இந்த நூலானது பிரடெரிக் ஏங்கெல்சினால் 1884 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. ஆராய்ச்சியாளர் லூயி மார்கன் என்பவரால் எழுதப்பட்ட பண்டைக்கால சமூகம் ((Ancient Society)) என்ற நூலிலுள்ள விபரங்கள் மற்றும் அதைப் போன்ற விஞ்ஞான விபரங்களை ஆதாரமாகக் கொண்டு ஏங்கெல்ஸ் ஒரு ஆய்வைச் செய்துள்ளார். அதாவது இந்த விபரங்களைக் கொண்டு அவர் புராதன பொதுவுடமைச் சமூகத்தின் முக்கியமான அம்சங்களை ஆராய்ந்துள்ளார்.அந்தச் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத் தொடர்போடு அன்றைய திருமணம் மற்றும் குடும்ப வடிவங்களில் ஏற்பட்ட மாறுதலை ஏங்கெல்ஸ் ஆராய்ந்துள்ளார். அத்துடன் யூதரல்லாத சமூகம் அழிந்து போகத் தொடங்கியதையும், அதற்கான பொருளாதாரக் காரணங்களையும் அவர் ஆராய்ந்துள்ளார். தொழிலாளரின் உற்பத்தித் திறன் வளர்ச்சி மற்றும் வேலைப் பிரிவினை ஆகியவை பரிவர்த்தனை, தனிச் சொத்து மற்றும் வர்க்கங்கள் உருவாவதற்கும் ஆதிவாசி சமூகம் அழிவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. வர்க்க முரண்பாடுகள் தோன்றியதானது அரசாங்கம் என்பதை ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான கருவியாக ஏற்படுத்தியுள்ளது. ஏங்கெல்சினுடைய இந்த நூலானது பின்வரும் அம்சங்களை விளக்கி உள்ளது.
– தனிச் சொத்து, வர்க்கங்கள் மற்றும் அரசு போன்றவை எப்பொழுதுமே இருந்ததில்லை. ஆனால் பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தோன்றியவை.
– சுரண்டும் வர்க்கங்களின் கரங்களில் இருக்கும் அரசாங்கமானது எப்பொழுதுமே மக்களின் பரந்துபட்ட பகுதியினரை அச்சுறுத்திப் பணியவைக்கும் மற்றும் ஒடுக்கும் கருவியாகவே உள்ளது.
– வர்க்கங்கள், தோன்றியது போலவே தவிர்க்க இயலாதபடி மறைந்தும் விடும். வர்க்கங்கள் மறைந்த உடன் அரசாங்கம் என்பதும் உதிர்ந்தே தீரும்.
ஏங்கெல்சினுடைய இந்த நூலானது வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை கற்றறிவதற்கு ஒரு முக்கியமான கையேடாக இன்று வரை உள்ளது.இந்நூலின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் பிரடெரிக் ஏங்கெல்ஸ், காரல்மார்க்சுக்கும், மார்கனுக்குமிடையிலான கருத்து ஒற்றுமையை பின்வருமாறு விவரிக்கிறார்.“ஓர் அர்த்தத்தில் பார்த்தால் பின்வரும் பகுதிகள் மார்க்ஸ் விட்டுச் சென்ற ஒரு பணியினைச் செய்து முடிக்கும் வகையிலே அமைந்தவைதாம். வரலாறு பற்றிய தமது – எமது என்று, சில வரம்புகளுக்குட்பட்டு, நான் சொல்லக்கூடும் – சொந்த பொருள் முதல் வாதப் பரிசீலனையின் மூலம் தாம் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனின் ஆராய்ச்சி விளைவுகளை மக்கள் முன்பு வைப்பதென்றும், அதன் வழியாக அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்குவதென்றும் மார்க்ஸ் தான் திட்டமிட்டிருந்தார்.“ஏனெனில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் கண்டு பிடித்திருந்த வரலாறு பற்றிய அதே பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தமது சொந்த வழியிலே அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடித்தார்; அநாகரிகத்தையும், நாகரிகத்தையும் மார்கன் ஒப்புநோக்குகையில் மார்க்ஸ் எந்த முடிவுகளுக்கு வந்திருந்தாரோ, அதே முடிவுகளுக்கு வந்து சேரும்படி, பிரதான விஷயங்களில் அந்தத் கருத்தோட்டம் மார்கனையும் கொண்டுவந்துவிட்டது.”இவ்வாறு ஏங்கெல்ஸ், மார்கனின் பணியை உயர்வாகப் பாராட்டியுள்ளார்.
ஆதாரம்: தத்துவ அகராதி (ஆங்கிலம்),
குடும்பம் தனிச் சொத்து அரசு
ஆகியவற்றின் தோற்றம் (தமிழ்)
Leave a Reply
View Comments