1
அகதியாகும் கடவுள்
சாலை விரிவாக்கத்திற்கென
கையகப்படுத்தும் நிலத்தில் உருமாறிடும் நெடுஞ்சாலையெங்கும்
“கொத்துக் கொத்தாக
உயிர்கள் விழுமென்ற” பூசாரியின் வாக்கு
மெதுவாக மெய்யாகிறது
சாய்க்கப்படும் மரங்கள்
அகதிகளாகும் பறவைகள்
விபத்தில் மரணிக்கும் மனிதரென
ஒவ்வொன்றாய் மடிந்து கொண்டேயிருக்க
நாளொரு உருவத்தில்
மெருகேறும் கான்கிரீட் சாலையோரத்தில்
நினைவு தெரிந்த நாள் முதலாய் சந்தனமும்
குங்குமமும் பூசி அருள்பாலிக்கும் பிள்ளையாரின் அரசமரத்தை
அதிநவீன பொக்லைன் எந்திரமொன்று லாவகமாய்
வேரோடு பிடுங்கி
வேறொரு இடத்தில்
நிழலுக்கு அனுப்பி வைக்கும் வேளையில்
பக்தர்களிடம் காணிக்கை வாங்கிய கடவுள்
அரசின் இழப்பீட்டுத்
தொகையினை பெறாமல் ஆழ்ந்த சிந்தனையில்
மெளனமாகவேயிருக்க
ஊருக்கு வெளியே
பொலிவுறும் புறவழிச்சாலையில் உயிர்பெறும்
சுங்கச்சாவடியை எதிர்த்துப்போராடும் சாமானியர்களோடு
கையில் கொடியோடும் பதாகைகளோடும் கோஷமிடுகிறார் பிள்ளையார்.
2
முதல் நாள்
முதல் நாள்
முதல் வகுப்பில்
நுழையும் போது
எதிரில் தென்படுவதெல்லாம்
புதிய முகங்கள்
புதிய அனுபவங்களாகவே
நீள…
உள்ளுக்குள் பரவிய
பயத்தின் படபடப்பு அடங்காமல்
என் விரல்களை இறுகப்பற்றி
வகுப்பறையை நெருங்கும்
மகளின் பிஞ்சு விரல்களை
அதே பயத்தின் படபடப்போடு
இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டே
ஆசிரியையிடம்
கெஞ்சிக்கேட்கிறேன்
“பத்திரமாய் பார்த்துக்குங்க மிஸ்”என
நானும் சிறு பிள்ளையாய்…
கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு
கோவை

![புத்தம் வீடு [நாவல்] - நூல் அறிமுகம்](https://bookday.in/wp-content/uploads/2023/11/photo_2023-11-11_14-44-51-150x150.jpg)