ஐ. தர்மசிங் கவிதைகள்” சிறகடிக்கும் நேரமிது “

“பறப்பதற்கு புதிய சிறகுகள்
தருவோம்
பழைய அலகினை புதுப்பித்து
தருவோம்
குஞ்சுகளுக்கு பறக்கும் பயிற்சி
தருவோம்
பாதுகாப்பாக புதிய கூடு கட்டித் தருவோம்
ஆங்காங்கே குடிநீர்த் தொட்டி அமைத்து தருவோம்
கூடுகளில் இலவம்பஞ்சு மெத்தை அமைத்துத் தருவோம்
வாரம் ஒரு முறை சுத்தமான பழங்கள் தருவோம்
ஆலமரங்கள் வளர்த்து குளிர்ந்த நிழல் தருவோம்
ஜோடி ஜோடியாக நீங்கள் கூடிக்குலவ பூங்காக்கள் அமைத்து தருவோம்”
மயக்கத்தில் துவளும்
பதற்றத்தில் துள்ளும்
பலவீன மனம்…
உனது திசையை
நீயே நிர்ணயம் செய்
பசப்பு வார்த்தைகளை விரித்து
பறக்க முடியாது பறவையே…
வேடர்கள் வைத்திருப்பது
கூடல்ல
கூண்டு
சிக்கி விடாதே
சிறகடிக்கும் நேரமிது…


“முற்றுப் பெறாத வெற்றிகள் “

எலி
பூனையாக
ஆசைப்படுவதும்

பூனையானவுடன்
புலியாக
ஆசைப்படுவதும்

புலியானவுடன்
யானையாக
ஆசைப்படுவதும்

யானையோடு
முடிந்து விடுவதில்லை
மனித மனதின் ஆசைகள்

நிறைவடையாத மனதால் தான்
வாழ்வு முடியும் வேளையிலும்
மிஞ்சிக் கிடக்கிறது
முற்றுப் பெறாத வெற்றிகள்…

ஐ. தர்மசிங்