காலத்தால் மிகவும் முற்பட்டவை என்பதால் இன்றைய இளைய தலைமுறையினர் படித்து இன்புற முடியாதவையாக சங்கப்பாடல்கள் இருக்கின்றன. இக்குறையைப் போக்கிட சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் சங்கப் பாடல்களுக்கு எளிய விளக்கங்கள் அளித்து பல நூல்களை எழுதி வருவது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்மை பயப்பதாகும். ’சங்கப் பெண் கவிதைகள்’ என்ற நூலில் தமிழறிஞர் சக்தி ஜோதி 45 சங்கப் பெண் கவிஞர்களின் பாடல்களுக்கு அழகான விளக்கம் அளித்துள்ளார். சங்கப் பாடல்கள் கற்றுக் கொள்ள வாசகர்களைக் கைபிடித்து இழுத்துச் செல்லும் எளிமையான இந்நூலினை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காணொளி வாயிலாகவும் (YouTube) சக்தி ஜோதி அவர்களின் சங்கப் பாடல்களுக்கான விளக்கங்களைக் கேட்டு மகிழலாம். காலந்தோறும் சங்கப் பாடல்களுக்கு புதுப்புது உரைகள் வந்தவண்ணம் உள்ளன. நயவுரை நம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், புலியூர்கேசிகன் போன்ற பலரும் சங்கப் பாடல்களுக்கு தெளிவுரை ஆற்றியுள்ளனர். ’தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள்’ எனும் தலைப்பில் இரா.மோகன் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டு நூல்களிலிருந்தும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்து நல்விருந்து படைத்துள்ளார். சாகித்திய அகாதெமி இந்நூலை பாங்குற வெளியிட்டுள்ளது. இன்னும் பலரும் சங்கப் பாடல்களுக்கு விளக்கம் அளித்து அருந்தொண்டு செய்துள்ளார்கள்.

இவ்வரிசையில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பிரகஸ்பதி ‘குருகும் உண்டு’ என்ற தலைப்பில் குறுந்தொகை பாடல்களின் பெருமைகளை விளக்கியும் அவற்றினைப் படித்து இன்புறவும் உற்றுழி உதவியுள்ளார். கணித ஆசிரியராக அரசு பள்ளியில் தனது பணியைத் தொடங்கிய பிரகஸ்பதி தலைமை ஆசிரியராகப் பணிமேம்பாடு அடைந்து பணி ஓய்வு பெற்றார். பணிக்காலத்தில் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்புகளிலிருந்து பல்வேறு இயக்கப் பணிகளிலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார். பிரகஸ்பதியின் சொந்த ஊர் தென்காசிக்கு அருகிலிருக்கும் சுரண்டை. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கணித ஆசிரியர் ஒருவருக்கு சங்கப் பாடல்கள் மீதிருக்கும் மையலும், ஈடுபாடும் நம்மை வியக்க வைக்கிறது.

’குருகும் உண்டு’ நூல் 23 பாகங்களில் 350 பக்கங்களில் நிறைய செய்திகளுடன் எழுதப்பட்டுள்ளது. .நூலின் முதல் ஐந்து பாகங்களில் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், குறுந்தொகை ஆகியன குறித்து விரிவான அறிமுகத்தை நூலாசிரியர் செய்கிறார். தொல்காப்பியமும் சங்கப் பாடல்களுமே இந்திய இலக்கியங்களில் மிகப் பழமையானவை. இத்தொன்மையான தமிழ் இலக்கியம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனத் தொகுக்கப்பட்டு ஒரு வரையறைக்குட்பட்டு அமைந்துள்ளது. சங்க இலக்கியம் பாட்டும், தொகையும் ஆகும். பாட்டு என்பது பத்துப்பாட்டு; தொகை என்பது எட்டுத்தொகை. பத்துப்பாட்டு நெடும் பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை உதிரிப் பாடல்களின் தொகுப்புகளாகும்.

”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம், புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.” எனும் தனிப்பாடல் இத்தொகை நூல்களை மனதில் பதிய வைத்திட ஏதுவாயுள்ளது.

குறுந்தொகை நான்கடிச் சிற்றெல்லை முதல் எட்டடிப் பேரெல்லை வரை அமைந்த நானூறு பாடல்களாகும். பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்ட இப்பாடல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்த பெருமை உ.வே.சாமிநாத அய்யருக்குரியது. குறுந்தொகைப் பாடல்கள் பாடிய புலவர் பெருமக்களின் எண்ணிக்கை 205 ஆகும்.

சங்கத் தமிழ் நூல்களைப் படிப்பது காலத் திரைப்படம் (Period Film) பார்ப்பதைப் போன்றது என்கிறார் பிரகஸ்பதி. ஊன் உண்பதும், மது அருந்துவதும், பரத்தையரொடு இன்புற்று இருப்பதும் சங்கப் பாடல்களில் மிகவும் இயல்பாகக் காட்டப்படுகின்றன. சங்க காலத் தமிழகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டுமென்கிறார் நூலாசிரியர். திருக்குறளுக்கு முன், திருக்குறளுக்குப் பின் எனப் பிரிக்கலாம் என்பது அவரின் கருத்து. திருக்குறள் போன்ற அறநூல்கள் தமிழர்கள் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதும் நூலாசிரியரின் கணிப்பு. யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயர்ந்த விழுமியம் நிலைத்திருந்த தமிழகத்தில் ‘எத்துனையும் பேதமுறா எவ்வுயிரும் தம்முயிர் போல’ என்று அனைத்து உயிர்களையும் பேணும் அன்பு வழி கடைப்பிடிக்கப்பட்டது. அறமே அரசியல் சட்டமாயிருந்தது. மதுரை. பூம்புகார், கொற்கை போன்ற பெருநகரங்களின் மக்கட்தொகை சில ஆயிரங்களிலேயே இருந்திருக்கும். பல கிராமங்களும், அடர்ந்த காடுகளும் இருந்திருக்கும். உண்பது ஊழி உடுப்பது இரண்டே என மக்களின் தேவைகள் குறைவே. போரும், பொருளீட்டலும் ஆடவர் தொழில். காதலும் குழந்தை வளர்ப்பும் பெண்டிர் தொழில். கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல், மீன் பிடித்தல், வேளாண்மை என அவரவர் திணை சார்ந்த தொழில்களையே செய்து வந்துள்ளனர். உழவர், ஆசிரியர், வணிகர், மருத்துவர், கலைஞர், கம்மியர் என்று ஆறு தொழிலோரையே வள்ளுவர் குறிப்பிடுவதை பிரகஸ்பதி சுட்டிக் காட்டுகிறார்.

குறுந்தொகை பற்றிய நீண்ட அறிமுகத்தைச் செய்துவிட்டு ஆறாவது பாகத்தில் குறுந்தொகையின் உவமை நயங்களைச் சித்தரிக்கிறார். உலகின் எம்மொழிகளிலும் இதுவரை எழுதப்பட்டுள்ள உவமைகளில் தலையாயது எது எனும் போட்டி வைத்தால் ‘செம்புலப் பெயல் நீர் போல’ என்ற உவமையே முதல் பரிசு பெறும் என்பது பிரகஸ்பதியின் கருத்து. குறுந்தொகையின் உவமை நயம் குறித்துப் பேசிடப் பத்து பாடல்களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அவற்றிலிருந்து மூன்று பாடல்கள்  இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படுகின்றன.

”யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை செஞ்சம் தாம்கலந் தனவே”.   (குறுந்தொகை – 40)

இப்பாடல் ஆசிரியரின் இயற்பெயர் தெரியவில்லை என்பதால் அவர் எழுதிய பாடலில் உள்ள உவமைச் சிறப்பால் ‘செம்புலப் பெயல் நீரார்’ என அறியப்படுகிறார். இப்பாடலில் மழையையும் மண்ணையும் கருப்பொருட்களாக புலவர் வைத்துள்ளார். மழையும் மண்ணும் குறிஞ்சி நிலத்துக்கு மட்டும் சொந்தமல்ல அனைத்து நிலங்களுக்கும் பொதுவானவை. இரு மனங்கள் இணைவதை மழையும் மண்ணும் இணைவதற்கு ஒப்பிடுகிறார். காதலர்கள் மனம் ’செம்புலப் பெயல் நீர் போல’ இரண்டறக் கலப்பதை இதனினும் சிறப்பாக விளக்க முடியாது. ”இன்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இப்பாடலின் உவமையைக் கூறியே மணமக்களை வாழ்த்துகிறோம்” என்று பிரகஸ்பதி சொல்வதில் மிகையேதும் இல்லை.

கல்லூரித் தமிழ்: குறுந்தொகை

உவமை நயத்துக்கான அடுத்த எடுத்துக்காட்டு மேலும் ஒரு வகையில் சிறப்புடைத்து. உலகம் தட்டையானது அல்ல. உருண்டையானது என்ற அறிவியல் உண்மையை விளக்கிடும் பாடல். புலவர் கொல்லன் அழிசி எழுதியுள்ள இப்பாடலில் அழகியதோர் உவமையையும், அறிவியல் உண்மைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டையும் காண்கிறோம். பொருள் தேடி வந்து திருமணம் செய்வேன் என்று கூறிச் சென்ற தலைவன் இன்னும் திரும்பவில்லை. தான் துயர் அடைவது கண்டு கலங்குகின்ற தோழிக்கு ”கவலைப்படாதே” என்று தலைவி இவ்வாறு ஆறுதல் கூறுகிறாள்.

“பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு பல்மலர்
வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும், நோய்பொரக்
கண்டிசின், வாழி தோழி தெண்திரைக்
கடல்ஆழ் கலத்தின் தோன்றி
மாலைமறையும் அவர் மணிநெடுங் குன்றே” – (குறுந்தொகை- 240).

முல்லை நிலத்தில் தூரத்தில் மலை தெரிகிறது. வயல் வெளிகளில் கிளி மூக்கு போன்ற அவரைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. முல்லை மொட்டுக்களைப் போன்ற பற்களைக் கொண்ட காட்டுப் பூனைகள் நடமாடுகின்றன. மாலை நேரத்தில் மலர்களும், காட்டுப் பூனைகளும் வருந்தும்படியாகக் குளிர் பரவுகிறது.  இருள் கவிழும் மாலைப் பொழுதில் அடிவாரத்திலிருந்து மலை மறைய ஆரம்பிக்கிறது. சூரியன் மறையும் வேளையில் மலையின் உச்சி மட்டும் தெரிகிறது. மலை மறையும் இக்காட்சி கடலிலே செல்லும் கப்பல் படிப்படியாக மறைந்து முழுவதும் கண்ணுக்குத் தெரியாமல் போவது போல் இருக்கிறது. ”மலையைப் பார்த்து அவனின் நினைவை ஆற்றியிருந்தேன். மலையும் கண்ணின் காட்சியிலிருந்து இப்போது மறைந்து விட்டது. இனி நான் எப்படி ஆற்றியிருப்பேன்” என்று தலைவி வருந்தி தோழியிடம் கூறுகிறாள். கடற்கரையிலிருந்து பார்ப்போருக்கு கப்பல் படிப்படியாக மறைவது புவியின் பரப்பு தட்டையானதல்ல. உருண்டையானது என்பதன் நிரூபணம் என்பதை நாம் அறிவோமே!

’உழவன் யாத்த குழவி’ போல எனும் உவமையை கிள்ளி மங்கலங்கிழார் எனும் புலவர் கையாளும் திறனை வியந்து பாராட்டி விளக்குகிறார் நூலாசிரியர்.

“இதுமற்று எவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இருமருப்பு எருமை ஈன்றணிக் காரன்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன்
திருமனைப் பல்கடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே”.   (குறுந்தொகை – 181)

”தோழி! அவன் இல்லாது இருக்கும் நேரத்தில் அவனைப் பற்றிக் குறை சொல்லாதே. அதனால் என்ன பயன்? அவனுடைய குழந்தைகளையும், சொத்துகளையும் பராமரிக்கும் பொறுப்புடைய முதிய பெண் நான். அவன் என்னை விட்டு எங்கு செல்வான்? கன்றுக் குட்டியைச் சுற்றி மேயும் எருமை மாட்டைப் போல அவன் என் கண்படும் தொலைவில் தான் எங்காவது மேய்ந்து கொண்டிருப்பான். எப்போதும் என் கட்டுப்பாட்டில் தான் இருப்பான். வீணாக அவனைத் திட்டாதே” என்று தலைவி கூறுகிறாள். வாழ்க்கை பற்றிய தெளிவுடனும், யதார்த்தமான பார்வையுடனும், கணவனைப் பற்றி முற்றிலும் அறிந்தவளுமாக தலைவி இருப்பதைப் பொருத்தமான உவமையுடன் புலவர் விளக்குவதை பிரகஸ்பதி சுட்டிக்காட்டுகிறார்.

May be an image of 2 people
நன்றி: https://www.facebook.com/Kurunthogaii

அடுத்து வரும் பாகங்களில் குறுந்தொகைப் பாடல்களின் சொற்சுவை, பொருட்சுவை குறித்து பேசுகிறார். தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய், பரத்தையர், வழிப்போக்கர், பாங்கர் போன்ற சங்கப் பாடல்களின் கதாபாத்திரங்கள் வழி காட்சிகளை அறிமுகப்படுத்துகிறார். கபிலர் எழுதியுள்ள குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள ’தலைவி கூற்றுப் பாடல்’ ஒன்றில் தன்னைப் புணர்ந்த தலைவன் மணந்து கொள்ள வருவேன் என்று கூறிச் சென்ற காலம் கடந்து விட்டது. தலைவி மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். தன் மனநிலையைத் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

“யாரும் இல்லை தானே, களவன்
தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான்மணந்த ஞான்றே”.    (குறுந்தொகை -25)

”நான் அவனை மணந்த வேளையில், அங்கு வேறு யாரும் இல்லை. களவன் அதை மறுத்தால் நான் என்ன செய்வேன்? ஓடும் நீரில் ஆரல் மீனை எதிர்பார்த்துக் கொண்டு, தினைத்தாள் போன்ற பசுமையான குறுகிய கால்களைக் கொண்ட குருகு ஒன்று அருகில் இருந்தது. அவர்கள் மணந்து கொண்டதன் சாட்சி குருகு எனும் கரிய கால்களை உடைய நாரை மட்டுமே. ‘குருகும் உண்டு’ என்ற அழகிய இச்சொற்களையே பிரகஸ்பதி தன்னுடைய நூலுக்குத் தலைப்பாக எடுத்துக் கொண்டது சாலப் பொருந்துகிறது.

தலைவி கூற்றுப் பாடலாக கச்சிப்பேட்டு நன்னகையார் எழுதியுள்ள பாடலில் தலைவி தான் கண்ட கனவை தோழிக்கு விளக்குகிறாள்.

“கேட்டிசின் வாழி, தோழி அல்கல்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட, ஏற்றுஎழுந்து
அமளி தைவந் தனனே, குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே”.     (குறுந்தொகை: 30)

“தோழி! கேட்பாயாக! இரவில் வருவேன் என்று கூறுவது; வராமல் இருப்பது; காலத்தை நீட்டிப்பது; பொய்யை மெய் போலச் சொல்வது இவற்றில் அவன் வல்லவன். நேற்றிரவு என் கனவில் தோன்றினான். மெய் என்றெண்ணி அவனை அணைக்க கையால் தடவினேன். கனவு கலைந்தது. அவனைக் காணவில்லை. வண்டுகள் துளைத்த குவளை மலர் போல ஆனேன். நான் இரக்கத்திற்குரியவள் அல்லவா?” என்று தலைவி கேட்பதாக அமைந்துள்ளது. இப்பாடலில் பெரிதும் ஈர்க்கப்பட்ட கவியரசர் கண்ணதாசன் “மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்/ கனவு கண்டேன் தோழி/ மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை/ காரணம் ஏன் தோழி…….” என்று பாக்கியலட்சுமி எனும் திரைப்படத்திற்கு பாடல் இயற்றியுள்ளார். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை அமைத்திட பி.சுசீலா தேனினும் இனிமையான குரலில் பாடியிருக்கிறார்.

குறுந்தொகையில் தலைவன் கூற்றுப்பாடல்களாக மொத்தம் 44 பாடல்கள் உள்ளன. அவற்றில் 19 பாடல்களுக்கு பிரகஸ்பதி நூலில் விளக்கம் அளித்துள்ளார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு பாடல் பற்றிய விளக்கத்தை மட்டும் காண்போம். பொதுக்கயத்துக் கீரந்தை எனும் புலவர் குறிஞ்சி திணையில் இப்பாடலைப் பாடியுள்ளார். தலைவியை அடையும் ஆசையில் தோழியின் உதவியை தலைவன் நாடுகிறான். தலைவி சின்னப் பெண் என்று சொல்லி தோழி தட்டிக் கழிக்கிறாள். இல்லை! இல்லை! பார்ப்பதற்குப் பெரியவளாகத் தோன்றுகிறாள் என்ற தலைவன் இவ்வாறு கூறுகிறான்.

”முலையே முகிழ்முகிழ்த் தனவே, தலையே
கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே
செறிமுறை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்கும் சிலதோன் றினவே அணங்குஎன
யான்தன் அறிவல், தான்அறி யலளே
யாங்குஆ குவள் கொல்தானே
பெருமுது செல்வர் ஒருமட மகளே.”

மலர் மொட்டுகள் போல அவளுக்கு முலைகள் முகிழ்ந்து விட்டன. தலையில் வளர்ந்துள்ள முடி அவள் முதுகுக்குக் கீழே விழுமாறு வளர்ந்து விட்டது. விழுந்து முளைத்த பற்கள் வெண்மையாக வரிசையாக வளர்ந்து விட்டன. முகத்தில் பருக்களும் தோன்றி விட்டன. அவள் என்னைக் கவர்ந்து விட்டாள் என்பதை அறியாதிருக்கிறாள். பாரம்பரியமான பெருஞ்செல்வந்தரின் ஒரே மடமகள் எனக்குரியவள் என்று ஆகமாட்டாளா?” என்று தோழியிடம் தலைவன் கேட்கிறான். ”எங்கேயோ செல்லப் போகிறவள் எனக்குக் கிடைத்தால் என்ன” என்பதாக ‘யாங்குஆ குவள் கொல்’ என்று தோழியிடம் வினவுகிறான்.

 களிற்றியானை நிரை - அகநானூறு பாடல் : தலைவி கூற்று (1)
நன்றி: Dravida.Nadu.Blogspot.com

இனிக்கும் இல்லற வாழ்க்கைக் காட்சிகள் சிலவற்றையும் குறுந்தொகை காட்சிப்படுத்துவதை பிரகஸ்பதி இந்நூலில் சான்றுகளுடன் கூறுகிறார். குறுந்தொகை காட்டும் இல்லற வாழ்க்கைக் காட்சிகள் அனைத்தும் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பற்றியதே. கூடலூர் கிழார் முல்லைத் திணையில் எழுதியுள்ள பாடலில் தலைவி தலைவனோடு இல்லறம் நடத்துவதைக் கண்டிட செவிலி வருகிறாள். தலைவியின் இல்லறக் காட்சியைக் கண்டு மனம் மகிழ்ந்த செவிலி தான் கண்ட காட்சியை நற்றாய்க்கு விளக்குகிறாள்.

“முளிதளிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம், கழாஅது உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.”

செவிலித்தாய் கண்ட காட்சி இதோ! துவைப்பதற்கு உரித்தான ஆடைகளைத் துவைக்காமல் அழுக்குடன் அணிந்திருக்கிறாள். முற்றிப் புளித்த தயிரை காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களைக் கொண்டு பிசைந்தபின் கையை ஆடையில் துடைத்துக் கொள்கிறாள். குவளை மலர்கள் போன்ற அவளுடைய மைதீட்டிய கண்களில் தாளித்த புகை படர்ந்திருக்கிறது. கணவனுக்குத் தான் சமைத்த தீம்புளிப்பாகற் குழம்பைப் பரிமாறுகிறாள். இனிது என்று கூறி அவன் உண்ணுகிறான். ஒள்ளிய நெற்றியை உடைய அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. என்னவொரு அருமையான இல்லறக் காட்சி!. கருத்தொருமித்த தம்பதிகளின் இல்வாழ்க்கையை எவ்வளவு நேர்த்தியாக புலவர் பெருமகனார் சித்தரித்துள்ளார்! இதுவே குறுந்தொகையின் வெற்றிக்கு அடையாளம். சங்க காலத்தில் காதல்வழித் திருமணத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்ச் சமூகம் இன்று காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பது அவலமே. சாதிவெறி மேலிட கருத்தொருமித்த காதலர்களைக் கொடூரமாகக் கொலை செய்யுமளவிற்கு வன்மங்கொண்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறியுள்ளதை என்னென்பது?

குறுந்தொகைப் பாடல் காட்சிகளை நம் கண் முன் நிறுத்தி நூலாசிரியர் பிரகஸ்பதி நம்மை மகிழ்வுறச் செய்துள்ளார். ’நவில்தோறும் நூல்நயம் போலும்’ என்பதற்கிணங்க தேன் குடிக்க விரும்பும் வண்டுகள் மலர் தேடி அமர்வது போல் இலக்கியத் தேன் குடிக்க விரும்புவோர் இத்தகு நூல்களைத் தேடி வாசித்து இலக்கிய இன்பம் பெற வேண்டும். ‘குருகும் உண்டு’ நூல் வழி பிரகஸ்பதி நல்லதொரு பணியைத் தொடங்கியுள்ளார். குறுந்தொகையில் தொடங்கியுள்ள இந்தப் பயணம் தொடரட்டும்! சங்கப் பாடல்கள் அனைத்துக்கும் பிரகஸ்பதி  விளக்கவுரை எழுதி நம்மையெல்லாம் மகிழ்விப்பார் என்று நம்புவோம்.

– பெ.விஜயகுமார்.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)2 thoughts on “’குருகும் உண்டு’ – நல்ல குறுந்தொகை எனப்படும் சங்கத் தமிழ் பாடல்களின் மேன்மையை விளக்கிடும் நூல் : பெ.விஜயகுமார் ”
  1. சங்க காலத்திற்கே நம்மைக் கொண்டு போய் விட்டார் விஜயகுமார்… ஆசிரியர் பிரகஸ்பதி அவர்களுக்கு. பாராட்டுக்கள்

  2. புதிய வாசகரை ஈர்க்கும் சிறப்பான அறிமுகம் வாழ்த்துகள் தோழர். விஜயகுமார், மற்றும் நூலாசிரியர் பிரகஸ்பதிக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *