முனைவர் மு.முருகேசன் ( Dr.M. Murugesan) எழுதிய கூண்டிலேற்றமுடியாத குற்றவாளிகள் (Kundiletra Mudiyatha Kuttravaligal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

கூண்டிலேற்றமுடியாத குற்றவாளிகள் (Kundiletra Mudiyatha Kuttravaligal) – நூல் அறிமுகம்

கூண்டிலேற்றமுடியாத குற்றவாளிகள் (Kundiletra Mudiyatha Kuttravaligal) – நூல் அறிமுகம்

எல்லையற்றது அறிவு என்றால் அறியாமையும்தான்!

– தேனிசீருடையான்

1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு பார்வையிழந்தோர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் (நானும் பார்வை மாற்றுத்க் திறனாளியாக அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன்.) மாற்றுத் திறனாளியாய் இருந்து உலகின் உன்னத நிலையடைந்த ஹெலம் கெல்லர் என்ற அம்மையார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அமெரிக்காவைச் சேர்ந்த அவர் கண் தெரியாமை, காது கேளாமை, வாய் மேச முடியாமை ஆகியவற்றால் பாதிக்கப் பட்டிருந்தார். அவர் பேசிய ஆங்கில உரையை அவருடன் வந்திருந்த அவரின் உதவியாளர் திரும்பவும் ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்க்கம் செய்ய, பள்ளி முதல்வர் தமிழில் பெயர்த்துச் சொன்னார்.

ஹெலலன்கெல்லர் வாழ்ந்த அன்றைய அமெரிக்கச் சூழலில் அவரது குடும்பம், நன்பிக்கையூட்டும் சமூகத்தின் சுற்றுச்சூழலைக் கொண்டிருந்தது. சுற்றியிருந்த சமூக மனிதர்கள், அந்த நாட்டு அரசு, கல்வி புகட்டிய ஆசிரியர் அனைவரும் ஹெலன்கெல்லருக்குத் தேவையான தார்மீக உதவிகள் செய்து நம்பிக்கையூட்டி வாழ்க்கையின்மீது பிடிமானம் உண்டாக்கினர். ஐம்பொறிகளால் ஆனது மனித உடல்; அவற்றில் மூன்று பொறிகள் இயங்கவில்லை என்றால் எப்படியிருக்கும் என்று எண்ணும்போதே பயம் உண்டாகிறது. மூன்று பொறிகளின் இயங்காமையைத் தொடு உணர்ச்சிமூலம் ஈடுகட்டினார் என்பதை நினைக்கும்போது வியந்து பாராட்ட வேண்டியிருக்கிறது.

நம் ஊரில் கண் தெரியாமை பெரும் குற்றம் போலவும் கண் தெரியாதவர்கள் வாழ லாயக்கில்லாதவர்கள் போலவும் உளவியல் கட்டமைப்பு செய்யப் படுகிறது. ஆனால் மூன்று திறன்கள் இல்லாத ஹெலன்கெல்லர் உடலியல் உணர்ச்சிகள் மற்றும் மன உணர்வுகளை மட்டுமே வைத்துக் கொண்டு உலகின் உன்னத மனிதராய் உயர்வடைந்தார் என்பதோடு இரண்டு நூல்களை எழுதி இலக்கியவாதியாகவும் உருவெடுத்தார். இது எப்படி சாத்தியமானது என்றால் அவருடைய ஆசிரியர் அன்னி சல்லிவன் (anne Sullivan) அவருக்குப் பாடம் சொல்லித் தருவதில் மேற்கொண்ட உத்திகளும் தன்னலமற்ற சேவையும்தான் என்று சொல்லலாம். அவருக்குத் துணையாக அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இருந்தனர். அதாவது. முத்திறன் இல்லாதவர் எத்திறனும் இல்லாதவர் ஆகமாட்டார் என்று அவர்கள் நம்பி ஹெலனுக்கு, தானாக இயங்கும் விதிமுறைகளை வகுத்ததோடு அவர் மேற்கொண்ட தன்முனைப்பான செயல்பாடுகளை ஊக்கப் படுத்தினர்.

ஹெலன் கெல்லர் தனது 13வது வயதிலேயே “என்கதை” (story of my life) என்ற நூலை எழுதினார். அந்த நூல் எழுதப் பட்ட காலத்திலேயே பிரைல் எழுத்து வடிவில் ஆக்கம் செய்யப் பட்டு உலகெங்கும் உள்ள பார்வையிழந்தோருக்கு வாசிக்கக்கிடைத்தது. அந்த நூலில் அவர் சொல்லும் பல விஷயங்கள் ஆச்சர்யமானவை.

ஆசிரியர் அன்னி சல்லிவன் ஹெலனின் முதுகில் தன் விரல்களால் அட்சரங்களை எழுதி எழுத்துகளின் வடிவத்தைப் புரிய வைத்தார். உதட்டையும் நாக்கையும் தொட்டு உச்சரிக்கக் கற்றுத் தந்தார். உண்பது, உடுப்பது, சக மனிதர்களைப் புரிந்துகொள்வது போன்ற உளவியல் தாக்கங்களைப் புரிந்துகொள்ள விதவிதமான முயற்சிகளைச் செய்து அவரை முழு மனுஷி ஆக்கினார். இன்று உலகின் அனைத்து நாடுகளும் ஹெலன் கெல்லரைப் புகழ்ந்து பாராட்டுகின்றன. அவர் பெயரில் பல நிறுய்வனங்கள் இயங்கி பார்வைமாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வியும் தொழிலும் சொல்லித் தருகின்றன. மதுரையில் ஹெலன் கெல்லர் பெயரில் பார்வையிழந்தோருக்கானஃ கல்வி நிறுவனம் ஒன்று 70ஆம் ஆண்டுகளில் இயங்கியது. பலரும் படித்துப் பயன்பெற்றனர். பேராசிரியர் திருவாசகம் என்பவர் அதன் இயக்குநர். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து ஏராளமான நன்கொடைகள் பெற்று அந்த நிறுவனத்தை இயக்கிய அவர் திடீரென ஒருநாள் அலுவலகத்தை மூடிவிட்டு, சொத்துகளைத் தனதாக்கிக் கொண்டு போய்விட்டார்.

ஹெலனுக்கு இருந்தது போன்ற சு|ற்றுச் சூழல் நம் நாட்டில் இல்லையே என்ற ஆதங்கம்தான் முனைவர் முருகேசன் எழுதியுள்ள “கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்” என்ற இந்த நூலில் ஒலிக்கிறது.

பார்வை மாற்றுத் திறனாளர் சமுதாயத்தைப் பார்வை அதிகாரம் பெற்ற சமுதாயம் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது, அவமானப்படுத்துகிறது, வஞ்சிக்கிறது என்பதுதான் நூலின் சாரம். இந்த நூலை வாசிக்கும் யாரும் பார்வை அதிகாரத்தின் வழியாக தாங்களும் அப்படிப் பட்டவர்கள்தான் என்பதை உணரவைக்கிறது. முன்னுரை எழுதியுள்ள அறிவியல் இயக்கத் தலைவர் திரு மணி அவர்கள் “இந்த நூலை வாசிக்கும்போது முனைவர் முருகேசன் அமைக்கும் கு|ற்றவாளிக் கூண்டில் நானும் இருக்கிறேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். பார்வை அதிகாரம் பெற்ற பெரும்பாலோர் இந்தக் கருத்தோடு ஒத்துப் போவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

பதினைந்து கட்டுரைகளும் பதினைந்து வகையான குற்றச்சாட்டுகளைப் பார்வை அதிகாரம் படைத்தவர்கள் மீது சுமத்துகின்றன.
பார்வையில்லாமல் பிறப்பது உலகெங்கும் உள்ள உடலியல் குறைபாடு. உலகின் மிகச் சிறந்த இலக்கியமான “கண் தெரியாத இசைஞன்” கதாநாயகன் பியோதர் பிறவி மாற்றுத் திறனாளி, ஆனால் உலகின் ஒவ்வோர் அசைவையும் தனது புலனுணர்வாலும் ஒலிவழி ஞானத்தாலும் அறிந்தும் புரிந்தும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறான். ஆக, பார்வையின்மை வாழ்வியல் குறைபாட்டை உருவாக்காது எனப் பிரகடனப் படுத்திய அற்புதக் காவியம் அந்த நூல்.

இந்தியாவின் நிலை மிகவும் மோசம். முனைவர் முருகேசன் சொல்லும் செய்தி அதிர்ச்சிகரமானதாய் இருக்கிறது. பிறந்த முழந்தைக்குக் கண்பார்வை இல்லை என்று தெரிந்தால், பெண் சிசுவைக் கொல்வதுபோல நெல்மணியை உணவுக் குழாயில் செருகிக் கொன்றுவிடும் குடும்பங்களும் உண்டு. பெண் சிசுக் கொலையையே பார்த்து வருத்தப் படாத நாம் இதைக் கண்டா சலனப்படப் போகிறோம்? என்கிறார் எழுத்தாளர்/ நடுத்தரக் குடும்ப உறுப்பினர்கள் தவிர அடித்தட்டுக் குடும்பத்தைச சேர்ந்தவர்கள் இந்த வன்கொலையில் ஈடுபடுவது மிகவும் குறைவு. வம்சவழிப்பட்ட முன்னோர் செய்த பாவச் செயலின் விளைவு எனச் சமாதானம் ஆகி, அந்தத் திட்டுமுறைப்ப்பாட்டை எப்படி நிவர்த்தி செய்வது என யோசிக்கிறவர்களாய் ஏழைமக்கள் இருக்கின்றனர். அதையும் மீறி சிலர் பெரியவனாகிக் கஷ்டப் படவேண்டாமே என்ற “மனிதாபிமான” சிந்தனையோடு கொன்றுவிடுகின்றனர். இந்த இடத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. சோஷலிசத் தீவிரவாதி ஒருவனை, அவன் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டால் அடிவாங்கியே செத்துப் போவானே என்ற கருணை உள்ளத்தோடு ஒரு போலிஸ்காரர் “தப்பி ஓடினான்” என்று குற்றம் சாட்டி அவனைச் சுட்டுக் கொன்றுவிடுவார். போலிஸ்காரரின் அபத்த முடிவுபோல, கண் தெரியாத குழந்தையைக் கருணைக் கொலை செய்யும் அக்கிரமச் செயல் இது. இந்த நிலையை வலிமையோடு எதிர்க்கிறது இந்த நூல்.

இன்”றைய இந்தியக் குடும்பங்கள் பற்றி முனைவர் முருகேசன் முன்வைக்கும் வாதம் நேர்மையானதும் நேர்த்தியானதும் ஆகும். அவர் சொல்கிறார்.”சமுதாயத்தின் அடிப்படை அலகாகிய குடும்பம் ரத்த உ|றவுகளால் ஆக்கப் படுகிறது என்றும் அது பாசப் பிணைப்புகளால் கட்டிக் காக்கப் படுகி|றது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஆண்டான் அடிமை முறையில் சமுதாயத்தின் சகல சார்புடனும் வர்க்க உணர்வுடனும் ஆதிக்க வெறியுடனும் இயங்குகிறது என்பதுதான் உண்மை.”

குடும்பம் பற்றிய மிகவும் அறிவியல்பூர்வமான பதிவு இது. இத்தகைய சமூக நிலைபாட்டில் ஏழையாகவும் ஊனமாகவும் பிறப்பெடுத்தால் என்ன கெதி ஆகும், என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த நூலில் உள்ள ஒன்றிரண்டு சங்கதிகளை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
பார்வை மாற்றுத் திறனாளர்களின் திருமண உறவுபற்றிய விரிவான சொல்லாடல்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாகப் பெண்கள் எவ்வளவு தூரம் வஞ்சிக்கப் படுகி|றார்கள் என ஆதங்கப் படுகிறார் ஆசிரியர். கண் தெரியாத ஒரு பெண் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் பார்வையுள்ள ஆண்கள், குறிப்பாக வேலைவெட்டி இல்லாதவர்கலள் அந்தப் பெண்ணை மணம் புரிய முன்வருகின்றனர். அவளின் பணத்துக்குத்தான் ஆசையே தவிர உண்மையான காதலினால் அல்ல.

”ஆகவே” என்றொரு சிறுகதை உண்டு. புஷ்பா டீச்சரும் ஜெயபாலு என்பவரும் காதலிக்கின்றனர். இருவௌம் பார்வைமாற்றுத் திறனாளர்கள். அவர்கள் திருமணம் செய்து வாழ்வது என முடிவெடுக்கின்றனர். புஷ்பாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து, சொந்தத்தில் முறை மாப்பிள்ளையைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று வ|ற்புறுத்துகின்றனர். அந்த மாப்பிள்ளை அவளின் சம்பாத்தியத்தில் நீச்சலடிக்கலாம் என்ற கோதாவில் அவளுடனான இல்லறத்துக்குச் சம்மதிக்கிறான். இதை விரும்பாத புஷ்பா டீச்சர் தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். “பார்வையுள்ள அந்த மாப்பிள்ளை என் உடுப்பு சரியீல்லை; வேறு உடுத்து என்றால் மாற்றிக் கொள்ள முடியும். நீ சாப்பிடும் அளவு அதிகம்; குறைத்துக் கொள் என்றால் அதையும் செய்ய முடியும்; நீ பூ வைத்து உன்னை அலங்காரம் செய்யக் கூடாது என்றால் அதையும் கூட என்னால் செய்ய முடியும்; எதிர்காலத்தில் எனது ப்ளைண்ட்னெஸ் அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை எப்படி மாற்ற முடியும்? ஆகவே அப்பா என்னை என் வழியில் செல்ல விடுங்கள் என்று எழுதுவாள்.

இந்த நூலில் ஒரு சம்பவம் சுட்டிக் காட்டப் படுகிறது. ரமேஷ் என்ற பார்வை மாற்றுத் திறனாளியும் சரோஜா என்ற பார்வையுள்ள பேராசிரியையும் காதலிக்கின்றனர். செம்புலப் பெயல் நீர் போன்ற ஆத்மார்த்தமான காதல் அது. பேராசிரியை சரோஜாவுக்குக் குடும்பத்திலிருந்து நெருக்கடி வருகிறது. அதை நிராகரித்து ரமேஷைத் திருமணம் செய்துகொள்கிறார். குடும்பம் எந்தத் தடங்கலுமின்றி நடக்கிறது. ஒருமுறை நூலாசிரியர் அந்தப் பெண்ணுடன் உரையாடுகிறார். ”இது காட்சி உலகம்; பார்வையுள்ள குடும்பத் தலைவி; எப்போதாவது உங்கள் கணவர் பார்வையுள்ளவராக இருந்திருக்கலாம் என்று நினைத்ததுண்டா?” என்று கேட்கிறார். அத|ற்கு அந்தப் பெண் சொல்லிய பதில் முக்கியக் குறிப்பு.

”சில நேரங்களில் என் கணவருக்கான காட்சி உணர்வின் தேவையை நான் உணர்ந்திருக்கிறேன். குறிப்பாகப் பாலியல் ரீதியாக என் தோற்றத்தையும் அழகையும் கணவர் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்; இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உணர்வுதான்.”

உடலுறவு என்பது வெறும் புணர்ச்சி மட்டுமல்ல; உடலைக் கண்ணால் கண்டு ரசிப்பதும்தான். பார்வை மாற்றுத் திறனாளர்களுக்கு இந்த வாய்ப்பு அமைவதில்லை. இருவரும் பார்வை இழந்தவர்களாய் இருந்தால் இந்த ரசனை ஏக்கம் வராது அல்லவா? ஆகவே, மணவாழ்க்கையில் இருவரும் பார்வை மாற்றுத் திறனாளராய் இருப்பது அவசியம் என நிறுவுகிறார் ஆசிரியர். அதோடு சாதிக் குறுக்கீடு நிகழ்வதில்லை. சாதியற்ற சமுதாயம் உருவாகத் தேவைப்படும் எத்தனையோ காரணிகளில் இதுவும் ஒன்று.

பார்வையிழந்தோருக்குப் பெரும் சவாலாய் இருக்கும் இன்னொரு சங்கதி பஸ் பிரயாணம். கண்டக்டர்கள் இவர்களைக் கண்டால் பஸ்ஸில் ஏற அனுமதிப்பதில்லை. ஒரு சம்பவத்தை ஆசிரியர் குறிப்பிடுகிறார். திருச்சியிலிருந்து பெரம்பலூர் போக வேண்டும். முனைவர் முருகேசன் பஸ்ஸில் ஏற முயல்கிறார். அது விழுப்புரமோ சென்னையோ செல்லும் வண்டி. கண்டக்டர் சொல்கிறார். “இது பைபாஸ் வழியாய்ப் போகும்; பெரம்பலூர் போகாது.”

அடுத்த வண்டிக்காகக் காத்திருந்த போது இன்னொரு பயணி “பெரம்பலூர் போகுமா?” என்று கேட்டதும் “ஏறிக்கங்க” என்கிறார் கண்டக்டர். உடனே இவரும் ஏறிக் கொள்கிறார்.

இப்படியாக எல்லா இடங்களிலும் பார்வை மாற்றுத் திறனாளர்கள் அவமதிக்கப் படுகின்றனர். படிப்பறிவும் ஆய்வு மனப்பான்மையும் உள்ள பார்வைமாற்றுத் திறனாளிகள் ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றுகிறார்கள் என்பது நல்ல செய்தி, நான் படித்த அறுபதுகளில் அந்த வாய்ப்பு என் போன்றவர்களுக்கு அமையவில்லை. பார்வையிழந்தோர் ஆசிரியரானால் அவர்களால் சொல்லித் தர முடியாது என்பதோடு, மாணவர்கள் அந்த ஆசிரியர்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என்ற கருத்தோட்டம் நிலவிய காலமது.

1969ல் நான் எஸ் எஸ் எல் சி முடித்து ஆசிரியராக வேண்டும் என்று விரும்பினேன். ஆசிரியப் பயிற்சி பெற, பார்வையிழந்தோருக்கு சட்டத்தில் இடமில்லை என்று சொல்லப் பட்டது. மாநிலக் கல்வி இயக்குநராகப் பணியாற்றிய திரு சிட்டிபாபு அவர்களிடம் ஆசிரியப் பயிற்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விண்ணப்ப மனு அளித்தேன். “அதற்கு சட்டத்தில் இடமில்லை; அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். 1974ல் கலைஞர் கருணாநிதி முதலமைச்நராக இருந்தபோது சட்டம் இயற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. முதலில் பெண்களுக்கும் அடுத்த ஆண்டுமுதல் ஆண்களுக்கும் ஆசிரியப் பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு ஏராளமான பார்வையிழந்த மாணவர்கள் ஆசியர்களாகி சாதனை செய்துள்ளனர். பார்வை உள்ளவர்கள் போல தங்களாலும் இயங்கவும் சாதிக்கவும் முடியும் என்று நிரூபித்தவண்ணம் உள்ளனர்.

அரசு அனுமதித்தாலும் கல்விப் புல அதிகாரிகள் பார்வைமாற்றுத் திறனாளர்களுக்கு முட்டுக் கட்டையாய் நின்று தடுதல் செய்கின்றனர் என்பதை இந்த நூல் அம்பலப் படுத்துகிறது. ஒரு ,பார்வைமாற்றுத் திறன் பேராசிரியர் நேர்காணலுக்குச் செல்கிறார். பதினேழு காலியிடங்கள் இருந்த நிலையில் பதினாறுபேர் மட்டும் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் இந்தப் பார்வை இழந்த நபர் முதலிடத்தில் இருக்கிறார். ஆனாலும் இவர் தேர்வு செய்யப் படவில்லை;. காரணம் தேர்வு நடத்திய அந்த அதிகாரிக்குப் பார்வையில்லாதவர்கள் மீதிருந்த ஒவ்வாமைதான்.

ஒரு பார்வையிழந்த ஆசிரியர் எப்படிப் பாடம் நடத்த முடியும் என்பதைத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்குகிறார் முனைவர் முருகேசன். உதாரணத்துக்குத் தமிழ் இலக்கணம். அது விளக்கக் குறிப்புகளுடன் கரும்பலகையின்மூலம் நடத்த வேண்டியிருக்கிறது. அப்போதுதான் மாணவர்களுக்கு எளிதாகப் புரியும். இவர் என்ன செய்தார் என்றால் நடத்தப் போகும் பாடத்தை நன்கு உள்வாங்கி, அதைப் பேப்பரில் பதிவு செய்து மாணவர்களுக்கு முதலில் வழங்கிவிடுவார். மாணவர்கள் படித்துப் பின் ஆசிரியர் சொல்வ்பதைப் புரிவது எளிது. முதன்மை மாணவர்களைக் கொண்டு கரும்பலகையில் எழுதி விளக்குவதும் உண்டு. இவர் வகுப்பாசிரியராய் இருந்த வகுப்பு மாணவர்கள் 100 விழுக்காடு வெற்றிபெற்றுள்ளனர். அப்புறமும் அதிகார வர்க்கம் இவர்களைப் பின்னோக்கி இழுக்கும் வேலையைத்தான் செய்கின்றது.

யாரால் முடியாது என்று நம்பினார்களோ அவர்களால் பெரும் பெரும் சாதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. பலபேர் நல்லாசிரிய்ர் விருது பெற்று உயர்ந்துள்ளனர். நாட்டுநலப் பணித்திட்டம் உட்பட பல ப்ராஜக்டுகளைத் தொய்வின்றிச் செய்து “நான் யாருக்கும் சளைத்தவனல்ல” என நிரூபித்தவண்ணம் உள்ளனர். அதற்கு நூலாசிரியர் முருகேசன் அவர்களே சிறந்த உதாரணம்.

பார்வைமாற்றுத் திறனாளர்களுக்குப் பார்வையின்மை ஒரு குறைபாடு அல்ல; பார்வை அதிகாரம் படைத்தவவர்கள்தான் இடைஞ்சல். ஆசிரியர் எழுதுகி|றார். (பார்வை) ”அதிகாரம் என்பது ஒரு கொடிய பண்பு. அதற்குக் கண் தெரியாது; காது கேட்காது; மனம் இருக்காது; எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு கிடையாது.” அதோடு இன்னொன்றையும் சொல்கிறார். “பார்வை அதிகாரம் பார்ப்பன அதிகாரத்தைவிட கொடியது.” இன்றும் பார்வைமாற்றுத் திறனாளர்களைப் பின்னுக்கு இழுப்பது இந்தப் பார்வை அதிகாரக் கும்பல்தான். அரசிடமிருந்து பணியாணை கிடைத்த பின்பும் பள்ளியிலோ கல்லூரியிலோ சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அரசாணை பெற்ற பள்ளிக்கும் அரசு அலுவலகத்துக்கும் அலையவிடும் அக்கிரமம் இன்றளவும் நீடிக்கிறது.

பார்வையிழந்தவர்களில் அறிவுத் தேடல் மிக்கவர்கள் அதிகம்பேர் இருக்கின்றனர். லண்டனில் உள்ள மாணவர் நூலகம் (students librtary) சமீபகாலம் வரை உலகமெங்கும் உள்ள பார்வை இல்லாத மாணவர்களுக்கு பிரைல் வடிவ நூல்கள் அனுப்பி வாசிக்க வைத்தது. அங்கிருந்து நூல்களை வாங்கி ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து வாசித்துவிட்டுத் திருப்பி அனுப்ப வேண்டும். தமிழில் பிரைல் புத்தகம் இல்லாத நிலையில் நான் மாணவனாய் இருந்த போது பல புத்தகங்கள் வாங்கி வாசித்து அனுப்பியிருக்கிறேன். உலகமெங்கும் பிரைல் எழுத்துக் கடிதங்களுக்கும் நூல்களுக்கும் அஞ்சல் செலவு இலவசம். இன்றளவும் அந்தச் சலுகை பறிக்கப் படாமல் இருக்கிறது.

இன்று பார்வை இழந்தவர்கள் வாசிப்பது இன்னும் எளிமைப் பட்டிருக்கிறது. கணினி வழிப்பட்ட மென்பொருள்கள் வந்துள்ளன. JAWS போன்ற மென்பொருள்கள் கண் தெரிந்தவர்கள் பார்வையுள்ளோர் வாசிக்கும் நூல்களை வாசிக்க உதவுகின்றன. எல்லாப் புத்தகத்தையும் PDFல் படியெடுத்து அலைபேசியில் பதிவுசெய்தால் குரல் பதிவாக அது மாறிவிடும். செவிவழிக் கேட்டல் முறையில் அந்தப் புத்தகத்தை வேகமாய் வாசிக்க முடியும் என்பதை முனைவர் முருகேசன் நிரூபித்துள்ளார். இப்போது அவருடைய நூலகத்தில் நாலாயிரம் நூல்கள் இருக்கின்றன என்பதை ஆச்சர்யத்தோடு நோக்கவேண்டி இருக்கிறது. நூலகத்துக்குள் நுழையக் கூடாது என்று தடுத்தவர்கள் இன்று ஏதேனும் புத்தகம் தேவைப் பட்டால் அவரைத் தேடி வருகிறார்கள் எனப் பெருமை பொங்கக் கூறுகிறார்.

அறியாமை மிகுந்த சில பழமொழிகளைச் சுட்டிக் காட்டுகிறார் முனைவர் முருகேசன். “குருடன் முடவனைத் தூக்கிக் கொண்டால் இருவராலும் நடக்க முடியும்.” இன்னொரு மொழி “யானையைக் கண்ட குருடன் போல.” இந்த அபத்த மொழிகள் பொதுவெளியில் நிலவும் அறியாமை எனச் சுட்டிக் காட்டும் ஆசிரியர் “அறிவுக்கு எல்லை இல்லை என்பதுபோல அறியாமைக்கும் எல்லை இல்லைதானே?” என்கிறார்.

பார்வைமாற்றுத் திறனாளர்கள் இன்று ஓரளவு கௌரவத்தோடு வாழ முடிகிறது என்றால் அதற்கு ஒருநூற்றாண்டு கால போரட்ட வரலாறு உண்டு. ஆசிரியப் பயிற்சி பெறுவதற்கு, ஆசிரியராய்ப் பணி ஏற்பதற்கு, பணி ஏற்ற பின் முழுமையாய் உழைக்க அனுமதி பெறுவதற்கு, பொதுவெளிகளில் ஓரங்கட்டப் படாமல் இருப்பதற்கு என்று எல்லா நியாயங்களையும் பெறுவதற்குக் களப்போராட்டம்தான் உதவியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். அரசை எதிர்த்து, அதிகாரவர்க்கத்தை எதிர்த்துப் போராடியதன் விளைவாகவும் மனிதநேயச் சிந்தனையாளர்களின் ஒத்துழைப்பாலும் இன்று சுய கண்ணியத்தோடு வாழ முடிகிறது.

முனைவர் முருகேசன் ஒரு தமிழாசிரியர். எழுத்தாளர் சாலை இளந்திரையன் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சில சொற்களைத் தமிழ்ப் படுத்தியும் இருக்கிறார். “சுயம்” என்பதைத் தன்னி” என்கிறார். மூன்று சக்கர வாகனமாகிய ”ஆட்டோ””வை “தானி” என்கிறார். “ஷேர் ஆட்டோ” ”பங்குத் தானி”. இப்படியாக பல சொற்களைத் தமிழ்ப் படுத்தியிருக்கிறார்.

விருவிருப்பான நடையில் நூல் விரிந்து செல்கிறது. நூலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் ஏதாவதொரு வகையில் தாமும் கூண்டில் ஏற்றமுடியாத குற்றவாளியாய் இருப்பதை உணர முடியும்.

நூலின் சாராம்சமாக இருப்பது;-

1 பார்வை மாற்றுத் திறணாளிகள் அவர்களுக்கென்றிருக்கிற சிறப்புப் பள்ளிகளில்தான் படிக்கவேண்டும்.
2 பார்வைமாற்றுத் திறன் ஆணும் பெண்ணும் தமக்குள் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
3 தமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் அறிவாற்றலோடும் போராட்டப் பண்போடும் அணுகவேண்டும்.
4 நான் இருக்கிறேன்; அதனால் உயிர்வாழ்கிறேன் என்ற இருத்தியலியல் கோட்பாட்டின் வழியே நமது சுகதுக்கங்களை அணுகி விரக்தியற்ற வாழ்க்கை வாழவேண்டும்.

முனைவர் முருகேசன் அவர்களுக்கு மனமுவந்த வாழ்த்துகள்.

நூலின் தகவல்கள் : 

நூல் : கூண்டிலேற்றமுடியாத குற்றவாளிகள்!
ஆசிரியர் : முனைவர் மு.முருகேசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 240
விலை : 240/
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/koodiletra-mudiyatha-kutravaligal/

நூல் அறிமுகம் எழுதியவர் :

தேனிசீருடையான்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *