புத்தியுள்ள பொழுதுகள்
புத்தியுள்ள பொழுதாக புலர்காலை விடியட்டும்
வித்தைகளைப் புரிவதற்கு வேண்டிநின்று தொழுகட்டும்
முத்தான உழவோடு தொழில்பலவும் செழிக்கட்டும்
சத்தான தொண்டுசெய்ய மக்கள்திரள் விழிக்கட்டும்!
சுயநலத்தின் வேர்களிங்கே சுரண்டுவது ஒழியட்டும்
பயனின்றி உழைப்போர்கள் பலன்பெற்றுச் செழிக்கட்டும்!
நயமாகப் பேசிநாட்டை அழிப்பவர்கள் வீழட்டும்
கயமைகளை வேரறுத்துக் கருணைவழி தழைக்கட்டும்!
எல்லாரும் எல்லாமும் பெற்றிடவே ஓங்கட்டும்
இல்லாமை இல்லாத நிலையிங்குப் பொங்கட்டும்!
வல்லானின் சூழ்ச்சியெனும் வலையினையே அறுக்கட்டும்
சொல்லாலே செயலாலே சூழ்ச்சியெல்லாம் மடியட்டும்!
சாதிமத வெறிக்கிங்கே சாவுமணி அடிக்கட்டும்
வீதியிலே மனிதநேயம் வீறுகொண்டு பரவட்டும்
மோதிதினம் வீழ்கின்ற மூடமிங்கே ஒழியட்டும்
நீதிநெறி வழுவாத நல்லாட்சி நிலவட்டும்!
வருணத்தின் வரவிங்கே வாய்மூடி நிற்கட்டும்
திருவுடைய கல்விசெல்வம் திசையெட்டும் சேரட்டும்
அருளாளர் அகிலத்தில் அமைதிதனை நாட்டட்டும்
இருளகற்றி வாழ்விலொளி ஈந்துநலம் சூழட்டும்!
வெட்டி விடு!
என்ன செய்வதாய் உத்தேசம்?-தம்பி
இப்படிப் போவதா நம்தேசம்?
மண்ணில் மதவெறி மிகமோசம் -அதை
மாற்றிடப் போரிடும் உன்சுவாசம்!
தமிழ்நாடு என்பதே உன்முழக்கம்-இங்கே
தமிழே செழிக்கும் இதுவழக்கம்!
உமியென ஊதிடு எதிர்முழக்கம்-காரி
உமிழ்ந்தே துரத்துதல் உன்பழக்கம்!
பெரியார் அண்ணா அம்பேத்கர்-புகழ்
பெற்ற தலைவர் தமிழ்நாட்டில்!
நரியார் ஊளை பலிக்கலாமா?-தமிழ்
நாட்டில் அதன்குரல் ஒலிக்கலாமா?
மார்க்சியம் திராவிடம் கசக்காது-ஆரிய
மாயை நாவில் இனிக்காது!
வேரின் பண்புகள் மாறாது-தமிழ்
வேட்கை என்றுமே குறையாது!
செத்த வடமொழி செழிக்காது-அதைச்
சேர்ந்தவர் மூளையில் உரைக்காது!
பித்தம் ஏறிய மொழிவெறியர்-அவர்
பிதற்றிடும் வார்த்தை கேட்காது!
மொழியை நாட்டை காத்துவிடு-சில
மூடர் மதவெறி முடித்துவிடு!
அழிக்கும் செயலைத் தடுத்துவிடு-அவர்
ஆசை வளராமல் வெட்டிவிடு!
மையலிலே தவிக்கின்றேன்
மையலிலே தவிக்கின்றேன் மனதாலே
பதைக்கின்றேன்
தையலுன்னை அடையாமல் தறிகெட்டுத் திரிகின்றேன்
கையளவு இதயத்தைக் கைக்கொண்டு போனவளே!
பையநீயும் வந்திடுவாய் படுந்துயரைப் போக்கிடுவாய்!
ஐம்பொறியின் இன்பத்தை அடைகாத்துத் தந்தவளே!
கைம்மாறாய் என்னுயிரைக் கருவிழியில் வைத்தவளே!
பைம்பொழிலில் என்மடியில் பாசமழை பொழிந்தவளே!
இம்மையிலே இன்பத்தை இழந்துவிடல் சரியாமோ?
ஊடலிலே கூடலிலே உண்டாகும் இன்பத்தை
தேடலிலே கிடைக்கின்ற தேன்சுவையை அறியாயோ?
பாடலிலே காமத்தைப் பறைசாற்றும் வள்ளுவனின்
மாடமதில் ஏறிடுவோம் மைவிழியே தயக்கமேன்?
சாதிமத அடையாளம் சாக்காட்டைத் தருவதற்கா?
வீதியிலே ஆணவத்தின் வேர்களிங்கே நிலைப்பதற்கா?
சாதிமதக் கொடுமையிலே சாயாது நம்காதல்
மோதியதை மிதித்திடுவோம் மூளாமல் காத்திடுவோம்.
குருதியிலே சாதிமதம் கொப்பளித்துக் கிளம்பாது
உறுதியுடன் மனிதநேயம் உண்டானால் தளும்பாது
இறுதியிலே எல்லோர்க்கும் இறப்புதானே பரிசாகும்
மறுத்திடுவோம் சாதிமதம் மாண்புக்கு சரியாகும்.
கவிதைகள் எழுதியவர்:
கோவி.பால.முருகு,
எண்.46,முத்தமிழ் இல்லம்,
புதிய ஓ.பி.ஆர்.குடியிருப்பு,
வடலூர்-607 303
கைப்பேசி:9486282082
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கவிஞர் கோவி. பாலமுருகு அவர்களின் கவிதை வரிகள் மிக ஆழமானது மட்டுமல்ல மிக அற்புதமான, தேர்ந்தெடுத்த வார்த்தைகளுடன் கூடிய வரிகள்! மனதிற்கு இதமாக உள்ள கவிதை வரிகள். அவரது கவிதைகள் மேலும் மேலும் வர வாழ்த்துகின்றேன்!
மையலிலே தவிக்கின்றேன் மனதாலே பதைக்கின்றேன் இறுதியிலே எல்லோர்க்கும் இறப்புதானே பரிசாகும் மறுத்திடுவோம் சாதிமதம் மாண்புக்கு சரியாகும். கவிஞரின் கவிதை வரிகள் மிக ஆழமானது வாழ்த்துகின்றேன்!