கவிஞர் பா. மகாலட்சுமியின் கற்பனையில் பொம்மைகளும் வெட்கப்படுகின்றன – புத்தக விமர்சனம் | கவி வெற்றி

கவிஞர் பா. மகாலட்சுமியின் கற்பனையில் பொம்மைகளும் வெட்கப்படுகின்றன – புத்தக விமர்சனம் | கவி வெற்றி

#bookday

நூல் : “குளத்தில் மிதக்கும் சிறகு” (கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர் : பா.மகாலட்சுமி

பதிப்பகம்: தழல் பதிப்பகம்

பக்கங்கள் : 80

விலை : ரூபாய். 100

நூல் விமர்சனம் : கவி.வெற்றிச்செல்வி சண்முகம்.

தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துரையோடும் , கவிஞர் சக்தி ஜோதி அவர்களின் அணிந்துரையோடும், தோழர். சோழ. நாகராஜன் அவர்களின் பதிப்புரையோடும் கவிஞர் பா.மகாலட்சுமி அவர்களின் ” குளத்தில் மிதக்கும் சிறகு” கவிதைத் தொகுப்பு இவரின் முதல் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது.

கவிஞர் இந்தத் தொகுப்பு காதலையும், நட்பையும், கிராமத்து விளையாட்டுகளையும் , தாயின் பிரிவையும், பிரியங்களையும், துயரங்களையும் மட்டுமல்லாது தன் வாழ்வின் வலிகளை பற்றியும், ஆணாதிக்கச் சமூகத்தின் யதார்த்த நிகழ்வுகளைப் பற்றியும், தேவதைகளான அம்மாக்களை ராட்சசிகளாக்கும் வீட்டுப்​பாடங்கள் பற்றியும், மழை பற்றியும், மழலைகள் பற்றியும், பொம்மைகள் பற்றியும் என ரணமும் ரசனையும் மிக்க தொகுப்பாக எளிய சொற்களால் வலிமையாக பேசுகிறது.

‘ நவீன யுகத்தின்

அத்தனை வசதிகளும்

நிறைந்து கிடக்கிற வீட்டில்

மாற்றமின்றி கிடக்கிறது

சமயலறையில் ஒடுக்கப்பட்ட

அவளது வாழ்வு

அடுப்புக்கு கரியில்

வரையப்பட்ட

கருப்பு ஓவியமென”.

நவீன சமயலறைக்கு நாம் மாறிப்போனாலும் இன்னும் அடுக்களை சிறையில் இருந்து பெண்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை என்ற வலியை வரிகளில் இறக்கி வைக்கிறார் கவிஞர்.

“முத்தம்’ தரவும் பெறவும் குழந்தைகள் தான் வெட்கப்படுவார்கள். கவிஞர் பா. மகாலட்சுமியின் கற்பனையில் பொம்மைகளும் வெட்கப்படுகின்றன.

“வீடு நிறைய

பொம்மைகள் கிடந்தாலும்

அவர்களுக்கு

ரொம்பப் பிடித்த பொம்மை

அம்மா மட்டுமே”

பொம்மைகளை வெட்கப்பட வைக்கவும் அம்மாவை பொம்மையாக்கவும் கவிஞரால் தான் முடிகிறது.

“பரிட்சயமற்ற முகங்களால்

நிறைந்து கிடக்கிறது

விவசாயம் விற்று

விஞ்ஞானம் வாங்கிய

எனது ஊர்”

என்று தூரப்போன உறவுகளையும் தூர்ந்து போன விவசாயத்தையும் பற்றிப் பேசுகிறார்.

நிறைய வலிகள் பேசும் வரிகள் இந்தத் தொகுப்பில் நிறைந்து கிடந்தாலும் அந்த வரிகளுக்குள்ளும் ஒரு பெரு மனவலிமையை நேர்மறையாகச் சொல்லும் கவிதைகளும் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன.

“சிறு வயதில் யாரும்

வாங்கித் தரவில்லை

செய்து கொண்டோம்

களிமண்ணில்

பொம்மைகளை”.

” ஏழைப் பெண்ணொருத்தி

அணிந்து பார்க்கிறாள்

மூக்குத்திப்பூவை”.

” உங்களுக்குத் தெரியுமா

தனிமை என்பது

எனக்குச் சிறையல்ல

சிறகுகள்”.

இப்படி நிறைய கவிதைகளைச் சொல்லலாம்.

எப்போதும் அவமானங்களை வெகுமதிகளாக்கும் பக்குவமும் பலமும் கவிஞருக்கு இருக்கிறது என்பதைச் சொல்லும் கவிதை.

” யாரிடமும் சொல்லி விடாதீர்கள்

எனை நோக்கி வீசிய

அம்புகளை வைத்துத்தான்

என் இதயத்தையும்

இருப்பிடத்தையும்

பலப்படுத்திக் கொண்டேன்

என்பதை

பிறகு

எரிவதை

நிறுத்தி விடுவார்கள்”.

ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சமமாக வளர்க்கும் நிலை இன்னும் தமிழ்ச்சங்கத்தில் குடும்பங்களில் இல்லை என்ற வேதனையைச் சொல்கிறது இந்தக் கவிதை.

” வெளியில் திரிந்து விட்டுப்

போரடிப்பதால்

வீடு திரும்புபவன் நீ

வெளிவரவே

விடியவில்லை எனக்கு”.

இப்படியாக பெண் விடுதலையைப் பேசும் பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் நிறையவே இருக்கின்றன. பா.மகாலட்சுமியின் மன அதிர்வுகள் “குளத்தில் மிதக்கும் சிறகாக” உதிர்ந்திருக்கிறது.

தொகுப்பில் ‘போரடிப்பதால்’ போன்ற ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். கவிஞர் அடுத்தடுத்த படைப்புகளில் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூடுடைத்து பறக்கத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சியே இனி உனக்கு வானமும் எல்லையில்லை என்று பாடு

என்று வாழ்த்துகிறேன்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *