நூல்: திரையின்றி அமையாது உலகு (தமிழ் சினிமாவின் சாதிய முகம்)
ஆசிரியர்: குமரன்தாஸ்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்,
பி55, பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை,
சென்னை – 600 005
மின்னஞ்சல்: [email protected]
செல்லிடப்பேசி:9444272500
விலை: ரூ.180/-
குமரன்தாஸின் ‘சேதுக்கால்வாய் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்’ என்ற நூலினை 2010வாக்கில் படித்து அந்நூல் குறித்து நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் நூல் பேசும் அரசியலையும், ஆய்வுமுறை மற்றும் தரவு சேகரிப்பு குறித்தும் விதந்தோதியது நினைவுக்கு வருகிறது. அவரது சமீபத்திய தொகுப்பு இந்த ‘திரையின்றி அமையாது உலகு’ – நூல். சமீபத்திய தொகுப்பு என்றாலும் உள்ளடங்கிய கட்டுரைகள் எழுதப்பட்ட காலகட்டமானது 2009 – 2015 வரையிலானது. இது குறித்து முன்னுரையில் குமரன்தாசே கேட்டுக்கொள்ளவாறு, கட்டுரைகளின் காலத்தை கவனத்தில் கொள்ளுதல் முக்கியமானது.
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில், கவிதாசரண் இதழில் வெளிவந்த ‘பாலாவின் அஹம் பிராமணாஸ்மியும் அதீத காட்சி வெளியும்’, ‘தமிழ் சினிமாவும் மலைவாழ் பழங்குடி மக்களும் – சில குறிப்புகள்’, காட்சிப்பிழை இதழில் பிரசுரமான ‘ஒரு நாள் இரவில்: மண்டைக்குள் அதிரும் ஷட்டர் ஓசை’, ‘களவாணி சண்டிவீரனாக உருமாறும் காலம்’, ‘பாபநாசம்: மனிதம் குற்றம் மன்னிப்பு = பாவி பாபம் பாபவிமோசனம்’ மற்றும் உயிர்மெய் இதழில் வெளியான ‘தமிழ்த் திரையில் மீனவர் வாழ்வு: புனைவும் புரட்டும்’ ஆகிய கட்டுரைகள் இதழ்களில் வெளிவந்த காலத்திலேயே வாசித்திருக்கிறேன். பிற அனைத்துக் கட்டுரைகளும் இத்தொகுப்பிலேயே முதன்முறையாக வாசிக்கிறேன். ஒப்பீட்டளவில் ம.மதிவண்ணனின் ‘வெள்ளைக்குதிரை’ இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளில் ஆசிரியரிடம் வெகு இயல்பான ஒரு விடுதலைத்தன்மையும் கூடுதல் புழங்கு வெளியும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தொகுப்பில் உள்ள எல்லாக் கட்டுரைகளிலும் எனக்கு உவப்பானதும் சிறப்பானதுமாகத் தோன்றிய விசயங்கள் – ஆய்வு முறையில் சமரசமில்லா தருக்க நியாயம், எடுத்துக்கொண்ட விசயங்கள் கனமானதாக இருப்பினும் அவற்றை எளிதாக வாசிப்போருக்குக் கடத்தும் இலகுவான நடை – ஆகியவையே!
தமிழ்த்திரைப்படங்களை விளிம்பு நிலைநோக்கில், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து, இந்து சனாதன எதிர்ப்பியக்க அவைதீக மரபிலிருந்து பார்க்கும்/வாசிக்கும் பார்வையே ஒட்டு மொத்த தொகுப்பின் ஆய்வுமுறை அளவுகோல் என்றால் மிகையல்ல. பிரதியின் நோக்கினை துலக்கமாக்கி பிரதிக்குள் நுழைவதை மேலும் எளிதாக்கிவிடுகின்றன கருப்புப் பிரதிகள் நீலகண்டனின் ‘கருப்புக் குறிப்புகளும்’ குமரன்தாஸின் முன்னுரையும்.
