பனிக்காலத்தின் வசந்த நினைவுகள் மனதின் ஆழத்தில் இறுகிக் கிடக்கின்றன உறைபனியாய். அவை மெல்ல உருகிச் சலசலத்து ஓடும்போது மனம் அதனில் லயித்து காலம் மறந்து நிற்கிறது. ஏதோ நேற்றைக்கு முதல்நாள் நிகழ்ந்ததுபோலவே உயிர்ப்புடன் அவை உலா வந்து மனதை நெகிழச் செய்கின்றன. சொந்த ஊரின் இளமைக்கால நினைவுகள் ஒவ்வொரு மனிதனிடமும் ஆழப் பதிந்த மனக்கல்வெட்டுக்களாய் செதுக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை முறை வாசித்தாலும் அவை சுவாரஸ்யம் குறைவதில்லை. எவ்வளவோ நிகழ்வுகளைச் சொல்லிவிட்டதுபோல் தோன்றினாலும் சொல்வதற்கும் பகிர்வதற்கும் இன்னும் ஏதோ சில எப்போதும் இருக்கின்றன…….!
குளிர் மனித உணர்வுகளைக் கூர்மைப்படுத்துகின்றன. சுவாசத்தின் வெப்பத்தை உணர்வது முதல் தீவிர சிந்தனைக்கு ஆட்படுவது வரை குளிர் மனித சரீரத்தில் அநேக பல மாயா ஜாலங்கள் புரிகின்றது.. நம் தன் உணர்வை அது மேலும் கூட்டுகிறது. அகத்தையும், புறத்தையும் நடுநிலையில் நின்று காணும் மனச்சமநிலையைத் தருகின்றது.
சில சிறு நகரங்களில் தேநீர்க் கடைகள் அதிகாலை மூன்று, நான்கு மணிக்கே விழித்துக்கொண்டுவிடுகின்றன. விடிய விடிய விழித்திருக்கும் சில நடுநிசிக் கடைகளும் உண்டு. பல நாட்கள் காலை ஐந்து மணிக்கு தேநீர் வாங்கிவர அருகிலுள்ள ஒரு தேநீர்க்கடைக்குச் சென்றதுண்டு. கைகளை  தமிழ் ‘ப’ போல கட்டி இறுக்கிக்கொண்டோ அல்லது ஆங்கில ‘வி’ போல  வலக்கை இடது தோள்பட்டையிலும் இடக்கை வலது தோள்பட்டையிலுமாய் கவ்விக்கொண்டோ மனிதர்கள் குளிருக்கு தன்னடக்கத்துடன் உலாவிக்கொண்டிருப்பர். பாத்திரத்தில் உள்ள நீரை சுத்தமாகப் பெருக்கிய வாசலில் “பச்சக், பச்சக்” எனத் தெளித்து புள்ளிகள் வைத்து வண்ணக்கோலமிட வனிதையர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பர். நான்கு திக்குகளிலிருந்தும் காற்றில் பக்தி மணம் கமழும் பாடல்கள் தவழ்ந்துகொண்டிருக்கும்.
கொதிக்கும் பித்தளை பாய்லரிலிருந்து வரும் நீராவி ஏற்றிவைக்கப்பட்ட ஊதுவத்தியின் மணத்துடனும் ஒலிக்கும் “விநாயகனே…..வினை தீர்ப்பவனே….” பாடலுடனும் கலந்து அந்தக் குளிர் காற்றை மிதமான சூழலுக்கு மாற்ற எத்தனித்துக்கொண்டிருக்கும்.
டீ மாஸ்டர் நம்மிடம் உள்ள பாத்திரத்தை வாங்கி வரிசையாக வைத்துக்கொள்வார். எத்தனை தேநீர் வேண்டுமோ அதற்கேற்ப சர்க்கரையை அதில் துல்லியமாக அள்ளி வீசுவார். சிலசமயம் அக்கரையாய் நம் பாத்திரத்தைக் கொதிநீரில் “ரின்ஸ்” செய்துவிட்டு சர்க்கரையைப் போடுவார். அகண்ட பெரிய குவளையில் வேண்டிய பாலைக் கரண்டியால் ஆடை விலக்கி எடுத்துக்கொள்வார். பாய்லரின் உச்சியில் இருக்கும் நீண்ட பித்தளைத் டம்ளரில் நுரைத்துக்கொண்டிருக்கும் தேநீர் டிகாக்ஷனை வலையுடன் எடுத்து, அகண்ட குவளையின் நேரே பிடித்து டிகாக்ஷனைக் கலந்து மற்றோர் பெருங்குவளையை எடுத்து இடது கையில் கீழாகப் பிடித்து வலது கையை தேநீர் உள்ள குவளையுடன் ஆன மட்டும் உயரக்கொண்டு சென்று லாவகமாய் இடக்கைக் குவளைக்கு மாற்றுவார். தேநீர் ஓர் திடீர் அருவியாய் இடம்பெயரும். மிகச் சரியாய் அது தன் இலக்கை அடைவதை ரசித்துக்கொண்டே நிற்கலாம். மேலும் அடுப்பருகே நிற்பதால் குளிர் தற்காலிக விடைபெற்று இதமான மிதவெப்பம் சூழ்ந்திருக்கும். இருமுறை இப்படிக் கலக்கலாய்க் கலக்கிய பின் டீ மாஸ்டர் நம் பாத்திரங்களில் நமக்கான தேநீரைப் பொழிவார். ஒரு தேநீரை இருவர் தாராளமாகக் குடிக்கலாம். போலியோ சொட்டு மருந்திற்கும் சற்று அதிகமாகத் தரும் பெருநகர பிளாஸ்டிக் கப் தேநீர் போல் அல்லாமல் இரண்டு தேனீர் ஒரு குடும்பத்திற்கே போதுமானதாய் இருக்கும். பஞ்சமிலாக் காலமது.
பால்காரர் ஏழுமணிக்கு மேல்தான் மணியை ஆட்டியபடி மெல்ல சைக்கிளில் வருவார். தனித்த மணம் மிக்க சுத்தமான பசும்பால் கிடைத்த நாட்கள் அவை. சில வீடுகளில் பசுக்கள் பராமரிக்கப்பட்டு பாலும் விற்கப்பட்டதுண்டு. எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டிலும் பால் விற்பனைக்குக் கிடைத்தது. சில நாட்கள் பால் வாங்க அந்த வீட்டிற்கு படியேறிச் சென்றதுண்டு. .
பொதுவாக ஒரு வீட்டிற்கு முன்று, நான்கு படிகள் இருக்கும் அதிகபட்சமாக. அந்த வீட்டிற்கோ ஒன்பது படிகள். ஒரு வழியாக மலை ஏறி உள்ளே சென்றால் அகண்ட ஹால் நீண்டு கிடக்கும். ஓரத்தில் ஒரு வாட்ட சாட்ட பைரவர் நம் வரவைப் பதிவு செய்வார். உள்ளிருந்து சராசரிக்கும் மிகஉயரமான அந்த வீட்டு அம்மையார் “யாரூ…..” எனக் குரல் கொடுத்தபடி வருவார். பைரவரை அதட்டி அடக்கிவிட்டு உள்ளே ஹாலின் மறுகோடிக்கு தைரியமாய் வரச்சொல்வார். ஒரு நீண்ட மர பெஞ்சில் வரிசையாகப் பாத்திரங்களும், முகத்தல் அளவைகளும் இருக்கும். தொழுவம் பின்புறம் இருந்தாலும் வாசம் வீடு முழுவதுமாய் நிரம்பி இருக்கும். பால் கற்பாலாய் அடர்த்தி மிகுந்து கனக்கும். கேட்ட அளவிற்கு மேல் கொசுராய் மேலும் ஊற்றித் தருவார். நலம் விசாரிப்பார். அண்டை வீடுகளில் உள்ள அநேக முதியவர்களுக்கு ‘இன்னார் இன்னாரது வாரிசு” என்று அத்துப்படியாய் இருக்கும். இல்லையெனில் நேரடியாகக் கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டு அன்புடன் ஓரிரு வார்த்தைகள் பேசுவர்.
அந்தச் சமூக வாழ்வு சிதைந்து ஆயிற்று அநேக பல ஆண்டுகள்.
ஒரு இஞ்சித் தேநீருடன் இனிய காலை வணக்கம்!
சேஷ ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *