திலீப்குமாரின் பூர்வீகம் குஜராத். வறட்சியான ஹச் பகுதியில் வாழ்ந்த இவரது முன்னோர்கள், பிழைப்புத் தேடி அங்கிருந்து புறப்பட்டு கேரளா– காலிகட் பகுதியிலும் பின்னர் அங்கிருந்து தமிழ் நாட்டிலும் குடிபெயர்ந்திருக்கிறார்கள். அப்படி கோவையில் குடி பெயர்ந்த சில நூறு குஜராத்தி குடும்பங்களில் இவரின் குடும்பமும் ஒன்று. இவர் நாலாவது தலைமுறை. பிறந்தது, படித்தது, வேலை செய்தது, கதை எழுதத் தொடங்கியது எல்லாம் கோவையில்தான்.
பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வனுபவங்களை இவரது கதைகள் பேசுகின்றன. வாழ்வின் துயரங்களை மென்மையான குரலில் பக்குவப்பட்ட தொனியில், மெல்லிய நகைச்சுவையோடு, எதையும் மேன்மைப் படுத்தாமல், அவர்களின் சகல குறைபாடுகளோடும் எழுதிக் கொண்டிருப்பவர்.
ஒரு படைப்பிலக்கியவாதியாக நன்கு அறியப்பட்ட பின், 1979ல் சென்னைக்கு வந்து ‘க்ரியா’ பதிப்பகத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றி, அதன்பின் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலில் திலீப்குமார் தன் பெயரிலேயே ஒரு புத்தக விற்பனை மையத்தைத் தொடங்கி, நல்ல தமிழ் நூல்களை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார். 1985ல் ‘மூங்கில் குருத்து’, 2000ல் ‘கடவு’ ஆகிய இரு சிறுகதை நூல்கள் வெளிவந்துள்ளன.
இவையன்றி ‘மௌனியுடன் கொஞ்ச நேரம்’ எனும் ஆய்வு நூலும் எழுதியுள்ளார். கதா அறக்கட்டளை மூலம் கன்னட, வங்க மொழிச் சிறுகதைகளை தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கும் திட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ்ச்சிறுகதை தொகுதியான‘A Place to Live’ (Penguin, 2004) நூலின் தொகுப்பாளர். 2006ல் கலிபோர்னியா (பெர்க்லி) பல்கலைக் கழகத்தில் தற்கால தமிழ் இலக்கியம் குறித்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தியுள்ளார். 2001க்கான மத்திய அரசின் ‘பாஷா பாரதி’ விருதைப் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் மொழிபெயர்ப்புக்கு வழங்கப்படும் ‘க்ராஸ் வேர்டு’க்கான நடுவர் குழுவில் மூன்று முறை பணியாற்றியுள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள அவரது புத்தக விற்பனை மையத்தில் அவரைச் சந்தித்தேன்.
குஜராத்திகள் பொதுவாக, தங்களுடைய மொழி, பண்பாடு, வியாபாரம் என்கிற விசயங்களுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும் சூழலில், நீங்கள் எப்படி இவற்றையெல்லாம் கடந்து தமிழ் எழுத்துலகத்துக்குள்ளே நுழைந்தீர்கள்?
குஜராத்திகளிலும் மிகவும் ஏழ்மைபட்ட சில குடும்பங்கள் உண்டு. அதில் எங்கள் குடும்பமும் ஒன்று. நான் சின்னப் பையனாக இருக்கும்போதே, அப்பா இறந்துவிட்டார். அப்போது அவருக்கு முப்பத்தாறு வயது; அம்மாவுக்கு இருபத்துநாலு வயசுதான். அந்தக் காலத்தில் குஜராத்தி சமூகத்தில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. அம்மா, சின்ன வயதிலேயே விதவையாகி விட்டதால், மற்ற சுமங்கலிப் பெண்களோ, அவர்களின் வீட்டு ஆண்களோ எங்கள் வீட்டுக்கு அதிகம் வருவதுமில்லை; பழக்கம் வைத்துக்கொள்வதுமில்லை. இதனால், எங்கள் சமூகத்திலிருந்து எங்களுக்கு ஓர் ஒதுக்கம் ஏற்பட்டு, உள்ளூர் தமிழ் மக்களோடு பழகும் சூழல் ஏற்பட்டது. அத்துடன், கடுமையான வறுமையிலும் நாங்கள் சிக்கிக்கொண்டோம். அதனால், எனக்கு பதிமூணு வயசு இருக்கும்போதே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகும்படியான சூழல் உருவானது.
ஒரு ஜவுளிக் கடையில் பெருக்குவது, டீ வாங்கித் தருவது, பார்சல் கட்டுவது, பார்சல் ஆபீசுக்குப் போவது… இப்படியான வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். மாத சம்பளம் முப்பத்தைந்து ரூபாய். அந்தச் சூழலில் பொருளாதார ரீதியாக எங்களுக்குச் சமமான கீழ்த்தட்டுத் தமிழ் மக்களோடு ரொம்ப நெருங்கிப் பழகுற வாய்ப்பு எனக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. அதன் மூலமாக தமிழ்ச் சமூகத்தின் பெருவாரியான விசயங்களை உள்வாங்கிக் கொள்வதற்கான நல்லதொரு சூழல் அமைந்தது.
சின்ன வயதிலேயே படிக்கிற வாய்ப்பு இல்லாமல் போனதால, என் எதிர்கால வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ என்கிற பயமும் எனக்குள் இருந்துச்சு. ஜவுளிக் கடைக்குள்ளேயே கிடந்து வாழ்க்கையை அழிச்சிக்காம என் வாழ்க்கையை வளப்படுத்திக்கணும்; சமூகத்துக்கும் எனக்குமான தொடர்பை இன்னும் வலுப்படுத்திக்கணும் என்கிற தகிப்பும் இருந்தது. ஆனால், அப்போது எனக்குத் தமிழ், ஆங்கிலம் ரெண்டுமே சரியாகத் தெரியாது. அதனால், மொழியை வளப்படுத்த நினைத்தேன். அதற்காக பழைய பேப்பர் கடையில் தமிழ், ஆங்கில பத்திரிகைகளை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது, ஆனந்த விகடனில் வரும் ஜெயகாந்தனின் கதைகள் என்னை மிகவும் பாதித்தன. மற்றவர்களின் கதைகளிலிருந்து ஜெயகாந்தன் கதைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். அவரின் கதைகளில் சமூகத்தின் மீதான ஒரு கோபம் வெளிப்படும். என்னைப் போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அவர் சொன்னார். அவர் கதைகளை தொடர்ந்து வாசிக்கும்போது, இந்த மாதிரியான அனுபவங்கள் நமக்கும்தானே இருக்கு. நாம ஏன் அந்த அனுபவங்களை கதைகளாக எழுதக்கூடாது என்கிற ஒரு குருட்டுத் தைரியம் எனக்கு உண்டாச்சு. இப்படியாகத்தான் நான் எழுத்துலகத்துக்குள்ளே நுழைந்தேன்.
‘ஆனந்த விகடன்’ இதழில் ஜெயகாந்தன் கதைகளைப் படித்து அந்த பாதிப்பில்தான் கதை எழுதத் தொடங்கியதாக சொல்கிறீர்கள். ஆனால், உங்களுடைய எந்தக் கதையும் ‘ஆனந்த விகடன்’ மாதிரியான பத்திரிகைகளில் வந்ததாகத் தெரியவில்லை. நீங்கள், சிறுபத்திரிகைச் சூழலில் இயங்கக் கூடியவராக இருக்கீங்க. இந்த மாற்றம் எப்படி..?
நான் சிறுபத்திரிகைச் சூழலுக்குள்ளே வந்ததுக்கும் ஜெயகாந்தன்தான் காரணம். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ‘ஞானரதம்’ என்றொரு சிறுபத்திரிகை அப்போது வெளிவந்து கொண்டிருந்தது. அதை வாங்கிப் படித்தேன். அந்தப் பத்திரிகையில் புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி… இவர்களைப் பற்றியெல்லாம் குறிப்புகள் இருந்தன. அதன் பிறகு. அவங்களுடைய புத்தகங்களையெல்லாம் தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.
