உலகின் பெரும்பகுதியை தங்களின் அடிமையாய் மாற்றி நூறாண்டுகளுக்கு மேலாய் ஆட்சி செய்த வெள்ளையர்கள், யாராலும் தோற்கடிக்க முடியாத அளவிற்கு மாறியது அவர்கள் கொண்ட ஆயுதங்களால் மட்டுமல்ல, நம்முடனே இருந்து சதி செய்த துரோகிகளாலும் தான். அப்படி வெள்ளையர்களையே தனது வீரத்தால் நடுங்குறச் செய்த ரணசிங்கம், தன் உறவுக்குள்ளேயே இருந்த வஞ்சகர்களால் வீழ்த்தப்பட்டுகிறான். அவனது ஒரே மகனும் நாடுகடத்தப்படுகிறான். சிறுவயதிலேயே எதிரிகளால் நாடுகடத்தப்பட்ட மகன், தகப்பனை கொன்றவர்களை பழிதீர்க்க வாலிபனானதும் தேசம் திரும்புகிறான்.
அதே சமயம் ஊரில் எல்லோரும் மதிக்கக்கூடிய (பயத்தால்) அரண்மனை என்ற பெயரில் அழைக்கப் படும் உடையப்பன், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் குலசாமி கோவில் திருவிழாவை நடத்த முற்படுகிறார். அதன் பின்னர் ஒரு சதித்திட்டத்தையும் மறைமுகமாக தீட்டுகிறார்.
இறுதியில் யாருடைய திட்டம் வென்றது என்பதே வேல ராமமூர்த்தியின் இந்த குருதி ஆட்டம்.
‘இந்து தமிழ்’ நாளிதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடராக வெளிவந்து வாசகர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வேல ராமமூர்த்தி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ஆசிரியரின் முன்னுரையிலேயே கதை துவங்கி விடுகிறது.
ஊர் மக்கள் யாருடனும் ஒட்டாமல் ஊருக்கு வெளியே தனது ஒரே மகள் செவ்வந்தியுடன் வாழ்ந்து வரும் தவசியாண்டி, தனது உறவுகள் யாருடைய நிழலும் பட்டுவிடாதபடி ஆறுமாத பேரக்குழந்தையை அள்ளிக் கொண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பட்டணத்தில் குடியேறிய வெள்ளையம்மாள், தன்னுடன் நாடுகடத்தப்பட்ட அண்ணன் மகன் ஊமையனை வீரனாக்கி, தனது அண்ணனைக் கொன்ற துரோகிகளை பழிதீர்க்க காத்திருக்கும் மாயழகி என ஒவ்வொரு கதாபாத்திரங்களாக, வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு இடங்களில் அறிமுகமாகி கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றனர்.
தவசியாண்டி, வெள்ளையம்மாள், மாயழகி இவர்களுக்குள் என்ன உறவு.?
தவசியாண்டியும் வெள்ளையம்மாளும் சொந்த ஊரை விட்டு வெகுதூரம் செல்ல வேண்டிய காரணம் என்ன? ரணசிங்கத்தை கொல்ல சதி செய்தது யார்?
கோவில் திருவிழாவிறக்கு பின்னால் உடையப்பன் விரித்த சதி என்ன?
அதில் வீழப்போவது யார்? போன்ற அத்தனை கேள்விகளுக்கும் தனது விறுவிறுப்பான எழுத்து நடையில் பதிலளித்திருக்கிறார் ஆசிரியர் வேல ராமமூர்த்தி.
நூல் : குருதி ஆட்டம்
ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
விலை: ₹150
பதிப்பு: Discovery Book palace

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