சாதி மத பால் வர்க்க வேறுபாடற்று அனைவரையும் ஒன்றிணைத்த சினிமாத்திரை, எப்படி மக்களை சுய சிந்தனையற்று பேச்சற்று ‘கேட்;பவர்களாக’ மட்டும் மாற்றி ‘பிறருடன்’ ஒட்டுறவின்றி தனித்தீவுகளாக தொலைக்காட்சித் திரை வழி மாறியது என்றும், இன்னும் மோசமாக உலக முதலீட்டியத்துக்கு அடிமைத் தன்னிலைகளை உருவாக்கும் செல்லிடப்பேசி திரை மாறிப்போனதையும் விரிவாக எடுத்துக் கூறும் ‘திரையின்றி அமையாது உலகு’ கட்டுரை, சமூக மாற்றம் வேண்டுவோர் இன்னும் எழுத்தை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிராமல் எதிரி தீர்மானித்துள்ள நிகழ்கால ஆயுதத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று முக்கியமானதொரு திறப்பையும் முன்வைக்கிறது.
2009-ல் எழுதப்பட்ட இயக்குநர் பாலா குறித்த கட்டுரை அவரது சமீபத்திய படமான நாச்சியார் வரை அப்படியே பொருந்திப் போகிறது. ஒரே கதையை மொழியும் காட்சியும் மாறாமல் பல்வேறு நடிகர்களை மட்டுமே வைத்து வேறுபடுத்திக் காட்டி ‘சிறந்த’ இயக்குநர்களில் ஒருவராக தன்னை முன்னிருத்திக் கொண்டவர் பாலா. இலக்கியப் பிரதிகளை திரைமொழியாக்கும் அவரது முயற்சிகள் இலக்கைச் சென்றடையா அம்புகளென இடையில் வீழ்ந்துவிட்டன. ஏழாம் உலகம் – நான் கடவுள் என இந்துத்துவ அபத்தமாக மாறியது – இத்தனைக்கும் நாவலாசிரியர் ஜெயமோகனே படத்திற்கு வசனகர்த்தா (ஒரு வேளை அதுவும் அபத்தத்திற்கு காரணமாக இருக்கலாம்). பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’ (RED TEA) வாசித்த தோழர்கள் பாலாவின் பரதேசியை பார்க்க நேர்கையில் என்ன வகையான மனநிலைக்கு ஆளாவார்கள் என்பதை நான் உணர்ந்து அறிந்தவன். பாலாவின் படங்களில் தொடர்ந்து வெளிப்படும் சிறுபான்மையின ஒவ்வாமை – அதிலும் கிறித்துவ துவேசம் – ‘பரதேசி’ படத்தில் இடம்பெற்றுள்ள மலைவாழ் மக்களுக்கு சிகிச்சையளிக்க வரும் மருத்துவர் பாத்திரத்தின்வழியே (நடன இயக்குநர் சிவசங்கர்) உச்சகட்ட வக்கிரத்தை எட்டியிருக்கும் – எரியும் பனிக்காடு புதினத்தை எழுதியதே அந்த கிறித்துவ மருத்துவர் என்பதை ‘படைப்பாளி’ பாலா ‘வசதியாக’ மறந்திருப்பார்.
அதே போல், மலைவாழ் பழங்குடியினர் குறித்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விமர்சனக் கூறுகளில் நாளது தேதி வரை பாரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் ‘வணக்கம் அம்மா’ என்ற திரைப்பட தொடக்கவிழாவில் சுப.வீரபாண்டியன், சீமான், தமிழ் முழக்கம் சாகுல்ஹமீது கலந்து கொள்வதை எதிர்த்து இந்து முன்னணி ராமகோபாலன் அறிக்கை விட்டு விழா நிறுத்தப்பட்டது என்ற தகவல் எனக்கு புதிய ஒன்று. அப்படி ஒரு படம் வந்ததா என்ன?
எஸ்.பி.ஜனநாதனின் ‘பேராண்மை’ பழங்குடியின நாயகனின் சுயமரியாதையை இந்திய தேசிய இறையாண்மைக்காக பலி கொடுத்து அதன் பலனையும் கணபதிராம் போன்ற சாதி இந்துக்களுக்கு தியாகம் செய்து விட்டு, மீண்டும் இந்திய தேசிய இறையாண்மைக்காக தொண்டூழியம் புரியச் செல்வதை சிலாகித்து எவ்வாறு திரைப்படம் பேசியது என்பதை கட்டுரை கட்டுடைத்துச் செல்கிறது. குறிப்பாக இந்தியா போன்ற ஒன்றியங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பென்பது முதலில் உள்ளூர் சாதியாதிக்கப் பார்ப்பனீய பனியா எதிர்ப்பாகவே இருக்க முடியும் என்ற ஆசிரியரின் கூற்றில் எள்ளளவும் நமக்கு மாறுபாடில்லை.
மீனவர் வாழ்வு குறித்த கட்டுரையில் குறிப்பிடப்படும் மிக முக்கியமான விசயம் – 60 – 70களில் உழைக்கும் மக்களை நாயகர்களாகவும் பண்ணையார்களை வில்லன்களாகவும் காட்டிய நிலைக்கு மாறாக 90களில் பண்ணையார்களே நாயகர்களாகி விடுகின்றனர் – கூடுதலாக இசுலாமியரையும் கிறித்தவரையும் அமைதி, சமாதானம் ஆகியவற்றுக்கு உதாரணமாகக் காட்டிய சினிமா அவர்களை கெட்டவர்களாக, வில்லன்களாக காட்டத் தொடங்குகிறது – என்பது! உண்மைதான், அது வரை வில்லன்களாக இருந்த பண்ணையார்கள் உன்னதமானவர்களாக நாயகர்களாக (எஜமான், சின்ன கவுண்டர், முதல் மரியாதை போன்ற படங்களில்)பண்பு மாற்றம் பண்ணப்பட்டுள்ளனரே என்று யோசனை ஏற்பட்டு அது தொடர்பான எண்ணங்கள் சிந்தையில் ஓடும்போதே ஆர்.வி.உதயகுமார் குறித்த கட்டுரை ஒன்று பின்னாலேயே பதியப்பட்டுள்ளது – நூல் தொகுப்பின் அருமையான அம்சமும் ஆசிரியரின் தொலைநோக்கு பார்வையின் உதாரணமாகவும் அமைகிறது. படகோட்டி, மீனவநண்பன் படங்களில் திராவிட அரசியல் பார்வை எவ்வாறு பின்னாளில் தேய்கிறது என்ற நுண்ணரசியல் நோக்கப்படவேண்டியது. பிற படைப்புகளுக்கும் ஒப்பு நோக்கத்தக்கது.
‘ஈசன்’ படம் முன்வைக்கும் இடைநிலை சாதி இந்து மனோபாவம், கிராம வாழ்க்கை அழகு/அமைதி X நகர வாழ்க்கை அழுக்கு/சத்தம் போன்ற இருமைகளின் வழி உருவாக்கப்படும் மதிப்பீடுகளில், அண்ணல் அம்பேத்கரின் கிராமம் – தலித் வாழ்வு குறித்த பார்வையின்வழி உடைப்பு ஏற்படுத்திச் செல்கிறார் குமரன்தாஸ்.
7ம் அறிவை தமிழ் பாசிசத்தின் திரைவடிவமாக முன்வைக்கும் கட்டுரை இக்காலத்துக்கும் மிகவும் பொருந்தக்கூடியதாக உள்ளது. தமிழ்ச்சமூகம் எவ்வாறு முழுமையான முதலீட்டிய உற்பத்திமுறைக்கு மாறவில்லை என்றும் முதலீட்டியத்தின் தொடக்கமாகவும் நிலப்பிரபுத்துவத்தின் எச்சமாகவும் உள்ள ஒரு நிலையே இங்கு முதலாளித்துவம் எனும் பொருளில் விளிக்கப்படுகிறது என்றும் விரிவாக எடுத்துவைத்து தமிழ்நாட்டில் தேசிய முதலாளியம் ஏன் உருவாகாமல் போனது அதில் சாதியும் பார்ப்பனீயமும் எவ்வாறு பங்காற்றியுள்ளது என்றும் எடுத்துரைத்து – 7ம் அறிவு திரைப்படம் இது குறித்து கவனம் கொள்ளாத முன்னெடுப்பு என்பதை அதன்மூலம் நிறுவுகிறார் ஆசிரியர். அதே போல் போதிதர்மரின் பவுத்த அடையாளம் மறைக்கப்பட்டது ஏன் என்ற காத்திரமான கேள்வியை எழுப்புகிறார். முன்பு இந்துத்துவத்தின் வழி பேசிய விசயங்களை எவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ்த்தேசியத்தின் பெயரால் முன்வைக்கிறார் என்பதை பல்வேறு ஆய்வுநூல்களின்வழி நிறுவிச் செல்கிறார். இத்தொகுப்பில் அருந்ததியர் வாழ்வு குறித்த மதுரைவீரன் கட்டுரைக்கு அடுத்து மிக விரிவான முக்கியமான கட்டுரையாக இதைக் காண்கிறேன்.
அதே போல், மதுரைவீரன் குறித்த கட்டுரை கதைப்பாடல்களின் தோற்றம், அவற்றின் தொகுப்பு, பின்னர் நேர்ந்த அச்சாக்கம், அதில் பதிப்பித்த தமிழர்களின் (பதிப்பிக்கும் நிலையிலிருந்த சாதி/வர்க்கத்தினர்) இடைச்செருகல்கள், இருட்டடிப்புகள் முதலியவற்றில் தொடங்கி, மதுரை வீரன் பிறப்பால் அருந்ததியர் என்பதைத் திரித்து ‘அரச குலத்தவன் – அதனால் அவன் வீரன்’ என்று நிறுவிய கயமைத்தனத்தை உரித்துக் காட்டி, கக்கூஸ் என்ற கழிவறை தோற்றப்பாடு – அதற்கு அருந்ததியர் மலம் அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட காலனிய வரலாறு – அருந்ததியரின் 16, 17ம் நூற்றாண்டுகளின் சமூக நிலை – தோல் கைவினையில் விற்பன்னம் – ஆகியவற்றை உரிய துணை நூல்களின் உதவியோடு நிறுவி- மதுரைவீரனின் அசல் வரலாற்றை மீளுருவாக்கம் செய்து திரை மொழியாக்கிட வேண்டிய அவசியத்தையும் உணர்த்திச் செல்கிறது கட்டுரை. கட்டுரையில் உள்ள எட்கர் தர்ஸ்டனின் அருந்ததியர் பற்றிய குறிப்புகள் சமீபத்தில் நான் வாசித்த சுளுந்தீ நாவலில் தோல் பொருட்கள் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்பங்கள் வாடன் (சக்கிலியர்/அருந்ததியர்) குலத்திற்கு கைவந்தது என்ற குறிப்புகளுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
தற்கால தமிழ் சினிமாவில் சாதி என்ற பெருந்தலைப்பிலான கட்டுரை வெறும் தகவல் தொகுப்புகளாகக் காட்சியளிப்பது – ஒரு நூலுக்கான விசயம் கட்டுரைக்குள் அடக்கப்படுவதால் நேர்ந்த விபத்தே. ஆசிரியரே குறிப்பிடுவது போல முழுமை பெறாத கட்டுரையாகக் கருதப்பட வேண்டும். இதிலும் தமிழ்சினிமாவின் கால்நூற்றாண்டு காலகட்டத்தில் முக்குலத்தோர் சினிமா என்ற வகைமை எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்ற விவரணை குறிப்பிடத்தக்கது – விமர்சன நோக்கில் கவனத்தில் கொள்ள வேண்டிய முதன்மைப் புள்ளியாகும்.
‘ஒரு நாள் இரவில்’ – மலையாள மூலமான ‘ஷட்டர்’ ஒப்புமை கட்டுரையானது, சமீபத்தில் வெளிவந்த ‘மாறா’ படத்தின் மூல சினிமா ‘சார்லி’யுடன் ஒப்பிட்டு நண்பர்களிடையே நிகழ்ந்த உரையாடல்களை நினைவூட்டியது மகிழ்வுத்தெறிப்புக்கான விசயமாகும். ‘புறம்போக்கு என்ற பொதுவுடைமை’ படத்தின் கடைசி இருபது நிமிடங்களை மரண தண்டனைக்கு எதிரானதாகக் கருதிய என் பார்வையில் உள்ள குறைபாட்டினை சில கேள்விகள் மூலம் எனக்குப் புரியவைத்த கட்டுரைக்கு நன்றி. இது போன்ற புதிய சிந்தனைத் திறப்புகளே இப்படியான தொகுப்புகளின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். அப்பணியை இத்தொகுப்பு சிறப்பாகச் செய்கிறது. ‘திரிஷ்யம்’ – பாபநாசமாக மாறியதன் பின்னணியில் தொழிற்படும் கிறித்துவப் புறக்கணிப்பு மனோபாவமும் தமிழ்ச்சமூகத்தின் மத/சாதிச் சார்பும் அழுத்தமாக எடுத்துரைக்கப்படுகிறது இறுதிக்கட்டுரையில்..!
பெரும்பான்மையாக 1990களுக்குப் பின் 2015 வரையிலான தமிழ்த் திரைப்படங்களின் கருத்தியல் தேர்வு, கெடுவாய்ப்பாக முன்னெழுந்த இந்துத்துவ சனாதன வைதீகப் போக்கு, ‘அறம்/நல்லவை’ குறித்த பார்வை கீழிருந்து மேலாகவன்றி மேலிருந்து கீழாக மாறியது, தேயத் தொடங்கிய திராவிட/இடதுசாரி (நக்சல்பாரி) இயக்கங்களின் போக்கு திரையில் பிரதிபலித்தது, ஆண்டைகளின்/ஆதிக்க சாதி இந்துக்களின்/பார்ப்பனீயத்தின் மறு உருவாக்கம், அதன் விளைவுகளில் ஒன்றான தலித்துகள்/பழங்குடியினரின்/சிறுபான்மையினரின் இழிவான சித்தரிப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது. அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப நேர்த்தி, திரைமொழி பற்றிய பார்வை அல்ல – கருத்தியல் (ideology) பற்றிய விமர்சனக் கட்டுரைகளே இவை என்ற புரிதலுடன் அணுகும்போது பல்வேறு சிந்தனைத்திறப்புகளைக் கொண்ட முக்கியமான தொகுப்பாக நாம் உணர்கிறோம். குறிப்பாக, அனைத்து அரங்கிலும் பாசிச சக்திகள் வேகமெடுத்து வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், தமிழ் சினிமாவிலும் அதன் தாக்கம் வெகுவாகவே ஊடுருவியுள்ள நிலையில், இத்தொகுப்பின் வருகையே ஒரு முக்கியமான மாற்று அரசியல் செயல்பாடாகும்.
இந்நூலைத் தொடர்ந்து, வலிந்தே – சுகுணா திவாகரின் ‘அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்’ வாசிக்கப் போந்தது – தேர்வின் அரசியலே!
– அன்புச்செல்வன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.