சேவல் சண்டை எனும் பொருள்படும் ‘கோழிப்போரு’ மலையாள திரைப்படம் மார்ச் 2020இல் திரையரங்குகளில் வெளியாகி பின் கொரோனாவால் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டதாம். ஜிபித் ஜார்ஜ் மற்றும் ஜினோய் ஜனார்த்தனன் ஆகிய இருவரும் எழுதி இயக்கியுள்ள படத்தில் அவர்கள் இரு முக்கிய வேடங்களில் நடித்துமுள்ளார்கள். படம் வெளிவந்த ஓரிரு மாதங்களிலேயே ஜிபித் ஜார்ஜ் மாரடைப்பால் இறந்துவிட்டாராம்.
மிகவும் நட்பாயுள்ள அண்டை வீட்டாரான இரு கிறித்துவ குடும்பங்கள் கோழி முட்டையால் மோதல் ஏற்பட்டு பிரிந்துவிடுகின்றன. பிரிவு என்றால் குடும்பத்தலைவிகள்தான் பெரிதுபடுத்துகின்றனர். ஆண்களும் இளவட்டங்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு குடும்பங்களில் உள்ள இளவட்டங்களுக்கிடையே காதலும் மலர்கிறது. பின் கோழி முட்டை யார் திருடுகிறார்கள் என்ற உண்மை தெரிந்து சேர்கிறார்கள். நடுவில் இன்னொரு பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் அடிதடி; வெளிநாடு செல்ல விசா எடுப்பது; வெளிநாடு வாழ் ஐடி மாப்பிள்ளை என கேரளா சமூகத்தின் பல பரிமாணங்கள் காட்டப்படுகின்றன.
ஒருவர் சமயலறையில் இன்னொருவர் வந்து உரிமையோடு பொருட்களை எடுத்து செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் பெண்கள் ஒரு கோழி முட்டைக்காக அதுவும் யார் திருடுகிறார்கள் என்பது தெரியாமல் மனஸ்தாபம் கொண்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போகும் அளவுக்கு செல்வார்களா என்ற கேள்வி எழலாம். மனித மனத்தின் ஆழத்தில் என்னென்ன எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன அது எப்போது வெளிப்படும் என்பது தெரியாது என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அதே சமயம் தன் தங்கையை நண்பன் காதலிக்கிறான் என்பது தெரிந்ததும் கோபப்படும் அல்பி பின் அவனுடைய உயர்வான இயல்புகளை நினைத்து நெகிழ்ந்து போய் அவர்களுடைய திருமணத்திற்கு உதவுவது இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.
கேரளாவில் ‘குடும்பஸ்ரீ’ எனும் அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் இதில் அது வம்பு பேசும் இடமாக காட்டப்படுவது நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இளைஞர்கள் சர்வசாதாரணமாக மது அருந்துவது, அடிதடிக்கு அஞ்சாமல் ஈடுபடுவது, அதே சமயம் நட்பிற்காக எல்லா வகையிலும் உதவுவது என ஒரு புதிய தலைமுறையையும் சிறிய விசயங்களைப் பெரிதாக்கி பிணக்குகளை ஏற்படுத்துவது, பிள்ளைகளின் காதலை ஏற்க மறுப்பது போன்ற குணாம்சங்களைக் கொண்ட பழைய தலைமுறையையும் குறிப்பாக பெண்களையும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
வைக்கம் விஜயலக்ஷ்மியின் பாடலுடன் தொடங்கும் படத்தில் நடிப்பு, ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
Leave a Reply