குரங்கு மனம் வேண்டும் – ஜி.எஸ்.எஸ்
நூலின் தகவல்கள் :
நூல் : குரங்கு மனம் வேண்டும்
தன்னம்பிக்கைக் கட்டுரைகள்
ஆசிரியர் : ஜி எஸ் எஸ்
வெளியீடு : புதிய தலைமுறை
முதல் பதிப்பு : டிசம்பர் 2016
பக்கங்கள் : 112
விலை : 60
தொடர்புக்கு : 044-45 96 9501
குடும்ப உறவுகள், அலுவலக சகாக்கள், நட்பு வட்டம் என நடைமுறை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் தேவையான விஷயங்களை, படிப்பினைகளை குரங்குகளின் வாழ்க்கை முறையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் குரங்குகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவற்றின் வாழ்வியல் நடைமுறைகளை மனிதர்களின் வாழ்வியல் நடைமுறையோடு ஒப்பிட்டு நமக்குள் தன்னம்பிக்கையை விதைக்கும் கட்டுரைகள் இந்நூலில் மலர்ந்துள்ளன.
வாழ்வில் வெற்றி பெற புது ரத்தப் பாய்ச்சலோடு புறப்பட, சவால்களை எதிர்கொள்ள, சாதித்த மனிதர்களிடமிருந்து மட்டும்தான் கற்றுக் கொள்ள முடியும் என்பதில்லை. சாதாரணமாக நாம் நினைக்கும் குரங்கிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
வாழ்வில் வெற்றி பெற முக்கியமாக நாம் கருத வேண்டியது குறிக்கோள். அந்த குறிக்கோளை அடைவதற்கான வழிகள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தல். அந்த வழிகளை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணுதல். அன்றாட வாழ்வில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களுடன் எவ்விதம் இணக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் நமக்கான சூழ்நிலையை நாம் எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பது பற்றியும் கட்டுரை தொகுப்பு விரிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.
ஒவ்வொரு தலைப்பும் தெளிவான பார்வையை நம்முள் விதைக்கிறது. மாற்றத்திற்கு அஞ்சாதே
புதுமைகளைப் புகுத்துவோம்
சுயநலம் தவறா
மௌனம் பேசியதே
முன்னெச்சரிக்கை அவசியம்
என சுமார் 25 தலைப்புகளான கட்டுரைகள் நம் அன்றாட நடைமுறைகளில் இருந்து நாம் எவ்வாறு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அத்தகு பாடம் நம் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதற்கு நமக்கு எவ்விதம் உதவி செய்கிறது என்பதையும் குரங்குகளின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
இதில் குறிக்கப்பட்டுள்ள சில கருத்துகள்:
ஒன்றை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வது அரிய கலை.மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை வடிவமைத்து கொள்வது என்பது மேலும் சிறப்பு. . இந்த இரண்டையும் புரிந்து கொள்ளாதவர்கள்தான் மன அமைதியை இழக்கிறார்கள். சுய பச்சாதாபத்தில் தவிக்கிறார்கள்.
புதிய முயற்சிகளில் ஈடுபட குரங்குகள் தயங்குவதில்லை. மறைந்துள்ளவற்றை அறிந்து கொள்வதில் குரங்குகளுக்கு பேரார்வம். புதியவற்றுக்கு மனம் தயார் நிலையில் இருக்கும் போது வாழ்வில் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் உண்டாகும்.
சுயநலமும் பொதுநலமும் இணைந்ததாக வாழ்க்கை இருப்பதில் தவறு இல்லை. வாழ்வில் சுயநலம் கலந்த பொதுநலம் நடைமுறைக்கு அதிகம் ஏற்றது. தாராளமாக அனுமதிக்கத்தக்கது.
எங்கே பேசுவது என்பதை விட முக்கியம் எங்கே பேசாமல் இருப்பது அறிந்து கொள்வது.
புன்னகையும் மௌனமும் தான் உலகின் இரண்டு மாபெரும் சக்திகள். புன்னகை என்பது பல பிரச்சனைகளைத் தீர்க்கும். மௌனம் என்பது பல பிரச்சனைகளைத் தவிர்க்கும்.
யோசித்துப் பார்த்தால் சில குடும்பங்கள் பிரியவும் நட்புகள் துண்டிக்கப்படவும் ஒரு சில வாக்கியங்களே காரணமாக அமைந்தது விளங்கும்.
விதைப்பதும் செடி வளர்வதும் ஒலியை வெளிப்படுத்துவதில்லை. மரம் விழுதலில்தான் ஒலி காதைப் பிளக்கும். ஆக்கப்பூர்வமான விஷயங்கள் அமைதியில் பிறக்கின்றன. அழிவு தான் அதிக ஒலியைக் கிளப்பும்.
ஒரே ஒரு தனித்தன்மையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கூட மாபெரும் வெற்றியை ஈட்ட முடியும்.
போட்டி என்பது நாம் எதிர்பாராத கோணங்களில் இருந்து வரலாம் என்பதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
போட்டிகளைத் தாண்டி வர சிறிய, வித்தியாசமான சிந்தனைகள் கூட உதவும். போட்டியை உணராது இருப்பதுதான் பல சமயங்களில் பெரிய சரிவுக்கு வழிவகுக்கும்.
இருக்கும் திறமையை சரியான சந்தர்ப்பத்தில் வெளிச்சம் போட்டு காட்டுவது மிக அவசியம்.
பல இடங்களில் உங்கள் சிறப்புகள் கவனிக்கப்படாமல் போகலாம். இதன் காரணமாக உங்களுக்கு உரிய உயர்வுகள் கிடைக்காமலும் போகலாம். உங்கள் சிறப்புகளை எதிராளிக்கு நீங்கள் உணர்த்துவது மிக நல்லது.
பெரும்பாலான பிரச்சனைகள் நாம் எதிர்பார்க்கும்படி பிறர் நடந்து கொள்ளாத போதுதான் உண்டாகின்றன.
நாம் உயர்வான நடத்தையைப் பெற வேண்டும் என்றால் நான்கு படிகளை தாண்ட வேண்டும்
1.நம் தவறுகளை உணராத நிலை 2.தவறுகளை உணர்ந்தும் அதிலிருந்து மீளாத நிலை
3.தவறுகளை உணர்ந்து அவற்றை நீக்கிக் கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் நிலை
4.எந்த முயற்சியும் எடுக்காமலேயே செய்யும் செயல்கள் எல்லாம் தானாகவே திருத்தமாக அமையும் நிலை.இலக்கை அடைவதில் தன்னம்பிக்கை, தொடர் முயற்சி இரண்டும் வேண்டும்.
எளிய விதத்தில் இலக்கை அடைவதற்கான தீர்மானமும் பயிற்சியும் வேண்டும்.
கொஞ்சம் மாறுபட்ட சிந்தனை, கொஞ்சம் உள்ளுணர்வு, கொஞ்சம் சுறுசுறுப்பு ஆகியவை இணைவதால் இருப்பவற்றைக் கொண்டே நம் வாழ்வில் பெரும் மாறுதல்களை செய்து கொள்ள முடியும்.
நம்மைச் சுற்றி நாம் எழுப்பி கொள்ள வேண்டியது சுவர்கள் அல்ல; பாலங்கள். பிறருடன் நல்லுறவை வளர்ப்பதில் முக்கிய பங்கு வைப்பது பாலங்களின் வழியே பாராட்டு.
நாம் பிறருக்காக ஒன்றை அளிக்கும்போதும் தியாகம் செய்யும்போதும் அதை மனமாரச் செய்ய வேண்டும். நாம் எவ்வளவு அளிக்கிறோம் என்பதை விட எவ்வளவு அன்புடன் அதை அளிக்கிறோம் என்பது மேலும் முக்கியம்.
பிறருக்கு தீங்கு விளைவிக்காத யாரையும் ஆபத்துக்கு உட்படுத்தாத குறும்புகள் நம் வாழ்வில் இடம்பெறும் போது அதனால் பல சிக்கல்கள் குறைகின்றன.
இலக்குகளில் தெளிவு மற்றும் கவனம் சிதறாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.
பிறரின் எந்த ஆலோசனைகளையும் கேவலமாக நினைக்காமல் அதை பல்வேறு கோணத்தில் பரிசீலித்து உரிய விதத்தில் மாற்றங்கள் செய்தால் அற்புதங்களை உருவாக்க முடியும்.
இதுவே அதீத புத்திசாலித்தனத்தின் அளவீடு.
நீங்கள் ஒன்றை மறுக்கும்போது அந்த மறுப்பை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். சரியான முறையில் வெளிப்படுத்தினால் அதனால் எந்தவித விளைவுகள் ஏற்பட்டு விடாது.
சவால்களுக்கு நடுவே வாழ்ந்து அவற்றை எதிர்கொள்வது கடினமானதுதான். ஆனால் அது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும். உலகை மேலும் சிறப்பாக எதிர்கொள்ளச் செய்யும்.
குரங்கு மனம் வேண்டும் என்ற இந்த கட்டுரை நூல் வழியாக நம்முள் தன்னம்பிக்கையை விதைப்பதில் ஆசிரியரின் உழைப்பு தெரிகிறது.
எழுதியவர் :
இளையவன் சிவா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.