குருவி.....(கவிதை) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை | A Tamil Poetry (Kavithaikal) - Written by Rajesh Shankarapillai - Kuruvi - https://bookday.in/

குருவி…..(கவிதை)

குருவி…..(கவிதை)

 

அப்போது எனக்கு ஏழு வயது இருக்கலாம், எட்டு வயது …. இருக்கலாம்.
ஏதோ வயதிலும் சின்னவன். குடும்பத்திலும் கடைக்குட்டி.

பலர், என்னை பாலு குடி எனவே அழைப்பார்கள்.

அந்தப் பொழுதைக் கடந்து. மனச் சிறப்புகளுக்கு உள்ளாகும் பருவம்,

அப்பா…. அம்மா, இருவரும் பொழுதாய் பறக்கும் விட்டில் மனங்கள் …

எப்போதும் போல் அவர்கள், அந்தியாச்சுல…. நாகர் கோயிலுக்கு பஸ் ஏற நிற்கிறார்கள்.

அப்பா ….. வெள்ளை வேட்டி, வெள்ளை உடுப்பு, ஒரு பக்கம் வழித்து சீவி சுருண்டு கிடக்கும் மயிற்கற்றைக்காரர்.

கூடேவே , சுற்று கட்டி ….. இராஜா ரவிவர்மா சாயல் பெண்ணாய்….

நானும் ஒடிசல் தேகத்தில் அவர்கள் அருகில்,

அப்பா…. எப்போதும் வெளியூர் செல்லுகையில் தன்னை மறந்து குதூகலிப்பார்.

திரும்பி வரும் போது, அதற்கு எதிர் மாறாய்த் தளர்ந்து போய் நிற்பார்.

அந்த நிகழ்வுகளின் எரிச்சல் வெடிப்புகளாய் இருக்கலாம்.

அப்படியே அந்த பொழுதுகள்,

கொல்லங் குளங்கரை …

பேருந்து நிறுத்தம்.

மேட்டுப்பகுதி…. கொண்டையான் குளங்கரை .

இரண்டு நிறுத்தத்திற்கும் சிறு காத தூரம்.

பேருந்து அங்கிருந்து வருவதை அறிந்து கொண்டு எதிர்த் திசையில் இருந்தவர்கள். அந்த நிறுத்தத்திற்கு வந்து நிற்பர்.

அந்த இடை வெளி நேரத்தில் தன்னை மறந்து குதூகலிப்பார்கள்.

அப்பாவிற்கு ஒரு பழக்கம்…..

சுவராசியமாய்க் கை ஆட்டி , தலை ஆட்டி, நடந்து பேசுவதில் வல்லபவர்.

அம்மாவும் அதற்குத் தகுந்தாற் போல் தலையாட்டிக் கதை கேட்பார்.

அப்பா வும்….. அம்மாவும் வார்த்தைகளைப் பரிமாற,

நான் தனித்து விடப்பட்டு, அப்படியே
பார்க்கின்றேன்.

நெட்டைத் தோற்றம் , சுருட்டை முடிகள், குழிந்த கண்கள் , பெண்மைக் குரல் …
நளின பாங்கு.

அப்படியே லயித்து நிற்கிறேன்.

நான்…..

அப்பா….. குருவி, குருவி….. என்கிறேன்.

அப்பாவும், …… அப்படியே பார்த்து சிரித்து விட்டு,

நம்ம சாத்தன்…. டே,

சாத்தன் துராமா? என்கிறார்.

அந்த ஒல்லி உடம்பும் குழைந்து,

பண்ணையாரே, என சிரித்து நிற்கிறது.

நான், திரும்பவும் ….

குருவி, குருவி என்கிறேன்.

அப்பா ….

சாத்தா,

புள்ளக்கு வேண்டி ஒரு தடவை,
கூப்பாடு போடு டே என்கிறார்.

அப்படியே வளைந்து,

கூ…. கூ…. என

குருவிப் போலவே கண்களை மலத்தி
குரல் எழுப்புகிறார்.

நானும் அந்த லயத்தில் ஜோடித்து,
திரும்பவும் ….. குரல் எழுப்பக் கேட்கிறேன்.

அப்பா, போதும் டே , அவனை சிந்தோலப்படுத்த படாது. அவன் வயத்துப்புழைப்புக்கு, அவயம் போட்டு காலத்த களிக்கான்.

நம்ம தொந்தரவு படுத்தக்கூடாது என்கிறார்.

அதைப் பார்த்து,

சாத்தனும் சிரிக்கிறார்.

அப்பாவும் கையில் இருந்து இரண்டு ரூபாயை எடுத்து, சாத்தா …. டீக்குடி என்கிறார்.

அவரும் சிரித்து விட்டு கடந்து போகிறார்.

பெறகு, அப்பா, கையையும் தலையையும் ஆட்டி…..

நடந்து, சாத்தன் பாவம், வெள்ளிமலைக்கு பெறத்த , கல்படி ஊரு, கிருஷ்ண காரன், வயசு அவனுக்கே 40 இருக்கும். அவ்வ அம்மைக்கு எம்பது …. இருக்கும், அவன் இப்படி அப்படி அலைஞ்சு வயித்த கழிக்கான் …. கலியாணம் ஆகல…

ரொம்ப பச்ச பாவம், ஆண்டவன் இப்படியும் படைச்சிட்டார்.

என்னத்த சொல்ல என உச் கொட்டி முடிக்கிறார்…

மேட்டு நிலத்தில் 5D பஸ் விரைவாக
வர நாங்களும் எதிர் முனையில் …..
நிறுத்ததில் கைகாட்டி நிற்கிறோம்.

பேருந்தும் ஏற்றிச் செல்கிறது.

ஆனால், மனம் மட்டும், சாத்தன் வந்த திசையிலே பயணிக்கின்றது.

 

எழுதியவர் :

இராஜேஷ் சங்கரப்பிள்ளை



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *