நூல் அறிமுகம்: மார்க்ஸின் *கூலி, விலை, லாபம்* – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்புத்தகம் : கூலி விலை லாபம்
ஆசிரியர் : மார்க்ஸ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 96
விலை : 60
புத்தகம் வாங்க:https://thamizhbooks.com/product/kuli-vilai-4081/

“உழைப்பு” அதுதான் உலகின் மதிப்பு வாய்ந்த சக்தி. ஆனால், முதலாளித்துவத்தை பொருத்தமட்டில் அது விற்கும் சோப்பு, சீப்பை போலவே மனித உழைப்பும் ஒரு சரக்கு தான். பிற சரக்குகளின் மதிப்புகளை போலவே உழைப்பின் மதிப்பு அதன் உருவாக்க மதிப்பையே கொண்டிருக்கிறது. அதன் உருவாக்கம் என்பது தான் உழைப்பு சக்தி. இங்கு உழைப்பு என்பதே உழைப்பு சக்தியைத்தான் குறிக்கிறது.

ஒரு தொழிலாளி ஒரு நாள் முழுவதும் உழைத்து களைத்து இழந்த ஒட்டு மொத்த சக்தியையும் மீட்டெடுக்கவும், மீண்டும் அடுத்த நாள் வந்து உழைத்து உற்பத்திப் பொருளை உருவாக்குவதற்கான அத்தியாவசிய உழைப்பு சக்தியை உருவாக்கும் பொருட்களை வாங்குவதற்கான கூலி மட்டுமே அவனுக்கு தரப்படுகிறது. எனவே கூலி என்பது உழைப்புக்கான மதிப்பன்று, வெறும் உழைப்பு சக்தியை மீட்பதற்கான ஒரு சிறு கூலி மட்டுமே.. என்று இத்தனை ஆண்டுகாலம் முதலாளித்துவம் எதைக்கொண்டு தொழிலாளி வர்க்கத்தை சுரண்டியதோ அந்த உண்டியல் ரகசியத்தை தன் ஆய்வுகளின் மூலம் போட்டுடைத்தார் காரல் மார்க்ஸ்.

ஜான் வெஸ்டன் என்பவரின் கூலி மீதான தவறான வாதத்தை எதிர்த்து முதலாம் அகிலத்தில் அவர் ஆற்றிய ஆய்வுரையே “கூலி , விலை , இலாபம்” என்ற இந்நூலாக உருப்பெற்றுள்ளது. பொதுவாகவே நாட்டில் கூலி உயர்வு போராட்டங்கள் நடைபெற்று அதையொட்டிய அல்லது இயல்பாக வேறு சில காரணங்களால் விலையேற்றம் வரும்போது “அவர்களுக்கு சம்பளத்தை ஏத்திட்டாங்க, அதுதான் விலைவாசி ஏறி போச்சு” என்று சமூகத்தின் பொதுப்புத்தியில் நீண்டகாலமாகவே ஒரு சிந்தனை ஒரு பக்கம் திணிக்கப்பட்டு வருகிறது.ஆனால், கூலி என்பது உற்பத்தி செய்யப்படும் சரக்கின் மதிப்பில் ஒரு பகுதியே தவிர அந்த சரக்கின் விலை கூலியைக் கொண்டு தீர்மானிக்கப்படாது. எப்படி உழைப்பாளியின் நேரத்தை சுரண்டி, உழைப்பை சுரண்டி முதலாளி பெரும் உபரி மதிப்பையும், லாபத்தையும் அந்த லாபம் பிரியும் பகுதிகளையும் தன்னுடைய கூர்ந்த ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மார்க்ஸ். உழைப்பின் மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, எப்படி முதலாளி சரக்கின் உண்மை மதிப்பை கொண்டே, தொழிலாளியை சுரண்டுவதன் மூலம் லாபம் அடைகிறான் என விளக்கி தொழிலாளி வர்க்கத்தை விழித்தெழச் செய்யும் எளிய புத்தகமாய் இப்புத்தகம் விளங்குகிறது.

குறிப்பாக முதலாளி வர்க்கம் எப்படி 100 தொழிலாளர்கள் தேவைப்படும் இடத்தில், 200 தொழிலாளர்களை உருவாக்கி தேவைக்கு அதிகமான வரத்தை உருவாக்குவதன் மூலம் கூலியை குறைப்பதற்கான வேலையை செய்கிறது என்பதை குறித்த மார்க்ஸின் விளக்கம், நிகழ்காலத்தை நகல் எடுத்துக்காட்டுகிறது. ஒட்ட சுரண்டப்பட்டு ஓட்டாண்டிகள் ஆக்கப்படும் தொழிலாளர்கள் விடுதலை பெறவேண்டுமானால் இந்த முதலாளித்துவ தந்திரங்களை, சுரண்டல் சூத்திரங்களை மார்க்ஸிடம் தெரிந்துகொண்டு பெரும் வர்க்கப்போரை வழிநடத்திச் செல்ல வேண்டும். வெறும் கூலிஉயர்வுக்கான போராட்டத்தில் போய் சிக்கிக் கொள்ளாமல், “கூலி முறையே ஒழிக” என்னும் சமூக அமைப்பை மாற்றும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென முன்மொழிகிறார் கரால் மார்க்ஸ்.

தொழிலாளி ஒரு நாளில் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு வானத்தில் இருக்கும்போது, அதை மதிப்புமிக்க பொருளாக்கிய தொழிலாளிக்கு உழைப்பின் மதிப்பு அதளபாதாளத்தில் உள்ளது. எனவே கூலிஉயர்வு என்பது கூலி உயர்வது அல்ல, நியாயமான உழைப்பின் மதிப்பை பெறுவதே ஆகும். இதனால் தான் மார்க்ஸ் சொல்கிறார். முதலாளிகள் தொழிலாளியின் உடல்பலத்தைக் கொண்டு வேலைநாட்களை எவவளவு நாள் நீட்டிக்க முடியுமோ அவ்வளவு வேலையை சுரண்டிக் கொண்டு வாழ்நாளில் பாதியை கூலியில்லாத உபரி உழைப்பாக பெற்றுக்கொண்டு அவனை ஒன்றுமில்லாத சக்கையாக துப்பிவிடும். அந்த இடைப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட பாதி சம்பளமும் கூட அவனின் அடுத்த நாள் வேலைக்கான சக்தியை மீட்டவும், அவன் சக்கையான பின்பு அவன் பிள்ளைகளை தொழிலாளியாக உருவாக்கவும் கொடுக்கப்பட்ட கூலியே அன்று வேறல்ல. அதையே அவர் இப்படி சொல்கிறார், ” இழப்பதற்கோ எதுவுமில்லை, பெறுவதற்கோர் பொன்னுலகம் உண்டு”.error: Content is protected !!