” தேவதைகள் ” கவிதை – ஐ. தர்மசிங்” தேவதைகள் ” கவிதை

வீதிகளில்
நமது துர்நாற்றங்கள்
தாதியராய்
துடைத்தெறிபவர்கள்
அவர்கள்

நாம்
கூட்டுவோம்
வீடுகளின் முன்
பெருக்குபவர்கள்
அவர்கள்

தன்னலம் படைத்த
சாக்கடை உற்பத்தியாளர்கள்
நாம்
பூ போல அள்ளிச்செல்லும்
பொதுநலம் கொண்டவர்கள்
அவர்கள்

மணியடித்து
கேட்டு வாங்குவார்கள்
குப்பைகளை
வண்டியை நிரப்புவதிலேயே
கவனமாக இருக்கிறோம்
தினமும் நாம்

தொற்றுநோயின்
நடமாடும்
தடுப்பு மருந்து அவர்கள்
முக்கியமானதாக தெரிவதில்லை
நமது கண்களுக்கு
அவர்களின் நலம்

இவர்களிடமே
கடைபிடித்து வருகிறோம்
அரசு அறிவிக்கும் முன்பே
சமூக இடைவெளியை

கோடித்துணி அணிந்தாலும்
நமது மனங்களில்
படிந்திருக்கும்
கறை மறையாத வரை
அழுக்கு படிந்திருந்தாலும்
மனதால் அவர்களே
தேவதைகள்…

ஐ.தர்மசிங்