கூப்புக்காடு ஆவணப்படம் – நிகழ்வு
கடந்த மே 10 ஆம் தேதி சனி அன்று மாலை 6 மணியளவில், சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், எழுத்தாளர் ஆரா எழுதிய கூப்புக்காடு (இது வால்பாறையின் கதை) நாவலை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தைக் கீதா ஹட்சன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருந்தார். நிகழ்வின் தொடக்கமாக, தம்மா குழுவினரின் பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து, கூப்புக்காடு நாவலின் கதைச் சுருக்கத்தை திருமதி ரேணு மீரா வழங்கினார். பின்னர், ஐம்பது நிமிடங்கள் காட்சிப்படுத்தப்பட்ட கூப்புக்காடு ஆவணப்படம் திரையிடப்பட்டது.
ஆரா எழுதிய கூப்புக்காடு (இது வால்பாறையின் கதை) நாவல் தேயிலைத் தோட்ட அடிநிலைத் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலையும் சம்பளத் திருட்டையும் மையப்படுத்தியது. இந்நாவல், அவர்களின் வாழ்வாதாரச் சிக்கலை யதார்த்த மொழிநடையில் புனைந்துள்ளது. அத்தொழிலாளர்கள் நடைமுறையில் சந்திக்கும் வாழ்வாதாரச் சிக்கலை உண்மைக்கு மிக நெருக்கமாக இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை, நூற்றுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் பார்வையிட்டனர்.

பார்வையாளராகப் பெரும்பாலும் சமநிலப் பரப்பில் வாழ்பவர்களே வருகை தந்தனர். அப்பார்வையாளர்களுக்கு மலைப் பிரதேச வாழ்வியலில் அடிநிலைத் தொழிலாளர்கள் சந்தித்த, சந்தித்து வரும் இன்னல்கள் கடத்தப்பட்டன. கூப்புக்காடு ஆவணப்படத்தில் இடம்பெற்ற எழுத்தாளர் ஆராவின் எடுத்துரைப்பு, தொழிலாளர்கள் அனுபவிக்கும் நடைமுறைச் சிக்கல், அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை, வால்பாறை இயற்கை எழில் கலந்த கலவையோடு காட்சிமொழியாக்கப்பட்டிருந்தது. இது நாவலின் அடைப்படைத் தன்மையைக் கொண்டதால் நாவலுக்கு வலுசேர்க்கும் விதமாகவும் அமைந்திருந்தது. மேலும், கூடுதல் ஆதாரத்தோடு நம்பகத் தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது.
கூப்புக்காடு ஆவணப்படம் திரையிடலுக்குப் பின்னர், நிகழ்ந்த சிறப்புக் கலந்துரையாடலில், சென்னைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கூட்டுநர் குழு உறுப்பினர் முனைவர் ஆம்ஸ்ராங், உளவியலாளர் Dr.ராஜ்மோகன், கவிஞர் குட்டி ரேவதி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, நாடகவியலாளர் பிரளயன், கவிஞர் நாச்சியாள் சுகந்தி, இயக்குநர் ஆர். ஆர் சீனிவாசன், CITU தோழர் முத்துக்குமார், CITU தோழர் பரமசிவன், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் நாகராஜன் இவர்களுடன் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கீதா ஹட்சன், எழுத்தாளர் ஆரா அவர்களும் கலந்துகொண்டனர்.

இவ்வாளுமைகளிடம், முனைவர் பலராமன் சுப்புராஜ் வினாக்களைத் தொடுத்துக் கலந்துரையாடலை முன்னெடுத்து ஒருங்கிணைத்தார். இக்கலந்துரையாடலுக்கான வரவேற்புரையை எழுத்தாளர் ஆராவும் நன்றியுரையை இயக்குநர் கீதா ஹட்சனும் வழங்கினர். ஒட்டுமொத்த நிகழ்ச்சியைத் திருமதி அஞ்சலா நவ்னி தொகுத்து வழங்கினார்.
எழுதியவர் :
முனைவர் பலராமன் சுப்புராஜ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

