அறைக் காட்சிகள் (கவிதைகள்) – குமரன் விஜி1

நூறு நூறு மனிதர்கள்
தன்னந்தனியாய்
கண்விழித்திருக்கும்
என் தொடுதிரையில்
வெளிச்சமாய் வந்து
தினமும் பேசுகிறார்கள்
இருந்தும்
ஆளில்லாத
அனாதையென்று
வெளியே என் அறைக்கு பேர்.2

புது வாசலென்று
சாளரம் நுழைந்து
மின்விசிறியில்
அடிபட்டு சிதறி விழுகிறது
புதுமைக்குள்ளும்
ஒரு
பலிக்களம் உள்ளதென்று
அறிவதில்லை
வண்ணத்துப்பூச்சி.
3

முன் வரும்
எல்லா முகங்களையும்
பார்த்து இரசிக்கும் நிலைக்கண்ணாடி
“மூஞ்சப்பாரு”
என்று கொஞ்சும்4

அசைவம்
செய்த நாளில்
கதவை சார்த்தியோ
திரை போட்டோ
மறைக்கப்படும் கடவுள்
கட்டுப்படுகிறது உரிமையாளருக்கு.5

யார் சிரித்தாலும்
அழுதாலும்
நிறைய திட்டினாலும்
சினத்தில்
வெடித்து புலம்பினாலும்
தன் அச்சில்
தவறாமல் சுற்றும்
சுவர்கடிகாரம்
தானுண்டு தன் வேலையுண்டு.
6

எல்லோரையும்
பாதுகாத்து உறங்கச் சொல்லும்
கதவுக்குப் பாதுகாப்பில்லை
தயாராகவே இருக்கிறது
எதிரிகளை
எந்நேரமும் எதிர்கொள்ள.
7

அல்லாடி
திக்கித் திணறி மெதுவாய்
பீரோவுக்குள்
வந்த இந்தியப் பொருளாதாரம்
தங்கி
மகிழ்ந்து உறவாடி களிக்காமல்
மிக வேகமாய் வெளியேறுகிறது
சோகத்தில்
சாமானிய பீரோக்கள்.8

எழுதச்சொல்லி
தரப்பட்ட
சிலேட்டை எறிந்துவிட்டு
யாரும்
எழுத தயங்கிய
சுவரிலிருந்து
வரலாறை எழுதத் தொடங்குகிறது
வீட்டுக்குள்
சின்ன சிலேட்டுக் குச்சி.
9

ஒரே இடத்தில்
மணநாளன்று வாசமாய் பேசிய
ஆனந்தத்தை
எத்தனை மணநாட்கள்
மீண்டும் வந்தாலும்
வாசமாய்
பேச முடிவதில்லை
ஆணியில் மாட்டி
தவிக்கிறது மணமாலைகள்.
10

வரவேற்பு அறையிலுள்ள
கண்ணாடி
காட்சிப் பெட்டிக்குள்
சிரித்து மகிழும்
பொம்மைகளின் சிரிப்பு
கடமைச் சிரிப்பா
காதல் சிரிப்பா
தெரியவில்லை
சிதறிய ஒரு சொம்பு தண்ணீரில்
மங்கி விழுகிறது பொம்மைகளின்
பிம்பங்கள்.
11

மந்திரங்களை
புரிந்துகொள்ளாத எலுமிச்சை
கடைசிவரை
மந்திரங்கள் புரியாமல்
காய்ந்து கருகி குப்பைக்கு போனது
அழுகல் பழத்தை அனுமதிப்பதில்லை அறை.
12

‘இரவு காலங்களில்
இரவில்
தூங்கும் அறைகள்
விழிக்கும் என்றுதான்
விண்மீன்கள் விழித்திருக்கிறது’
என்கிறாள் மகள்
விடிகிறது எனக்குள் இருட்டு.
13

ஓர் அறையிலிருந்து
போடப்பட்ட ஒப்பந்தம்
ஆயிரம் அறைகளை விழுங்குகிறது
ஆனாலும்
அறைகளை விழுங்காத
அறைகளுக்கு
ஏங்குகிறது நெஞ்சறை14

பழக்கமான
பொம்மைகள்
அதிகம் சேர்ந்துவிடுவதால்
விளையாடுகிறாள்
அவளை
பொம்மையென்று
விளையாடி விடுகிறது
வக்கிர வீடுகள்
எரிகிறது நாகரீகம்
பத்துக்கு × எட்டில்.
15

தன் எஜமானனின்
முகத்தில்
வியர்வை வராமல்
பார்த்துக் கொள்ளும்
மேசை மின்விசிறிக்கும் வியர்ப்பதில்லை
இதுதான் நேரம்
எல்லாம் சமமென்று
பேச்சை முடி.

இவைகள் தொகுப்புக்காக எழுதியவை
உங்கள் வாசிப்புக்காக இன்று.

குமரன் விஜி