Kosuvin Parvaiyil Samugam Poem By Pesum Prabhakaran. கொசுவின் பார்வையில் சமூகம் கவிதை - பேசும் பிரபாகரன்




ஏற்ற தாழ்வில்லாமல்
எல்லோரையும் கடிக்கும்
சமூக நீதி ஏந்தலே

முதலாளி தொழிலாளி என்று பாராமல்
அனைவரின் ரத்தத்தினையும் உறுஞ்சுவதால்
நீ ஒரு மூட நம்பிக்கை

இலைகளை உண்ணும் போது நீ சைவமாகிறாய்
மனிதனை கடிக்கும் போது அசைவமாகிறாய்
உன்னிலும் இவ்வளவு மதச்சண்டையா

உடலில் எத்தனையே பாகங்களிருந்தாலும்
காலை மட்டும் பறந்து பறந்து கடிக்கிறாயே
அடுத்தவர்களின் காலை வராதே என்கிறாயா

குப்பைகள் எங்கெல்லாம் குவிகின்றதோ
அங்கு கூட்டமாக செல்லும் அதிகாரியே
உன்னை அடிக்க முயற்சிப்பவர்கள்
அவரவர்களை அடித்துக்கொள்ள வேண்டியது தான்

அடிப்பவர்களை எல்லாம்
அவரவர் கையாலேயே
அடித்துக்கொள்ள வைப்பதால்
நீ ஒரு நீதி தேவதை

முத்தமிடும் கன்னத்தில் சத்தமிட வைக்கும்
சவுண்டு பார்ட்டியே
நீ எந்த நகைகளுக்கும் மயங்காமல்
கடிப்பதால் நீ ஒரு சமவாய்ப்பு சகோதரன்.

காதோரம் ரீங்காரமிடும் இசைஞானியே
எத்தனையடுக்கு காவல் போட்டாலும்
உன்னை மட்டும் பிடிக்க முடியவில்லையே
நீயென்ன விலைவாசியா ?
இல்லை கள்ளச் சந்தையா ?

கதவை திறந்தவுடன் வருகின்ற விருந்தாளியே
கேட்காமால் வருவதால் , நீ உளவாளி
உன் வருகையை கேட்காமால் விட்டால்
அனைவரும் நோயாளி

புகைகளுக்கும் அடங்காமல் புத்துணர்வு பெற்றுவிட்டாய்
பகையோடு உன்னை பார்த்தால் பரபரப்பு காட்டுகிறாயே
நோய்களுக்கு மணியடிக்கிறாயா ?
இல்லை பருவகால மாற்றத்தினை கூற வந்தாயா ?

மழைக்காலத்தில் நீ சிம்ம சொப்பனம்
வெயில் காலத்தில் நீ
அனைவரையும் தூங்கவிடாமல்
செய்கிராயே சொப்பன தர்ப்பணம்

மலேரியா டெங்குவென்ற மதத்தினை பரப்பி
கண்முன் பறந்து காட்சியளிக்கும் கடவுளே
உன்னிடம் ஒரு வேண்டுகோள்

இயற்கை சமநிலைக்காக உருவான நீ
செயற்கை அறிவியலுக்கு துணைபோய்
அவதாரங்கள் எடுத்து விடாதே
அகிலம் தாங்காது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *