நாவலாசிரியர் ஜீவாவின் தலைப்புக்கள் இப்படித்தான் புதியவர்களுக்கு அது பக்திகரமாக தெரியும். “துர்கா மாதா” “ஈஸ்வரன்கள்” இப்போது, ”குருதட்சணை”. ஆனால் அவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும் இப்பெயர்களின் ஆழம் எதுவென்று.
இந்த சமூகத்தில் நசுக்கப்படுகிற ஒவ்வொரு மக்களையும் குறித்து எழுதப்படாத ஓராயிரம் கதைகள் இருக்கின்றன. அதுவும் சமூகத்தில் சரிபாதி பெண்களைக் குறித்து எழுதுவதற்கு ஏராளம் இருக்கிறது. அதுதான் ஜீவாவின் களம்.
ஒரு பலகலைக் கழகத்தில் ஆய்வுத்துறை மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிற பேராசிரியர் ஒருவர், மாணவிகளை தனது வக்கிரத்திற்கு பலியாக்குவதையும் அதை எதிர்கொள்கிற டான்யா என்கிற மாணவியின் துணிவையும் மையமாகக் கொண்டதுதான் குருதட்சணை.
நாவல் வேதகால ரைகுவா எனும் ரிஷியின் கதையோடு தொடங்குகிறது. அந்த பதினைந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட தனி அத்தியாயம் கதைக்கு ஒரு அழகியலையும் புத்திசாலித் தனத்தையும் கொடுத்துவிடுகிறது. அடுத்து கதை நிகழ்காலத்திற்குள் பாய்கிறது; தேவையிலிருந்து முன்னும் பின்னுமாக படம் பிடித்துக் காட்டுகிறது; எதிர்பார்ப்புகளை உருவாகியபடியே தொய்வில்லாமல் நகர்கிறது.
ஒவ்வொருவரின் குணாதிசயங்களுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பம், சமூகம் அடிப்படையாக இருக்குமல்லவா, அதை இந்த கதை தெளிவாக சொல்கிறது. கதையின் முக்கியப் பாத்திரங்களான டான்யாவும் பேராசிரியர் இராஜாராமனும் குமரி மாவட்டப் பின்னணியிலானவர்கள். அந்த மாவட்டம் எதிர்கொண்ட ரௌடிகள், மதவெறி அரசியல்கள், சாதிகளுக்கிடையிலான வளர்ச்சியும் வீழ்ச்சியுமாக என ஒரு வரலாற்றுப் புதினமாக நாவல் மிளிர்கிறது.
பொதுவாக நாம், பெண்கள் மீதான வன்முறைகள் அல்லது ஆணாதிக்கக் கொடுமைகள் குறித்து நிறைய பேசுகிறோம். ஆனால், அந்த ஆணாதிக்க கொடுமைகளுக்குப் பின்னால் சமூகம் வைத்திருக்கும் வக்கிர அரசியல் குறித்த தெளிவில்லாமல்தான் இருக்கிறோம்.
இப்போதெல்லாம் படித்த, முன்னேறிய பெண்களிடம் கூட பெண்ணுரிமை என்பது பாலுறவு சுதந்திரம்தான் என்பதாக சுருங்கி, அதுவே ஆண்களுக்கு விருந்தாகிற நிலைக்கு போய் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை.
இந்த நிலையில்தான் ஜீவா கதையின் ஊடாக பெண்களை அறிவார்ந்த வகையில் பேசவும் சிந்திக்கவும் வைக்கிறார். டான்யா இராஜாராமனோடு விவாதிக்கிற ஒவ்வொரு இடமும் அற்புதம். ஆழமான கருத்துச் செறிவு.
“அதுசரி, பெண்களென்றால் ஆண்களுக்கான மறைமுக சம்பளம்னு கில்மா கத பேசுற உங்களுக்கு எதுக்கு சார் குடும்பம் பிற்போக்கு பத்தின கவலையெல்லாம்?… செக்ஸ உங்களுக்கான சம்பளமா, உங்க தகுதிக்கான கூலியா வெல வைக்கிறீங்களே, உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா சார்? செக்ஸுக்கெல்லாம் வெல வைக்க முடியாதுன்னு தெரியுமா? அது உங்க அறிவு, தகுதி, தெறம எல்லாத்தையும் விட உயர்ந்தது. மனசு நெறைஞ்சி உடல உருக்கி நிறைந்த காதலோடு அனுபவிக்குறது அது. அதை எப்டி சொன்னாலும் உங்களுக்கு புரியாது சார். ஏன்னா, உங்களுக்கு அதுன்னா என்னான்னே தெரியாது…” என்று டான்யா ராஜாராமனிடம் பேசுவதும்,
“இது பெண்களுக்கான சமூகப்பிரச்சனை மேம். அனுசரிச்சி போனாதான் சர்வைவல் ஆக முடியுங்குறது எழுதப்படாத விதியா எல்லா எடத்துலயும் இருக்குது. பல நேரத்துல இது பூதாகரமாகி வெளியுலகத்துக்கும் தெரியுது. எத்தனை முறை வெளிபட்டாலும் எவ்வளவு பூதாகரமா தெரிஞ்சாலும் அது இயல்பா எல்லா இடத்துலயும் தொடர்ந்துகிட்டேதான் இருக்குது மேம்… அப்படீன்னா சட்டத்தாலயும் சட்டத்த நடைமுறைப்படுத்துற அரசாங்கத்தாலயும் இது மறைமுகமா அங்கீகரிக்கப்பட்டிருக்குதுன்னுதான மேம் அர்த்தம்?”
என்று நீதிபதி முன்பு கேட்பதுவும் சும்மா சின்ன எடுத்துக்காட்டுக்காக சிலவற்றை சொல்லலாம்.
ஒரு நல்ல கதைக்கு இன்னுமொரு தகுதி என்னவென்றால், அது பெரிய விசயங்களைப் பேசுகிற பேரில் வாசகர்களை நோகடிக்காமல் இருப்பது. அந்த வகையில் குருதட்சணை விறுவிறுப்பு குறையாத அற்புதமான ஆக்கம். இந்த நாவல், பெண்ணடிமைத்தனத்தின் தோற்றுவாயையும், அதிலிருந்து விடுபடுவதற்கான தைரியத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு கையேடாகவே இதை பெண்கள் கைக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்.
வாழ்த்துகள் ஜீவா!
வாழ்த்துகள் பொன்னுலகம் புத்தக நிலையம்!
தருமர் திருப்பூர்.
நூலின் பெயர் : குருதட்சணை
ஆசிரியர் : ஜீவா
பதிப்பகம் : பொன்னுலகம் பதிப்பகம் நிலையம்
விலை : ரூ 275

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Box ல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

