நூல் அறிமுகம்: குணங்குடி மஸ்தான் சாஹிப் – கி.ரமேஷ் இறைவனை வழிபடுதல் என்பது மனிதனுக்குத் துன்பத்திலிருந்து ஒரு விடுதலையை மனதளவில் பெற்றுத் தருகிறது எனலாம்.  எனவேதான் பொருள்முதல்வாதம் பேசும் காரல் மார்க்ஸ் கூட, “இதயமற்ற உலகின் இதயமாகத் திகழ்வது மதம் (இறைவன்)’ என்கிறார்.  அதில் பல மார்க்கங்கள் உள்ளன, பல வழிமுறைகள் உள்ளன.  அதிலெல்லாம் எளியவனையும் சென்று சேரும் இசைவழி என்பது விஞ்சி நிற்பதாகும்.  இறைவன் இருப்பதை ஏற்காதவர்கள் கூட இசையில் மயங்கி விடுவார்கள்.  இன்றைக்கும் எம்.எஸ். பாடிய சுப்ரபாதமும், சூலமங்கலம் சகோதரிகளின் கந்தர் சஷ்டி கவசமும் காலையில் எங்காவது ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்காமல் இருக்க முடியாது.  அதேபோல் தியாகராஜ கீர்த்தனைகள், கிருஸ்துமஸ் கேரல்கள், நாகூர் ஹனீஃபாவின் கணீர் குரலில் இஸ்லாமியப் பாடல்கள் அனைவரையும் ஈர்த்துக் கட்டிப் பொட்டுக் கொண்டே இருக்கின்றன.

இஸ்லாமில் சூஃபி முறை என்பது ஒரு வடிவம். ”ஜாதி, மதம், இனம் தாண்டி மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.  ஏனெனில் சத்தியம் அனைவருக்கும் பொதுவானது மட்டுமல்ல, அது என்றும் மதம் கடந்தது என்ற செய்தியை சூஃபிக்களின் வாழ்க்கை சொல்லிக் கொண்டே இருக்கிறது.”  அதில் தோன்றியவர்களில் முக்கியமான சூஃபிக்கள் பீரப்பாவும் அவரைத் தொடர்ந்து வரும் குணங்குடி மஸ்தான் சாஹிப்பும் ஆவர். 

 குணங்குடியார் சிறு வயதிலேயே தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.  வாயைத் திறந்தாலே பாடல்களாகக் கொட்டும்.  அவரைப் பெற்றோர் மணம் செய்து கொள்ளுமாறு கேட்க, மாமன் மகள் மணம் செய்து கொள்ளுமாறு இறைஞ்ச, இல்லை, நான் இறைவனுக்குத் தொண்டாற்றப் போகிறேன் என்று பாடலாலேயே பதிலளித்து விட்டுக் கிளம்பி விட்டார்.ஊர் ஊராக இறைவனின் இல்லங்களை தரிசித்து அங்கெல்லாம் தன் பாடலால் அலங்கரித்து விட்டுப் பயணிக்கிறார் குணங்குடியார்.  இறைவனை மட்டுமே சரணடைந்தவர்கள் மதம் பிடித்து அலைவதில்லை என்பதை இவரும் நிரூபிக்கிறார்.  மதுரை மீனாட்சி அம்மன் உட்பட மத வேறுபாடின்றிப் போற்றிப் பாடியுள்ளார் அவர்.  எந்த இடத்திலும் தங்காமல் சுற்றிக் கொண்டே இருந்தவர், சில அதிசயங்களையும் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.  அவரை வழியில் சந்தித்த புலவர் நாயகம் தானும் அவருடன் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று கேட்க, சம்மதிக்கிறார் குணங்குடியார்.  

பின்னால் தமது கடைசிக் காலத்தில் சென்னைக்கு வந்து, அங்கு ஆற்காடு நவாப் அளித்த இடத்தில் இருந்து உயிர்துறக்கிறார் அவர்.  அவர் சமாதி அடைந்த இடம் காவாந்தோப்பு.  அது பின்னர் அவர் பெயரை ஒட்டி தொண்டியார் பேட்டையாகி, இப்போது தண்டையார் பேட்டையாக மருவி விட்டது.  

அவர் பாடிய பாடல்கள் இன்றும் நிலைத்திருப்பது தமிழுக்குக் கிடைத்த வரம்.  அவரது பாடல் தொகுப்பு, ‘திருப்பாடல் திரட்டு’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.  இத்தகைய ஞானிகள் மண்ணிலிருந்து மறைந்தாலும், அவர்களது இசை உலகை நிறைத்து உயிரூட்டிக் கொண்டே இருக்கும்.

நாகூர் ரூமி அவர்கள் மிகச்சிறப்பாக குணங்குடியாரின் வாழ்வைத் தமது புத்தகத்தில் அளித்துள்ளார்.   சூஃபி இஸ்லாம் பற்றிய புத்தகத்தைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்சமீபத்தில் கரோனா காலத்தில் சூஃபியும் சுஜாதையும் என்ற மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தேன்அதிலிருந்து சூஃபியிசம் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் நிறைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

குணங்குடி மஸ்தான் சாஹிப்

நாகூர் ரூமி

கிழக்கு பதிப்பகம்

பக்கம்:92

விலை:ரூ.120/-

 

கி.ரமேஷ்