கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள்

1. படையோடு நடைபோடு!

சங்கத்துப் பிறந்தவனே சாற்று தமிழ்ப் படித்தவனே
அங்கத்தின் வீரத்தை அடக்காமல் வெடித்தவனே
எங்கெல்லாம் தமிழ்மொழிக்கு இடையூறு வந்திடினும்
அங்கெல்லாம் உன்னெதிர்ப்பை அளவற்றுத் தந்தவனே!

உலகத்து மொழிகளிலே உயர்மொழியைப் பெற்றவனே
நிலைத்திருக்கும் இன்றமிழை நிறைவாகக் கற்றவனே
சிலையாக இல்லாமல் சினங்கொண்டு எழுந்தவனே
விலையாகத் தமிழ்காக்க விரைந்துயிரைத் தந்தவனே!

இலக்கியங்கள் இலக்கணங்கள் இனித்திடவே உண்டவனே
உலகத்து மொழிகளிலே உயர்மொழியைக் கொண்டவனே
சிலைகூட தமிழுக்குச் செவிசாய்க்கக் கண்டவனே
மலைகூட வியந்துநிற்கும் மாத்தமிழில் விண்டவனே!

தமிழழிக்க நினைப்போரை தடுத்துதினம் வென்றவனே
உமியாக அவரெதிர்ப்பை ஊதிப் புறம் கண்டவனே
இமிழ்கடல்சூழ் வையத்தில் இனித்திருக்க வைத்தவனே
அமிழ்தாகும் தமிழ்மொழிக்கே ஆற்றலினைத் தந்தவனே!

ஆயிரமாய் ஆண்டுபல ஆனாலும் நிலைத்திருக்கும்
பாயிரமாய் மொழிக்கெல்லாம் பண்பாட்டைச் சொல்லிநிற்கும்
வாயிழந்த வழக்கிழந்த வடமொழியின் வேரறுக்கும்
தாயினினி தானயெங்கள் தமிழ்மொழியே நிலைத்துநிற்கும்!

படையோடு நடைபோடும் பண்போடு போராடும்
தடைகளையே தகர்த்திங்கே தடம்பதித்துக் களமாடும்
அடைகின்ற துன்பத்தை ஆற்றலினால் போக்கிவிடும்
அடக்குகின்ற ஆணவத்தை அடியோடு வீழ்த்திவிடும்!

2. மண்ணும் மரமும்

மண்ணும் மரமும் மக்களின் மூச்சு
மாறினால் நின்றிடும் மானுடப் பேச்சு!
எண்ணமும் செயலும் இயற்கை வழியில்
இருந்திடில் என்றுமே இருந்திடா தழிவில்!

மண்ணைத் தோண்டின் மாளாச் செல்வம்
மரத்தை வளர்த்தால் மகிழ்ச்சியின் வெள்ளம்!
கண்ணை இமைகள் காத்திடல் போலே
காப்போம் இயற்கை வளத்தை மேலே!

காடும் மலையும் கணக்கிலா செல்வம்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தே அள்ளும்
வீடும் நாடும் விளங்கிடக் கொள்ளும்
விரிந்த இயற்கை வளத்தைச் சொல்லும்!

புவியின் வெப்பம் புரிந்திடும் அழிவை
பூமிக் கோளில் பனிமலைச் சரிவை
குவிக்கும் இயற்கை வளத்தின் அழிவை
கொண்டால் அடையும் உயிர்கள் இழிவை!

மண்ணின் வளத்தைச் சுரண்டும் கயவர்
மரத்தை அழிப்போர் மக்களின் பகைவர்!
எண்ணில் இயைந்த இயற்கை வாழ்வை
ஏற்றால் போக்கலாம் மண்ணின் அழிவை!

3. தளராது காதல்!

தளராத நினைவோடு தாங்கிடுவேன் என்னவளே
தடுக்கின்ற கூட்டத்தைத் தவிடுபொடி ஆக்கிடுவேன்
உளமிணைந்த நம்காதல் உலகத்தில் நிலைத்துநிற்கும்
உண்மையாய் வரலாற்றில் உயர்ந்திடவே பெயரிருக்கும்!

காதலில்லா உயிரொன்றைக் காட்டிடவே திறனுண்டா?
காதலின்றி இவ்வுலகம் கடுகளவு வளர்ந்ததுண்டா?
காதலுக்காய்க் கவிபாடும் காப்பியங்கள் மறைந்ததுண்டா?
கரும்பினையே மென்றுதின்னும் கைகளுக்கு விலங்குண்டா?

காதலிக்க ஈருயிர்கள் கட்டாயம் வேண்டுமிங்கே
காதலிக்கச் சாதிமதம் காட்டிப் பகை மூட்டுமிங்கே

மோதலுக்கு வழிசெய்யும் மூடர்களின் கூட்டமிங்கே
மூளுகின்ற ஆணவத்தின் முகம்காட்டும் ஆட்டமிங்கே!

கடவுளரின் கதைகூட காதலதை வெறுத்ததில்லை
காப்பியங்கள் அனைத்திலுமே காதல்வழி மறுத்ததில்லை
காட்சியிலே திரைப்படங்கள் காதலதைத் துறந்ததில்லை
காதலின்றிக் காமமின்றிக் கதையெதுவும் வளர்ந்ததில்லை!

ஆருயிரே அன்பேயென் அறிவுமிகுப் பெண்ணணங்கே
ஆதவனை மறைத்திடுமா ஆயிரமாய்க் கைகளிங்கே?
தாருவெனத் தழைத்திடுவோம் தண்ணிழலாய்க் காதலிப்போம்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தளராது காதலிங்கே!

கவிதை எழுதியவர்:

கோவி.பால.முருகு
பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர், தமிழாசிரியர்.
சிறுகதை எழுத்தாளர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, உயிர்ப்பேரம், நோய்மனம், விமோசனம் (சிறுகதைத் தொகுப்புகள்) மோகினி மதகு, கழைக்கூத்தாடி (சிறுவர் கதைத் தொகுப்பு) அறிவுதரும் ஏணி (சிறுவர் பாடல்கள்) சுற்றியதில் கற்றவை (பயண அனுபவம்)
வாழும் ஊர்: வடலூர், கடலூர் மாவட்டம்
தமுஎகச மாவட்டப் பொருளாளர்.

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *