நூல் அறிமுகம்: கு.சின்னப்பபாரதியின் “தாகம்” நாவல் – ரசல்

நூல் அறிமுகம்: கு.சின்னப்பபாரதியின் “தாகம்” நாவல் – ரசல்

 

 

 

தமிழில் சமூகத்தைப் பற்றிய நாவல்களைப் படிக்கும்போது அது நம்மிடையே ஒரு தாக்கத்தை உண்டாக்காமல் போகாது. மகிழ்ச்சி, துயரம், எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள், ”ஐயோ பாவம்”, கொடூரம், இரக்கம், வறுமை, வர்க்கப் போராட்டம், கண்ணீர் என்றெல்லாம் வாசிக்கும்போது கடந்தாலும், வாசித்து முடித்தபின்னும் நம் மனதில் உள்ளூர ஏதோ ஒரு சோகத்தை ஏற்படுத்திக்கொண்டே தான் இருக்கும். இந்த உணர்வுகளையெல்லாம் அள்ளித்தரக்கூடிய நாவல்கள் வரிசையில் மிக முக்கியமான நாவல் தான் “தாகம்”. அதனால் தான் இந்த நாவல் ‘All time classic’ -ல் இடம் பிடித்துள்ளது. பேசப்படவேண்டிய நாவல்.

கு.சின்னப்ப பாரதி அவர்கள் 1976-ல் இந்த சிறந்த படைப்பை தமிழுக்கு அர்ப்பணித்துள்ளார். பாரதியார் மீது பற்று கொண்டதால் தன் பெயரோடு பாரதி என்பதை இணைத்துக் கொண்டார். பொதுவுடமைவாதி. 85வயது வரை எழுதிக்கொண்டே இருந்தவர். விருதுகளால் நோகடிக்கப்பட்டவர். நாமக்கல் மாவட்டத்தில் பொன்னேரி கிராமத்தில் பிறந்த கு.சி.பா அவர்கள் மு.வரதராசனார் அவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தாகம் என்ற நாவலை எக்காலத்தினவரும் வாசித்து, அன்றைய வாழ்க்கையை எவ்வாறு மக்கள் கொடுமைகளுக்கு நடுவே, வறுமைகளுக்கு நடுவே வாழ்ந்திருந்தனர் என்பதை அறியும் படியாக படைத்திருக்கிறார்.

தணியாத ‘தாகம்’ நாவலானது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி ஒரு விவசாயியின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அவலங்களை கண்ணீருடன் கூறுகிறது. இரண்டாம் பகுதி, தமிழ் சமூகத்தில் ‘சாதியம்’ எந்த அளவுக்கு ஊறிப்போய் இருந்தது என்பதை தெளிவாகக் விளக்குகிறது.

சொல்லவேண்டியத் தேவையே இல்லை, வறுமை தாண்டவமாடியது அன்று என்று. மழை இருந்தால் தான் விவசாயி செழிப்பான்.மண் செழித்தால் தான், விவசாயி வாழ்வு செழிக்கும்.மாரப்பன்,மாரக்காள் இருவரின் பிள்ளைகளாகிய கந்தன்(22 வயது), பழனியம்மாள்(20 வயது), முத்தம்மாள் (10வயது), எருமை மாடு (தன்னுடைய குடும்பத்தில் ஒரு பிள்ளையைப் போல வளர்த்தார்கள்) என்ற எளிய விவசாயக்குடும்பம், விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்துகிறது ‘பொன்னேரி’ கிராமத்தில். கவுண்டர் சாதியைச் சார்ந்த மாரப்பனின் மகன் ‘கந்தன்’, ‘பாப்பாயி’ என்ற பறையர் சாதியைச் சார்ந்த பெண்ணின் மீது காதல் கொள்வதில் ஆரம்பமாகிறது வினை.

‘ஒரு புளியமரத்தின் கதை’ என்ற நாவலில் வரும் ‘தாமோதர’ ஆசான் கதைசொல்லி போல இந்நாவலில் வரும் ‘கோமாளிக்கிழவன்’ நாவல் முழுவதும் பழைய கதைகளையும், அழகழகான ‘சொலவடைகளையும்’ சொல்லி நம்மை மகிழ்ச்சியின் உச்சதிற்கு கொண்டுச் செல்கிறார். “மூக்கறுந்த மாட்டுக்கு போக்கறிந்து போகத் தெரியுமா?”, “வாழாத கொமரிக்கு வாயி ரொம்ப, விளையாத வயலுக்கு வேல ரொம்ப” என்ற சொலவடைகள் என்னுடைய மகிழ்ச்சிக்கானது. ‘காக்கா கதை’, ஊரிலே ஒரு பிரச்சனை என்றால் சரியான… நியாயமான தீர்வு வழங்குவது என்பதிலெல்லாம் தெறிக்கவிடுகிறார் ‘கோமாளிக் கிழவன்.’

எருமை மாடு கிடாரிக்குட்டியை ஈணும் போது மாரக்காள் அடைந்த மகிழ்ச்சியும், ஒரு கட்டத்தில் அக்கன்றுக்குட்டி இறந்ததும் துக்கம் தாளாமல் பட்டினிக் கிடப்பதும் மனதுருகும் இடங்கள். முத்தம்மாளின் ‘கொட்டை முத்து’ சேகரிப்பு – கோழி வாங்கி, ஆடு வாங்கி, தோடு வாங்கி என்ற ஆசைகள் மிக அழகு. பழனியம்மாளை பெண் பார்க்க வரும் ‘நொஞ்சிப்பட்டி’ சுப்பனின் மண ஆசை, கோழி கொடுக்கவில்லை என்று மாரப்பனை போலீஸ் கைது செய்வது, பாப்பாயி – கந்தன் வயக்காட்டு காதல் எல்லாமே வாசிக்க இனிமை.

கு. சின்னப்ப பாரதி

கோயில் வரி 50 ரூபாய் கொடுக்கவில்லை என வீட்டுக்கதவை கழட்ட வந்த ஊர்க்காரரிடம், “ஏழைப்பாழங்க கிட்ட காசு வாங்கி கோயிலுக் கட்ட எந்த சாமிச்சொல்லுச்சு” என மாரக்காள் சீறும்போது, ‘அவ சொல்லுறது, நியாயம் தானே’ என கோமாளிக்கிழவன் சொல்வது நியாயத்தின் வெளிப்பாடு. இன்றும் ஊர்த் திருவிழாக்களில் கோயில் வரி என்ற பெயரில் சண்டைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அன்று 50, இன்று 5000!

பழனியம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்ததும் அவளின் மாமியார் ‘கருப்பாயி’ குலவாரிசு என பாசத்தைப் பொழிந்தாள். இந்த பாசம் நிலைக்க வேண்டுமே என எண்ணி, தங்கச்சங்கிலி கேட்டு, பழனியம்மாள் அடையும் சங்கடமும், ‘கொடுக்கக்கூட வழியில்லையே’ என மாரப்பன் வருந்துவதும், பிறந்த வீட்டின் பெருமையை, புகுந்த வீட்டில் காப்பாற்றவேண்டுமே என பழனியம்மாள் எண்ணுவதும் நம்மை சோகத்தில் ஆழ்த்திவிடும். இன்றும் பெண் கொடுத்தார் வீட்டில் ‘சீர்வரிசை’, ‘பொங்கப்பொடி’, அது, இதுன்னு சம்பிரதாயங்கிற பேருல கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. அனைத்தும் ஒழிக்கப்படவேண்டும்.

பகுதி-2:

சாதியக்கொடுமைகள் நடைபெற்ற காலக்கட்டத்தில் இந்நாவலானது எழுதப்பட்டுள்ளது. கவுண்டர் பிரிவைச் சார்ந்த கந்தன், பறைச்சியான பாப்பாயியை கூட்டிக்கொண்டு பக்கத்து கிராமத்துக்கு ஓடிவிடுவதால், மாரப்பன் தீராத பிரச்சனைகளுக்கு உள்ளாகிறான். பொன்னேரியை தாண்டி, பாறைக்கால் வளசில் வாழும் ஆணாதிக்கமிக்க பெரிய பண்ணையார் ‘சேனாபதி’ கவுண்டர், அந்த ஊரையே தனக்கு கீழ் அடிமையாக வைத்திருப்பது தான் மிகப் பெரிய கொடுமை. ஊருக்குள் புகுந்த போலீசை மரத்தில் கட்டி வைத்து, “தவறு செய்பவர்களைத் தண்டிக்கவே எங்கள் சட்டம்” எனப்பேசிய போலீசின் கைவிரல்களைத் தீயிட்டு பொசுக்கியது கொடுமையிலும் கொடுமையல்லவா!

