மணிப்பயல் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. அப்பா காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலைக்குப் போய்விடுவார். “இன்னக்யாச்சும் இவன ஸ்கூலுக்கு அனுப்பி விடு” என்ற அவரின் முதல் குரலைக் கேட்டு அரைத் தூக்கத்தில் “போய்யா தெரியும்” என்று நினைத்துக் கொண்டான்.

“நாங் என்ன மாட்டேன்னா சொல்றேன்; கையக் காலக் கட்டிக் கொண்டுபோயி டீச்சர்ட்ட ஒப்படச்சுட்டு வந்தாலும் நிக்ய மாட்டேங்குறாங்; எங்குட்டுக் கூடியாச்சும் வெளிய ஓடியாந்துர்ராங்.” அம்மா அங்கலாய்ப்பதையும் கேட்டபடி உறங்குவதுபோல் பாசாங்கு செய்தான்.

அப்பா போன பிறகு கொட்டாவி விட்டபடி எழுந்து உட்கார்ந்தான். அம்மாவை அவனுக்கு ரெம்பப் பிடிக்கும். “டீச்சர் எந்த நேரமும் அடிச்சுக்கிட்டேருக்காங்கம்மா” என்று தழுதழுத குரலில் பேசிவிட்டால் உணர்ச்சிவசப் பட்டு தலையைக் கோதிவிடுவார். ”டீச்சர் புலியா சிங்கமா; நல்லாப் படிச்சா எதுக்கு அடிக்கிறாக? தாங்கிக்க கண்ணு.” என்று சமாதானப் படுத்துவார்.

அம்மா இப்படிப் பேசுகிறார் என்றால் அவரே நேரடியாகச் சென்று டீச்சரிடம் ஒப்படைத்துவிட்டு வரப்போகிறார் என்று அர்த்தம்.

எழுந்த இடத்தில் அங்குட்டு இங்குட்டு அசையாமல் உட்கார்ந்தபடி இருந்தான். பல் விளக்கவோ குளிக்கவோ செய்யாமல் சோம்பிக் கிடந்தான். குளிப்பது என்றேனும் ஒருநாள் நிகழும். பல் விளக்கினால்தானே சாப்பிட முடியும். அவன் பொத்தியிருந்த துண்டுத் துணியை உருவி எடுத்தார் அம்மா.

“தூக்கம் வருதும்மா; கொஞ்சநேரம் படுத்துக்கிறேங்.”

“ஏழுபொழுது சாஞ்சிருச்சு; இன்னம் ஒறக்கங்கேக்குதாக்கும்? எந்திரி மூதேவி.” அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.

மணிப்பயலுக்குத் தெரியும்; அம்மா கோபப் படுகிறார் என்றால் தனது அழுகுணித்தனமான வார்த்தை எடுபடாது. எழுந்து படுத்திருந்த சாக்கு விரிப்பானைச் சுருட்டி மூலையில் போட்டான். வாய்க்காலுக்குப் போய்விட்டு வந்து எருச் சாம்பல் எடுத்து வாசப்படியில் அமர்ந்து பல் துலக்கினான். சாவுகாசமாக நீட்டி நிமுந்து அதிக நேரம் எடுத்துக் கொண்டான். காலத்தை ஓட்டிவிட்டால் “இன்னக்கி மட்டும் லீவு போட்டுக்கிறேம்மா” என்று சொல்லிக் கொள்ளலாம்.

அம்மா மசியவில்லை. ”என்னடா இம்புட்டு நேரம்? பல் வெலக்குறியா, பாத்திரம் வெலக்குறியா? சட்டுப்புட்டுன்னு குளிச்சிட்டு வா.”

எழுந்து கலயத்தில் தண்ணீர் மோந்து வாசலோரம் இருந்த சாக்கடையில் கொப்புளித்து முகம் கழுவினான். சாக்கடை என்றால் நேரிய வகையில் கட்டியதல்ல; ஒவ்வொரு வீட்டின் அங்கானத்தில் இருந்தும் வெளியேறி வீதியில் குறுக்குமறுக்காய் ஓடிய பள்ளப்பாதை. அந்த வீதியில் குடிசைகளும் கூட வரிசையிட்டுக் கட்டப் பட்டிருக்கவில்லை. சைக்கிள் மட்டும் போய்வரப் பாதை இருந்தது.

