எழுத்தாளர் குமுதினியின் ‘நந்துவின் தம்பி’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை
அரும்புகளை மலர்த்தும் சூரியன்கள்
– மணி மீனாட்சிசுந்தரம்.
குழந்தைகள் வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.பெற்றோர்கள் வழக்கை விசாரித்தும் தீர்ப்புச் சொல்லியும் மாய்ந்து போவார்கள்.பள்ளியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆசிரியர்களுக்கும் இது அன்றாடப் பிரச்சனைதான். மாணவர்களுக்குள் ஏற்படும் சண்டை பள்ளியைத் தொடர்ந்து தெருவிலும் தொடர்வதை எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தனது ‘ கூழ்பாண்டியனின் முதலாம் படையெடுப்பு’ சிறுகதையில் கூறியிருப்பார்.
இதற்கு என்ன செய்வது? சண்டைகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க முடியாதா? என்ற பெற்றோர்களின் ஏக்கம் நிரந்தரமானது.
ஏனென்றால் குழந்தைகளின் சண்டைகள் ஒரு பருவ காலத்தின் இயல்பை ஒத்தவை. வீடு அதை அனுபவித்தே ஆகவேண்டும்.
எழுத்தாளர் லஷ்மி தன்னுடைய ‘குழந்தைகள் ‘ என்ற சிறுகதையில் இதை மிக அழகாகக் கூறியிருப்பார்.
கோடையில் பள்ளிக்கு நீண்ட விடுமுறை. வீட்டில் எட்டு வயது அண்ணனுக்கும் ஆறு வயது தங்கைக்கும் எதற்கெடுத்தாலும் சண்டையோ சண்டை.
/” என்னத்துக்குத்தான் இந்தப் பாழும் பள்ளிக்கூடத்தில் லீவு விடுகிறார்களோ?” என்று தலையில் அடித்துக் கொள்கிறாள் அம்மா./
மாலையில் வீட்டுக்கு வந்த கணவனிடம்,
/ “குழந்தைகள் இரண்டு பேருக்கும் இடையில் கிடந்து துரும்பு வேகலை.வெட்டுப்பழி குத்துப் பழியாய் நிற்கிறார்கள்.குழந்தை சின்னவள் என்று அவன் விட்டுக் கொடுப்பதில்லை.அண்ணாவாச்சே என்று இவளும் விட்டுக் கொடுப்பதில்லை.பள்ளிக்கூடம் லீவு என்றால் எனக்குத் திகிலாக இருக்கிறது.என்ன குழந்தைகள் வேண்டி இருக்கு ” / என்று அழுது தீர்க்கிறாள் அம்மா.
அப்பா மகனை ஊரிலிருக்கும் தன்னுடைய தமையன் வீட்டில் விடுகிறார். வீடு அமைதியாகிறது. நாளாக நாளாகத் தாய்க்கு மகனைப் பிரிந்த ஏக்கம் சங்கடத்தைத் தருகிறது.தங்கைக்கோ தனக்குப் போட்டியில்லாத நிலை அலுப்பைத் தருகிறது.”இனிமேல் நான் அண்ணனிடம் சண்டையே போட மாட்டேன் அம்மா.அண்ணனைக் கூட்டி வாருங்கள்” என்று தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டுக் கண்ணீர் விடுகிறாள் அவள்.
அந்த சமயத்தில் ஊரில் பையனுக்கு உடல்நலமில்லை என்று கேள்விப்பட்டு அப்பா வீட்டுக்குக் அழைத்து வந்துவிடுகிறார்.அண்ணன் வீட்டுக்கு வந்த சில நாள்கள் தங்கை பாசத்தைப் பொழிகிறாள்.இரண்டு வாரம் கழித்ததும் மீண்டும் இருவருக்கும் பழையபடி சண்டை மூளுகிறது.அம்மாவோ,” இதுகள் சங்கடம் இல்லாமல் கொஞ்ச காலம் அக்கடான்னு எப்ப இருக்கப் போகிறேன்?” என்று புலம்புகிறாள்.
குழந்தைகள் இயல்பு இப்படித்தான் என்று உணர்த்துகிறது இச்சிறுகதை.
ஆனால்,பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளைச் சண்டையில் இருந்து விடுவிப்பது எப்படி? என்ற மலையளவு கேள்விக்கு விடை சொல்கிறது 1946 ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட எழுத்தாளர் குமுதினியின் ‘ நந்துவின் தம்பி’ என்ற சிறுகதை. குழந்தைகளிடம் ஏற்படும் சண்டையை எப்படித் தீர்ப்பது அல்லது அப்பிரச்சனையை எவ்விதம் அணுகுவது என்பதை அந்தக் காலத்திலேயே குழந்தை உளவியல் தன்மையறிந்து இக்கதை வழிகாட்டுகிறது .
இரண்டரை வயதான ரகு என்ற தம்பிக்கும், அவனைவிட சில ஆண்டுகள் மூத்தவனான நந்து என்ற அண்ணனுக்கும் சண்டை. குழந்தையாக இருக்கும்போது தம்பி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அண்ணன், தம்பி வளர வளர முரண்படுகிறான்.
தம்பி அண்ணனின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓடுகிறான்.அண்ணன் துரத்திக்கொண்டு ஓடுகிறான்.ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்.தம்பி அழுதுகொண்டே அண்ணன் அடித்ததை அம்மாவிடம் முறையிடுகிறான்./அம்மா நந்துவிடம், ஏன் நந்து ? தம்பியை அடிச்சியா?” நீ ரொம்ப சமத்தாயிற்றே! நீயா தம்பியை அடித்தாய்? என்று கேட்டாள்/
/ நந்துவுக்கு வெட்கமாக இருந்தது.இருந்தாலும் தான் செய்தது சரி என்று காண்பிப்பதற்காக “அவன் மாத்திரம் என் பொஸ்தகத்தைக் கிழிக்கலாமோ ?” என்று கேட்டுவிட்டுக் கோபித்துக்கொண்டு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குப்புறப் படுத்தான்.உடனே குழந்தை ரகுவும் “அவென் என்னே அடிச்சான்” என்று கூறி அண்ணனைப் போலவே கோபித்துக்கொண்டு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குப்புறப் படுத்தது./
மறுநாள் அம்மா ரகுவுக்கும் ஒரு புத்தகம் வாங்கிக் கொடுக்கிறாள்.ரகு அதை வைத்துக்கொண்டு பெருமை காட்ட, நந்து அதைப் பிடித்திழுக்க, ரகு அண்ணனை அடித்துவிடுகிறான்.
அம்மா கோபத்துடன் ரகுவைப் பார்த்தவுடன், நேற்று அண்ணன் செய்தது போலவே கோபத்துடன் முகத்தை மூடிக்கொண்டு குப்புறப் படுக்கிறான் ரகு.நந்து புத்தகத்தை விட்டெறிய புத்தகம் கிழிந்துவிடுகிறது.
/உடனே அம்மா புஸ்தகத்தை எடுத்துக்கொண்டு ரகுவையும் அழைத்துக்கொண்டு உள்ளே போய்க் கோந்து தடவி அதை ஒட்டிக் கொடுத்தாள்.ரகு உடனே தானும் கொஞ்சம் கோந்தை எடுத்துத் தன்னுடைய தொப்பையில் தடவிக்கொண்டு அதன்மேல் சொக்காயை வைத்து ஒட்டிக்கொண்டது.நந்துவிற்கு அதைப் பார்த்துச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது./
ஒருநாள் இவர்கள் இருவரும் சண்டை போடுவதைப் பார்த்த அப்பா “நந்து நீ தான் ரகுவைச் சீண்டுகிறாய்.அந்த மாதிரி செய்யக்கூடாது” என்று கண்டிக்கிறார்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த ரகு, அண்ணன் தன்னிடம் வம்பு செய்யும்போது அம்மாவிடம் போய் “நந்து என்னைச் சீண்டுகிறான் ” எனப் புகார் செய்கிறான். அம்மா, இவனுக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும் என வியந்து, ” அப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?” எனக் கேட்டதும் வெட்கப்பட்டு அம்மாவின் பின்னால் ஒளிந்துகொள்கிறான் ரகு.
ஒருநாள் அம்மா நந்துவை மடியில் அமர்த்தி அவனிடம், /” ரகு சின்னது.ஒன்றும் தெரியாது.சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் பிறக்கும்போது ஒன்றும் தெரியாது.நாம் செய்வதைப் பார்த்துத்தான் அதுகளும் கற்றுக்கொள்ளும்.குரங்குக் குட்டிகள் பெரிய குரங்கு செய்வதையே தாங்களும் செய்வதை நீ பார்த்ததில்லையா? அதே மாதிரிதான் தம்பியும்.நீ ஒரு தினம் அதனுடைய கையில் இருந்த புஸ்கத்தை வெடுக்கென்று பிடுங்கினாய்.
அதைப் பார்த்துக்கொண்டே இருந்த ரகு இப்போது எல்லார் கையில் இருப்பதையும் பிடுங்குகிறது.நீ அடித்தால் அதுவும் அடிக்கிறது. நீ கோபித்துக்கொண்டால் அதுவும் கோபித்துக்கொள்கிறது. அன்றைக்கு நீ பார்த்துக்கொண்டே இருந்தாயே, நான் கோந்தை எடுத்துப் புஸ்தகத்தில் தடவினேன்.ரகுவும் உடனே கோந்தை எடுத்துத் தன்னுடைய தொப்பையில் தடவிக் கொண்டது.சின்னக் குழந்தைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும்.நாம்தான் பொறுமையாக நல்லவழி காண்பித்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றாள்./
அம்மா சொல்வதைத் கேட்டுக்கொண்டிருந்த நந்து, “ரகு நான் சொல்வதைக் கேட்கவே மாட்டேன் என்கிறானே?” என்கிறான்.
அதற்கு அம்மா,/” நாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்யக்கூடாதுன்னு அதட்டிச் சொன்னால் உடனே அதைச் செய்யவேண்டும்னு குழந்தைகளுக்குத் தோன்றும்.நீ பெரியவன் தான்.அவனை விடப் புத்திசாலிதான்.அதற்காக அதை எடுத்துக் காண்பித்து டம்பமாய்ப் பேசக் கூடாது.மரியாதை, பிரியம், பெருந்தன்மை எல்லாவற்றையும் நீ காண்பித்துக் காண்பித்து அவனுக்கும் அதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவன் ஒரு பங்கு சமத்தாக இருக்க வேண்டும் என்றால் நீ நாலு பங்கு சமத்தாக இருக்க வேண்டும்.உன்னுடைய பிரியத்தை எல்லாம் அவனிடம் காண்பி.நல்ல வார்த்தைகளே சொல்லு.அவனுக்குப் புரியாததைத் தெளிவாகச் சொல்லு.அவன் எவ்வளவு சமத்தாகப் போய்விடுகிறான் என்பதைப் பார்த்து நீயே ஆச்சரியப்படுவாய்” என்றாள்./
அம்மா நந்துவிடம் கூறும் இந்தக் கடைசிப் பத்தியை மீண்டும் படித்துப் பாருங்கள்.எத்துணை தெளிவான அம்மா இவள்.சண்டைபோடும் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஓர் அடிகொடுத்து அப்போதைக்குப் பிரச்சினையைத் தீர்த்துவிடும் அம்மா அல்ல இவள். தனது குழந்தைகளைக் கையாலும் வாயாலும் காயப்படுத்தாத அம்மா இவள். குழந்தைகளோடு தொடர்ந்து உரையாடலை மேற்கொள்ளும் உயரிய பண்புடையவள் இவள்.நந்துவுக்கு இவள் சொல்லும் அறிவுரைகள் நந்துவுக்கு மட்டும் ஆனவையல்ல. இளைய தலைமுறையை நெறிப்படுத்த எண்ணும் அத்தனை பெரியவர்களுக்கும் சேர்த்துத்தான்.
எப்போதும் மூத்தவர்கள் அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு முன் மாதிரியாகத் தங்கள் வாழ்வை முன்னிறுத்த வேண்டும். அதுவே சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்கும் வழியென அழகாகச் சொல்கிறாள் இக்கதையில் வரும் தாய்.
வீட்டில் பெற்றோர்களும் பள்ளியில் ஆசிரியர்களும் நாட்டில் பெரியோர்களும் கடைப்பிடிக்க வேண்டிய பண்பை குழந்தைகளின் வழியே இச்சிறுகதையில் (நந்துவின் தம்பி சிறுகதை) முன்வைத்த எழுத்தாளர் குமுதினியைப் போற்றுகின்றேன்.
உதவிய நூல்கள் :
————————-
1. மீதமிருக்கும் சொற்கள் (பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)
– தொகுப்பு : அ.வெண்ணிலா,
அகநி வெளியீடு, வந்தவாசி – 604408
2. வெய்யில் உலர்த்திய வீடு , எஸ்.செந்தில்குமார்,
உயிர்மை பதிப்பகம், சென்னை – 600020
கட்டுரை ஆசிரியர் குறிப்பு :
மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இரண்டு கதைகளும் குழந்தைகள் உளவியலில் பெற்றோர் பார்வையைச் அழகாக எடுத்துக் கூறியது சிறப்பு ஐயா. வாழ்த்துகள்.