(எடுப்பு)
பைந்தமிழ்த் தோட்டமிது பழத்தோட்டம்
பாவலர் நாவலர் கூடிடும் கோட்டம்(பைந்தமிழ்)
(தொடுப்பு)
சிந்தையில் அறிவூட்டி செய்கையில் திறங்காட்டி
நிந்தனை செய்பவர்க்கும் வந்தனை செய்துதவும்(பைந்தமிழ்)
(முடிப்பு)
நெஞ்சை அள்ளுகின்ற சிலம்பு மணக்கும்
விஞ்சும் சிந்தாமணி புகழோ இனிக்கும்
கண்டோர் விரும்புகின்ற குண்டல கேசியோடு
காணும் வளையாபதி காப்பியம் வழங்கும்! (பைந்தமிழ்)
மண்டிடும் புகழ்கூறும் மணிமேகலைச் சிறக்கும்
தண்டமிழ்க் குறள்பாவை வையம்புகழ்ந் துரைக்கும்
மண்ணிலே தமிழ்மணம் இனிதாய்த் தழைத்தே
எண்டிசை வாழ இன்பத்தமிழ் அழைக்கும்!. (பைந்தமிழ்)
தெள்ளு தமிழ்ப்பத்துப் பாட்டோ சுவைக்கும்
துள்ளிடும் எட்டுத்தொகை யிங்கு மணக்கும்
உள்ளமோ பதிணெண்கீழ்க் கணக்கில் இருக்கும்
வெள்ளமாய் இலக்கியங்கள் பெருகி நிறைக்கும்! (பைந்தமிழ்)
பாரதிக் கவிதையோ நாட்டைப் போற்றும்
பாரதி தாசன்கவி மொழியை ஏத்தும்
பட்டுக் கோட்டைக்கவி பொதுமை பாடும்
கொட்டும் அருவியாய்த்தமிழ் இலக்கியம் ஆடும்! (பைந்தமிழ்)
உலக மொழிகளிலே உயர்ந்திட விளங்கும்
நிலவிடும் செம்மொழி நிலைத்தே துலங்கும்
அள்ளக் குறையாமல் அள்ளியே வழங்கும்
வள்ளல் தமிழன்னை வாழ்வெலாம் முழங்கும்! (பைந்தமிழ்)