நான் கதை எழுதத் தொடங்கியபோது என் முதல் கதையை ‘ஞானரதம்’ இதழுக்குத்தான் அனுப்பினேன். ஆனால், அப்போது சித்ரபாரதி அந்தப் பத்திரிகையில் ஆசிரியராகி விட்டார். அவர் அந்தக் கதையை வெளியிட்டார். பிறகு கணையாழி இதழில் எனது ‘வம்பு’ கதை பிரசுரமானது. அசோகமித்திரன் அப்போது கணையாழி தயாரிக்கும் பொறுப்பில் இருந்தார். அதன் பிறகு ‘தீர்வு’ கதையை எழுதினேன். அதுவும் கணையாழியில்தான் வெளியானது. அந்தக் கதையை, அந்த ஆண்டின் சிறந்த கதையாக ‘இலக்கியச் சிந்தனை’யில் தேர்ந்தெடுத்து பரிசு கொடுத்தார்கள். அதன் மூலமாகத்தான் கோவை ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்துகிட்டிருந்த எனக்கு தமிழ் இலக்கிய உலகத்துக்குள்ளே ஒரு பரவலான அறிமுகம் கிடைத்தது.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லலாம். எனக்கு தமிழில் வெளிவருகிற பெரிய பத்திரிகைகளில் எழுத என்றைக்குமே ஆர்வம் இருந்ததில்லை. ஏன்னா, பெரும்பாலான பெரிய பத்திரிகைகள், தமிழர்களை அறிவு ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் மிகவும் சிறுமைப்படுத்துகின்றன.
‘ஜொள்ளு சிறப்பிதழ்’ வெளியிடும் ஒரு பத்திரிகையில் இலக்கியத் தரமான ஒரு நல்ல கதை வருகிறது என்பது, காட்டுத்தீயில் ஒரு சின்ன டம்ளர் தண்ணீரை ஊற்றுகிற மாதிரிதான். சில எழுத்தாளர்கள் சின்ன டம்ளர்களில் தண்ணீரை ஊத்துகிற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெற்றியடைய வேண்டும்.
உங்களுடைய சொந்த அனுபவங்களைத்தான் நீங்கள் கதைகளாக எழுதுவதாகத் தெரிகிறது. தன் வரலாறு சொல்வது போல பல கதைகளை எழுதியிருக்கிறீர்க்ள. சில கதைகளில் ‘நான்’ போட்டு நேரடியாகவே எழுதியிருக்கிறீர்கள். ‘தீர்வு’ கதையில் ‘திலீப்’னு உங்கள் பெயரையே வைத்திருக்கிறீர்கள்… அதேபோல, ‘ஏகாம்பேஸ்வரம் அக்ரஹாரம் 25ஆம் எண் வீடு’ பல கதைகளில் இடம்பெற்றிருக்கிறது…
என்னுடைய கதைகள் அனைத்தும் உண்மையானவையே. என் அனுபவங்கள், என்னைச் சார்ந்தவர்களின் அனுபவங்கள் இவற்றைத்தான் நான் கதைகளாக எழுதியிருக்கிறேன். நான் அதிகம் கற்பனை கலப்பதில்லை. எனது ‘கண்ணாடி’ கதைகூட வேறு ஒரு சமூக வாழ்க்கையைச் சொன்னாலும், அதுவும் உண்மைதான்.
போலீஸ் என்கவுண்டரை மையமாக வைத்து ‘தடம்’ என்றொரு கதை எழுதியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?
சமூகத்தில் மாற்றத்தை விரும்புகிற ஒருவரை போலீஸ்காரர்கள் எப்படி அநியாயமாக கொலைப் செய்கிறார்கள் என்பதைச் சொல்கிற கதைதான் அது. தோழர் வள்ளுவன் – அவரோடு நான் பழகியிருக்கேன். அவருடைய அனுபவங்கள், எஸ்.வி.ராஜதுரை மாதிரியான நண்பர்கள் மூலமாக கிடைத்த விசயங்கள் இவையெல்லாம் சேர்ந்துதான் அந்தக் கதை உருவானது. அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி. காவல்துறை ரொம்ப அட்டூழியம் பண்ணியது. அந்தப் பாதிப்பில்தான் எழுதினேன். இந்தக் கதைக்காக தேவாரம் மூலமாக எனக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் எனச் சிலர் பயமுறுத்தினார்கள்.
‘கடிதம்’ மிகமுக்கியமான கதை. அதற்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு கிடைத்தாகச் சொன்னீர்கள். சினிமாவாகவும் வந்திருக்கிறது. உண்மையில், அந்தக் கடிதத்தை எழுதியது நீங்கள்தானா?
நான்தான். அந்தக் கடிதத்தில் இருக்கிற விசயங்களும் பெரும்பாலும் உண்மையானதுதான். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை 25 வருடங்களுக்குப் பிறகு கதையாக எழுதினேன். அந்தக் கதையில் சாவின் அபத்தத்தைச் சொல்ல நினைத்தேன். உடம்பெல்லாம் சீக்குப் பிடித்து ஒருவர் இருக்கிறார். அவர் செத்துவிடுவர் என்று எல்லாரும் நெனச்சிகிட்டிருக்கோம். அவர் சாகவே இல்லை. ஆனால், அவருக்கு உதவி செய்துகொண்டு நல்ல ஆரோக்கியமாக இருக்கிற ஒருவர் திடீர்னு செத்துவிடுகிறார். அந்த இருவருமே எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள்தான். இந்தக் கதையில், “அவர் சாவதற்கு முன் என்ன செய்தார்?’’ என்றொரு கேள்வி வருகிறது. “ஒரு கடிதத்தைப் படித்தார்’’ என்று சொல்கிறார்கள். அப்படியானால், அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?’’ என எல்லாரும் அந்தக் கடிதத்தை வாங்கிப் படிக்கிறார்கள். அப்போது அந்தக் கடிதம் பெரிய விசயமாகிறது. அந்தக் கதையில் வருகிற இருவரும் முக்கியம் கிடையாது; நான் எழுதிக் கொடுத்த கடிதம்தான் முக்கியம் என்றாகிவிடுகிறது. அதுதான் ‘கடிதம்’ கதை.
‘ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்’ கதையில் வருகிற தோழர் கே. யார்?
எழுத்தாளர் ஜி.நாகராஜன். அவரின் எழுத்தோடு எனக்கு ரொம்ப ஈடுபாடு உண்டு. ‘நாளை மற்றொரு நாளே’ படித்துவிட்டு அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அவர் யாருக்குமே அடி பணியாத, எதைப் பற்றியுமே கவலைப்படாத தனிப்பிறவி என்கிற மாதிரியான ஒரு பிம்பத்தை தமிழ் இலக்கிய உலகில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். உண்மை அப்படியில்லை. அவர் நம் எல்லோரையும் போல ரொம்ப எளிமையானவர்தான். அந்தக் கதையில் வருவதுபோல உண்மையிலேயே அவர் என்னை மிரட்டினார்; கெட்ட வார்த்தைகளால் திட்டினார்; கதறி அழுதார். தன் வாழ்க்கையைத் தானே சின்னாபின்னமாக்கிக் கொண்டதாக அவருக்குள்ளே ஓர் உணர்வு வந்துவிட்டது. தான் செய்வது எல்லாமே தப்புதான். ஆனாலும் அதிலிருந்து மீள முடியலே என்கிற எண்ணம் அவருக்கு உண்டாகிவிட்டது. ஒரு கட்டத்தில், இயலாமையினாலே சட்டுன்னு கதறி அழறாரு. சில விருப்பு வெறுப்புகளும் சில பிடிவாதங்களும் கொண்ட ஒரு குழப்பமான மனிதராகத்தான் அவர் இருந்தார்.
மதுரையில் இவர் என்னமோ சொன்னார் என்று யாரோ ஒருத்தர் இவரை அடித்திருக்கிறார். ஜி.நாகராஜன் மாதிரியான ஒரு மனிதரை – கலைஞனை ஒருத்தர் அடித்தால், அது எவ்வளவு கேவலமானதாக, துக்கம் தரக்கூடியதாக இருக்குமென்பதை அந்தக் கதையைப் படித்தால் உணர முடியும். ஒரு குழந்தையை அடித்த குற்ற உணர்வுதான் மிஞ்சும்.
உங்களைப் போலவே, பிரபஞ்சனுக்கும் ஜி.நாகராஜனோடு ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அவரும் அதை ஒரு சிறு கதையா எழுதியிருக்கிறார். ‘ஒரு நாள்’ என்று நினைக்கிறேன்…
பல எழுத்தாளர்களுக்கு ஜி.நாகராஜனோடு பலவிதமான அனுபவங்கள் உண்டு. பிரபஞ்சன், அசோகமித்திரன், நான் மூவரும்தான் அந்த அனுபவங்களை கதைகளாக எழுதியிருக்கிறோம்.
கோவைக் குண்டுவெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ‘ஒரு குமாஸ்தாவின் கதை’யை எழுதினீர்கள். அந்த அனுபவம்…?
அந்தக் கதையில் வரும் இஸ்லாமியர், கோவையில் நான் வேலை செய்த ஜவுளிக் கடையில் என்னோடு வேலை செய்தவர்தான். ரொம்ப எளிமையான மனிதர். அவர் வீட்டில் நடக்கும் விசயங்களைத்தான் அந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன். அவர் கடையில் உட்கார்ந்துகொண்டு மனைவிக்குச் சுவாரஸ்யமாக கடிதம் எழுதுவதைப் பார்த்தால், எங்களுக்கு ரொம்ப சிரிப்பாக இருக்கும். அவர் எவ்வளவோ நெருக்கடியான சூழலில் வாழ்ந்தவர். என்றாலும், எப்போதும் சிரித்துக்கொண்டே சுவாரஸ்யமாக எல்லாருடனும் பழகுவார். அந்தக் கதையில் வருவதுபோல மதவெறியர்களால் அவரின் மரணம் நிகழவில்லை. என்றாலும், அப்படி நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது என்பதால்தான் அந்தக் கதையை எழுதினேன்.
அதில், ஒரு இஸ்லாமியரைப் பற்றி நான் சொல்லியிருந்தாலும் அது ஒரு சாமான்ய இந்துவுக்கும் பொருந்தும். சமூகத்தில், நல்ல இந்துவும் இருக்கிறார்கள்; நல்ல முஸ்லிமும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் குரலற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலைத்தான் எழுத்தாளர்கள் ஒலிக்க வேண்டும். அப்படியாகத்தான் என் கதைகள் இருக்கின்றன.
உங்கள் கதைகளில் பெரும்பாலும் முதியவர்களின் – குறிப்பாக, பாட்டிகளின் வாழ்க்கையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதேபோல, மரணம் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள்… ஏன்?
வயதானவர்களோடு அதிகமாக பழகியதால் ஏற்பட்ட பாதிப்பு ஒரு முக்கிய காரணம் என்றாலும், என் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.
எனக்கு 23 வயசிருக்கும்போது காசநோய் வந்து இரத்தமாகக் கக்கினேன். என் தாத்தா காசநோயால்தான் செத்தார். அதனால் நானும் செத்துப்போயிடுவேனோ என்று பயம். வைத்தியத்துக்காக ரெண்டு மாசம் தினமும் காலையில் ஊசி போட்டுக் கொள்வதற்காக அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போவேன். அங்கே, காசநோயாளிகள் நீண்ட வரிசையில் நிற்பார்கள். அவர்களில் நிறைய பேர் நடுத்தர வயதைக் கடந்தவர்களாகவும், மரணத்தின் விளிம்பில் இருக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அந்தச் சூழலில், அவர்களிடையே நடக்கிற உரையாடலும், அவர்களின் துயர அனுபவங்களும் எனக்குள்ளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தது, என்னுடைய குடும்பங்களில் பாட்டிகளுக்கு வயசான காலத்தில் ரொம்ப கஷ்டம் வந்திருக்கு.
என் அப்பாவின் அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. அவர் புற்றுநோய் வந்துதான் செத்துப் போனார். அவரின் மார்பை சர்ஜரி செய்து எடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். உள்ளுக்குள்ளே கட்டிக் கட்டியா அழுகிப் போயிருந்தது. இன்னொரு உறவுக்காரப் பாட்டி, அவருக்குக் கடைசி காலத்தில் யாருமே உதவிக்கு இல்லாமல், அநாதைப் பிணம் போல வீட்டுக்குள்ளேயே இறந்து கிடந்தாள். யாரோ எதேச்சையாக போனவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். இப்படி நான் சந்தித்த பெரும்பாலான சாவுகள் இயல்பான சாவாக – நாலு பேர் இருந்து நல்லது கெட்டது செய்யக்கூடிய சாவாக இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்ட சாவாகத்தான் இருந்தது. என் சில கதைகள் மரணம் பற்றியதாக இருந்தாலும் அதற்குள் “எல்லாருக்கும் நல்ல சாவு வரணும்’’ என்கிற என் எதிர்பார்ப்பை வைத்திருப்பேன்.
அடுத்தது, வயதானவர்களுக்கு ஏற்படுகிற தனிமை ரொம்ப கொடுமையானது. வயதானால், சமூகத்துக்கு அவர்கள் பயன்படாதவர்கள் என்பதுபோல சொந்தக்காரர்கள் மட்டுமல்ல, உலகமே ஏதோ ஒரு வகையில் அவர்களை ஒதுக்கி விடுகிறது. இளமையில் ஆளுமை மிக்கவர்களாக இருந்தவர்களைக்கூட வயதானால் உபயோகம் இல்லாதவர்களாக ஆக்கிவிடுகிறோம்.
‘கடிதம்’ கதையில் வருகிற தாத்தாக்கள்கூட சின்ன வயசில் ரொம்ப ஆளுமை மிக்கவர்களாக இருந்தவர்கள்தான். ஆனால், வயதான பிறகு அவர்கள் என்ன மாதிரி ஆனார்கள்! இந்த தாத்தாக்களை மையமாக வைத்து சமீபத்திலே ‘ஆசை தோசை’ன்னு ஒரு கதை எழுதினேன். அதில், இந்த ரெண்டு தாத்தாக்களும் தோசை சாப்பிடுவதற்காக ஓட்டலுக்குப் போவார்கள். இடையில், ஒருத்தன் இவர்களைத் திட்டிவிடுவான். இருவரும் குழந்தைகளைப் போல கோபித்துக் கொண்டு, சாப்பிடாமல் திரும்பி வந்து விடுவார்கள். இதுதான் அந்தக் கதை.
ஏன் நிறைய பாட்டிகள் வருகிறார்கள் என்றால், சின்ன வயதிலிருந்தே நான் பாட்டிகளிடம் நெருங்கிப் பழகியிருக்கிறேன். ‘மூங்கில் குருத்து’ கதைகூட என் இளம் வயது அனுபவம்தான் என்றாலும், அதிலேயும் ஒரு பாட்டி வருவார். அந்தப் பாட்டியைப் பற்றியும் கதை எழுதலாமென இருக்கிறேன்.
யாராவது என்னிடம் ஒரு காதல் கதை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டால், என்னால் முடியாது. முதியவர்கள், பாட்டிகள் பற்றிய கதைகளென்றால், உடனே எழுதி கொடுத்து விடுவேன்.
‘கடவு’ கதையில் பாலியல் விசயங்கள் ரொம்ப தூக்கலாக இருக்கிறது. ‘நிலை’ போன்ற வேறு சில கதைகளிலும் போகிற போக்கில் பாலியல் விசயங்களைத் தொட்டிருக்கிறீர்கள். இது இயல்பாக வெளிப்பட்டதா? அல்லது வலிந்து கூறப்பட்டவையா?
பாலியல் விசயங்களை எந்தக் கதையிலும் வலிந்து நான் சொன்னதில்லை ‘கடவு’ கதையில்கூட அந்தப் பாட்டி அப்படித்தான் இருந்தாள். கங்குபாட்டி, 13 வயதில் கல்யாணமாகி, 15 வயதில் புஷ்பவதியாகி, 22 வயதுக்குள்ளே 6 குழந்தைகளைப் பெற்று, அந்த 6 குழந்தைகளையும் வரிசையாகப் பறிகொடுத்து, 27 வயதில் விதவையாகி, மொட்டையடிக்கப்பட்டு, பின் கடுமையான பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி, யாருடனும் பேச்சற்று முடங்கிப் போகிற அவள் 70 வயதிற்குப் பிறகு பேசத் தொடங்குகிறாள். அப்போது அவள் பேசிய விசயங்களில் இவையும் இருந்தன. உடல் சார்ந்த எந்த ஒழுக்கத்தையும் அவள் அங்கீகரிக்கவில்லை. அதைத்தான் அந்தக் கதையிலே சொல்லி இருக்கிறேன்.
‘நிலை’ கதையில், சமூகத்தை நுட்பமாகப் பார்க்கிற ஒருவனின் நிலை, ஒருவேளை சோத்துக்கே கஷ்டப்படுவதாகத்தான் இருக்கிறது என்பதைச் சொல்வதற்காக எழுதப்பட்ட என் ஆரம்ப கால கதை அது. அதில் வருகிற கனவு உண்மையான கனவுதான். அதை என்னுடைய கனவிலிருந்துதான் எடுத்தேன். அந்தக் கனவைக்கூட செக்ஸ் என்பதற்காக சேர்க்கவில்லை. அதில் ஒருவிதமான வன்முறை இருக்கு. இப்படியான வன்முறை என்னுடைய எல்லா கதைகளிலும் ஏதாவது ஓர் இடத்திலே தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும். அது உடல் ரீதியானதாகவும் இருக்கலாம்; மனரீதியானதாகவும் இருக்கலாம். சின்ன வயசிலே அந்த மாதிரியான வன்முறைகளை நான் நிறைய அனுபவத்திருக்கிறேன். அதேநேரம், நாம் பாலியல் விசயங்களையும் பேசித்தான் ஆகணும்.
உங்கள் சொந்த வாழ்க்கையிலே குறிப்பாக இளம் வயதிலே நிறைய சமூகப் பிரச்னைகளை சந்தித்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்களை தடம், கண்ணாடி, ஒரு குமாஸ்தாவின் கதை இப்படி ஒரு சில கதைகளை எழுதியிருந்தாலும், சுதந்திரமாக எழுதுவதற்கான சூழல் உங்களுக்கு இல்லையோ என்று தோன்றுகிறது. ஏதாவது மனத்தடைகள் இருக்கிறதா?
நிறைய இருக்கு. உதாரணமாக, நான் ஜவுளிக்கடையில் வேலை செய்யும்போது என்னோடு கடையைப் பெருக்குகிற இன்னொரு பையன் இருந்தான். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எல்லா வேலைகளையும் செய்தாகணும். அவன் ஒரு செருப்புத் தைக்கிற தொழிலாளியின் மகன். நான் அவனோடு நெருங்கிப் பழகுவது மற்ற சாதிக்காரங்களுக்குப் பிடிக்கவில்லை. ஒருமுறை நான் அவனை தொட்டுப் பேசினேன் என்பதற்காக என் கன்னத்தில் ஓங்கி அரைந்தார்கள். என்ன? ஏது? என்று புரியாமல் நான் அழுதிருக்கிறேன். இதைக் கதையாக எழுதலாமென்றால், அடித்த ஆளின் சாதியைக் குறிப்பிட்டு எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதினால், அந்த சாதிக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள். இந்த மாதிரி கதையை ஒரு தலித் எழுதினால் ஏற்றுக்கொள்வார்கள். நான் எழுதினால் சண்டைக்கு வருவார்கள். அப்படி பல அனுபவங்கள் எனக்கு நடந்திருக்கிறது.
‘நிகழ மறுத்த அற்புதம்’ என்றொரு கதை. அந்தக் கதையை ஒரு பெரிய விமர்சகர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) “கிறிஸ்தவர்களுக்கு எதிரான கதை’’ என்று சொல்லியிருந்தார். திருமதி ஜேம்ஸ் என்று பெயர் வைத்திருந்தேன் என்பதற்காக அப்படி சொல்லியிருந்தார். இப்படியும் சில அனுபவங்கள் இருக்கு.
நான் கணையாழியில் முதல் முதலாக எழுதிய ‘வம்பு’ கதையில்கூட, ஒரு துப்புறவு தொழிலாளியை ஒரு மேல்சாதிக்காரர் செருப்பால் அடிக்கிற மாதிரி மையமாக ஒரு பகுதி வரும். ஆனால், அது பிராமண உரையாடலில் எழுதப்பட்டிருக்கும். அது ரொம்ப நல்ல கதை என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், நான் அதை இப்போது என் தொகுப்பில் சேர்க்கவில்லை. இன்றைய சூழ்நிலையில், ‘நான்’ என் அனுபவங்களை எழுதினால், எல்லாமே Politically incorrectஆ போயிடும். அதனால, குஜராத்தி கிழவிங்களை பத்தி எழுதுறதுதான் திலீப்குமாருக்கும் நல்லது; தமிழுக்கும் நல்லது!
புதிய புத்தகம் பேசுது,
சந்திப்பு : சூரியசந்திரன்