ஆண்களுக்கெனச் சமூக கட்டுப்பாடுகள் கிடையாது. ஆண்கள் எந்த தாழ்ந்த சாதிப்பெண்களுடனும் உறவு கொள்ளலாம். ஆனால் திருமணம் தான் முடிக்கக்கூடாது. கந்தன் அதை மீறிவிட்டான். தாழ்ந்த சாதிப்பெண்களுக்கு திருமணம் நடைபெற்றால், அவர்கள் பூச்சூடி முதலிரவை கவுண்டர்களிடம் தான் கொண்டாடவேண்டும் என்பதெல்லாம் கொடுமையின் உச்சமல்லவா! இதற்கு மறுப்பு தெரிவித்த காத்தனின் மனைவி வள்ளியை கட்டாயப்படுத்தி பண்ணையாரிடம் அனுப்பி வைப்பது தாங்க முடியாத வேதனை தானே. இதைவிட கொடூரச் சம்பவம் ஒன்று. வள்ளியின் குழந்தை, வள்ளி வயலில் வேலை பார்க்கும்போது பசியால் அழுது, தவழ்ந்து சுடும் மண்தரையில் வர, அதைக்கண்ட வள்ளி குழந்தையைத் தூக்க இதைக்கண்ட பண்ணையாரின் கையாள் குழந்தையை எறிந்து, அப்பிஞ்சு குழந்தை இறந்தே போவது நம் கண்களில் கண்ணீர் பெருக காரணமானக் கொடூரச்சம்பவம்.

காத்தன்-வள்ளி திருமணப் பரிசமுறைகள் (21 தேங்காய்), காத்தனுக்கு சாட்டையடி, பழனியம்மாளின் கருகலைப்பு (எருக்கஞ்செடியின் நடுத்தண்டு), பழனியம்மாளின் இறப்பு- கதறிய மாரப்பன், அடிமையின் அவஸ்தைகள், மாரப்பனின் வறுமை, வீடு அடமானம், மாரக்காளின் தீராத கவலை, சம்பந்தரின் எழுச்சிமிகு பேச்சு, மாயாண்டியின் துணிச்சல் (பண்ணை வீட்டு முன்னே குதிரையில் போவது), கந்தனுக்கு ஆண்குழந்தை – மாரக்காளின் தவிப்பு, கோமாளிக்கிழவனின் ஆறுதல், “மரங்களெல்லாம் தழையுதிர்ந்து விதவைக்கோலம் பூண்டிருந்தன” என்ற வறுமையின் வரிகள், 40 ரூபாயில் அடிமை சாசனம், என எண்ணற்ற சோகம் கலந்த, கொடூரம் நிறைந்த சம்பவங்களை கொங்கு வட்டார வழக்கில் அழகுற எழுதி நம்மை கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார் சி.கு.பா அவர்கள்.

இறுதியாக, கந்தன் இரவெல்லாம் பொதுவுடமைக் கருத்துகளைக் சம்பந்தரின் மூலமாகவும், மாயாண்டி மூலமாகவும் கேட்டு, கேட்டு பொதுவுடமைவாதியானான். மாரப்பன் வறுமையால் சேனாபதி பண்ணையாரிடம் காரியஸ்தனாக வேலைக்கு சேர்ந்து கடனை அடைக்க முயலுகிறான்.சம்பந்தர், கந்தன், மாயாண்டி இவர்களெல்லாம் மக்களை ஒன்றுதிரட்டி பண்ணையார்களின் வீட்டிற்கு முன் ஊர்வலமாக,
“சாட்டையடியை நிறுத்து,
சாணிப்பால் கொடுப்பதை நிறுத்து,
வாடி என்றால் வாடா என்போம்,
அடித்தால் திருப்பி அடிப்போம்,
குடிசைகள் சுட்டெரிக்கப்பட்டால்,
மாளிகைகள் கொளுத்தப்படும்,
அடிமைகள் அடிக்கப்பட்டால்,
ஆண்டைக்கும் திருப்பிக் கொடுப்போம்.”
என்று கோஷமிட்டது, பண்ணையாரை உருக்கிற்று; திகிலுறச் செய்தது. அவர்களுடைய தாகத்தை யாராலும் தீர்த்து வைக்கமுடியாது. அவர்களே முன்னின்று, அவர்களே திரண்டு குழுமி தீர்த்துக் கொண்டால் தான் உண்டு, என்று ஆசிரியர் நாவலை நல்விதமாக முடித்திருப்பது மனதிற்கு பேராறுதல். 1970-களில் இதைப்போன்ற சாதிக்கொடுமைகள் நடந்தேறியிருப்பது அனைவரும் அறிந்ததே. தோல், சாலாம்புரி நாவல்களும் இதை உறுதியளிக்கின்றன. இன்று குறைந்து வரும் நிலையில், சில காலத்திற்கு பிறகு முற்றிலும் சாதி என்ற பேச்சே மறைந்துவிடவேண்டும். சமத்துவம் மேலோங்கி சமுதாயம் செழிக்கட்டும்.

“தாகம், படிக்கப் படிக்க தணியாது தாகம்”

நூல்: தாகம் (நாவல்)
ஆசிரியர்: கு.சின்னப்ப பாரதி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹400
புத்தகம் வாங்க கிளிக் செய்க: Thamizhbooks.com

அன்புடன்,
ரசல்🌹

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *