மனம் தூண்டும் கூழாங்கல் கவிதைகள்
மயிலை பாலு
“நிலங்கள் கைமாறிக் கொண்டே இருந்தாலும்/ அழியாமல் இருக்கின்றன/ வாழ்ந்தவர்களின் வாசனை”
உயர உயரப் பறந்து உலகில் பல நாடுகளுக்குப் பயணம் செய்தாலும் ஒரு நாள் திரும்பி வந்து ஊரின் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டின் முன் நின்று ஒரு கணம் யோசித்தால் பசுமை நினைவுகள் அலை அலையாய் விரியும். எல்லோர் மனதுக்கும் இது சொந்தம்தான். ஆனால் அனைவராலும் இதனைக் கவித்துவமாக எழுதிவிட முடிவதில்லை. அப்படியான எழுத்துக்களுடன் தொடங்குகிறது கவிஞர் பா.மகாலட்சுமியின் “கூழாங்கற்கள் உருண்ட காலம்”
“கட்டாந்தரையைக் கல்முள் அகற்றிப் பண்படுத்திய அப்பாவின் குரல் கேட்கிறது”, “வலப்புற ஓடைப்பகுதியில் பருத்திச் செடியில் வெடித்துச் சிரிக்கிறார் அண்ணன்…” இயற்கையின் பிரதிபலிப்புகளாக அம்மாவும் அக்காமார்களும் நினைவுகளில் காட்சிப்படுகிறார்கள். “ஐந்து வயதில் கருணைக்கிழங்கின் விரிந்த இலைகளில் ஒளிந்து விளையாடிய” இடமும் மனக்கண் முன் தெரிகிறது. ஆனால் இப்போது அங்கே தென்னை மரங்கள் பாளை விட்டிருப்பது கால மாற்றத்தைக் காட்டுகிறது.
இயற்கையும் உறவுகளும் மட்டுமல்ல; பால்ய கால நண்பர்களும் நிழலாடுவார்கள். அவர்கள் நிஜத்தில் எதனால் நினைவில் பதிந்தார்கள் என்பதை நினைத்தால் வண்ணக் கனவுகள் வட்டமிடும். அந்த வட்டம் இப்படியாகக் கவிதை ஊருக்கொள்கிறது.
“என் முழங்கால் தழும்பில் பால்யஸ்நேகிதன் ஒருவனுடன் /சைக்கிள் கற்றுத்தந்த கதை இருப்பது போலவே/ மனத் தழும்புக்குள் இருக்கிறது/அவன் காதலை நிராகரித்த கதை ஒன்றும்”
வாசிப்பவருக்குள் ஒரு தூண்டலை ஏற்படுத்துவதே கவிதை என்றால் அதனை இந்தக் கவிதை நிச்சயம் செய்திடும்.
வெறும் 88 பக்கங்களில் தான் இந்தக் கவிதை கூழாங்கற்கள் உருளுகின்றன. அவற்றின் உருளலில்தான் எத்தனை எத்தனை உணர்வுகள் மாயாஜாலம் காட்டுகின்றன!
நீளமான கவிதைகளில் ரசனையும் வாழ்க்கையும் அதன் உட்பொருளும் உள்ளிழுத்துச் செல்கின்றன. அந்தச் சுவை எதனினும் எதனினும் மேலானது. அதனைப் பின்னர் ருசிக்கலாம். முதலில் சின்ன சின்னதான மிளிர் கற்களில் சில…
பாட்டி கதை சொல்லி இருக்கிறாள்; அம்மா கதை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இந்தக் கவிஞருக்குக் கடலும் கதை சொல்கிறது. கேட்பது யார்?
“கடல் கதை சொல்கிறது/ கேட்டுத் தலையாட்டிக்கொண்டே /கிடக்கிறது ஓடம்”
ஆகா! என்ன ஒரு கற்பனை! காதல் உறவை வரவு செலவு ஆக்கி லாப நஷ்டம் பார்க்கும் மற்றொரு கவிதை
“என் ஆயுளின் மொத்த வருமானமே உன் காதல்தான்/ உன்னைப் பார்க்காத ஒவ்வொரு நொடியும்/ எனக்குப் பெரும் நஷ்டம்தான்”
அன்பு பொதிந்திருப்பது போலவே ஆவேசமும் இவரது கவிதைகளில் பொதிந்துள்ளது. அது அரசியலையும் சமூகத்தையும் ஒரு சேர கேள்வி கேட்கிறது.
“இடித்துத் தரைமட்டமாக்க வேண்டியவை/ ஏராளமாய் கிடக்கின்றன/ மனித மூளைகளில்/ பாவம் என்ன செய்யும்/ பாபர் மசூதியின் கற்சுவர்கள்”
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பை உலகிற்கு எடுத்துச் சொல்ல வந்தவன் என்று ராம நாமம் உச்சரிக்கும் சில அரசியல் மோகிகள் நிஜ வாழ்க்கையில் கிருஷ்ணன்களாகவும் தசரதர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
இவர்களையும் இன்னோரன்ன கயவர்களையும் கண்டு வேதனைப்படுவதும் கோபப்படுவதும் ஒரு பக்கம். மறுபக்கம் வெட்கப்பட வேண்டியுள்ளது. அந்த வெட்கம் எங்கிருந்து வருகிறது?
“பெரியவளா குழந்தையா என்ற பேதமில்லை / பெண்ணாக இருந்தாலே போதுமானதாக இருக்கிறது/ இங்கிதம் தெரியாத உன் ஆண் குறிக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது /உன்னையும் நாங்கள் அடி வயிறு கலங்க/ யோனி கிழித்துப் பெற்றதற்கு”
நீள்கவிதைகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை, “ஒரு முறையேனும்” , “சத்தமிடா ரயில்”, “பிழை”, “கருவறை”, ” கூழாங்கற்கள் உருண்ட காலம்”, “அடுக்குப் பானையும் அஞ்சறைப் பெட்டியும்”, “சுயம்” ஆகியவை. இவற்றின் கவிதை அழகையும் கருத்துச்செறிவையும் அனுபவம் கொள்ள நூலினை வாங்கிப் படிப்பதன்றி வேறென்ன வழி இருக்க முடியும்?
“ஓர் ஆணையும் அன்னையாக்கும் சாத்தியம் மழலைகளால் முடிகிறது” என்றால், எவர் ஒருவரையும் வாசிப்பை நேசிப்பதற்கு சாத்தியமாக்கும் இந்தக் கவிதை நூல்.
நூலின் பெயர் : கூழாங்கற்கள் உருண்ட காலம் ( கவிதைகள் )
ஆசிரியர் : பா.மகாலட்சுமி
விலை :120
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2022
வெளியீடு : சொற்கூடு பதிப்பகம்
57, வடிவேல் நகர்
மாவுமில் எதிர்புறம்
நாகமலை புதுக்கோட்டை
மதுரை – 625019
அலைபேசி – 9578250173 , 8778647873
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.