*குரங்கும் மனிதனும்* குறுங்கதை – உதயசங்கர்

குரங்கும் மனிதனும் குறுங்கதை Kurangum Manithanum Short Story by Writer Udhaya Sankar (உதயசங்கர்). Book Day is Branch of Bharathi Puthakalayam.சீனாவின் வூகாங் கிராமத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் புதிதாக பெய்ஜிங்கிலிருந்து ஒரு மாணவன் வந்து சேர்ந்திருந்தான். அவன் அதுவரை குரங்குகளை நேரில் பார்த்ததில்லை. மிருகக்காட்சிச்சாலையில் வேலிச்சிறையில்  அடைபட்டிருந்த குரங்குகளை மட்டுமே பார்த்திருக்கிறான். ஆனால் கிராமத்தில் சர்வ சாதாரணமாக குரங்குகள் திரிந்தன. மரங்களிலும், சாலைகளிலும், வீடுகளிலும் ஏறியிறங்கி அலைந்து கொண்டிருந்தன. அங்கிருந்த மக்கள் யாரும் அவற்றைக் கண்டு பயப்படவோ, விரட்டவோ, செய்யவில்லை. குரங்குகளும் மனிதர்களுடன் சேர்ந்து வாழப்பழகிக் கொண்டதைப் போலவே இருந்தன. சீனத்தலைநகரிலிருந்து வந்திருந்த சாங்கிற்குப் பயமாக இருந்தது. அவன் குரங்குகளை விரோதமாகவே பார்த்தான். ஏதாவது ஒரு குரங்கு அவனருகில் வந்து விட்டால் அலறினான். அவனுடைய அலறலைக் கேட்டு குரங்கும் பயந்து போய் குதித்தோடி விடும். சாங்கிற்கு குரங்குகள் ஒரு பிரச்னையாகவே இருந்தன.

அவன் அவனுடைய அறிவியல் ஆசிரியரிடம்,

“ இப்படியே குரங்குகள் இங்கே இருந்தால் அவை மனிதர்களாக மாறிவிடுமே.. அப்புறம் நம்மையெல்லாம் விரட்டி விடுமே..

என்று வருத்தத்துடன் கேட்டான். அவனுடைய ஆசிரியர் அவனை ஆதரவுடன் பார்த்து,

“ சாங் உன்னுடைய கவலை நியாயமானது.. ஆனால் குரங்குகளால் அப்படி மாற முடியாது..

எப்படி அதை உறுதியாகச் சொல்கிறீர்கள்? “

பதில் பேசாமல் அவர் அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்த ஒரு வேப்பமரத்தடிக்கு அழைத்துச் சென்றார். கையோடு கொண்டு போன ஒரு வாழைப்பழத்தை அங்கிருந்த ஒரு குரங்கிடம் நீட்டினார். குரங்கு வாங்கிக் கொண்டு மரக்கிளையில் ஏறிவிட்டது. இப்போது ஆசிரியர் அந்தக் குரங்கிடம்,

“ அந்த வாழைப்பழத்தைத் திருப்பிக்கொடு.. நான் உனக்குக் கொய்யாப்பழம் தருகிறேன்..என்றார். அது திரும்பிக் கொண்டது.

“ அந்த வாழைப்பழத்தைத் திருப்பிக் கொடு.. நான் உனக்கு சாக்லேட் கேக் தருகிறேன்..

என்றார். அவரை ஏறிட்டு கூடப் பார்க்கவில்லை. இன்னொரு கிளைக்குத் தாவிவிட்டது.

“ நீ அந்த வாழைப்பழத்தைக் கொடுத்து விட்டால் கடவுளிடம் சொல்லி உன்னைச் சொர்க்கத்துக்கு அனுப்புவேன்..

என்றார். குரங்கு வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடத் தொடங்கியது. சாங்கிற்கு எதுவும் புரியவில்லை. இப்போது சாங்கைப் பார்த்துத் திரும்பிய ஆசிரியர்,

“ சாங்…உன் பையில் இருக்கும் வாழைப்பழத்தைக் கொடு.. நான் கடவுளிடம் சொல்லி உனக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்..என்றார். குருவின் சொல்லுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் சொன்னால் கடவுள் கேட்பாரல்லவா? சாங் உடனே தாமதிக்காமல் பழத்தை எடுத்து ஆசிரியர் கையில் கொடுத்தான்.

ஆசிரியர் சிரித்தார்.

“  குரங்குகள் ஒருபோதும் மனிதர்களாக மாறாது.. இப்போது புரிந்ததா? 

சாங் புரிந்த மாதிரி தலையாட்டினான்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.