காந்தி கண்ணாடி: திரைவிமர்சனம்
வெள்ளந்தி கதாபாத்திரங்கள் உலவும் ஓர் உயிருள்ளபடம்
காதலுக்குள் காலடி எடுத்து வைக்கும் இளம் ஜோடிகள். அறுபதாம் கல்யாணம் செய்ய விரும்பும் பழுத்த ஜோடிகள். இந்த இரு தலைமுறைகளுக்குள் ஏற்படும் உணர்வெழுச்சிகளும் புரிதலும்தான் காந்திக்கண்ணாடி.
குழந்தை பாக்கியம் இல்லாத வயது நிறைந்த காந்தி என்ற கணவர் தன்மனைவி கண்ணம்மாவின் ‘அறுபதாம் கல்யாணம்’ என்னும் ஆசைக்கனவை நனவாக்க எடுக்கும் முயற்சிகள் உணர்வுப்பூர்வமாகவும் கலைநயத்தோடும் திரைவடிவம் கண்டிருக்கிறது.
“காதோடுதான் நான் பாடுவேன் ” என்னும் பாடலைத் தன் கணவன் காந்திக்காக பாடித் தூங்கவைக்க கண்ணம்மா தோன்றும் காட்சி அழத்தெரியாதவர்களையும் கூட அழ வைத்துவிடுகிறது.
குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் ஓடிக்கொண்டே இருப்பது அவர்களுக்காகத்தான் என்பதை அக்குடும்பப்பெண்கள் புரிந்துகொள்ளாமல் கடப்பது எத்தனை வலியானது என்பதை காட்சிகளில் கச்சிதமாக பதியவைத்திருக்கிறார்கள்.
காதல் திருமணம் செய்வதற்காக ஊரைவிட்டு சிறுவயதில் ஓடி வந்த ஜமீன், 100 கோடி ரூபாய்க்கு விலைபோகும் தன் நிலத்தை தங்களது 60 ஆம் கல்யாணத்திற்காக சொற்ப தொகைக்கு விற்கத் துணியும் தருணம் மனிதர்களும் உறவுகளும் எத்தனை மகத்தானவை என்பதை நம் மரமண்டைகளுக்கு உரத்துச்சொல்லுகின்றன.
திருமண விழா ஏற்பாடுகள் செய்யும் நிறுவனத்தை வைத்து, வாடகைக்குப் பொருட்கள் வாங்கி நடத்தும் பாலாவின் கதாபாத்திரம் முழுமையாக செதுக்கப்பட்டுள்ளது. பாலாவின் இயல்பான நேர்த்தியான நடிப்பு, பழைய தொலைக்காட்சி பிம்பங்களை மறக்கடிக்க செய்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு 100% நியாயம் சேர்த்திருக்கும் பாலாவை பாராட்டாமல் எப்படி?
காந்தி கதாபாத்திரத்தில் வரும் பாலாஜிசக்திவேல் வாழ்ந்திருக்கிறார்.வெள்ளந்தியாக வந்து போகும் அவர் இப்படத்தின் நடிப்புக்காக பல விருதுகளைச் சூடுவார் என நம்புகிறேன். அர்ச்சனா அவர்களின் அசுர நடிப்பிற்கு இவர் ஈடுகொடுத்திருப்பது பிரமிக்கவைக்கிறது. முகபாவம், உரையாடல் மொழி, குரல் இவை யாவற்றையும் பிசைந்து தரும் அர்ச்சனாவின் நடிப்பு மெய்சிலிர்ப்பானது.
இந்த மூத்த தம்பதிகளின் இளம் வயது காட்சிகளை இயக்குநர் கவிதைபோல இழைத்திருக்கிறார். மிகை எதார்த்தம் இல்லாத பாத்திரங்களும் அவர்தம் உரையாடல்களும் நம்மை படம் என்பதை மறக்கடிக்கச் செய்கின்றன.மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உலகத்தில் கவிதை போல ஒரு காட்சிப்புரிதலை திரையில் தந்திருக்கும் இயக்குநர் ஷெரீஃ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவும், இசையும் இந்த படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கலைவடிவங்களாக இருந்த இந்த திரைக்காவியத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன.
காந்திக்கண்நாடு போல ஆரவாரமில்லாமல் வந்து போகும் நல்ல கலைவடிவங்களை தவறவிடாதீர்கள்.
இது அனைவருக்குமான படம். அனைவரும் பாருங்கள். நல்ல கலைகளை எப்போதும் திறந்தமனதோடு கொண்டாடுவோம்.
எழுதியவர் :
✍️ போ.மணிவண்ணன்
14.09.2025
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
