்களை எவ்வாறெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறோம் என்று கொள்கை முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தலித், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆணையம், அமைப்புகள் என்றால் அது தொடர்பான பயிற்சி, அனுபவங்கள் உள்ளவர்கள் தான் துறையில் பொறுப்புகளில் உள்ளனர். ஆனால் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் யார் இருக்கிறார்கள்? யார் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்.
பார்ப்பன அதிகாரத்தை விட கொடுமையானது பார்வை அதிகாரம்.. கண் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் காட்சி அதிகாரம் செலுத்துகின்றனர் என்கிறார்.
எங்களால் எது முடியும் எது முடியாது என்று நீங்கள் தீர்மானிக்காதீர்கள்..! எங்கள் சொல்லை நாங்கள் பேசுகிறோம். அதை எங்கள் அனுமதியின்றி வேறு யாரும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.. எங்கள் முடிவை நாங்கள் எடுக்கிறோம். எங்கள் வாழ்வை நாங்கள் வாழ்கிறோம்..!
புரிந்து கொள்ளுங்கள் “எதிர் சமுதாயமே” என்கிறார்.. எங்கள் சமுதாயம் என்று தான் தொடர்ந்து சொல்கிறார். தாய், தகப்பன், அண்ணன், தங்கை, இணையர் என யாராக இருந்தாலும் எங்களை அவர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அவர்களும் எங்களுக்கு அந்நியர் தான் என்கிறார்..
முந்தைய காலகட்டங்களில் ஒப்பிடும் போது விளிம்பு நிலை மக்கள், பால்நிலை திரிந்தோர், மாற்றுத் திறனாளிகள் பற்றிய புரிதலில் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் ஐயா அவர்கள் நூலை முடிக்கும் முன்பு கடைசி பத்தியில் சொல்லும் ஒரு சம்பவம் “நீங்க இன்னும் திருந்தவே இல்ல..!” என்று சொல்வதாக தான் இருக்கிறது.
பொது சமூகத்தினர் மத்தியில் மாற்றங்கள் நிகழ இதுபோன்ற இன்னும் பல நூல்கள் வரத்தான் வேண்டும். ஐயா அவர்கள் அதற்கான அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
நூலின் மொழி நடை குறித்து ஐயா அவர்கள் ஒரு இடத்தில் பேசி இருந்தார். ஒன்றும் குறையில்லை. மிகவும் பொருத்தமாகவே உள்ளது. வாசிப்பாளர்கள் குறித்த அத்தியாயம் வாசிக்கும் போது மிகவும் வியப்பாக இருந்தது. போராட்டங்கள் குறித்த அத்தியாயம் விறுவிறுப்பாக இருந்தது. போராட்டம் செய்தோரை இரவெல்லாம் அலைக்கழிப்பு செய்து, நள்ளிரவில் சுடுகாட்டு பக்கம் காவல் துறை இறக்கி விட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய விவாதம் ஆனது நன்றாக நினைவிருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு பள்ளி விழாவில் ஆன்மீகப் பேச்சாளர் என்ற பெயரில் ஒருவர் பிற்போக்குத் தனமாக பேசியதை எதிர்த்து பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியர் முனைவர் சங்கர் பேசியது மிக முக்கியமான ஒன்று. அதில் அவர் பெயரை குறிப்பிட்டு இருக்கலாம்.
திருத்தணி குமாரசாமி ஐயா, கண்ணன் ஐயா போன்றோரை மறக்க முடியாது. இன்னும் நிறைய சொல்லணும் போல இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்த்துகள்…!
நூலின் தகவல்கள் :
நூல் : கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்
ஆசிரியர் : முனைவர் மு.முருகேசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ₹216
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/koodiletra-mudiyatha-kutravaligal/
நூல் அறிமுகம் எழுதியவர் :
தேனி சுந்தர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.