சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 'குரங்கு பெடல்' | Kurangu pedal

” குரங்கு பெடல் ” திரைக்கு வரவிருக்கும் தமிழ்த்திரைப்படம்.

‘மதுபானக் கடை’ என்னும் தனது முதல் திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் தான் இந்தப் படத்தின் இயக்குநர். பெயர் கமலக்கண்ணன்.

இவரது சொந்த ஊர் ஈரோடு. கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் காட்சித் தொடர்பியல் பட்டம் பெற்றவர்.

ஊடகம் தொடர்பாக ‘மாண்டேஜ்’ என்னும் அமைப்பைத் தொடங்கி இதன் மூலம் கலைத் தாகமுடைய பல படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தவர்.

சினிமா என்னும் கலையை சக்திவாய்ந்த ஊடகமாக உணர்ந்த இவர் அதில் சாதிக்கவேண்டும் என்னும் வேட்கையோடு நீண்ட வருட ஓட்டத்திற்குப் பிறகு ‘வட்டம்’ என்னொரு படைப்பைக் கொடுத்தார்.

இப்போது ‘ குரங்கு பெடல் ‘ என்னும் மூன்றாவது படத்தின் மூலம் முத்திரைப் பதித்து பல விருதுகளைச் சூட இருக்கிறார்.

1980 களில் நடக்கும் கால வரிசைப் படமாக மிக அழகாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவரும் தங்களின் நேற்றைய பால்யகால நினைவுகளோடு பொருத்திப் பார்க்கும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அக்காலகட்டத்தில் கோடைக்கால விடுமுறை பொழுதுகளில் சைக்கிள் ஓட்டிப்பழகும் சிறார்கள் குறித்த கதைதான் இப்படத்தின் மைய கரு.

எழுத்தாளரும் இயக்குநருமான திரு.ராசி அழகப்பன் அவர்களின் “சைக்கிள்’ என்றும் சிறுகதையை அடிப்படையாகாக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சிபெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையிலான பாசப்பிணைப்பைச் சொல்லும் கதை இதுவாகும்.

குழந்தைகளின் உலகை, அவர்களது அழகான வெளியை மிக மிக நேர்த்தியாகவும் மண்மணம் குறையாமலும் அழகியலோடு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் திரு.சுமிபாஸ்கரன்.

ஜிப்ரான் அவர்களின் பாடல்களுக்கான இசை சிறார்களைத் திரையரங்கிற்குள் கொண்டாட வைக்கிறது. பின்னணி இசையில் உணர்வுகளைக் கிளர்த்தி 1980 களின் காலத்தை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.

இதற்கு திரைக்கதை உதவிபுரிந்து உரையாடல்களை எழுதி இருக்கும் அப்புபிரபாகர் கதைக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார்.

காளிவெங்கட் மற்றும் சிறார்கள் இதில் வாழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த தயாரிப்பாக நெஞ்சை நெகிழ வைக்கும்  படமாக வெளியாகிறது 'குரங்கு பெடல்'! - Puthiya Parvai TV

உள்ளதை உள்ளபடியே சொல்லும் கலையில் இயக்குநர் கமலக்கண்ணன் வென்றிருக்கிறார். பார்க்கும் ஒவ்வொருவரையும் அவரவர்களுடைய பால்ய காலத்திற்கு அழைத்துச் செல்லும் இவரது இயக்கம் பாராட்டைப்பெறுகிறது.

கோவாவில் நடைபெற்ற 53 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட தமிழ்ப்படம் என்ற முத்திரையைப் பெற்றது. மேலும் ‘ தங்க மயில்’ விருது பெறும் என்றும் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பள்ளி மாணவர்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை இப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் போர்ஸ்டர் கூட கலைநுட்பத்தோடு சிறார்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SK Production திரு.சிவகார்த்திகேயன் தயாரிப்பு வரிசையில் இந்த படம் பல விருதுகளை அள்ளிக்குவிக்கும். கோடைவிடுமுறையில் மாணவர்களின் அரங்கம் நிறைந்த காட்சிகளாக களம்காணும்.

நல்ல கலை அக்கலையோடு தொடர்புடைய அனைவரையும் ஜெயிக்க வைத்து அழகு பார்க்கும்.அப்படியான ஓர் உன்னத கலைதான் கமலக்கண்ணனின் ‘ குரங்குபெடல்’.

 

எழுதியவர் 

போ.மணிவண்ணன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *