கூடடையும் மீன்கொத்தி
குஞ்சுகளின் அலகில் நெளியும்
மீனின் உயிர்
வற்றிய குளம்
வேடிக்கை பார்க்கும் பறவையின் கண்களில்
கானல் நீர் ,
மண் சுவரில்
குழந்தை வரைந்த குளம்
நீர் முகர்ந்து மேலேறும் நத்தை
புதர் மண்டிய குளம்
வீடு திரும்பும் விவசாயம் மறந்த
தாத்தாவின் தாகம் ,
செவ்வகக் குளத்தில் கல்லெறியும் சிறுவர்கள்
வட்ட நிலவை
வரையும் நீர்
பூத்துக் குலுங்கும் தாமரை
பறிக்காமலே சூடிக்கொள்கிறது
குளத்து நீர் ,
குளத்தில் நீந்தும் மீன்
வழிகாட்டும்
தூண்டிலை வீசியவன் பசி
சூரியனைப் படம்பிடிக்கும் குளம்
அலைகளெழுப்பி நெருப்பணைத்து
விளையாடும் விரால் மீன்

