Kumaragru Kavithaigal குமரகுரு கவிதைகள்

குமரகுரு கவிதைகள்

புறாக்கள் மீன் உண்பதில்லை
அவை கடலுக்குப் பக்கத்தில்
தானியங்களைப் பொறுக்குவதில் மும்முரமாய் இருக்கின்றன
அவற்றுக்கு மீனின் சுவை இன்னும் தெரியவில்லை,
மேலும் புறாக்களுக்கு நீரில் நனைதல்
மீது ஒவ்வாமை வேறு.

என் நினைவுக் கடலில் உங்களைப் பற்றியவொரு சொல் நீந்திக் கொண்டிருக்கிறது
அந்தச் சொல்லைக் கொத்தியெடுத்துக் கொடுக்க ஒரு புறாவைத்தான் அனுப்பியிருக்கிறேன்!!

கடலின் நடுவில் ஒரு டீசல் படகில்
பறக்காத புறா ஒன்று
குச்சியில் நெருப்பின் மேல்
சுழன்றபடி இருப்பதைக் கண்டு
எனக்கு ஆச்சர்யமில்லை
என்னிடம் அந்த சொல்லைத் தேடிக் கண்டிபிடிக்கத் தேவையான அளவு
புறாக்கள் இருக்கின்றன!!

இதோ பாருங்கள்
முட்டைகளின் மீதமர்ந்து
எனக்கான புறாக்களை உற்பத்தியும்
செய்து கொடுக்கின்றன!!

ஆனால்,
நான் என் நினைவில்
நீந்தும் அந்த ஒரு சொல்லை
எப்போதும் கண்டுபிடித்து தந்திடவே முடியாத
புறாக்களைத்தான் நம்பியிருக்க
வேண்டியிருப்பதைப் பற்றி
எப்போதும கவலை கொள்வதேயில்லை!!

இந்தத் தேடலின் போதை
தேன் கூட்டைப் போல
சேர்ப்பதில்தான் சுகம்!!

இன்னொருவனின் கனவில்
நான் எப்படி இருப்பேன்?
என் கனவில் அவன்
என்னைப் போல் இருக்கிறான்?
எங்களின் நான்கு கண்களிலும்
ஒரே கனவு வருமா?
இல்லை, எங்களின் கனவுகளில்
நாங்கள் சந்தித்து கொள்வோமா?
அல்லது,
அந்த கனவுகள் வெவ்வேறாயிருந்து
நான் ஒரு கனவில் அவனையும்
அவன் ஒரு கனவில் என்னையும்
கொன்றுவிட்டால்?
அதற்கு பின்
எங்களால் கனவில் சந்திக்கவே முடியாதா?

மரணத்தை நெருங்கிவிட்டவனின்
கண் முன் நிழலாடித் தெரியும் வாழ்விலிருந்து
ஒரு கைப்பிடி கண்ணாடித் துகள்கள்
வண்ணமாய் பொழிகின்றன!!
காற்றையிழுத்து
காற்றையிழுத்து
அவனைக் கோர்த்து வாழ வைத்த
உடலினுள் பதற்றத்தை ஏற்படுத்தும்
அந்த கடைசி நொடிகளின்
துடிதுடிப்பில்
எம்பியெம்பி விழுகிறது அவன் உடல்
அவனின் நிறைவேறாத ஆசைகளைப்
பற்றி அப்போது நினைத்தவனின்
விழியோரம் சின்னதாய் துளிர்த்த கண்ணீரின் சாரமே
அவன் வாழ்வு!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *