நூல்: குறுக்குவெட்டுகள்
ஆசிரியர்: அசோகமித்திரன் 
விலை: ரூ.143
வெளியீடு:  நற்றிணை பதிப்பகம், சென்னை.

வாழ்வே ஆறுதல் கொள்வதில்தான் இருக்கிறது. பொய்தான். ஆனால் அதுதான் மெய். அங்கங்கே சில வரிகளை இப்படித் தெளித்துக் கொண்டே படிக்கும் வாசகனைத் தன் பக்கம் ஈர்த்து நிறுத்தி விடும் அசாத்தியத் திறமை அசோகமித்திரனின் எழுத்துக்கு உண்டு. இதை அவர் தன் எழுத்துத் திறமையைக் காட்டுவதற்காகச் செய்வதில்லை. இது இயல்பாக அவருக்குள் அமைந்த ஒன்று. வாழ்க்கையின் முழுமையை நோக்கிய பயணத்தில் அவருக்குக் கிடைத்த முதிர்ச்சி. தேடல் என்கிற பயணத்தில் இருக்கும் மனிதன் இவரின் வரிகளில் நெகிழ்ந்து விடுபட்ட நிலைக்கு நகர்ந்து கொண்டேயிருக்கிறான். பூரணத்துவத்தை நோக்கிச் செல்ல விரும்பி நடக்கும் மனிதன் தன் பயணத்தில் இவர் அடையாளப்படுத்தும் காட்சிகளை அங்கங்கே உள் வாங்கி தன் முதிர்ச்சியின் எல்கைகளை விரித்துக் கொண்டே செல்லலாம்.

என் கதைகளில் ஒரு குரல் இருக்கிறது. அது வாசகனை வற்புறுத்தும் குரல் அல்ல. ஒரு நண்பனுக்கு யோசனை கூறுவது போல் உள்ள குரல் அது என்கிறார். ஒருவருடைய தோற்றத்திலிருந்து அவருடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள முடியும். அவருடைய எழுத்து என்ன மாதிரிச் செய்திகளைக் கூற முடியும் என்று அசோகமித்திரனைப் படித்தவர்கள், தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களாகவே ஒரு முடிவிற்கு வர இயலும்.
புலிக்கலைஞன் கதையைக் கூட அப்படித்தான் அசோகமித்திரன் எழுதியிருக்க முடியும். வாய்ப்புக் கேட்டு வரும் ஒரு கலைஞனிடம் படிந்துள்ள உண்மைத் தன்மையை, திறமையை உணர்வதும், உடனடியாக அவனுக்கு எதுவும் வழங்க இயலவில்லையே என்கிற வருத்தமும், எப்படியாவது அவனை உள்ளே நுழைத்து விட வேண்டுமென்று முயன்று சிந்திப்பதும், அப்படியும் அது தவறிப் போவதும்தான் அந்தக் கலைஞனுக்கான விதியாக அமைவதும், அவனுக்கு மட்டுமல்ல, உண்மையான திறமையைக் கொண்ட பலருக்கும் இம்மாதிரி அமையும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை உணர்த்தவுமான ஒரு படைப்பை அசோகமித்திரன் வழங்கியிருக்கும் விதத்திலிருந்தே இந்த வாழ்க்கையின் கூறுகள்பற்றிய அவரது அவதானிப்பை நாம் உணர முடியும். நம் எழுத்தின் மீதான சீரான தன்மை நமக்கு எப்போது கிடைக்கிறதென்றால் இந்த வாழ்க்கை சார்ந்து நம் பார்வை எந்த அளவிற்கு திட்டவட்டமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அது அமைகிறது என்கிறார்.

இந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள், அந்த சந்தர்ப்பங்களின் நிர்ப்பந்தங்கள் இவையெல்லாம் சமூக வாழ்க்கையி்ல் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி வாழ்க்கை நடத்த வேண்டுமென்கின்ற தெளிவினைப் புறந்தள்ளி விடுகின்றன என்று வருந்துகிறார்.
எல்லா மதங்களும் சமூக வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி வாழ்க்கை நடத்த வேண்டுமென்று தெளிவாகக் கூறியிருக்கின்றன. எல்லா ஆன்மீகத் தலைவர்களும் மனிதனுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை என்று கூறியிருக்கிறார்கள். பகவான் ராமகிருஷ்ணர் போன்று பிழையற்று வாழ்க்கை நடத்தியவருக்கும் புற்று நோய். அதேபோல் பதினாறு வயதில் திருவண்ணாமலை வந்து சேர்ந்த பகவான் ரமணருக்கும் புற்று நோய். அதில்தான் அவர் உயிர் விட்டார் என்று அறிகிறோம். இங்குதான் நாம் ஒன்றை யோசிக்க வேண்டியிருக்கிறது. கர்ம பலனை ஏற்றுக் கொண்டால் முன் பிறப்பு, அடுத்த பிறப்பு இவற்றையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்படியான தத்துவ விசாரங்கள் நமக்கு மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஒரு ஆன்மீக ஞானி எடுத்து வைக்கும் கருத்துக்களாய் நாம் இவரது எழுத்தை, படைப்புக்களை, அதன் கூறுகளை உணர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது.விநோத பிரசுர முயற்சிகள் என்று மதுரை புது மண்டபத்தில் கிடைக்கும் விநோத ரசமஞ்சரி என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு புத்தகம் ஒன்றைப் பற்றிக் கூறி பிறகு அது லிப்கோ நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டதையும், அதற்கு நாமக்கல் கவிஞர் முன்னுரை வழங்கியதையும்பற்றியும் எடுத்துரைக்கிறார். ஓளவையார் கதைகள், கம்பர் கதைகள், காளமேகம், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், பொய்யாமொழிப் புலவர், ஏகம்பவாணன் கதை என்று ஒரு தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுரங்கமே அதில் உள்ளது என்று விளக்குகிறார். கோவை விஜயா பதிப்பகம் கூட இப்புத்தகத்தை வெளியிட்டதாக ஒரு தகவல் உண்டு என்கிறார். விரும்புவர்கள் வாங்கிப் படித்து மகிழலாம்.

அது போல் காலம் சென்ற எழுத்தாளர் மலர்மன்னன் எழுதிய “திராவிட இயக்கம்-புனைவும் உண்மையும்” என்ற நூலைக் குறிப்பிட்டு கடைசிப் பக்கம் வரை படித்து முடித்த பிறகே கீழே வைக்கும்படியான ஸ்வாரஸ்யமும், பொருள் பொதிந்ததுமான புத்தகம் அது என்று புகழ்ந்துரைக்கிறார்.அது போல் டாக்டர் கே.எஸ்.சுப்ரமண்யத்தின் அனுபவச் சுவடுகள் அடங்கிய வாழ்க்கைச் சரிதம் கவிதா பப்ளிகேஷன் வெளியீடாக வந்துள்ளது என்றும், அவரின் பல அனுபவங்கள் படிப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதுபோல் விட்டல்ராவின் “வாழ்வி்ன் உன்னதங்கள்” என்ற அருமையான புத்தகம் 2011 ம் ஆண்டில் வெளிவந்த அந்த ஆண்டின் மகத்தான நூல் என்று அறிமுகப்படுத்துகிறார்.

ஆடிய ஆட்டமென்ன பகுதியில் கிரிக்கெட் பற்றிய விவரணைகளை அசோகமித்திரன் வெவ்வேறு கட்டுரைகளில் சொல்லிச் செல்லும் விதம் இவருக்கு அந்த ஆட்டத்தில் இளம் பிராயம் முதல் இருந்த ஆர்வத்தையும், ஆர்வலர்களையும், ஆட்டக்காரர்களையும்பற்றிய விமர்சனமாகவும், வெவ்வேறு மாட்ச்கள் எப்படியெப்படியெல்லாம் வெற்றிகரமாக அமைந்தன, அதற்குக் குறிப்பிட்ட ஆட்டக்காரர்கள் எவ்வாறான காரணமாக விளங்கினார்கள், பெரிய ஆட்டக்காரனும் தோல்வியைத் தழுவும் சந்தர்ப்பங்கள் எவ்விதம் ஏற்பட்டன, விளையாடும் அரங்கங்கள் எவ்வாறாக அமைந்து வெற்றியை நிர்ணயிக்கும் களமாக விளங்கின என்று விளக்கிச் செல்லும் விதம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

இயல் இசை நாடகம், ஆடிய ஆட்டமென்ன, சில நூல்கள் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இக்கட்டுரை நூல் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நீண்ட தெளிவான அனுபவப் பார்வையை நமக்கு, அமைதியாகவும், ஆழமாகவும் வழங்கிச் சிறப்பிக்கிறது.

——————————————–


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *