வாசகனின் படிக்கும் ஆர்வம் கொஞ்சமும் தளர்வடையாமல் கைகோர்த்து இறுதிப்பக்கம் வரை கூட்டிச்செல்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. இம் முக்கியத்தில் கைதேர்ந்த நம் ஆசிரியர் சிறப்பாகவே கதை நகர்வை அமைத்துள்ளமை சிறப்பு…
கதாபாத்திரங்களை மட்டுமே கதைக்குள் பேசவிட்டு…ஆசிரியர் ஓர் ஓரமாய் வாசகனோடு வாசகனாய் பயணிக்கிறார் கதையிலும்…பல்வேறு களங்கள்…பல்வேறு விதமாய் ஏதோ ஒன்றை வாசகனுக்கு உணர்த்தி செல்வதில் எந்த ஒரு கதையிலும் தொய்வில்லை…என்றே கூறலாம்…
கலையுணர்வில் ஏற்ற இறக்கம் விரும்பாத நிலையில் பறை இசைக்கோர் தாழ்வில்லை இனி பறையிசை மேலோங்க பார்க்கப்படும் என்பதை இனிப் பறை எனும் கதையில் அழகாய் பறைசாற்றியுள்ளார்.
உயிரில்லா பொம்மையும் உயிர் பெற்றே கதாபாத்திர அந்தஸ்து பெறுவதில் எதிர்காலமும் அதன் கைகளில் கொடுக்கப்பட்டு பொம்மை காப்பாற்றும் என்றே கதைநகர்த்துகிறார். மதவேறுபாட்டில் உள்ள சமூகப்பிரச்சனைகளை மன்னிப்பு எனும் கதையில் அனைத்து மதமும் சமம் என்றே ஒற்றுமையை உணர்த்துகிறது…
ஐந்தறிவு ஜீவனுக்கும் உள்ள அன்பை மதம் கொண்ட யானையால் எதார்த்தமாக விளக்கினாலும் இறுதி முடிவில் பாகனும்…யானையும் இறந்த பின்னும் அன்பின் மனதால் இணைந்ததில் புதிய உத்தியே…
முடிவில் ஒரு துவக்கமாய் இப்படியும் சில மனிதர்கள் அன்பிற்காக…மனித மனோதத்துவத்தைப் பின்பற்றி வாழ்வதை அழகான உரையாடலில் மனதில் துவக்கத்தில் அமைந்துள்ளது. பிச்சைக்காரர்களுக்குள்ளும் தெளிவான மனம் உண்டு புத்தேள் மனிதர்களில் அவர்களும் ஒன்றே என்பதை புதிய சிந்தனையின் துவக்கமாகக் கடத்தி விடுகிறது…
இடுகாட்டிற்கு வரும் உடல் தானாக வர வேண்டும்…நாம் தூக்கிக் கொண்டு வரக்கூடாது என்ற ஒற்றை வரியில் தற்கொலை என்பதே தவறான எண்ணம் என்பதைச் சுடலை கதாபாத்திரம் சிறப்பான மொழிநடையில் விளக்கியுள்ளமை அனைவருக்கும் எட்டட்டும்…
அனைவரும் ஆடம்பர வாழ்வை விரும்புவது போல் ஆடம்பரமாய் சொல்லிக்கொள்ளும் ஒரு வார்த்தை டிப்ரஷன்…தலைப்பைப் பார்த்ததும் படிக்கத்தூண்டுவதாய் இருந்தாலும் கதை முடிவில் டிப்ரசன் தடுக்கும் முறையும் ஆசிரியர் சொல்லத் தவறவில்லை…
இழப்புகளால் பயந்து வாழும் பெரியவரின் உள்ளத்திற்குள் உள்ள மன ஓட்டங்களை டுபு டுபு என்ற புல்லட் மூலம் பெரியவரின் கதையைப் பயணிக்க வைக்கிறது…
வீட்டில் உள்ள பெரியவர்களை இழிவாகக் கிழவி என்று கூறினாலும் அதையும் அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும் விருப்பங்கள் உறவை விரும்பும் என்பதையும் மனதோடு உறவாட வைத்துள்ளார்…
பெண்குழந்தைகள் தானே என எண்ணி ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த தகப்பன் செய்யும் ஒவ்வாத செயலுக்கு விடையாய் அனைவரையும் சாகடித்து விடை கூறும் மங்கையாய் இருக்கும் மனைவி கதாபாத்திரம் கதை முடிந்த பின்னும் நம்மோடு பயணிக்கிறது…பதுமைகளாக…
விவசாய வாழ்வே சொர்க்கம்…சொந்த நிலத்தை விற்ற பின்னும்…அந்நிலத்தில் விவசாயம் செய்யத் துடிக்கும் பெரியவர்களின் வாழ்க்கையைக் குரங்கு பெடல் போட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றுள்ளமை சிறப்பு…
காலம் கடந்த வாழ்வில் எங்கெங்கு பயணித்த போதும் நியாயமான அன்பில் மீண்டும் வாழ்க்கை பயணப்படும் நியாயமாக…காதல் முடிந்த பின்னும் இனியும் காதலில் காதல் வாழ்ந்து கொண்டிருப்பதை வார்த்தைகளில் கடக்கிறார்… மனித நேயம் வாழ்ந்து கொண்டிருப்பதை ஓர் அழைப்பும்…ஆறாத காயங்களும் நேயமுடன் கதையோட்டத்தில் இடம்பெற்றுள்ளன…
பெண்கள் எதிர்பார்க்கும் வாழ்வை ஆண்கள் நிறைவேற்றி இனிமே இப்படித்தான் என்ற தலைப்பில் அழகாய் எதிர்காலம் நினைக்க வைக்கிறது… அன்பு நிறைந்தது உலகம்…அன்பால் உலகம் ஆளலாம் எனும் கருத்தை வலியுறுத்தியே ஆபியின் டைரியும்…அன்புக்கடனும் நம்மில் அன்பை சூளவைக்கிறது…
ஆண் என்ற அகம்பாவம்…பெண் நிலையைத் தாழ்வாக எண்ணியவர்களுக்கு ராக்காயி கதாபாத்திரம் மூலம் விடை தருவதில் பெண் தாழ்வும் இறந்து பட்டுக் கிடக்கிறது… வினைப்பயனில் வாழ்க்கை நகர்வு என்பதில் வேண்டுதல் ஒரு புறம்…வேண்டாம் எனத் தவிர்க்கும் நிலையும் வினையாலே தீர்மானிக்கப்பட்டுள்ளது…
குழந்தை வளர்ப்பில் ஹைஜுனிக் கற்றுத்தரும் நாம் அனுபவத்தில் உணவு எது சுத்தம் எதுனு கற்றுத்தர மறந்ததை நினைவூட்டி நகர்கிறார் ஆசிரியர்… இப்படிப் பல கதைகள்….பல தளங்களில் மாற்றங்கள் தேடிப் பல விதைகளை விதைத்துச் சென்றுள்ளார்… இவ்விதையின் முளைப்பு புத்தகம் படித்து முடித்த பின்னும் நம் மனதில் எண்ணங்களுக்கும்…கற்பனைகளுக்கும் விருந்தாகத் திருப்தி அளித்ததை உணர முடிகிறது…
புத்தகம் பெயர்: குரங்கு பெடல்
ஆசிரியர்: திரு.பா.சரவணகாந்த்
பக்கங்கள்:185
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