அம்மா மண் சட்டி ஒன்றில் தண்ணீர் மோந்து வாசலில் வைத்தார். “சீக்கிரம் குளிச்சுட்டுக் கெளம்பு.”

“நாளக்கிக் குளிக்கிறேம்மா.” கண்களைக் கசக்கிக் கொண்டே அழப் போவதுபோல் சொன்னான்.

“என்னா அக்குறும்பு பண்ற; குளிச்சு மூணு நாளாச்சு; இன்னக்யும் குளிக்யலைன்னா டீச்சர்ட்ட மொத்து வாங்குவ பாத்துக்க.” சொல்லிக் கொண்டே டிரவுசரை உருவி எடுத்து, சட்டையை வம்படியாய்க் கழற்றினார்.

“குளுரடிக்கிதும்மா” என்றான்.

“காயவச்சதுதே; ஒண்ணும் பண்ணாது.” டிரவுசர் குண்டிப்பக்கம் கிழிந்திருந்தது. சட்டை கம்புக்கூட்டில் பெரிய ஓட்டை! ‘செத்தபய பொழப்பு; மாத்துத் துணி வாங்க வக்கில்லாமக் கெடக்கேங்’ என்று நினைத்துக் கொண்டார் அம்மா.

ராத்திரிக் கிண்டிய களி சட்டியில் ஊறியபடி இருந்தது. கையில் எடுத்தபோது நீர்கோர்க்காமல் பாராங்கல்லு மாதிரி கனத்தது. எடுத்து ஈய வட்டியில் வைத்து மீதமிருந்த மொச்சப் பயத்துக் குழம்பை ஊற்றினார். சொட்டாம்போட்டுச் சாப்பிட்டான் மணிப்பயல். அம்மா ஆவலாதியோடு ரசித்தாள். “நீ படிச்சுப் பெரியாளாகணும் மகனே.”

பள்ளிக்கூடத்தில் அமர்ந்து கரும்பலகையையே பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளைச் சாக்பீஸில் அணில்போல வரைந்து அதற்குப் பக்கத்தில் ஏதோ எழுதியிருந்தார் டீச்சர். “அ’’வில் தொடங்குவது அணில்.” டீச்சர் சொன்னது அவனுக்குப் புரியவில்லை. அணில் ஓடும்; மரமேறும்; வரி வரியாய்ப் பார்க்க அழகாய் இருக்கும். ’அ’வில் தொடங்குவது என்றால்?

அடுத்து ஆடு வரைந்து எழுதியிருந்தார்.

மணிப்பயலுக்கு மனம் குழம்பியது. ஆடுகளும் அணில்களும் ஊரில் நிறைந்து கிடக்கின்றன. அதைப் பள்ளிக்கூடத்தில் வந்துதான் தெரிந்துகொள்ள வேண்டுமா? திரை மறைத்த அடுத்த வகுப்பில் மாணவர்கள் “ஓரொண் ஒண்ணு” “ஈரொண் ரெண்டு” என முழங்கினார்கள். அதையும் கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காடு கரைகளில் அலையும்போதும் ஊர் சுற்றித் திரியும்போதும் கிடைக்கும் இன்பம் பள்ளிக்கூட சாக்பீஸில் கிடைக்கவில்லை.
மணிப்பயல் எழுந்து நின்றான். அவன் ஏதோ சந்தேகம் கேட்கப் போகிறான் என நினைத்து “என்ன?” என்றார் டீச்சர்.

“எங்க வீட்டுப் பக்கம் அணில் இருக்கு டீச்சர்.”

“அதுக்கு என்ன இப்ப?”

“நாம்போயி பிடிச்சுட்டு வாரேங்.”

மற்ற மாணவர்கள் கலகலவெனச் சிரித்தார்கள். டீச்சருங்கூட அவன் அருகில் வந்து காதைப் பிடித்துத் திருகினார். “நீ அணில்கறி திம்பியா?”

மணிப்பயலுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அணிலைத் தின்பார்களா என்ன? ஒருமுறை புளிய மரத்தடியில் விளையாடியபோது அணில் ஒன்று மரத்தில் இருந்து தொப்பெனக் கீழே விழுந்தது. அந்தப் பக்கமாய் ஓடிக் கொண்டிருந்த நாய் ஒன்று ஒரே பாய்ச்சலில் அதைக் கவ்விக் கொண்டு ஓடியது. இவன் நாயைத் துரத்திச் சென்று பார்த்தான். சாக்கடைக்குள் இறங்கி அணிலைக் கடித்துக் குதறி சாவுகாசமாய்த் தின்று விழுங்கியது. அணிலை நாய் தின்னும் என்பதை அப்போது அவன் அறிந்துகொண்டான்.

அவன் தலையில் ஒரு குட்டு வைத்தார். பிரம்பு மேஜைமேல் இருந்ததால் அடி விழுகாமல் தப்பினான்.

“அணிலுக்குப் பக்கத்துல எத்தன எழுத்து இருக்கு?”

“ஒண்ணு; ரெண்டாவது ஒண்ணு;! மூணாவது ஒண்ணு!; மூணு ஒண்ணு டீச்சர்.”

மீண்டும் கலகலப்பான சிரிப்பு. டீச்சரும் அடக்க முடியாமல் சிரித்தார். “மூணு ஒண்ணு இல்ல; மூணு.”

அதுவும் கூட இவனுக்குப் புரியவில்லை. மூணு ஒண்ணும் மூணும் ஒண்ணா?” குழப்பத்தில் மயக்கம் வந்து கீழே சரிந்தான். தூக்கி உட்கார வைத்துத் தண்ணீர் மோந்து தந்தார். குளுமையாய்த் தொண்டையில் இறங்கியபோது மயக்கம் விலகிப் போனது. சிறிது நேரத்தில் ஒருவிரல் நீட்டி உத்திரவு கேட்டான். டீச்சர் ‘போ’ எனத் தலையசைக்கவும் வெளியில் வந்தவன் வெளியிலேயே இருந்துவிட்டான்.

இப்படியாக ஏழு வயதுவரை ஒண்ணாப்பிலேயே கழித்தான் மணிப்பயல்.

ஒருநாள் வீட்டுக்கு வந்து அவன் அம்மாவைத் திட்டினார் டீச்சர். “படிப்புங்குறது ஸ்கூல்ல பாதி, வீட்டுல பாதி இருக்கணும்; நீங்க என்ன செய்யிறீங்க?”
எங்கேயோ போய்விட்டு அப்போது வீட்டுக்கு வந்திருந்தான் மணிப்பயல். அம்மாவின் கண்கள் பனித்தன. ”மாரி! மகமாயி! என்னக்கி இவனுக்கு நல்ல புத்தி வருமோ?”

“நாளக்கி பள்ளியோடத்துக்கு வந்து லெட்டர் எழுதிக் குடுத்துட்டுப் பயல வீட்டுலயே வச்சுக்கங்க இவன மாதிரி ஒருசில பசங்க செய்யிற தப்புக்கு அரசாங்கம் எங்களப் போட்டு வருத்தெடுக்குது..” டீச்சரின் வார்த்தைகள் அம்மாவின் மூளையில் தீ மூட்டின. டீச்சர் போனதும் கதறிக் கதறி அழுதாள். “எங்க காலம் இருட்டுக் காலம்; நீயாச்சும் வெளிச்சத்துல பொழப்பு நடத்துவன்னு நெனச்சா இப்படிச் செய்யிறியே மகனே.”

அன்று முழுவதும் அன்னந்தண்ணி இல்லாமல் அம்மா பட்டினி கிடந்தார். சோறு பொங்கி அப்பாவுக்குக் கொஞ்சம் வைத்துவிட்டு இவனுக்கு மட்டும் ஊட்டிவிட்டுப் பட்டினியாய்க் கிடந்தார். அம்மாவைப் பார்த்தால் பாவமாய் இருந்தது. சக மாணவர்கள் ஜெகஜோதியாய்ப் பள்ளிக்கூடம் போய் வந்துகொண்டிருக்க இவன் மட்டும் வெள்ளை வெயிலாய் அலைந்தான். தான் செய்வது தவறோ எனப் புரிவதுபோல் இருந்தது. அம்மாவின் முகமும் டீச்சரின் படம் வரைந்த எழுத்துகளும் மனசில் முட்டின. மரத்தில் ஏறிய அணிலும் கரும்பலகையில் இருந்த அணிலும் வேறு வேறு எனப் புரியத் தொடங்கியது. டீச்சரின் அணில் மாணவப் புரிதலுக்கானது. உண்மை அணில் மூலம் பொய் அணில் வரைந்து புரிய வைக்கிறார் டீச்சர்.

மறுநாள் பள்ளிக்கூடம் போனபோது எட்மாஸ்டர் பலமாகத் திட்டினார். ஆடு மாடக்கூட எம்புட்டு சூதானமா வளக்குறொம்; நீங்க பெத்த புள்ளைய காட்டுல அலைய விடுறீங்களே; என்ன நாயம்?”

அம்மா இடதுபுற முந்தானையால் கண்களௌத் துடைத்துக் கொண்டார்.

“நான் சர்ட்டிஃபிக்கேட் தாரேங்; வேற ஸ்கூல்ல சேத்துக்கங்க.”

அம்மாவின் அழுகையும் ஆவலாதியும் கூடிப் போனது. மன்னிச்சுக்கங்கய்யா; இனிமே தப்பு நடக்காம பாத்துக்கிறோம்.”

“முடியாது” என்ரார் எட்மாஸ்டர். “வயசு போயிருச்சு; அஞ்சு வயசுப் பிள்ளைகதா ஒண்ணாப்புல படிக்யணும்; இவனுக்கு ஏழு வயசு; அதனால வீட்டுலயே பாதுகாப்பா வச்சுக்கங்க.”

அம்மாவுக்கு மயக்கம் வந்து வாசப்படியில் உட்கார்ந்தார். “அய்யா! ஒத்தப்புள்ளய்யா; நாலெழுத்துப் படிச்சு நாலுபேருக்கு முந்தி நிமுந்து நிக்யணும்யா. இந்த ஒருதடவ மன்னிச்சுச் சேத்துக்கங்க; புண்ணியமாப் போகட்டும்.”

நாற்காலியில் இருந்து எழுந்து முன்னும் பின்னும் நடந்து ஏதோ யோசித்தவர் “சரி; அழுகாதம்மா; ஏழுவயசுப் பயல ஒண்ணாப்புல சேக்க முடியாது; பெறந்த தேதிய மாத்தி அஞ்சு வயசுன்னு சர்ட்டிஃபிக்கேட் வாங்கிட்டு வா; சேத்துக்கிறேன்.”

அம்மா மேலும் பதட்டமடைந்தார். ”நா எழுத்தறிவில்லாத தற்குறி; அலஞ்சு திருஞ்சு கையெழுத்து வாங்குறதுக்கு எனக்குப் பவரு பத்தாது; நீங்கதே ஏதாச்சும் ஏற்பாடு செய்யணும்.”

ஏதோ ஒரு பேப்பரை எடுத்து, பேனாவால் நிரப்பி அம்மாவிடம் தந்தார். “நம்மூரு எம் எல் ஏ வீட்டுலதே இருக்காரு; போயி நாஞ் சொன்னதாச் சொல்லி ஒரு கையெழுத்து வாங்கிட்டு வாம்மா.”

உடனடியாய்க் கணவனைப் போய்ப் பார்த்து இருவருமாய் சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்தனர்.

“இப்ப அவனுக்கு என்ன வயசு?” மணியை நேருக்குநேர் பார்த்துக் கேட்டார்.

“ஏழு” என்றார் அப்பா.

“இத்தன நாளா என்னடா செஞ்ச?” மணி தலையைத் தொங்கப் போட்டான்.

“சரியாப் பள்ளியோடம் போகலிங்கய்யா.” அப்பாவே பதில் சொன்னார். அம்மா முந்தனையால் முகத்தை மூடிக் கொண்டு நின்றார்.

“எல்லாரும் படிக்யணும்னு அரசாங்கம் நெனக்கிது; காட்டு மேட்டுல வளந்த நம்ம பிள்ளைக அதுக்கு சரிக்குடுக்க மாட்டேங்குதுக. போக்கிரிக.”

இருவரின் ஏழ்மைக் கோலத்தை ஏறிட்டுப் பார்த்தார் எம் எல் ஏ. “ஏழெட்டு வயசுன்னாலும் அஞ்சு வயசுன்னு பதிஞ்சு ஸ்கூல்ல சேக்கணும்னு நம்ம முதல் மந்திரி ஆர்டர் போட்டிருக்காரு; அதனால இந்த ஒருதடவ மன்னிச்சுக் கையெழுத்துப் போட்டுத் தேரே” என்றவர் பையனைப் பார்த்து “கிருமமாப் படிக்யணும்; தெரிஞ்சதா?” என்றார். கையெழுத்துப் போட்டு உதவியாளரிடம் தந்து ஸ்டாம்ப் வைக்கச் சொன்னார். அவர்களை இன்னோர் அறைக்கு அழைத்துப் போன உதவியாளர் இரண்டு ரூபா வாங்கிக் கொண்டு ஸ்டாம்ப் வைத்துத் தந்தார். இரண்டு ரூபா என்பது இரண்டுநாள் கூலி. என்றாலும் மனம் சுணங்காமல் சுருக்குப் பையிலிருந்து எடுத்துத் தந்தார் அம்மா. 1950 என்ற பிறந்த தேதி 1952 என மாற்றப் பட்டிருந்தது.

அம்மாவும் அப்பாவும் ஆச்சர்யப்படும் அளவுக்கு மாறிப் போனான் மணிப்பயல். காடுமேடு திரியாதவனாய்ப் பள்ளிக்கூடம் போனான். அவனுக்கு அறிவு கொப்புளித்தது. எப்படித்தான் இந்த ஞானம் பிறந்தது என்று தெரியவில்லை. ஒன்றுமுதல் நூறுவரை நேராகவும் தலைகீழாகவும் ஒப்பிக்கப் பழகினான். ஒன்றுமுதல் பதினாறு வரை வாய்ப்பாடு திக்காமல் சொன்னான். வட்டம் வரைந்து ‘அ’னா எழுதவும் அதையே சுழித்து ‘ஆ’வன்னாவாய் மாற்றவும் கற்ற பிறகு எழுதுவதும் வாசிப்பதும் கைவந்தது. ‘அ’ அம்மா; ‘ஆ’ ஆடு என்பதற்குப் பதிலாக ‘அ’ அரசமரம், ‘ஆ’ ஆலமரம் எனத் தான் கண்ட காட்சிகளை எழுத்து வடிவமாக்கினான். அதாவது சொந்த அறிவைப் பயன்படுத்தி புதிய உத்தியில் எழுதினான். அவனின் வாசிப்பு அறிவைக் கண்டு வியந்து போனார் எட்மாஸ்டர். கால் பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கியதையடுத்து ரெண்டாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அந்தப் பெருமிதத்தின் வழியே கல்வியை ஆழமாய்க் கற்கத் தொடங்கினான்.

கணக்கிலும் தமிழ் இலக்கியத்திலும் புலியெனப் பாய்ந்து தேறினான். வடிவத் தேற்றங்களும் அல்ஜிப்ரா சூத்திரங்களும் அடுத்தவர்கள் வியக்கும் வண்ணம் அவனுக்குள் பதிவாயின. பழந்தமிழ் இலக்கியங்களை மனனம் செய்து ஒப்பித்தான். பாடப் புத்தகத்தில் உள்ளதை வாசித்து சொந்த நடையில் எழுதினான். மூன்றாம் வகுப்பில் இருந்து 11 வரை முதல் மாணவனாய்த் தேறி நல்லபேர் எடுத்தான். .

அவன் எஸ் எஸ் எல் சி முடித்தபோது அப்பா உயிரோடு இருக்கவில்லை. அம்மாவின் கூலிப் பணம் பசியாற்றவும் படிக்கவும் மட்டும் உதவியது. மேல் படிப்புக்கு என்ன செய்வது என்று திண்டாடிக் கொண்டிருந்தபோது எட்மாஸ்டர் உதவிசெய்தார். அதாவது சில தனி மனிதர்களையும் அரிமா சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களையும் அணுகி அவனுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார். அந்த வழியாக ஆறு ஆண்டுகள் படித்து முடித்து தங்கப் பதக்க வெற்றியாளனாய் வெளியில் வந்தான். உடனடியாக கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியும் கிடைத்தது. உதவி செய்த அனைவருக்கும் துண்டு அணுவித்து நன்றி சொல்லியதோடு, “நானும் என்னால ஆன ஒதவிய ஏழைகளுக்குச் செய்வேங்” என சபதம் ஏற்றான்.

அவன் பணியில் சேர்ந்தபோது தனது பெயரைத் தானே உச்சரித்துப் பார்த்தான். “மணி.” கூரை இல்லாத மொட்டை மதில் போல இருந்தது. அரசு கெஜட்டில் தன் பெயரை மாற்றிக் கொள்ள விண்ணப்பித்தான்.

“மணிமாறன்.”

பணியில் சேர்ந்த நாள் முதல் செலவு செய்வதில் சிக்கனம் காட்டினான். பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தான். அதற்கு ஆகும் செலவை ஏழை எளிய மாணவர்களின் கல்விக்குத் தந்து உதவலாம். பஞ்சை பராரிகளுக்கு உணவளிக்கலாம். அவனும் அவனை ஒத்த சில பேராசிரியகளும் சேர்ந்து கல்வி அறக்கட்டளை ஒன்றை நிறுவி, விண்ணப்பப் படிவங்கள் பெற்று உதவி செய்தனர். ஊக்கத் தொகை என்பதாக இல்லாமல் கல்விக் கட்டணம் கட்டுவது, புத்தகங்கள் வாங்கித் தருவது, சீருடை வாங்கித் தந்து உதவுவது என அந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் இருந்தன. நிறையப்பேர் விண்ணப்பங்கள் அனுப்பி உதவி பெற்ற அதே நேரத்தில் பல செல்வந்தர்கள் தங்கள் பெயரில் உதவிகள் வழங்குமாறு பணத்தைக் கொண்டு வந்து கொட்டினர். தங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியைப் பிறருக்குத் தந்து உதவுவதாக நேர்த்திக் கடன் போட்டு அள்ளி வழங்கினார்கள். அறக்கட்டளை நாளும் பொழுதும் வளர்ந்து கடைமடைப் பகுதிக்கும் நீர் சென்று சேர்ந்தது.

எந்தத் திருவிழாவுக்கும் எந்த சுற்றுலாத் தளத்துக்கும் ஏன்; ஒரு சினிமாவுக்கும் கூட போக அனுமதிக்காத மணிமாறன்மேல் மனைவிக்குக் கோபம் வந்தது. “நீயெல்லாம் மனுசனே இல்ல” என்று நினைத்துக் கொண்டாள். “அஞ்சறிவு ஜீவாத்திக கூட ஆடி ஓடி வெளையாடுதுக; நா மனுசி; எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமத் தவுதாயப் படுறேங்.”

கன்றுக்குட்டிகள் மளிச்செனத் தவ்வி ஓடும்போது தான் ஒரு கன்றுக் குட்டியாய்ப் பிறந்திருக்கலாம் என்றும், ஆடுகள் ஒன்றையொன்று முட்டி மகிழும்போது தான் ஆட்டினத்தின் பகுதியாய் இருந்திருக்கலாம் என்றும் நினைத்து நொந்துபோனாள். கணவன் நல்லவனாய் இருந்தால் மட்டும் போதுமா?

தொலைக்காட்சிப் பெட்டிகள் ஊரெங்கும் உலகெங்கும் குடிசைகள் எங்கும் பரவி விரவிக் கிடந்த போது மணிமாறனின் வீடு ஒளியும் ஒலியும் அற்று வெறிச்சோடிக் கிடந்தது. அவனின் இரண்டு குழந்தைகளும் டிவி பார்க்க அடுத்த வீடுகளுக்கு ஓடின. டிவி என்பது பொழுதுபோக்கு என்பதாய் நினைத்த மணிமாறன்மேல் கோபம் கொண்டு கற்ஜித்தாள் மனைவி. “அது அறிவுக் களஞ்சியம்; உலகச் செய்திகள் முதல் உள்ளூர்ச் செய்துகள் வரை புரிந்துகொள்ள முடியும். எதிர்காலத்தில் கல்விக் கூடமாகக் கூட தொலைக்காட்சிப் பெட்டி வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது.

தன் மனைவியும் கூட இப்படி யோசிக்கிறாளே என்று மணிமாறனுக்கு ஆச்சர்யம். ஓ! அவளும் படித்துப் பட்டம் பெற்றவள். அவளின் சிந்தனைகளை அவளது முன்னேற்றத்த்க்கோ, தனது அறக்கட்டளையின் வளர்ச்சிக்கோ பயன்படுத்தியதில்லை. யோசிக்க ஆரம்பித்தான். ஊர்ப் பிள்ளைகள் எல்லாம் வீதியில் விளையாடுவதை நிறுத்திவிட்டு டிவியில் மூழ்கிக் கிடக்கின்றன. தான் இளமையில் அனுபவித்த வறுமைவாழ்வைத் தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது. தனது வறுமை உணவு மறுப்பு சார்ந்தது; பிள்ளைகளின் வறுமை கொண்டாட்டச் சுதந்திரத்தை மறுப்பது. யாரும் எதிர்பாராத ஒரு லீவு நாளில் டிவிப் பெட்டி வீட்டில் வந்து இறங்கியது.

“சொல்லியிருந்தா நானும் வந்திருப்பன்ல.” மனைவியின் முகம் பன்னீர்ப் பூவாய் மலர்ந்தது. அவளின் வார்த்தைக்குப் பதில் சொல்லாமல் மௌனம் காத்தார். “நீ வந்திருந்தா கூடுதல் செலவாகியிருக்கும்” என்று நினைத்துக் கொண்டார்.

அடுத்தடுத்து அவர் வாழ்வியல் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. நிலவழிப் பேசிக்கு முக்கியத்துவம் தராத அவரால் கைபேசியையும் அடுத்து வந்த அறிதிரன் பேசியையும் நிராகரிக்க முடியவில்லை. அறிதிறன்பேசி அறிமுகமானபோது அவர் தாத்தாவாகி இருந்தார் என்பது ஆச்சர்யமான சங்கதியாய் இருந்தது.

முகநூலில் கணக்குத் தொடங்கி ஏராளமான செய்திகளைச் சேகரித்தார். இவரும் நிறைய எழுதினார். தனது வாழ்வியல் அனுபவங்களின் வழியே பொருளாதாரக் கணக்கீடுகளைப் பதிவு செய்தார். தேவையைப் பூர்த்தி செய்யும் செலவுகள் கஞ்சத்தனம் இல்லை; தேவைக்கு மேல் செலவுசெய்வது அடாவடித்தனம்.

முகநூல் தொடங்கி ஒரு வருடத்தில் அந்த நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. “இன்று பேராசிரியர் மணிமாறன் அவர்களின் பிறந்த நாள்.”

அவ்வளவுதான். அன்று முழுவதும் பிறந்தநாள் வாழ்த்து முழக்கங்கள் அழைபேசி அட்டலையை நிறைத்திருந்தன. சிலர் குரல் வழியாகவும் வாழ்த்துத் தெரிவித்தனர். குரல் வழியில் வாழ்த்தியவர் “வெறும் எழுத்து வழியே வாழ்த்துவதை நான் விரும்புவதில்லை. ஒரு நிமிடம் பேசி, மனம் அறிந்து மகிழ்ந்து வாழ்த்துவதை நான் விரும்புகிறேன்” என்றார். மணிமாறனுக்குக் கூச்சமாக இருந்தது. இப்படியெல்லாம் வாழ்த்துவதன்மூலம் மனிதகுலம் எதைச் சாதிக்கப் போகிறது. மனிதன் எப்படி வாழ்கிறான் என்று பார்க்க வேண்டுமே தவிர ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயசு முன்னேறுகிறான் என்பதைக் கொண்டாடுவது அபத்தமானது. அதோடு வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொல்வது இருக்கிறதே; மிகப் பெரிய வேலை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லும்போது ஒரு பெயர் விடுபட்டுப் போனாலும் கெட்ட பெயர் வந்துவிடும். விசேஷ வீட்டில் ஒருவரை “வாங்க” எனச் சொல்லிவிட்டு இன்னொருவரை விட்டுவிட்டால் என்ன மனநிலை ஏற்படுமோ; அதுபோல்தான். பிறந்த நாள் வாழ்த்தும் கல்யாண நாள் வாழ்த்தும். அவை மனித வாழ்வியல் வரலாற்றில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்.

அடுத்த வருடம் பிறந்தநாள் வந்தபோது மணிமாறன் சுதாரித்துக் கொண்டான். மறுநாள் தனது பிறந்த நாளை முகநூல் ஞாபகப் படுத்தும் என்பதால் முதல் நாளே தனது நன்றியைப் பதிவிட்டான். ”நாளை எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துரைக்கப் போகும் அனைவருக்கும் இந்த மணிமாறனின் நன்றிகள்!” பதிவிட்டு முடித்தபோது நிம்மதிப் பெருமூச்சு வந்து ஆசுவாசப் படுத்தியது. நாளை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டாமே! என்ன ஆச்சர்யம் என்றால் பதிவிட்ட மறு நிமிடமே ஏராளமான வாழ்த்துச் செய்திகள். ”நாளை பிறந்தநாள் காணப் போகும் கல்வித் தந்தைக்கு மனமுவந்த வாழ்த்துகள்.”

அடுத்தநாள் குரல் வழி வாழ்த்தியவர்கள் தவிர யாருக்கும் நன்றி கூறவில்லை. இந்தமுறை அதீதப் புகழுரையுடன் வாழ்த்து மொழிகளைப் பதிவிட்டிருந்தார்கள். அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற ஒரு பெண் வாழ்த்துக் கவிதை எழுதி ராகமிட்டுப் பாடினார்.

“எதுக்கும்மா இவ்வளவுதூரம்?” என்றேன்.

“ஐயா! ஒங்க ஒதவி வாங்குன நூத்துக் கணக்கானவங்க மனசுக்குள்ளயே வாழ்த்துவாங்க; ஒவ்வொரு நிகழ்வையும் புதுக் கோணத்துல எதிர்கொள்ளணும்னு நீங்க சொன்னத அமல் படுத்தணும்னுதான் இந்தக் கவிதை எழுதினேங்; எனக்கொரு கவிதையும் ராகமாப் பாடுற வாய்ப்பும் கெடச்சது.” மேலும் அவர் சொல்லியது மணிமாறனைத் திக்குமுக்காட வைத்தது. இது வெறும் பிறந்தநாள் வாழ்த்து மட்டுமல்ல; ஒரு மன நெகிழ்ச்சி, ஒரு கவிதை உருவாக்கம், புதுப்பிக்கப்பட்ட நட்பு, இன்னும் சொல்லப்போனால் கோயிலுக்குக் குட முழுக்கு நடத்துவது போல. குட முழுக்கு என்பது தெய்வத்துக்கு சக்தி ஏற்றுவது; பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்துச் சொல்வது நட்பின் அன்யோன்யத்தை மெருகேற்றுவது.

அன்று முழுவதும் மணிமாறன் மனக் குழப்பத்தில் ஆழ்ந்தான். எது சரியானது? கொண்டாட்டங்கள் தேவையில்லை என்ற நிலைபாடா; அன்யோன்யத்தைப் புதுப்பிப்பது என்ற மானுட மனோநிலையா? முடிவுக்கு வரமுடியாமல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டான்.

மாலை ஐந்து மணியிருக்கும்; சின்னப் பேரன் “தாத்தா” என்று குரல் கொடுத்தபடி ஓடிவந்தான்.

எழுந்து அமர்ந்து “என்னய்யா?” என்றேன்.

“கண்ண மூடுங்க” என்றான்.

அவன் குரலில் பதிவாகியிருந்த மழலையும் மகிழ்ச்சிப் பேரலையும் எத்தனை கோடி தந்தாலும் கிடைக்காது. அவன் ‘கட்டளை’ இட்டபடி கண்ணை மூடினான். உதடுகளுக்குள் ஒரு மிட்டாயைத் திணித்துவிட்டு “ஹாப்பி பர்த் டே டு யூ” என இழுவையான ராகத்தோடு பாடிச் சிரித்தான்.
அப்படியே வாரியணைத்து முத்தமிட்டான் மணிமாறன். மணிமாறன் மீண்டும் மணிப்பயலாக மாறித் தீக்குமுக்காடிப் போனான். “எனக்குப் பொறந்த நாள்னு யாரு சொன்னது?”

“அம்மா.”

பூமியைக் கடந்த வான்வெளிப் பரப்பில் பேரனின் முதுகில் அமர்ந்து சவாரி செய்து அந்தகாரம் கடந்ததோர் புது வெளிச்சப் பகுதிக்குள் பயணம் போனான் மணிமாறன்.

– தேனி சீருடையான்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 2 thoughts on “குடமுழுக்கு! சிறுகதை : தேனி சீருடையான்”
  1. தேனி சீருடையான் கதை குடமுழுக்கு புதிய சிந்தனை. பிறந்தநாள் வாழ்த்து சொல்வது குடமுழக்கு செய்து கடவுளுக்கு சக்தியைக் கூட்டுவது போல் சகமனிதர்களை வாழ்த்தி மகிழச்செய்வது அவர்களுக்குள் ஆற்றலைப் பெருக்குவதுக்கு ஒப்பாகும் எனும் சிந்தனை வரவேற்கத்தக்கது. வாழ்த்துகள் தோழர் சீருடையான்.

  2. சிறப்பான கதை. மணி மனநிலை மாற்றங்கள். குடும்ப சூழல், பள்ளி பருவம, 7 வயது தொடங்கி தாத்தா ஆகும் வரை நடக்கும் நிகழ்வுகள், மன மாற்றங்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பு. மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *