இயக்குனர் சீனு ராமசாமி (Seenu Ramasamy) அவர்களின் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ (Kozhipannai Chelladurai), ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறந்த நடிப்பை அளித்திருக்கிறார்கள்.
டமார் டுமீல் என்னும் படைப்புகளுக்கு நடுவே மென்மையான கிராமிய கதை. பாலியல் அத்துமீறல், கைவிடப்பட்ட குழந்தைகள், கிராமம் சார்ந்த உளவியல் என ஆழம் நிறைந்த கதை.
சற்று மெதுவாக நகரும் கதையில், வேறு மொழியென்றால், இது சிறப்பு என்று இதற்குள் கொண்டாடி இருப்பார்கள்.
வேறு மொழியில் வந்த படத்தை போல செய்திருந்தாலும் கொண்டாடுவார்கள்.
பார்வையாளர்கள் பிரபலமாகப் பார்த்து அறிந்த கலைஞர்கள் இதில் இல்லை. ஆ
னால் பாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார்கள். வசனம் சிறப்பு.
படத்தில், ஆரம்பம், இடையில் வரும் பழைய பாடல்களைப் பாடும் கதாபாத்திரங்கள், சோகத்தின் நடுவில் நகைச்சுவையையும் அளிக்கிறார்கள்.
கிராமத்தின் பசுமை, வராக நதி கண்களை ஈர்க்கின்றன.
பாசமலர், முள்ளும் மலரும் படங்கள் போல அன்பு பாசம் மன்னிப்பு என்னும் அழகிய கதை. குட்டி செல்லம் (கலக்கான நடிப்பு… உருவ கேலி செய்யக்கூடாது என்னும் அற்புதமான படைப்பு) யோகிபாபு, அண்ணன், தங்கை, காதலி என அருமையான பாத்திரப் படைப்புகள்.
குட்டித் தங்கை இன்னும் சிறப்பு.
படைப்பாளிகள், பவா செல்லதுரை, KBB நவீன், இரா.தே. முத்து தங்கள் பாத்திரத்தில் மிளிர, திருநங்கைகள் காட்சிகளும் அருமை.
இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் வரும் காட்சியை கண்டுபிடியுங்கள்.
பழிவாங்குதல், வன்மம் என்னும் எதிர்மறை குணங்களை மனிதனால் வெல்ல முடியுமா? கோபமும், அதைக் கடந்து அன்பினால் வரும் மனப்பக்குவமும், நம்மை வெல்ல முடியும் என்பதை பாடமாக அளித்திருக்கின்றன.
தற்கொலை கூடாது என்பது அழகான காட்சியாக அமைந்துள்ளது.
பாப்பா என்று தங்கையை அழைக்கும் போது அந்த வாஞ்சையில் உள்ளம் நெகிழ்கிறது…
சின்ன தங்கையிடம் காட்டும் அதே பிரியம் நம்மை உலுக்குகிறது.
கைவிடப்பட்ட நிலையில், அவமானம் சுமந்து தலை குனிந்து இருக்கும் கதையின் நாயகன் ஏகன், தங்கைக்கும், புது குட்டித் தங்கைக்கும் அன்பை அளித்து, மன்னிப்பில் தன்னை உயர்த்திக்கொண்டு நிமிர்ந்து உயரும் பாத்திரத்தில், கடைசியில் தன் வாழ்வுக்கு கை நீட்டிய போது மனம் திடுக்கிடுகிறது.
கண்கள் பனிக்கிறன.
சோகம் சுமந்த முகம் சிரிக்கும்போது,
அந்தக் கண்கள் ஒளிர்கின்றன.
கல்லான மனதில் துளிர்க்கும் கனிவும் காதலும் அழகு.
இரத்த உறவுகள் கைவிடும்போது, உறவுகள் அல்லாதவர்கள் அன்புடன் ஏந்திக் கொள்வது அற்புத தரிசனம். எல்லாவற்றிலும் அடிநாதம் அன்பு.
குட்டி செல்லம், பெரியப்பாவாக வந்த யோகிபாபு, காதலி என இவர்கள் ஏந்திக் கொள்கிறார்கள்.
இத்தனை சிறப்பாக இருந்தும்,
எது ஒன்று இல்லாமல் குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்புக் கண்ணி எங்கே விடுபட்டுள்ளது என்று தெரியவில்லை.
எளிய கிராமத்து மனிதனாக செல்லத்துரையின் கதையை சிறப்பாக கொடுத்துள்ளார்கள்.
மனிதனின் அறம், மன்னிப்பு என்பதை தொடர்ந்து தம் படங்களில் அளிக்கும் நண்பர் மென்மேலும் சிறந்த படங்களை அளிக்கட்டும்.
கோழிப்பண்ணை செல்லதுரை (Kozhipannai Chelladurai) படக்குழுவினருக்கு அன்பு வாழ்த்துகள் 😍❤️💐
எழுதியவர்:
மதுமிதா ராஜா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
க்ளைமாக்ஸ் வரை நுணுக்கமாக படத்தை உள்வாங்கி எழுதப்பட்ட மதுமிதா அறிமுகம் மகிழ்ச்சி அளிக்கிறது;இனிது மஞ்சு.