கு.சண்முகசுந்தரம் எழுதிய "பூமத்திய ரேகை" புத்தகம் | Ku. Shanmugasundaram's Boomathiya Regai (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

கு.சண்முகசுந்தரம் எழுதிய ‘பூமத்திய ரேகை’ கட்டுரைத்தொகுதி – நூல் அறிமுகம்

‘பூமத்திய ரேகை’ கட்டுரைத்தொகுதி – நூல் அறிமுகம்

நினைவுகளின் ஊர்வலம்

– பாவண்ணன்

’நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடலை அனைவரும் படித்திருக்கக்கூடும். அப்பாடலில் ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?’ என அவரே ஒரு கேள்வியை எழுப்பி அடுக்கடுக்காகப் பல வாதங்களை முன்வைத்து, இறுதியாக ‘காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சக்தியாம், இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று ஒரு விடையைக் கூறி முடிக்கிறார். ஞானத்துக்கு விளக்கமாக இதைவிட எளிமையாக இன்னொருவர் சொல்லிவிடமுடியாது.

சுருக்கமான இவ்விடையை தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் நாம் சற்றே இவ்வரிகளை விரிவாக்கிக்கொள்ளலாம். இவ்வுலகில்  நாம் காண்பவை அனைத்தும் உறுதியானவை. நம்முடைய சந்திப்புகள் அனைத்தும் உண்மையானவை. நாம் கண்டு கடந்துவந்த மனிதர்கள் அனைவரும் உண்மையானவர்கள். ஒவ்வொரு தருணத்திலும் பிறர் வழியாக நாம் பெறும் அனுபவங்களும் உண்மையானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உண்மை புலப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தை அடைகிறார்கள். அனைத்து  விதமான நினைவுகளும் உண்மையானவை. அனைத்து விதமான அனுபவங்களும் உண்மையானவை. அனைத்தும் ஆதி சக்தியைப்போல நித்தியமானவை.

அறுபது வயதைக் கடந்த ஒருவர் பிறருடன் தன் வாழ்வியல் அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளும்போது, அவரை அறியாமலே  அவர் மனம் இந்த வாழ்க்கையைத் தொகுத்துப் பார்த்துக்கொள்கிறது. அப்போது, கண்ணுக்குத் தெரியாத ஒரு தராசுத்தட்டில் அவர் அமர்ந்துகொண்டு தன் மதிப்பையும் தான் வாழ்ந்த வாழ்க்கையின் மதிப்பையும் தானே கணக்கிட்டுக்கொள்கிறார்.

’பூமத்தியரேகை’ நூலாசிரியரான கு.சண்முகசுந்தரம் ஒரு வங்கி ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தவர். எவ்விதமான வித்தியாசமும் இன்றி, அனைவரோடும் மிகவிரைவில் ஒட்டி உறவாடத் தொடங்கி நட்பு பாராட்டுகிற அவருடைய இயல்புக்கு எல்லா ஊர்களிலும் அவருக்கு மிக எளிதாக நண்பர்கள் கிடைக்கிறார்கள். திரைப்படப் பாடல்கள் மீது அவருக்கு இருந்த ஆர்வம் இயல்பாகவே இன்னும் கூடுதலாக பல நண்பர்களை அவரோடு நெருங்கி உறவாடவைக்கிறது. வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை என்னும் விடுதலை உணர்வு அளித்த சுதந்திரத்தின் விளைவாக, இப்போது அவர் தன் பழைய நினைவுகளில் மூழ்கி, அந்த இன்பத்தில் திளைக்கிறார்.

அந்த இன்பம்தான் தன் நினைவுகளை எழுத்தில் பதிவு செய்ய அவரைத் தூண்டியிருக்கிறது என நினைக்கிறேன். அதற்கேற்ற வகையில் முகநூல் அவருக்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கிறது.  முதன்முதலாக தன் பள்ளிக்காலத்து டீச்சர்களைப்பற்றிய நினைவைப் பகிர்ந்துகொள்கிறார். அப்பதிவுக்குக் கிடைத்த வரவேற்பு, அவரை உற்சாகப்படுத்தி மேலும் மேலும் எழுதவைக்கிறது. ஓர் இசைக்கலைஞர் வீணைத்தந்தியைத் தொட்டு மீட்டி மீட்டி ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் ராகத்துக்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பதுபோல சண்முகசுந்தரமும் தன் நினைவை மீட்டி மீட்டி இவ்வாழ்வில் தான் சந்தித்த எண்ணற்ற மனிதர்களைப்பற்றிய சொற்சித்திரங்களை ஒவ்வொன்றாக எழுதத் தொடங்குகிறார். அந்த நினைவுகளின் ஊர்வலத்தில் பல அபூர்வமான மனிதர்களை நம்மால் பார்க்கமுடிகிறது. சிலிர்ப்பூட்டும் பல முத்தான தருணங்களையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.

சண்முகசுந்தரம் விவரித்திருக்கும் ஒவ்வொரு அனுபவமும் ஏதோ ஒரு முக்கியமான தருணத்தைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது. ஆறாம் வகுப்பில் டியூஷன் எடுத்த  கோமு டீச்சரை முன்வைத்திருக்கும் நினைவுப்பதிவு ஒரு கோட்டோவியத்தைப்போல பளிச்சென்றிருக்கிறது. பாடம் படிக்கவந்த மாணவனிடம் சிந்தால் சோப்பு வாங்கிவரச் சொல்வதும் ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது’ திரைப்படப் பாடலைப் பாடச் சொல்லி ரசிப்பதும் மிக இயல்பாக இருக்கிறது.

அந்த டீச்சரின் திருமணத்துக்கு அந்த மாணவன் செல்கிறான். மணமேடையில் குனிந்த தலை நிமிராமல் இருக்கும் டீச்சர் தன் பக்கமாக ஒரு கணம் திரும்ப மாட்டாரா என மாணவன் ஏக்கத்துடன் காத்திருக்கிறான். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அவனே எதிர்பாராத ஒரு கணத்தில் திடீரென அவனைப் பார்த்து அந்த டீச்சர் சிரிக்கிறார். அந்த மாணவனின் மனம் நிறைந்துவிடுகிறது. அதற்குப் பிறகுதான் அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சாப்பாட்டுப் பந்தியின் பக்கம் செல்கிறான். ஒரு சிறுகதைக்கே உரிய அடர்த்தியோடும் திருப்பத்தோடும் அந்த நினைவுச்சித்திரத்தை அழகாகத் தீட்டியிருக்கிறார் சண்முகசுந்தரம்.

சின்ன வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டு ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிய அனுபவங்களையெல்லாம் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் சண்முகசுந்தரம். ஆனால் அந்தக் கட்டுரையின் உச்சத்தருணம் அந்த அனுபவமல்ல. அறுபது வயதுக்குப் பிறகு ஒருநாள் நடைப்பயிற்சிக்குச் சென்ற இடத்தில் அவர் சைக்கிளை ஆவலோடு பார்ப்பதைப் புரிந்துகொண்ட ஒரு சிறுவன் தன் சைக்கிளை அக்கணமே அவரிடம் மனமுவந்து கொடுத்து “ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க அங்கிள்” என்று சொல்வதும், கூச்சத்தோடு அதை வாங்கி சைக்கிள் மீது அவர் ஏறி உட்கார்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆனந்தமாக ஓட்டிவிட்டு இறங்குவதும்தான் உச்சத்தருணம்.

தன் பள்ளியில் படிக்கும் சிறுமியின் தாயார் கொடுத்த பூச்செடியை வாங்கிவந்து தன் வீட்டில் நட்டுவைத்து, அடுத்த நாளே அது பூத்துவிடும் என்று சொன்னதை நம்பி இரவெல்லாம் காத்திருந்த அசதியில் விடியல் நேரத்தில் உறங்கிவிடுவதும்  பூ பூத்திருக்கும் செய்தியைச் சொல்லி அம்மா எழுப்பிவிடுவதுமான காட்சிகள் ’பூத்தல்’ என்னும் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. அக்கட்டுரையைப் படிக்கும்போது ஒரு குறும்படத்தைப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது.

முடிதிருத்தகச் சந்திப்புகள் பற்றிய அனுபவக்குறிப்புகள் இரு கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கட்டுரையில் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் காதல் தோல்வியால் மனம் பேதலித்து வீட்டுக்கு அருகிலிருக்கும் முடிதிருத்தகத்தைப் புகலிடமாகக் கொண்டவரைப்பற்றிய சித்திரம் மனத்தை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. இன்னொரு கட்டுரையில் முடிதிருத்திக்கொள்ள வந்த ஒரு மனிதர் தனக்கு முடி திருத்தும் இளைஞனான வடநாட்டைச் சேர்ந்த தொழிலாளியை அசிங்கமான சொற்களால் வசைபாடி அவமானப்படுத்தும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அக்கணங்களில் ஒரு பார்வையாளனாக சண்முகசுந்தரம் தான் அடைந்த சங்கடங்களையும் குமுறலையும் அக்கட்டுரைகள் வழியாக நம்மிடமும் கடத்திவிடுகிறார்.

இன்னும் இப்படிப்பட்ட ஆண்களெல்லாம் இந்த உலகத்தில் இருக்கிறார்களா என்று நினைக்கத் தூண்டுகிற வகையில் இரு கட்டுரைகள் உள்ளன. ஒரு கட்டுரை வங்கிச்சூழலில் நடக்கும் நிகழ்ச்சியை ஒட்டியது. வங்கிக்குக் கடன் விண்ணப்பம் அளிக்க வருகிறார் ஒருவர். அவருடைய மகள் என தோற்றமளிக்கக்கூடிய ஓர் இளம்பெண்ணும் அவரோடு வருகிறார். கடன் விண்ணப்பத்தைப் பெற்று பரிசீலிக்கும் பொறுப்பில் இருக்கும் சண்முகசுந்தரமும் அப்பெண்ணை அவருடைய மகள் என்றே நினைத்துக்கொள்கிறார். அந்தத் தோற்ற வேறுபாடு அப்படி நினைக்க வைத்துவிடுகிறது.

அதனால் விண்ணப்பத்தில் உறுதிப் பத்திரப் பகுதியில் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒரு உறுப்பினர் கையெழுத்திட வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டி  ”இவுங்க உங்க மகள்தானே? இவங்களைக் கியாரண்டரா போட்டுக்கிடலாமா?” என்று கேட்கிறார். ஆனால் அந்தக் கேள்வியால் அந்தப் பெரியவர் சீற்றம் கொள்கிறார். கோபம் கொண்ட குரலில் “இவள் என் வைஃப். நீங்க எப்படி இவளைப் பார்த்து உங்க மகளான்னு கேட்கலாம்?” என்று வெடிக்கிறார். அவர் கோபம் அடங்க நீண்ட நேரம் ஆகிறது.

இன்னொரு கட்டுரையில் ரயில் பயணத்தின் காட்சி இடம்பெற்றிருக்கிறது. ரயிலில் அவர் அமர்ந்திருக்கும்போது ஒரு பெண்ணும் சிறுவனும் அவருக்குப் பக்கத்தில் வந்து அமர்கிறார்கள். அவர்களை வண்டியேற்ற வந்த அந்தப் பெண்ணின் தந்தை அவர்களைத் தாம்பரத்தில் பாதுகாப்பாக இறக்கிவிடும்படி கேட்டுக்கொள்கிறார்.

பயணம் தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசிய அவளுடைய கணவன் “உன் பகக்த்துல யாரு உக்காந்திருக்கா? ஆணா, பெண்ணா? ஆம்பளையா இருந்தா அவங்களை இடம் மாறி உக்காரச் சொல்லு. இல்லைன்னா நீ இடம்மாறி உக்காரு” என ஓங்கிய குரலில் உத்தரவிடுகிறான். அந்தக் குரல் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கேட்கிறது. அந்தப் பெண் சங்கடத்தில் தலைகுனிந்தபடி பயணம் செய்கிறாள். அவராலும் இயல்பாக பயணம் செய்யமுடியவில்லை. ஒருவித இறுக்கத்தோடு அப்பயணம் அமைகிறது. அந்த நிலையிலும் தாம்பரம் வந்ததும் அப்பெண்ணின் உடமைகளை இறக்கி வாசல் வரைக்கும் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வருகிறார்.

இக்கட்டுரைகளில் பிறருக்குத் தெரியாத ஒரு தனிமுகம் கொண்டவர்களாக ஆண்கள் இருப்பதை வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார் சண்முகசுந்தரம். இதற்கு நேர்மாறாக, வாழ்வில் எத்தனை மோசமான தோல்விகளும் அவமானங்களும் வந்தாலும் கூட, அத்தருணங்களை வாய்விட்டுப் பாடக்கூடிய ஒரு பாடல்   வழியாக எளிதாகக் கடந்துவந்து புன்னகைக்கிற ஆட்டோ ராஜேந்திரன் மாதிரியான ஆண்களின் சித்திரங்களையும், ‘எனக்கு கவர்ன்மெண்ட் வேலை பார்க்கிறவா எல்லாரும் சார்வாள்தான்’ என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாகச் சிரிக்கிற ஆணின் சித்திரத்தையும் சண்முகசுந்தரம் எழுதியிருக்கிறார்.

இத்தொகுதியில் உள்ள 26 நினைவுச்சித்திரங்களிலும் இப்படி நினைத்துநினைத்து மகிழ்ச்சியடையவும் வியப்படையவும் துயரம் கொள்ளவும் பலவிதமான வாழ்க்கைத் தருணங்கள் நிறைந்துள்ளன. அவ்வையனைத்தும் அவற்றைப் படிக்கும் வாசகர்களுக்கு தம் வாழ்க்கையில் நிகழ்ந்த அத்தகு தருணங்களை எண்ணி அசைபோட ஒரு தூண்டுதலாக இருக்கும்.

நினைவுகளை ஒரு பூச்சரமாகக் கோர்த்துக் கொடுத்திருக்கும் இத்தொகுப்புக்கு கு.சண்முகசுந்தரம் ‘பூமத்தியரேகை’ என்னும் தலைப்பை சூட்டியதற்கான காரணம் என்னவாக இருக்கும் என எனக்குள் நானே கேட்டுக்கொண்டு விடை தேடினேன். இத்தொகுப்பில் உள்ள 26 கட்டுரைகளில் ஒரு கட்டுரைக்கும் இப்படி ஒரு தலைப்பு இல்லை. அதனால்தான் இப்படி ஒரு கேள்வி எழுந்தது.

உலகெங்கும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கும் ஊர்களில் அதிக பகல்பொழுதும் இல்லை. அதிக இரவுப்பொழுதும் இல்லை. பகலும் இரவும் சமமாகவே உள்ளது. தீர்க்கரேகைக்கும் அட்சரேகைக்கும் இடையில் இருந்தாலும் இரண்டையும் அது நெருங்கி ஒட்டிக்கொள்ளவும் இல்லை. விட்டுவிலகி நகரவும் இல்லை. இரண்டுமே தனக்குத் தேவை என்பதுபோல இரண்டோடும் நல்லுறவைப் பேணுகிறது. ஒருவேளை, சண்முகசுந்தரம் அந்தப் பூமத்தியரேகைப் படிமத்தோடு தன்னைப் பொருத்திக்கொண்டார் என்று தோன்றுகிறது.

அவருடைய உலகில் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகளோடு கூடிய பெரிய குடும்பம், வாடிக்கையாளர்கள், பேருந்தில் பயணம் செய்யும் சகபயணிகள், டீச்சர்கள், ஆட்டோக்காரர்கள், லாரி டிரைவர்கள் என எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள். அனைவரோடும் பேதமின்றிப் பழகுகிறவராக அவர் இருக்கிறார். அன்பைக் கொடுப்பதும் பெறுவதும் ஒரு பூ மலர்வதுபோல இயல்பாகவே நிகழ்கிறது. அவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நினைவுகளின் பெட்டகமான இத்தொகுதிக்கு பூமத்தியரேகை என்னும் தலைப்பு மிகச்சரியாகவே பொருந்திப்போகிறது.

’முதல் பூவுக்காக’ என்னும் கட்டுரையில் ஒரு திருமணத்துக்குப் போய்விட்டு திரும்பும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் ’அப்பா வாங்கிவந்து கொடுத்த செண்பகப்பூவை இந்தப் பூமியையே தன்னிடம் கொடுப்பதுபோல அம்மா தன் இரண்டு கைகளையும் ஏந்தி வாங்கிக்கொண்டாள்’ என்றொரு வரியை எழுதியிருக்கிறார் சண்முகசுந்தரம். அந்தச் செண்பகமலரைப்போல சண்முகசுந்தரம் தன் அறுபதாண்டுகால வாழ்வில் சந்திக்கக் கிடைத்த மனிதர்களைப்பற்றிய நினைவுகளை நம்மிடம் அளிக்க, நாமும் அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: பூமத்திய ரேகை
ஆசிரியர்: கு.சண்முகசுந்தரம்
வெளியீடு:
வேரல் புக்ஸ், எண்.6, இரண்டாவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 93.
விலை: ₹.200
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பாவண்ணன்

 

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *