மனித நாகரீகம் நிலை பெற்று பல நூற்றாண்டுகளைக் கடந்தாகிவிட்டது. மனிதனின் பரிணாம வளர்ச்சியின் விளைவால் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளும், எண்ணிலடங்கா சாதனைகளும் இவ்வுலகில் சாத்தியமானது. மாற்றத்தின் தேவையறிந்து,காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டே, இச்சமூகம் வளர்ச்சிப் பாதையில் முனைப்புடன் முன்னேறிச் செல்கின்றது. இருப்பினும், நமது நாட்டில் வேரூன்றி நிற்கும் பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளின் விளைவால், பல பிற்போக்குத்தனமான செயல்கள், “கேள்விக்குட்படுத்தப்படாமலேயே” மரபாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. அப்படி மரபாக மாற்றித்திரிக்கப்பட்ட ஒன்றே “ஆணாதிக்க சமுதாயம்.”

சுதந்திரம் படைத்த இந்திய நாட்டில்,பாலின சமத்துவமானது அடைய முடியாத இலக்காகவே இந் நவீன காலத்திலும் இருக்கின்றது. ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டு மக்களின் தனிநபர் பங்களிப்பையே சாரமாகக் கொண்டுள்ளது. அப்படி இருக்க, மக்கள் தொகையில் சரிநிகர் பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பை தடுப்பது நாட்டின் வளர்ச்சியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்தும் செயலாகும் .

ஒரு பெண்ணின் வாழ்வியல் அமைப்பானது வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே கட்டுப்பட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, சுதந்திரம் என்னும் கயிற்றின் நுணியை அவள் பற்ற முயற்சிக்கும் பொழுது,அவளது குடும்ப அமைப்பும், அதன்வெளிப்பாடான சமூகமும் பல கட்டுப்பாடுகளை அவலுள் திணிக்கின்றது. தனது வாழ்வின் இறுதி நாள் வரை,அடிமை வாழ்க்கையை வாழ்வதற்காகவே நிர்பந்திக்கப்படுகிறாள்.

இத்தகைய கொடுமைகளிலிருந்து தன்னை வெளிக்கொணர, அவள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் குடும்பத்தின் நிலையை பாதிப்புக்குள்ளாக்குவதாகவும், குடும்ப அமைப்பை சீர்குலைப்பதாகவும் இச்சமூகம் சித்தரிக்கின்றது. பெண்களின் கடமையானது ஊதியமற்று வீட்டு வேலைகள் பார்ப்பதும், குழந்தைகள் பெற்றெடுப்பதும், வளர்ப்பதும்,கணவனை தெய்வம் போல் தொழுவதுமே என்ற தவறான சிந்தனைகள் மரபின் வழி,மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

ஒரு சிக்கலின் விடை அதன் ஆணிவேரை ஆராயும் பொழுதே நமக்கு புலப்படுகின்றது. சமூகத்தில் பெண்களின் இரண்டாந்திர நிலையின் காரணத்தையும்,இதன் வழியேயே நாம் ஆராய்ச்சிக்குள்ளாக்க வேண்டும்.

ஒரு மனிதனின் தண்மையும்,பண்பும் அவன் வளரும் சூழ்நிலையை பொறுத்ததே, என்கின்ற கருத்தினை இக்கட்டுரை ஆணித்தனமாக முன்னிறுத்துகின்றது.குடும்ப சூழல் மட்டுமல்லாது,இச்சமுதாயமும்,சமுதாயத்தின் நேரடி பிரதிபலிப்பாக கருதப்படும் தொலைக்காட்சி,செய்தி, பத்திரிக்கை,திரை என அனைத்து சமூகஊடகங்களும் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சிந்தனையை வளர்த்தெடுத்து, மக்கள் மனதில் ஆழப் பதியச்செய்கின்றது.உலகமயமாக்கல் மற்றும் சந்தைப்படுத்துதல் என அனைத்து தளங்களிலும் பெண், ஒர் உடலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறாள். பெண் என்ற ஒரே காரணத்தினாலேயே எவ்வாறெல்லாம் அவளது உரிமைகள் பறிக்கப்படுகின்றது என்பதனையும், அதே நேரத்தில் பெண் விடுதலைக்கான அடித்தளத்தை, அவளின் திடமான மன உறுதி மூலமாக மட்டுமே பெற முடியும் என்ற உண்மையான கருத்தையும் வலுவாக இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

குடும்ப அமைப்பில் பெண்களின் நிலை:-

” ஒருவர் பெண்ணாக பிறப்பதில்லை,
மாறாக அவ்வாறு மாற்றப்படுவது
தான் ”

-சிமோன் டி பிவார்.

குடும்ப அமைப்பானது பாலின வேறுபாடுகளை,பாலின பாகுபாடுகளாக மாற்றித் திரிக்கின்றது.குழந்தைகள் பொதுவாகவே பெரியவர்களின் செயல்களை பிரதியெடுக்கும் மனப்போக்கையே கொண்டுள்ளனர். இயல்பிலேயே பெண் குழந்தை தன் தாயின் சாயலையே பிரதிபலிக்கிறாள். இயற்கையான பாலின உறுப்புகளின் வேறுபாடுகளை தவிர்த்து,வேறு எவ்வித வேறுபாடுகளும் குழந்தையின் வளர்ச்சியில் அமைவதில்லை. குழந்தைகளின் தேவைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், அவர்களின் வளர்ச்சியின் மைல்கற்கள் என அனைத்தும் பொதுவானதாகவே இருக்கின்றது.

குழந்தைகள் இயற்கையாகவே எவ்வித பேதமும் இன்றி வளர்கின்றனர்; ஆனால் பெரியவர்களே குழந்தைகளுக்கு சமூக சாதிய,பாலின வேறுபாட்டை அறிமுகம் செய்து வைக்கின்றனர். பிறப்பிலிருந்தே ஒரு ஆணும், பெண்ணும் தனக்குரிய ஒர் வரையறுக்கப்பட்ட வகையில் வளர்க்கப்படுகின்றனர். சிறுவயதில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக கொடுக்கப்படும் பொம்மைகலிள் தொடங்கி அனைத்து விடயங்களிலும் பாலின பாகுபாட்டை மெல்ல திணிக்கத்தொடங்குகின்றனர். பெரும்பாலும் ஆண் பிள்ளைகளை வீட்டிற்கு வெளியே சென்று விளையாட அணுமதிப்பதும்; பெண் பிள்ளைகளை சமையலறை மற்றும் இதர வீட்டு வேலைகளில் உதவியாக இருக்க அறிவுறுத்துவதும், அடிமைத்தனத்தின் ஆரம்பப்புள்ளிகளாகும்.

பெண்ணின் சுதந்திரம் ஆனது, அவள் வளர வளர அவளிடமிருந்து பறிக்கப்படுகின்றது. தன்னிலையில் அதிருப்தி கொண்ட ஒரு தாய்,தன் குழந்தையின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தாலும், இச்சமுதாயம் ஒரு பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறதோ, அவ்வாறே தனது குழந்தையையும் வளர்க்க வேண்டும் என்கின்ற சூழ்நிலைக்குள் கிடத்தப்படுகிறால். இது ஒரு பின்னப்பட்ட சங்கிலித்தொடராக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றது.

இச்சமுகம், ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றது. இதன் விளைவாக, அப்பெண் பெரும் பதற்றத்திற்கும்,குழப்பத்திற்கும் ஆளாகிறாள்.நமது மரபில் பின்பற்றப்படும் அனைத்து சடங்குகளும் பெண்ணை மையமிட்டே இருக்கின்றது. பெண் என்பவள் எப்பொழுதுமே ஒரு சார்பு நிலையில் இருப்பதையே இச்சமூகம் விரும்புகின்றது. நம் சமுதாய அமைப்பின்படி,திருமணம் என்பதே ஒரு பெண்ணின் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகின்றது.இதனாலேயே அவள் பிறந்ததிலிருந்து தனது வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், திருமணத்திற்காக தயார்படுத்தப்படுகிறாள். அறத்திற்குப் புறம்பாக நிகழும் அனைத்து செயல்களுக்கும், எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக, அடிமையாக சகிப்புத்தன்மையுடன் வாழ அவள் பழக்கப்படுத்தப்படுகிறாள்.

ஒரு குடும்பத்தின் மரியாதை, அக்குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் நடத்தையை பொறுத்ததாகவே இச்சமூகம் பாவிக்கின்றது. பெண்ணானவள் ஒரு குடும்பத்தின் தனி சொத்தாக பார்க்கப்படுகிறாள். அவளது விருப்பத்தை வெளிப்படுத்த இச்சமூகம் ஒருபோதும் வாய்ப்பளிப்பதில்லை.

திருமணத்திற்குப் பிறகு, இந்நிலை மிகவும் மோசமடைகின்றது.அவளது பொறுமை,ஒவ்வொரு பொழுதிலும் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது. அச்சோதனைகளுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டு,பொறுத்துக் கொள்வதே ஒரே வழி,என அவளே நம்பும் அளவிற்கு இச்சமூகம் சிறப்பாக எழுதப்பட்ட ஒர் நாடகத்தை திரும்பட நடத்துகின்றது. குடும்பத்தின் தேவைகளுக்காக உழைக்கும் அவளின் உழைப்பானது,அங்கீகரிப்பேதுமின்றி சுரண்டப்படுகின்றது. அச்சுருண்டல்களில் இருந்து விடுபட முயற்சித்து பெண்கள் முன்னேற்றமடைய தனது வீடுகளில் இருந்து வெளியேறி, தனக்கென்று ஒரு வேலையை தேடி அதில் திடமாக நின்றாலும்,அதன் எண்ணிக்கை வெறும் சொற்பமே.

பெண்ணே பெண்ணின் எதிரியா?:-

“பெண்ணே பெண்ணின் எதிரி”, என்ற பரவலான கூற்று பெரும்பான்மை மக்களால் நம்பப்படுகின்றது. எவ்வகையில் பெண்ணே பெண்ணின் எதிரியாக இருக்கிறாள்?என்பதை நாம் ஆராய்தோமாயின் உண்மையை நாம் வெளிக்கொணரலாம்.பொதுவாக மாமியார் மருமகள் சண்டைகளும், நாத்தனார் மைத்துனி சண்டைகளுமே இக்கூட்டிற்கு உதாரணமாக கூறப்படுகின்றது. இச்சண்டைகளின் ஆரம்ப புள்ளிகளானது பணத்தையும், அதிகாரத்தையுமே மையமாகக் கொண்டுள்ளது என்பதே உண்மை. நம் சமுதாயத்தில் புழக்கத்தில் இருக்கும் தவறான வார்த்தைகள் அனைத்துமே பெண்ணை இழிவு படுத்தும் சொல்லாகவே இருக்கின்றது. அதுபோலத்தான் பெண்ணே பெண்ணின் எதிரி என்ற கூற்றும் தவிர வேறொன்றும் இல்லை. இதுவும் பெண்ணை அடிமைப்படுத்த ஆணாதிக்க சமுதாயம் எடுக்கும் ஒரு முயற்சியே ஆகும்.

சமூகத்தில் பெண்களின் நிலை:-

குடும்பம் மட்டுமல்லாது இச்சமுதாயமும் பெண்ணை, ஆணாதிக்க சிந்தனையுடையே நடத்துகின்றது. ஏனெனில், குடும்பத்தின் பிரதிபலிப்பு தானே சமூகமும். விளம்பரங்கள்,சமூக ஊடகங்கள் என அனைத்தும், பெண் சுதந்திரத்தை தவறான திசையில் வழி நடத்துகின்றது. அழகும், நகை அலங்காரமும், சரும பராமரிப்பும் பெண்ணின் அடிப்படை அங்கமாக/ தேவையாக நொடிக்கு நொடி விளம்பரப்படுத்தப்படுகின்றது. பன்னாட்டு பெரு நிறுவனங்களால், பல கோடி செலவிடப்பட்டு நடத்தப்படும் அழகிப் போட்டிகள் இதற்கு துணைநின்று,வரையறுக்கப்பட்ட புறஅழகின் பிம்பத்தை அனைவரது மனதிலும் பதியச்செய்கின்றது.பெண் ஒரு காட்சி பொருளாக மட்டுமே பாவிக்கப்படுகிறாள். இதனையே பெண் சுதந்திரமாக கருதும் மக்களும் இச்சமுதாயத்தில் இருக்கின்றனர். புற அழகில் பெண் அதீத கவனம் செலுத்தும் பொழுது அவளது வாழ்வின் உண்மையான தேவைகளையும், நோக்கங்களையும் மெல்ல புறக்கணிக்க தொடங்குகிறாள்.

பெண்களுக்காக வெளியிடப்படும் சிறப்பு பத்திரிகைகள்:

பெண்களுக்காக வெளியிடப்படும் பெரும்பான்மையான சிறப்பு இதழ்களில் கூட, பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் எந்த ஒரு விடயமும் இடம்பெறுவதில்லை. மாறாக அச்சிறப்பிதல்கள், சமையல் குறிப்புகளாலும், அழகு குறிப்புகளாலும் நிரப்பப்பட்டிருக்கின்றது. அதில் அரிதாக ஒன்று,இரண்டு கதைகள் இடம் பெறுகின்றன அவையும், பெண்ணை ஆணாதிக்க சமுதாயத்தின் விருப்பங்களுக்கு இசைந்து செல்லும் விதத்திலேயே சித்தரிக்கின்றது.பெண் விடுதலைக்கு வித்திடும் சிரு குறிப்பினை கூட இவ்விதழ்களில் நம்மால் காண இயலாது.

ஆபரணங்கள் பெண்ணுக்கு மட்டுமே உரியதா?

பெண் தனது திருமண பந்தத்தை வெளிப்படுத்த திருமாங்கல்யம்,மெட்டி என அவரவர் மத நம்பிக்கைக்கேற்ப சில ஆபரணங்களை அணியுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறாள். உயிரில்லா இத்தங்கநகைகள், எவ்வகையில் இரு உயிர்களுக்கிடையில் உள்ள உறவை வலு சேர்க்க உதவும்? என்கின்ற கேள்வியை எழுப்பக் கூடாது என்பதற்காகவே,இதனை மத நம்பிக்கையுடன் தொடர்புபடுத்தி,மரபு பழக்கங்களாக மாற்றியமைத்துள்ளனர்.

அழகென்பது எது?

இவை அனைத்தும் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காகவே என்று ஒரு சாரார் பொய் பிரச்சாரங்களை செய்தாலும்,இவை அனைத்துமே பெண்ணை அடிமைப்படுத்த நூதன முறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பதே நிதர்சனம்.அழகு என்பது வெளித்தோற்றத்திற்கு முக்கியமளிக்கும் சொல்லாகவே இன்று பார்க்கப்படுகின்றது. அழகானது புறத்தோற்றத்துடன் கூடிய அகத் தோற்றங்களான நேர்மை, சுதந்திரம், அறிவு, படிப்பு, குணநலன், ஆளுமைத்திறன் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.

சுதந்திரத்தின் திசை வழி:

பொருளாதார சுதந்திரமே ஒரு பெண் விடுதலையடைய உதவும் முதல் படி ஆகும்.அதற்கு அவள் முதலில் வீட்டை விட்டு வெளியேறி, தனக்கேற்ற ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும். அச்சமயத்தில், குடும்ப சூழ்நிலைகளையும் குழந்தைகளையும் முன்னிறுத்திய, உணர்ச்சிபூர்வமான பல மிரட்டல்கள் எழும்:
1. இந்த வீட்டில் என்ன குறையாக இருக்கிறதென்று நீ வேலைக்கு செல்ல விரும்புகிறாய்?
2. நீ வேலைக்கு சென்று தான் என் குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டதா?
3. நீ வேலைக்கு சென்றால் வீட்டு வேலைகளை யார் பார்ப்பது?குழந்தைகளை யார் பராமரிப்பது? குழந்தைகளின் வாழ்க்கை என்னாவது?
4. நீ வேலைக்கு செல்லும் இடத்தில் பிற ஆண்களிடம் பேசுவதை உற்றார் பார்த்தால்,நம் குடும்பத்தை என்னவென்று நினைப்பார்கள்?

என அடுக்கடுக்கான கேள்வி அம்புகளால் அவள் தாக்கப்படுவாள். இவை அனைத்துமே ஆணாதிக்க சமுதாயத்தால் பயன்படுத்தப்படும் ஒரு யுத்தியே. இதனை திடமான மன உறுதியோடு ஒரு பெண் எதிர்கொள்கையில் அவள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க தொடங்குகிறாள்.

இவ்வாறான,பெண்ணிய மீட்புவாத கருத்துக்களை, இப்புத்தகத்தின் வழி கட்டுரை ஆசிரியர் நமக்கு விலக்கி கூறியிருக்கிறார். எவ்வித பூச்சுவேலைபாடுகளுமின்றி, ஆணாதிக்க சிந்தனையின் உண்மைத்துவத்தை அப்பட்டமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது இக்கட்டுரையின் சிறப்பாகும். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரையானது , ஆண்/பெண் என இரு பாலரும் வாசித்தறிந்து, ஆணாதிக்க மனோபாவத்தை குறைத்துக் கொண்டு, அழித்தொழிக்க தன்னால் இயன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.இதுவே மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கும்.

புத்தகத்தின் பெயர்: “குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்.”
புத்தகத்தின் ஆசிரியர்: தமிழில்: நிழல் வண்ணன்.
புத்தக வெளியீடு : விடியல் பதிப்பகம்.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *