144…..ஊரடங்கு…
நான்கு நாட்கள் கூட நம்மால் நகர்த்த முடியவில்லை…
இது புதிது.. நாம் முன்னர் இது போன்ற சூழலை பார்த்ததில்லை..
பழகியதில்லை…
இத்தனைக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல அனுமதி என மென்மையாகத் தான் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.
அதையே நம்மால் தாங்க முடியவில்லையே..
இவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை போர்சூழலில் கழித்தார்கள்…?
நீண்ட நெடிய ஊரடங்குகளால் கட்டுண்டு சிதைந்தார்கள்…?
விடுதலை போராட்டத்திற்காக தன்னையே இழத்தல் எனும் மாபெரும் தியாக வாழ்வினை வலிய ஏற்றார்கள்?என வாசகனை கலங்கச் செய்கிறது வெற்றிச்செல்வி எழுதிய “குப்பி” சிறுகதைகள்…
ஈழ விடுதலைப் போராளி வெற்றிச் செல்வி போர்களத்தில் தன்னுடன் வாழ்ந்தவர்களை இணைந்து களமாடியவர்களை குறிப்பாக பெண் போராளிகளின் நெஞ்சுரத்தையும் தியாகத்தையும் மையமாக கொண்டு எழுதியுள்ள 30 கதைகளும் வீரமும் தியாகமும் நிறைந்த போராளிகளை நம் மனக்கண் முன் நிறுத்துகின்றன…
காட்டுராணி,சிறிவாணி,ஆராதனா,கடலரசி,அருணா… என ஒப்பற்ற போராளிகளின் தியாகமும் போர் கள மரணத்தை ஒற்றை புலம்பலும் இன்றி இன்முகத்துடன் ஏற்கும் தீரமும்….
“எதிரியே என்றாலும் நீங்கள் சுடக்கூடாத மூன்று சந்தர்ப்பங்களை நினைவில் வைத்திருங்கள்..
1. எதிரி தாகத்தோடு தண்ணீர் அருந்தும் போது..
2 .அவன் பசியோடு உணவு உண்ணும் போது
3) அவன் இயற்கை உபாதை நீக்கும் போது…
என போர்களத்திலும் அறம் போதித்த தலைவனின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை,
அதனை மானசீகமாக ஏற்றுக் கொண்டு களமாடிய வீராதி வீரர்களை குப்பி கதைகள் மூலம் வரலாற்றில் வாழ செய்திருக்கிறார் வெற்றிச்செல்வி…
குப்பி என்பது தியாகத்தின் அடையாளம்…வீரத்தின் அடையாளம்,வீரர்களின் விருப்பத்தின் அடையாளம்…அந்த அடையாளத்தை ஒரு காலத்தின் பதிவாக்குவதே இத் தலைப்பின் நோக்கம் என்கிறார் வெற்றிச்செல்வி..
ஒரு கதை இப்படி முடிகிறது…
” கனவின் கனவு கனவல்ல…தமிழீழத்தை நாம் தொலைத்து விடவில்லை..
எல்லோரும் கொஞ்சிவிட்டு இறக்கிவிட்ட குழந்தையைப்போல் இங்கேயே இருக்கிறது..
இயற்கை பெருவெளியில் நீர்,நிலம்,காற்று அனைத்துமாக இதோ இங்கேயே இருக்கிறது..
ஆறடித்துச் சென்றுவிட்டதாய் அழுதோர்,அஞ்சினோர்,தேடியோர் அனைவரையும் நகைத்தபடி அந்த பசிய நிலம்,இதோ இங்கேயே இருக்கிறது”
உண்மை தான்…
வாசித்து முடிக்கையில் அந்த பசிய நிலம் என்னைப் பார்த்தும் நகைப்பதை உணர முடிந்தது…
– மா. விஜய பாஸ்கர்