கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) நூலிலிருந்து….
கடந்த வாரம் காஞ்சிபுரம் சென்ற போது கவிஞர் மைத்ரி அன்பு அவர்களை சந்திக்க நேரிட்டது. விவரணங்கள், விசாரிப்புகள்… எல்லாம் முடிந்தபின் அவர் கையில் இருந்த ஒரு சில புத்தகங்களை எனக்குத் தந்தார். அதில் இந்த கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) புத்தகமும் அடக்கம் . அட்டைப் படத்தைப் பார்த்தவுடன் ஒரு 12 ஆண்டு காலம் முந்தைய நினைவுகளுக்குள் என் மனம் சென்றது. புரிசை கண்ணப்ப தம்பிரான் கூத்துப் பயிற்சிப் பள்ளியில் நானும் ஒரு மாணவனாக இருந்து ஒரு மாத காலம் பயிற்சி எடுத்து அதே மண்ணில் அந்த கூத்து அரங்கேற்றமான அந்த நிகழ்வுகளின் நினைவுகளில் என் மனம் லயித்திருந்தது.
புரிசை கூத்து மன்றத்தின் ஆசிரியர், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான ஐயா கண்ணப்ப சம்பந்தன் அவர்கள் எனக்கு தர்மர் வேஷம் கொடுத்தார். பயிற்சி பட்டறை குதூகலமாக இருக்கும். அடவுகள் எங்களை ஆராதிக்கும். அடவுகளிடம் நாங்கள் சரணடைவோம். கிறுக்கியும், அடவுகளும் ஒரு கூத்தாடிக்கு இரு கண்கள் போன்றது..
தமிழகத்தின் கூத்துக்கான அடவு வயலின் தாய்மை பூமியாக என்றும் புரிசை இருக்கும் எனலாம்.
இந்த மன ஓட்டத்தோடு இந்த புத்தகத்தைப் படித்து முடித்து விட வேண்டும் என நினைத்து நேற்றைய தினம் படித்துவிட்டேன் .
80 வயது நிரம்பிய கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் அவர்கள் தன் வரலாற்றினை சுவைபடச் சொல்லி தனது மகன் முனைவர் ஏகாம்பர ராஜசேகர் அவர்கள் இந்த நூலினை வெளியிட்டுள்ளார்.
தனது 50 ஆண்டுகளுக்கு மேலான கூத்து அனுபவங்களையும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கூத்து, நாடகங்களில் தான் ஆடிய பெருமையையும் தனது மொழியில் மிக எளிதாக மற்றவர்களுக்குப் புரியும்படி சொல்லியுள்ளார்.
“கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்
கூத்தாடி கிழக்கே பார்ப்பான் ”
என்ற பழமொழிக்கு ஏற்ப இரவு முழுக்க விழித்திருந்து தன் உடல் மொழியால் அத்தனை அசைவுகளையும் பார்ப்பவர்கள் கவரும் வண்ணம் தனது ஆட்டத்தை ஆடிக் காட்டுபவன் ஒரு கூத்துக் கலைஞன்.
ஒரு கூத்து நடைபெறுவதற்கு குறைந்தபட்சம் 10, 12 பேர்களாவது தேவைப்படும். தாளம், ஹார்மோனியம், த வில்,என்று இசையும்,கலைஞர்களுமாக ஒரு மூன்று பேர் தேவைப்படுவார்கள். குறைந்தபட்சம் ஒரு 15 பேர் கொண்ட ஒரு குழுவாக கூத்துக் கலைக் குழு இருக்கும்.அதற்கு ஒரு நிர்வாகி, ஆசிரியர் ,என்று இருந்து அதை வழிநடத்துவார்கள்.
தான் திருமணத்திற்கு முன்பு இருந்தே ஆடிய கூத்தில் இருந்து தற்போது வரை அவருடைய அனுபவங்கள் பல்கிப் பெருகி ஓடுகிறது இந்த நூல் முழுக்க..!
டாக்டர் சுதாசேஷய்யன்,துணைவேந்தர் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்..அவர்கள் தனது மதிப்புரையில் ஆடல் அரங்கத்திற்குக் “கூத் துக்களரி” என்ற பெயருண்டு..! நாட்டியம் ஆடியதால் சிவபெருமானுக்குக் கூத்தாடி என்றும் கூத்தன் என்றும் பெயர்கள் உண்டு என்பதையும் தெரிவிப்பதோடு …. எழிலும் ஏற்றமும் மிக்க கூத்துக் கலையின் சிறப்பை இந்நூல் பதிவு செய்கிறது என்றும்.. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்திற்குக் கூத்துக் கலைஞராக செயல்பட்டு விட்ட ஒருவரின் அனுபவப் பிழிவு தான் இந்நூல்.! என தனது மேன்மை உரையினைத் தந்து இந்த நூலுக்கு மகுடம் சூட்டியுள்ளார்.
மேலும் இந்நூலில் கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் அவர்கள் வண்ணார், வைணியன், பண்டாரம்.. இவர்கள்தான் இந்தக் கலையை இப்பொழுது வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். மற்ற சமூகத்தில் உள்ளவர்கள் இந்தக் கலையை கற்று ஆடுவார்கள். ஆனால் அவர்கள் தான் அந்த கலைக்குள் வாழ்பவர்கள். அதற்கென்று தோற்றம் பெற்றவர்கள்என்கிறார்.
கூத்து துவங்குவதற்கு முன் இசைக் கலைஞர்களின் ஹார்மோனியம் தவில் தாளம் இசைக்குப் பின் முறைப்படி கூத்து துவங்கும்.. முதலில் விருத்தம், விநாயகர் துதி,, சரஸ்வதி துதி,, ஆறுமுக துதி, கூத்து ஆடும் கிராமத்தின் கிராம தேவதையின் துதி என பாடிய பின்னால்…
கூத்து முறைப்படி துவங்கும் என்றும்… முதல் ஆட்டக்காரராக பபூன் வந்த பின் கூத்து களைகட்டத் துவங்கும்.. என்றும் குறிப்பிடுகிறார்.
தான் முதலில் ஆடிய சைந்திய பங்கம் கூத்து துவங்கி… ஆசிரியர் ராமசாமி, மிருதங்கம் தர்ம கோட்டி, மேக்கப் மேன் சம்பத்து, பெட்டிக்காரர் கிருஷ்ணர், என தன்னோடும் தன் குழுவோடும் இணைந்து பயணித்த அத்தனை நட்பு களைப் பற்றியும் அவர் நினைவடுக்கிலிருந்து பல கதைகள் சொல்கிறார். தானே கூத்துக்குப் பாட்டு எழுதி நடித்த கதையினையும் சொல்கிறார்.
முழுக்க விவசாயத் தொழிலையே நம்பி இருக்கும் நான்.. விவசாய வேலையின் ஓய்வு நேரங்களில் எல்லாம். கூத்துப் பிரதிகளையும் பாடல்களையும் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே இருப்பேன். நிறைய மனப்பாடம் செய்ய வேண்டி இருக்கும். நடிப்பு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு நாடக, கூத்துக் கலைஞனுக்கு பாடுகின்ற திறமையும்,.. வேணும்..! வசனங்களைத் தெளிவாய்ப் பேசுகின்ற திறமையும் வேணும்…! இந்த இரண்டும் இருந்தால் தான் நாடகத்தில் பெயர் எடுக்க முடியும். விடிய விடிய மக்களை உட்கார்த்திப் பார்க்க வேண்டும்.அவர்களின் ரசனையை நாம் பார்த்து.. அதற்கு ஏற்றபடி கூத்து நடத்திட வேண்டும் என்கிறார்.
அரிதாரம் பூசும் கூத்துக் கலைஞர்கள் மீது கொண்ட பற்றுதலை, தனக்கு கூத்தின் மீது இருக்கும் நெருக்கத்தினை,,, இந்நூலின் அர்த்த புஷ்டியோடு கூத்துக் கலைஞர் நீ. ஏகாம்பரத்தின் உணர்வு அலைகளுக்கு ஒளிக் கிரீடம் சூட்டுவதாக அவதாரம் திரைக்கலைஞர் நாசர் அவர்கள் தனது உணர்வுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்… தன்னா ர்வத்தால் மட்டுமே ஒருவன் ஒரு கலையின் எல்லைக் கோடுகளைத் தொட்டும்..அதைத் தள்ளித்…தள்ளி..விரிவடையச் செய்யவும் கூடும்.. என்பதற்கு கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் அய்யா ஓர் எடுத்துக்காட்டு..! எனும் நிதர்சனம் நூலுக்கும், நூல் ஆசிரியருக்கும், கூடுதல் கணத்தைத் தந்துள்ளது.. உண்மை..!
வடக்கத்தி, தெற்கத்திக் கூத்து என பிரிவுகள் இருந்தாலும் கதை மாறாது. பானி மட்டும் மாறும். என்கிறார் கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம். பழமை தான்… தெற்கத்தி புராணக் கதை ஆழமாய் இருக்கும்..வ டக்கத்தி கூத்தில் கொஞ்சம் புராணக்கதையோடு, சினிமாப் பாடல் கலந்து இருக்கும்..
கூத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அளப்பறியது. என்கிறார் கூத்து க் கலைஞர் ஏகாம்பரம்…
” அர்ஜுனன் வில்வித்தை பார்த்தால் கல்யாணம் ஆகும்.
கர்ண மோட்சம் பார்த்தால் புண்ணியம் கிடைக்கும்.
திரௌபதி துயில் பார்த்தால் பாவம்.. வீட்டுக்கு வந்ததும் எண்ணெய் தேய்த்து குளித்து விடும் பழக்கம் இந்த கூத்துக்கு உண்டு.
அர்ஜுனன் தபசு பார்த்தால் குழந்தைப் பேறு கிடைக்கும்.
தவசு மரத்தின் மீது அர்ஜுனன் தவம் இருக்கும்போது அவன் வீசும் எலுமிச்சம்பழம்,, பூக்களைப் பிடிப்பதற்காக குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தனது முந்தானையை ஏந்திக் கொண்டு இருப் பார்கள். எலுமிச்சம் பழங்களும், பூக்களும் முந்தானையில் விழுந்தால்… குழந்தை பேறுடன் நலமாய் வாழ்வார்கள்…எனும் நம்பிக்கை இன்றும் கிராமத்துப் பெண்களிடம் உண்டு. குடும்பமும் நன்றாக இருக்கும்…! கூத்தின் மீதான நம்பிக்கையும்…மக்கள் மீது கூத்துக் கலைஞர்களுக்கு இருக்கிற மரியாதை உணர்வையும்…இந் நூலெங்கும் பார்க்க முடிகிறது…!தான் மூன்று முறை அர்ஜுனன் தபசு மரம் ஏறியதையும் ஆசிரியர் ஏகாம்பரம் குறிப்பிடுகிறார்.
சமுதாயக் கதை அம்சம் கொண்ட நாடகத்திலும் நடித்திருக்கிறேன். ஒருமுறை எனது மாமா தோழர் ஆனந்தன்.. அவர் ஒரு கம்யூனிஸ்ட்.. ஒரு காதல் கதைக்கு ஒரு பாடலை எழுதியிருந்தார்.அந்தப் பாடலை பாடி நடித்த போது மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது. காதலியை விட்டு வெளிநாடு செல்கிறான் காதலன். தன்னை திருமணம் செய்து கொண்டு இங்கேயே விட்டுவிட்டு கூட நீங்கள் வெளிநாடு செல்லுங்கள் என்று சொல்லுகிறாள் காதலி.!. இது உனக்கு படிக்கும் வயது. இப்போது வேண்டாம் திருமணம் என்கிறான் காதலன்..!இதற்கிடையில் இந்தப் பாடல் வரும்…பாடல்….
ஆனால் உமது இஷ்டம் /எந்தன் உயிர் வாழ்வது / இனிமேல் கஷ்டம்/ ஆனால் உமது இஷ்டம் /ஆழ்ந்து உணர்ந்திடுவீர் / அனாதை எனை மணப்பீர் தோழரே/ நான் கூடப்பிறந்தவளா?/ உந்தன் கோத்திரத்து பெண்களா?/ இல்லையே!/ ஆழ்ந்து உணர்ந்திடுவீர் / அனாதை எனை மணப்பீர் தோழரே../ என்று அவர் எழுதிய பாடலையும் புகழ்ந்து பேசுகிறார்.. கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் அவர்கள்..!
தெருக்கூத்து வடிவம்… வடக்கத்தி, தெற்கத்தி, மேற்கத்தி, எனும் முப் பாணிகளின் பரிமாணங்களைக் கொண்டது என துவக்கத்தில் சொல்லி தனது சின்ன வயது செப்பேட்டு நினைவுகளோடு, தனது ஆய்வியல் உண்மைகளையும்..சேர்த்து,சென்னைப் பல்கலைக்கழகத்தின்..தமிழ் இலக்கியத் துறைத் தலைவர், பேராசிரியர், முனைவர் கோ. பழனி அவர்களின் மதிபபுரை என்பதை விட…கூத்தின் மீது அவர் கொண்டிருக்கும் பாச உணர்வின் பசுமை படர்ந்த ஆய்வுரை என்றே கூறலாம். ..
வித்தைக்கு சத்துருவே… குடியும்.. பெண்ணும்… தான்.!அதை விட்டு ஒழுங்கா கலையை நேசித்தால் கலை நம்மை உயர்த்தும் என்ற கொள்கையோடு வாழ்ந்து இருக்கிறார் கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் அவர்கள்..! தான் ஒருபோதும் குடித்துவிட்டு இதுவரையில் கூத்து ஆடியதே இல்லை என்று அவர் பெருமிதம் பொங்க சொல்வது கலைஞர்களுக்கும் படிக்கும் வாசகர்களுக்கும் சிறப்பைத் தரும்.
கலை பண்பாட்டு துறையின் சான்று, நலவாரிய உறுப்பினர் அட்டை என்று புத்தகத்தில் பதிவு இருக்கிறது.. அரை நூற்றாண்டுக்கு மேலாக கூத்துக்காக தனது வாழ்வினை அர்ப்பணித்த இவருக்கான அரசின் விருதுகளும்,, கலைக்கான அங்கீகாரத்தையும் இது வரை வழங்காமல் இருப்பதும் ,கண்டுகொள்ளப்படாத கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் இருப்பதும் வருத்தம் அளிக்கிறது. இந்தப் புத்தகமாவது விருது பெறட்டும் வாழ்த்துக்கள்.
தனது தந்தைக்கான வரலாற்றை அவர் வாழும் காலத்திலேயே பதிவு செய்திடும் முனைவரும் பதிப்பாசிரியருமான பேராசிரியர் ஏகா. ராஜசேகர் அவர்களின் சிரத்தை மிக்க பணியும்,, நன்றிக்கு..அன்பின் சொற்களில் நயந்தும்…வியந்தும்…கூறியது தந்தைக்கு இவர் தரும் கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) உலகத்திற்கான சிறந்த பரிசு இந்நூல் என்றே கூறலாம்.. தன்னை ஊக்குவித்த கவிஞர் ஜெயபாஸ்கரனில்…இருந்து தனது நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் மறக்காமல் இந்நூலில் கூறியுள்ளார்.
“பொருள் தனைப் போற்றி வாழ் “-எனும் அவ்வைத் தாயின் ஆத்திசூடி பொருளுக்கு ஏற்பவும்…
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனும் சொல்” எனும் திருவள்ளுவரின் குறளுக்கான அர்த்தத்தின் ஆளுமை உணர்ந்த, தப்பாத பிள்ளையாக… ஏகாம்பர ராஜசேகரன் இக்காலத்தில் இருந்துள்ளது பெருமைப்பட வைக்கிறது.மகிழ்ச்சி…!.வாழ்த்துக்கள்..!பாராட்டுகள்..!
மேலும் நூலாசிரியர், கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) குறித்தான பல தகவல்களை நூலெங்கும் அள்ளித் தெளித்து இருக்கிறார்.. மக்கள் சோர்வடையாமல் கூத்தை இரவு முழுக்க கண்டுகளிக்க எந்தெந்த மணிக்கு எந்த…எந்த…ராகம் பாடினால் சிறப்பு என்பதையும் இவர் சொல்வது வியப்பாக உள்ளது. எத்தனை எத்தனை ரகசியங்கள் கூத்துக் கலைக்குள் கொட்டிக் கிடக்கிறது. இந்நூலைப் படித்தால்.. அத்தனை..அத்தனை…ரகசியங்களையும் அள்ளித்தரும்.கலையின் பழமை அர்த்தங்களை…கலையின் பொக்கிஷங்களை…!!
நம்மை விட்டு கூத்து என்றும் போகாது.. தொடர்ந்து இருக்கும்..கிராமங்கள் இருக்கும் வரை…கூத்தும் கூத்துக் கலையும் இருக்கும்….!
கூத்துக்கலை வளர்ப்போம்..கூத்துக் கலைஞர்கள் வாழ்வு சிறக்க நாமும் உழைப்போம்.. நூல் படித்து பயன் தரும் தகவல்களை நீங்களும் சொன்னால் கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) மேன்மையுறும்..!
கூத்துக் கலைஞர், நூலாசிரியர், நீ. ஏகாம்பரம் அவர்களுக்கு என் வணக்கமும்..
கூத்துக்கான பேரன்பும்…!
நூல் அறிமுகம் எழுதியவர்:
ஆரிசன் ஆரிமுத்து
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.